குணமாக்குதலும் விசுவாச ஜெபமும்

Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2021)

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்…

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்.5:15,16).

நீதிமான் என்பதற்கு யாக்.5:16இன் மூலப் பிரதியில் மனிதன் என்னும் சொல் இல்லை. யாக் கோபின் சிந்தனை நீதியுள்ள ஒருவர் அல்லது நீதியுள்ள நபர் என்னும் கருத்தை வெளிப்படுத்துகிறது. யாக்கோபு இதைச் செயலில் ஆணையும் பெண்ணையும் பிரித்துக் காட்டவில்லை.

நீதியுள்ள என்பதில்தான் அழுத்தமும் முக்கியத்துவமும் உள்ளது. தேவனிடம் தங்கள் ஜெபத்துக்கு ஒரு ஆண் அல்லது பெண் பதில் எதிர்பார்க்க வேண்டுமானால் அவன் அல்லது அவள் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நாம் ஜெபிக்கிறோம். ஆனால் நாம் நீதிமான்களா? தான் நீதிமானா? இல்லையா? என்பதை ஒருவன் எப்படி அறிய முடியும்? நம் நம்முடைய நீதியை எதைக்கொண்டு அறிந்து வைத்திருக்கிறோம்? தேவனுடைய நீதியின் அடிப்படையிலா? மனிதனுடைய நீதியின் அடிப்படையிலா? நீதியுள்ள என்பதற்குரிய கிரேக்கச் சொல், நியாயம் என்று பொருள் கொள்ளும் JUST என்னும் சொல்லின் பொருளையும் பெற்றுள்ளது. இந்தச் சொல்லின் வினைச்சொல் வடிவம் நியாயப்படுத்தப்பட்டது என்னும் பொருளில் வரும். எனவே நியாயப்படுத்தப்பட்ட ஒரு மனிதனே நீதியுள்ள மனிதன் அவனே நீதிமான் எனப்படுகிறான்.

நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தபோது, இயேசு நமக்காக என்ன சம்பாதித்தாரோ, அதை விசுவாசிப்பதன் மூலம் நாம் நீதிமான்கள் ஆகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்குப் பாவமாக்கினார் (2கொரி.5:21). எனவே நாம் மனுஷனால் உண்டாக்கப்பட்ட நீதியைக் குறித்துப் பேசவில்லை.

தேவனால் மட்டுமே நீதி வழங்கப்படுகிறது

தன்னுடைய பாவத்தை ஒத்துக்கொண்டு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக் கொண்டவன் நீதிமான் ஆவான். நீதியைக் குறித்துத் தெளிவாகக் கூறும் ஒரு வேதப்பகுதி ரோமர் 3:21 முதல் 28 வசனங்களாகும். இந்தப் பகுதியில் கீழ்க்கண்ட கருத்துக்களைக் காண்கிறோம்.

நியாயப்பிரமாணத்தின்படி நற்கிரியைகளைச் செய்வதால் நீதி கிடைக்காது. இயேசுகிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே நாம் தேவ நீதியைப்பெற முடியும்.

எல்லாரும் பாவஞ்செய்து கெட்டுப்போன படியால் இந்தச் செய்தி எல்லாருக்கும் உரியது.

இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்கான பிராயச்சித்தத்தை முழுவதுமாகச் செலுத்திவிட்டார். எனவே நாம் நமது இரட்சகராம் இயேசுவைப் பூரணமாக விசுவாசிக்கும்போது, அவருடைய நீதி நம்முடையதாகிறது.

இவ்விதமாக, தேவன் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக, அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:25,26).

ரோமர் 5:1,2 ஆகிய வசனங்கள் இவ்வாறு கூறுகிறது: இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்.

நாம் இந்தக் கிருபையில் நிலைகொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் இயேசுவை விசுவாசிப்பதினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் தேவனுக்கு முன்பாக நிற்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

இயேசுகிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசத்தினால் நாம் நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உணராதவர்கள், தங்கள் சொந்த முயற்சியாலும், நற்கிரியைகளாலும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். மற்ற இஸ்ரவேலர்களைக் குறித்துப் பவுல் கூறுவதைப் பாருங்கள்: அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்கள் சுய நீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால், தேவ நீதிக்குச் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப் பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் (ரோ.10:3,4). பழைய ஏற்பாட்டு நியாயப் பிரமாணத்தை அனுசரிப்பதின்மூலம் நீதியைப் பெறலாம் என்று நினைப்பவர்கள் நியாயப் பிரமாணத்தின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அது கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டியது. அதனால்தான் பவுல் இப்படிக் கூறினார்: விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப் பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் (வச 4).

10ஆம் வசனத்திலும் விசுவாசித்தலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும். பின் நாம் எப்படி இந்த நீதியைப் பெற்றுக்கொள்ளுகிறோம்? நம்முடைய ஜெபம் எப்படி கேட்கப்படும்? யாக்கோபு 5:16இல் நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று உள்ளதே!

நம்முடைய பாவங்களுக்காக இயேசு செலுத்திய மீட்பின் விலைக்கிரயத்தை விசுவாசிப்பதன் மூலம் நாம் நீதிமான்களாக வேண்டியது முதல் காரியமாகும்.

இயேசுவை இரட்சகர் என்று விசுவாசிப்பதால் நாம் பெறும் நீதியின் மூலம் தேவனுடைய சமுகத்தில் நமக்குப் பூரண நீதி உண்டு. நம்மிடம் இருக்கும் பரிபூரண நீதியின் அளவுக்கு நம்முடைய நடத்தை இருக்க முடியாது. ஆனால் நம்முடைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நாம் எந்த அளவு கிறிஸ்துவில் வேரூன்றி இருக்கிறோம் என்பதில் இருக்கிறது.

இயேசுவை இரட்சகர் என்று விசுவாசித்தல் இந்த விசுவாத்தில் உறுதியாயிருத்தல்.

இதன்மூலம் நம்முடைய அனுதின வாழ்க்கையில் பாவங்களை மேற்கொள்ள வேண்டும்.

இயேசுவின் விசுவாசி என்ற நிலையிலேயே நாம் எல்லாக் காரியங்களையும் செய்கிறவர்களாயிருக்க வேண்டும்.

அப்போஸ்தலனாகிய யோவான் இப்படிச் சொல்லுகிறான்: பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான் (1யோவான் 3:7).

இவ்விதமாக இயேசுகிறிஸ்துவின் நீதியைப் பெற்றிருக்கும் ஒருவிசுவாசி, தன்னுடைய அனுதின வாழ்க்கையில் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1யோவான் 3:9 கூறுகிறது: தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்யமாட்டான். இயேசுகிறிஸ்துவை இரட்சகராய் விசுவாசித்து ஏற்றுக்கொண்டதன் மூலம் நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

இனி நாம் நம்முடைய நடத்தையில் நீதிமான்களாக வேண்டும். அப்பொழுதுதான் நம் நிலை சமநிலையடையும். இதற்கு அறிவு, சித்தம். விசுவாசம் ஆகியவை வேண்டும். நாம் அறிய வேண்டிய பல காரியங்கள் உள்ளன. விசுவாசத்தின் மூலமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களும் உள்ளன. அப்புறம் கிரியை செய்ய வேண்டும். இதை ரோமர் 6:6 முதல் 13 வரை உள்ள வசனங்களோடு காண்கிறோம். இந்த வேதப்பகுதியின் மையக்கருத்து அறிந்திருக்கிறோம் என்பதே. இதை 6,9 ஆகிய வசனங்களில் காண்கிறோம். அடுத்தபடியாக வசனம் 11இல் எண்ணிக்கொள்ளுங்கள் என்பது. அடுத்தபடியாகக் 13ஆம் வசனத்தில் காணப்படும் ஒப்புக்கொடுங்கள் என்பது.

வசனங்கள் 6,11,13 ஆகியவை இந்தக் கருத்துக்களை விளக்குகின்றன. நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் (வச. 6). பாவ சரீரம் ஒழிந்துபோக வேண்டும். நாம் இனிப் பாவம் செய்யக்கூடாது.

அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் ( வச.11).

நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல் உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் (வச.13).

எபேசி.4:22-24 விசுவாசியின் பொறுப்பை உணர்த்தும் இன்னொரு வேதபகுதியாகும். இந்த வேதப்பகுதி நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன் நம் வாழ்வில் காணப்பட்ட பழைய காரியங்கள் அனைத்தையும் களைந்து போட வேண்டும் என்றும், கிறிஸ்துவுக்குள் நிலை கொண்டிருக்கிற ஒருவனிடம் காணப்பட வேண்டிய காரியங்களைத் தரித்துக்கொள்ளவும் வேண்டும் என்றும் கூறுகிறது.

நம்முடைய நிலையையும் அதற்கேற்ப நாம் நடந்துகொள்ள வேண்டிய விதத்தையும் பிலிப்பியர் நிருபத்திலும் காணலாம்.

ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலி.2:12,13).

இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும் தேவன் கிரியை செய்கிறார். அவனைச் சரியான நல்ல காரியங்களைச் செய்யவும், தேவனுக்குப் பிரியமான காரியங்களைச் செய்யவும் தூண்டுகிறார். இவ்வாறு நாம் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு தேவன் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிப்பது வரை நாம் நம்முடைய வாழ்வில் இப்படிக் கிரியை செய்ய முடியாது. அதனால் சரியானவைகளைச் செய்யும்படி தேவன் நமக்குச் சித்தத்தையும் வல்லமையையும் தருவது ஆச்சரியமே!

பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் இந்தச் சத்தியங்களை ஒரு விசுவாசி தன் வாழ்க்கையில் செயல்படுத்துவது எப்படி? என்னும் கேள்விக்கு விடையளிக்கிறார்.

கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் ( கலா.2:20).

நாம் இப்பொழுது யாக்கோபு 5:16 குறித்து நாம் கேட்ட கேள்விக்குத் திரும்புவோம்.

ஒரு நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் எதையும் சாதிக்கும். அப்படியானால் நான் நீதிமான்தானா? என்பதை அறிவது எப்படி? நாம் இதுவரைப் பார்த்த வசனங்களில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அதன்மூலம் தேவ நீதியைப் பெற்றுக்கொள்ளுகிறான் என்று அறிந்தோம். இப்படி ஒரு வியாதியஸ்தனுக்காக அல்லது பாடு அனுபவிக்கிறவனுக்காக விசுவாசத்துடனும் ஊக்கத்துடனும் ஒருவர் ஜெபித்தால், அவர் தேவனுக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் பிரியமான காரியங்களைத் தன் வாழ்வில் செய்து தேவனுக்கு மகிமை உண்டாக்குகிறவனாய் இருப்பான்.

ஒவ்வொரு விசுவாசியும் பலவீனமானவன், ஏனெனில் அவனுடைய சரீரம் பாவ சரீரம். ஒவ்வொருவரும் இதை உணர்ந்து முழு அளவில் பெலத்துக்கும் வல்லமைக்கும், அதிசயத்துக்கும் அற்புதத்துக்கும் ஆண்டவரையே சார்ந்திருக்க வேண்டும்.

தாவீது பல காரியங்களில் தேவனைப் பிரியப்படுத்தினான். எனினும், ஒரு பலவீன நேரத்தில் பாவத்தில் விழுந்துவிட்டான். பின்னர் அந்த மீறுதலையும் பாதகத்தையும் உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டான். சங்கீதம் 51 தாவீதின் பாவ அறிக்கையைக் காட்டுகிறது. சங்கீதம் 32, பாவ அறிக்கை செய்வதற்கு முன் தாவீ தின் உள்ளம் எவ்வளவு வேதனை அடைந்தது என்பதைக் காட்டுகிறது. தாவீதின் வேதனை இந்த வசனங்களில் வெளிப்படுகிறது.

நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ண கால வறட்சிபோல வறண்டு போயிற்று. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர் (சங். 32:3-5).

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்