எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜூலை-ஆகஸ்டு 2013)

இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்வதற்குப் பெருந்தடையாக இருந்த யோர்தான் நதியை அவர்கள் கடந்து சென்ற பின்னர் செய்த மிகவும் முக்கியமான காரியத்தை யோசுவா நான்காம் அதிகாரம் அறியத் தருகின்றது. இதனால்தான் “ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது…” என்று இவ்வதிகாரம் ஆரம்பமாகின்றது (யோசு.4:1). மூன்றாம் அதிகாரத்தில் அவர்கள் எவ்வாறு யோர்தான் நதியைக் கடந்தனர் என்பதைப் பார்த்தோம். யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அறுவடை காலத்தில், தேவன் அந்நதியின் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி இஸ்ரவேல் மக்கள் அதைக் கடந்து போவதற்கான வழியை ஏற்படுத்தினார் (யோசு.3:14-17). மக்கள் அனைவரும் யோர்தான் நதியைக் கடந்த பின்னர் மறுபடியும் யோசுவாவுடன் பேசும் தேவன் வெட்டாந்தரையாக இருந்த அந்நதியில் பன்னிரண்டு கற்களை எடுக்கும்படி கூறுகிறார்.

“ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்” (யோசு. 4:1-3).

அக்காலத்தில் தேவனுடைய பிரசன்னத்துக்கு அடையாளமாய் இருந்த உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து மக்களுக்கு முன்பாகச் சென்ற ஆசாரியர்களின் கால்கள் யோர்தானின் தண்ணீரில் பட்டவுடனே அந்நதியின் தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது மாத்திரமல்ல (யோசு. 3:15-16), சகல மக்களும் நதியைக் கடந்து தீரும்வரை அவர்கள் நதியின் நடுவில் நின்று கொண்டிருந்தனர் (யோசுவா 3:17). மக்கள் அனைவரும் நதியைக் கடந்தபின்னர், ஆசாரியர்கள் நதியில் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுக்கும்படி கூறும் தேவன், அவற்றை நதியின் அக்கரையில் அவர்கள் அன்றிரவு தங்கும் இடத்தில் வைக்கும்படி அறிவுறுத்தினார் (யோசு. 4:3).

தேவன் யோசுவாவுடன் பேசுவதற்கு முன்பே, மூன்றாம் அதிகாரத்திலேயே அவன் பன்னிருவரைத் தெரிவுசெய்தது (யோசு. 3:12) அநேகருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில வேத ஆராய்ச்சியாளர்கள் பன்னிருவரைத் தெரிவுசெய்வதைப்பற்றி மாத்திரமே மூன்றாம் அதிகாரத்தில் தேவன் யோசுவாவிடம் கூறியிருந்ததாகக் கருதுகின்றனர். ஏனையவர்கள், இவ்வதிகாரத்தில் தேவன் யோசுவாவுடன் பேசுபவைகள் மூன்றாம் அதிகாரத்தில் யோசுவா பன்னிருவரைத் தெரிவுசெய்வதற்கும் முன்பே தேவன் அவனுடன் கூறியவைகள் என்று எண்ணுகின்றனர். ஆனால், மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்த பின்பு தேவன் யோசுவாவுடன் பேசுவதாகவே நான்காம் அதிகாரத்தின் ஆரம்ப வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான வேதஆராய்ச்சியாளர்கள் யோசுவா 3ஆம் 4ஆம் அதிகாரங்கள் காலக்கிரம ஒழுங்கு முறையில் எழுதப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், “யோசுவா எதற்காகப் பன்னிருவரைத் தெரிவு செய்திருந்தான் என்பதை அறிந்திருந்த தேவன், அவனை அதைச் செய்ய வைப்பதற்காகவே அவனோடு இவ்வதிகாரத்தில் பேசுகின்றார்.” அதாவது, இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்தபின்னர் குறுகிய காலத்திற்குள்ளாகவே தேவனுடைய அற்புத செயலை மறந்துவிட்டதை அறிந்திருந்த யோசுவா, யோர்தான் நதியைக் கடந்து வாக்குத்தத்த தேசத்திற்குள் வந்ததை எவரும் மறந்துவிடாமல் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பதற்காக எதைச் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தாரோ அதைச் செய்யும்படி அறிவுறுத்தும் கட்டளையாகவே தேவன் யோசுவாவுடன் பேசும் வார்த்தைகள் உள்ளன.

யோசுவாவின் மனதில் இருந்த காரியத்தையே தேவனும் அவரைச் செய்யச் சொல்வது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், யோசுவா தேவனுடைய சிந்தையை அறிந்து அதன்படி செயற்படுகிறவராக இருந்ததினால், தேவனும் அவருடைய மனவிருப்பத்தின்படி செயற்படுகிறவராக இருந்தார். இதனால்தான், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் யோசுவாவினுடைய வார்த்தையின்படி தேவன் செயற்பட்டுள்ளதாக 9ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், நாமும் தேவனுடைய சிந்தையை அறிந்தவர்களாக அவருடைய வார்த்தையின்படி வாழும்போது, தேவனும் நம்முடைய மனவிருப்பங்களின்படி நமக்குச் செய்கிறவராக இருப்பார். இதை அனுபவரீதியாக அறிந்திருந்த சங்கீதக்காரன் “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்” (சங்.37:4) என்று அறிவுறுத்தியுள்ளான்.

இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்துசெல்வதை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பதற்காக செய்யவேண்டிய காரியத்தைச் செய்வதற்கு, நதியைக் கடப்பதற்கும் முன்பே யோசுவா இஸ்ரவேலின் பன்னிரு கோத்திரத்திலும் கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிருவரைத் தெரிவு செய்திருந்தார். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது தேவன் யோசுவாவுக்கு கூறுகிறார். தேவனுடைய இவ்வறிவுறுத்தலை யோசுவா, தான் ஏற்கனவே இஸ்ரவேலின் பன்னிரு கோத்திரத்திலுமிருந்து கோத்திரத்திற்கு ஒருவன் என்று தெரிவு செய்திருந்த பன்னிருவரிடமும் (யோசு. 3:12) கூறுகின்றார்.

“அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்” (யோசு. 4:4-5).

யோசுவாவினால் தெரிவுசெய்யப்பட்ட பன்னிருவரும் மறுபடியுமாக யோர்தான் நதியில் ஆசாரியர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்குச் சென்று பன்னிரு கற்களை எடுத்துக்கொண்டு வரவேண்டியவர்களாய் இருந்தனர். 5ஆம் வசனத்தில் “கடந்துபோய்” என்னும் சொல் இதை அறியத்தருகிறது. மேலும் இவர்கள் அக்கற்களைத் தங்கள் “தோளின்மேல் எடுத்துக்கொண்டு போனதினால்” அவர்கள் சிறிய கற்களை அல்ல, ஓரளவுக்குப் பெரிய கற்களையே எடுத்துச் சென்றுள்ளனர். இந்தக் கற்கள் எதற்காக எடுக்கப்பட்டன என்பதையும் யோசுவா மக்களுக்கு 6ஆம் 7ஆம் வசனங்களில் விளக்கிக் கூறினார்.

“நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்” (யோசுவா 4:6,7).

இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியில் இருந்து எடுத்த பன்னிரண்டு கற்களும் அவர்கள் அந்நதியைக் கடந்து வந்ததை மறக்காமல் இருப்பதற்காக அவர்களிடம் இருக்கவேண்டிய நினைவுச் சின்னங்களாக இருந்தன. அவர்கள் அக்கற்களை யோர்தான் நதியின் அக்கரையில், அந்நதியைக் கடந்த தினம் தங்கியிருந்த இடத்திலே நினைவுச் சின்னமாக வைத்தார்கள்.

“யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்” (யோசு. 4:8).

யோர்தான் நதியைக் கடந்த இஸ்ரவேல் மக்கள் அந்நதியிலிருந்து எடுத்த கற்களை நினைவுச் சின்னமாக வைத்த இடம் “கில்கால்” என்பதை 20ஆம் வசனம் அறியத்தருகின்றது. யோர்தான் நதியின் மேற்குக் கரையில் எரிகோ நகரத்திற்கு இரண்டு மைல்கள் வடகிழக்கில், “வட்டம்” அல்லது “சக்கரம்” என்னும் அர்த்தமுள்ள இடமே கில்கால் ஆகும். வாக்குத்தத்த தேசத்தில் சமாரியாவுக்கு வடக்கிலும் கில்கால் என்னும் பெயரில் ஒரு பட்டணம் இருந்தது (2இராஜா.2:1-2). சில ஆராய்ச்சியாளர்கள் இப்பட்டணத்துக்குக் கிழக்கிலேயே இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், வாக்குத்தத்த தேசத்தில் இஸ்ரவேல் மக்கள் கைப்பற்றிய முதலாவது பிரதேசமாக எரிகோ இருப்பதனாலும், யோசு.3: 16இல் யோர்தான் நதி பிரிவடைந்ததைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களும், (அதாவது எவ்வளவு தூரத்திற்குத் தண்ணீர் தேங்கி நின்றது என்பதைப்பற்றிய குறிப்பும், எதுவரைக்கும் நதியின் தண்ணீர் பிரிந்து ஓடியது என்னும் குறிப்பும்) எரிகோவுக்கு கிழக்கிலேயே இஸ்ரவேல் மக்கள் யோர்தானைக் கடந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

யோசுவா 4ஆம் அதிகாரத்தின் 10 முதல் 19 வரையிலான வசனங்களில் இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்த செயல் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், 3ஆம் அதிகாரத்தின் கடைசி வசனத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விஷயம் இவ்வசனங்களில் விபரமாக எழுதப்பட்டுள்ளதோடு, அவ்வதிகாரத்தில் சொல்லப்படாத சில விஷயங்களும் இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 12ஆம் வசனத்தின்படி யோர்தான் நதியின் கிழக்குப்பகுதியில் குடியிருக்கப்போகும் ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலும் யுத்தம் செய்யக்கூடிய நாற்பதினாயிரம் பேரும் “மோசே தங்களுக்குச் சொன்னபடியே” யோர்தானைக் கடந்து அடுத்த கரைக்குச் சென்றுள்ளனர். மோசேயின் காலத்திலேயே யோர்தானின் கிழக்குப் பகுதியைச் சுதந்தரித்துக்கொண்ட இவர்களுக்கு மோசே கொடுத்த அறிவுறுத்தல் எண்ணா.32:20-22யிலும் உபா.3:18-20யிலும் உள்ளது. மோசேயின் இவ்வறிவுறுத்தலை யோசுவாவும் அவர்களுக்கு கொடுத்திருந்தார் (யோசு. 1:13-14). இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யோர்தான் நதியைக் கடந்தபின்னர், ஆசாரியர்கள் கரை யேறினார்கள். அப்பொழுது மறுபடியுமாகத் தண்ணீர் ஓடத்தொடங்கியது (யோசுவா 4:18). இச்சம்பவம் யூதர்களுடைய நாட்காட்டியின் முதலாவது மாதம் 10ஆம் தேதி நடை பெற்றுள்ளது (யோசுவா 4:19). நாற்பது வருஷங்களுக்கு முன்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதும் அவர்களுடைய நாட்காட்டியின் முதலாவது மாதமாகவே இருந்தது (யாத்.12:2). அச்சமயம் அவர்கள் பஸ்கா பண்டிகையின்போது எகிப்திலிருந்து புறப்பட்டனர் (யாத்.12:3). இப்பொழுது அப்பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன் (யோசு.5:10-12) வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்கின்றனர். இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்லும் விதத்தில் தேவன் அற்புதம் செய்தது, அவர் ஏற்கனவே சொல்லி யிருந்தபடி மோசேக்குச் சமமான நிலையை யோசுவாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது (யோசு.3:7, 4:14).

யோசுவா நான்காம் அதிகாரத்தின் நடுப் பகுதியில், அதாவது வசனங்கள் 10 முதல் 14 வரை மூன்றாம் அதிகாரத்தின் சரித்திரத்தின் தொடர்ச்சியே உள்ளபோதிலும், இவ்வதிகாரம் இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்ததை மறக்காமல் இருப்பதற்காக அவர்கள் வைத்திருக்கவேண்டிய நினைவுச் சின்னங்களான கற்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதனால் இக்கற்கள் நமக்கு கற்பிக்கும் சத்தியங்களை இவ்வத்தியாயத்தில் ஆராய்ந்து பார்ப்போம்.

1. நினைத்துப் பார்க்கவேண்டும்.
யோர்தான் நதியைக் கடந்தபின்னர் யோசுவா கில்காலில் நாட்டிய கற்கள் “நினைப்பூட்டும் அடையாளம்” என்று 7ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் தேவனுடைய அற்புதமான செயல் காரணமாக யோர்தான் நதியைக் கடந்ததை அவர்களுக்கு நினைப்பூட்டும் சின்னமாக இக்கற்கள் இருந்தன. இதனால், பிற்காலத்தில் அவர்கள் இக்கற்களைப் பார்க்கும்போது, தேவன் எவ்விதமாக யோர்தான் நதியை இரண்டாகப் பிரித்து அதன் நடுவில் பாதையை உருவாக்கித் தங்களை வாக்குத்தத்த பூமிக்குள் கொண்டுவந்தார் என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூடியதாய் இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருஷங் களுக்கு முன்பு யோர்தான் நதியைவிடப் பெரியதோர் கடலை, அதாவது செங்கடலைக் கடந்து வரும்விதத்தில் தேவன் அக்கடலையும் இரண்டாகப் பிரித்துக் கடலின் நடுவில் பாதையை உருவாக்கிக் கொடுத்திருந்தார் (யாத்.14:21,22). எனினும், அச்சமயம் தேவன் நினைப்பூட்டும் கற்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் இப்பொழுது இதைப்பற்றி அவர் குறிப்பிடுவதற்குக் காரணம், இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்து குறுகிய காலத்திற்குள்ளாகவே தேவன் செய்த அந்த அற்புதச் செயலை மறந்துவிட்டனர். அவர்கள் செங்கடலைக் கடந்து சீனாய் மலையடிவாரத்தில் தங்கியிருந்த காலத்தில் தேவனைச் சந்திப்பதற்காக மோசே மலையுச்சிக்குச் சென்ற போது, மோசேயையும் தேவன் அவர்களுக்காகச் செய்த அற்புதச் செயல்களையும் மறந்தவர்களாக தங்களிடத்தில் இருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தையும் உருக்கி ஒரு கன்றுக்குட்டியைச் செய்து, அதுவே தங்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டுவந்த தெய்வம் என்று அதை வழிபடத் தொடங்கினார்கள் (யாத்.32:1-5). இதனால், யோர்தான் நதியைக் கடந்தபின்னர் இஸ்ரவேல் மக்கள் இவ்விதமாகத் தேவனை மறந்துபோகாமல், அவர் செய்த அற்புதச் செயலை என்றும் நினைவில் வைத்திருக்கும் விதத்தில் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் கற்களை வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

உண்மையில், “அவர்கள் ஒருபோதும் இவ்வற்புதச் செயலை மறந்துபோகாமல் இருப்பதற்காகவே நினைப்பூட்டும் கற்கள் கொடுக்கப்பட்டன.”

மனிதனின் மிகப்பெரிய எதிரி அவர்களுடைய ஞாபக மறதியே. பொதுவாக மனிதர்கள் தாங்கள் எதையெல்லாம் மறக்கக்கூடாதோ அதையெல்லாம் மறந்துவிடுகின்றனர். இதனால் நமக்கு நினைப்பூட்டும் கற்கள் அவசியப்படுகின்றன. மனிதர் புதிய இடங்களுக்குச் செல்லும்போது, அவ்விடத்திற்குச் சென்றதை நினைவூட்டும் பொருட்களை அல்லது படங்களை வாங்குவது வழக்கம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைப் புகைப்படங்களாகவும், வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. நாம் செய்யும் காரியங்களையும், நம்முடைய வாழ்வில் வரும் முக்கிய நிகழ்வுகளையும் மறக்காமல் இருப்பதற்காக ஞாபகப் பொருட்களை அல்லது படங்களை வைத்திருக்கும் நாம், தேவன் நமது வாழ்வில் செய்யும் காரியங்களை மறக்காமல் இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. இதனால், தேவன் நம் வாழ்வில் செய்த காரியங்களை உடனடியாகவே மறந்து விடுகின்றோம். தேவன் நம் வாழ்வில் செய்தவற்றை நாம் மறக்காமல் இருப்பதற்கு அவரது செயல்களை நினைப்பூட்டும் சின்னங்கள் நமக்கு அவசியமாய் உள்ளன. இவற்றைப் பொருட்களாக அல்லது எழுதப்பட்ட குறிப்புகளாக நாம் வைத்திருக்கலாம்.

2. நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும்
தேவன் நம்முடைய வாழ்வில் செய்தவற்றை நமக்கு நினைப்பூட்டும் சின்னங்களை நாம் வைத்திருக்கும்போது, கடந்தகாலத்தில் நம்மோடிருந்து நம்மை வழிநடத்திவந்த தேவன் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அதேவிதமாகச் செயற்படுவார் என்னும் நிச்சயத்தையும் அவைகள் நமக்கு கொடுக்கும். உண்மையில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்கள் வைத்திருந்த நினைவுச் சின்னங்கள், இதுவரையில் உதவிசெய்த தேவன் இனிமேலும் தொடர்ந்து உதவிசெய்வார் என்னும் நம்பிக்கையை பக்தர்களுக்குக் கொடுத்துள்ளன.

இஸ்ரவேல் மக்களுக்குப் பெலிஸ்தரோடு ஏற்பட்ட யுத்தத்தில் தேவன் வெற்றியைக் கொடுத்தபோது, “அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்” என்று 1 சாமு.7:12இல் குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையில் சாமுவேல் நாட்டிய கல் அதுவரை கர்த்தர் அவர்களுக்கு செய்த உதவியை நினைப்பூட்டுவதாக மட்டுமல்ல, இனிமேலும் அவர்களுக்கு உதவிசெய்வார் என்னும் நிச்சயத்துடனும் நாட்டப்பட்ட கல்லாக உள்ளது. எனவே, கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்த காரியங்களை நினைப்பூட்டும் கற்கள் அல்லது அதைப்பற்றிய குறிப்புகள் நம்மிடத்தில் இருக்கும்பொழுது, அவைகள், இனிவரும் நாட் களிலும் தேவன் நம் வாழ்வில் செயல்படுவார் என்னும் நிச்சயத்தை நமக்குக் கொடுக்கும்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளில் அகப்படும்போது, என்ன செய்வது என்பதை அறியாது திகைத்து தடுமாறுகிறவர்களாகவே இருக்கின்றனர். உண்மையில், “கடந்த காலத்தில் தேவன் செய்தவற்றை மறந்துவிடுவதினாலேயே பலர் நிகழ்கால நெருக்கடியின்போது அவரை நம்பாதவர்களாக இருக்கின்றனர். ஆனால், இத்தகைய சந்தர்ப்பங்களில், கடந்த காலத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டபோது தேவன் எப்படி நமக்கு உதவிசெய்தார் என்பதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது கடந்தகாலத்தில் நம்மோடிருந்து நமக்கு உதவி செய்த தேவன் இப்பொழுதும் அதேவிதமாக உதவிசெய்வார் என்னும் நம்பிக்கை நமக்கு ஏற்படும்”. உண்மையில், தாவீதின் வாழ்வு இதற்குச் சிறந்த விவரணமாய் உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும்போது, கடந்த காலத்தில் தேவன் தனக்கு எப்படி உதவிசெய்தார் என்பதை நினைத்துப் பார்ப்பது அவனுடைய பழக்கமாய் இருந்தது. இதனால்தான் ஆரம்பத்தில் அழுது புலம்பும் நிலையில் ஆரம்பமாகும் அவனுடைய சங்கீதங்கள் இறுதியில் தேவனைத் துதித்துப் போற்றுவதுடன் நிறைவுபெறுகின்றன. இதற்குக் காரணம், ஆரம்பத்தில் தன்னுடைய சூழ்நிலையைப் பார்த்துப் புலம்பி தேவனிடம் உதவிக்காக மன்றாடும் அவன், உடனடியாக கடந்தகாலத்தில் தேவன் தனக்கு செய்த உதவிகளை நினைத்துப் பார்க்கின்றான். இதனால், கடந்த காலத்தில் தன்னோடிருந்து தனக்கு உதவிசெய்த தேவன் நிகழ்காலத்திலும் தனக்கு உதவுவார் என்னும் நம்பிக்கை ஏற்பட, தேவனைத் துதித்து ஸ்தோத்தரிப்பவனாக சங்கீதங்களை நிறைவு செய்கின்றான். இதைப் போலவே நாமும் நிகழ்கால நெருக்கடிகளின் போது கடந்தகாலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்தவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது நிகழ்காலத் துயரத்தையும் தேவன் மாற்றுவார் என்னும் நம்பிக்கையில் நமது அழுகை ஆனந்தக் களிப்பாய் மாறும்.

தேவன் கடந்த காலத்தில் செய்ததை நினைத்துப் பார்த்ததினால், நிகழ்கால நெருக்கடியிலும் தேவனுடைய உதவி கிடைக்கும் என்னும் நிச்சயம் தாவீதுக்கு இருந்ததை அவன் கோலியாத் என்னும் ராட்சத மனிதனுடன் போரிடச் சென்ற சம்பவம் சிறப்பான விதத்தில் அறியத்தருகிறது. இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கோலியாத்தைப் பார்த்து அஞ்சி நடுங்கியபோதிலும், தாவீது அந்த ராட்சத மனிதனைப் பார்த்துப் பயப்படாமல், தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் தேவன் தன்னை எவ்வாறு பாதுகாத்தார் என்பதை நினைத்துப் பார்த்ததினால், “…என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்…” என்று அறிவித்தவனாக கோலியாத்துடன் போரிடச் சென்றான் (1சாமு.17:37). இவ்விதமாக நாமும் நிகழ்கால நெருக்கடியின்போது கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்த காரியங்களை நினைத்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது கடந்த காலத்தில் நமக்கு உதவிசெய்த தேவன் இப்பொழுதும் நமக்கு உதவிசெய்வார் என்னும் நிச்சயம் ஏற்படும். இத்தகைய நிச்சயம் நமக்கு ஏற்படுவதற்கு, கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்ததை ஞாபகப்படுத்தும் நினைவுச் சின்னங்களை நாம் வைத்திருக்கவேண்டும்.

3. நிரூபித்துக் காட்டவேண்டும்
தேவன் நமது வாழ்வில் செய்தவற்றை மறக்காமல் இருப்பதற்காக நாம் வைத்திருக்கும் நினைப்பூட்டும் சின்னங்கள் நமக்கு மாத்திரமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும் தேவனுடைய செயல்களை அறிவிப்பவைகளாய் உள்ளன. இதனால், கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் அற்புதமானவிதத்தில் செயல்பட்டார் என்பதை நினைத்துப் பார்த்து, கடந்த காலத்தில் நம்முடைய வாழ்வில் செயல்பட்ட தேவன் நிகழ்காலத்திலும் இதேவிதமாகச் செயற்படுவார் என்பதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்வது மாத்திரமல்ல, இதை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக் காட்டவேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். அதாவது, கடந்த காலத்தில் தேவன் நமது வாழ்வில் செயற்பட்டதுபோல நிகழ்காலத்திலும் செயற்படுகிறவர் என்பதை நம்முடைய பிள்ளைகள் அறிந்துகொள்வதற்காகவும் நினைவுச் சின்னங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் யோசுவா இவ்வதிகாரத்தின் இறுதிப் பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டு வந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப் போகப்பண்ணினார் என்று அறிவிக்கக் கடவீர்கள் என்றான்” (யோசுவா 4:20-24).

தேவன் யோசுவாவுக்குச் சொன்னதை (யோசுவா 4:6-7) அவன் இவ்வசனங்களில் மக்களுக்கு அறிவிக்கின்றான். இஸ்ரவேல் மக்கள் “கில்கால்” என்னுமிடத்தில் நாட்டிய கற்களைப்பற்றி எதிர்காலத்தில் பிள்ளைகள் கேட்கும்போது, தேவன் எவ்விதமாக யோர்தான் நதியைக் கடப்பதற்கு உதவிசெய்தார் என்பதை அவர்களுக்கு விளக்கிக்கூறும்படி ஜனங்களுக்கு அறிவுறுத்தும் யோசுவா, நாற்பது வருஷங்களுக்கு முன்பு செங்கடலைக் கடப்பதற்குத் தேவன் தங்களுக்கு உதவி செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார். யோசுவாவின் வார்த்தைகள், தேவன் எக்காலத்திலும் தம்முடைய ஜனங்களுக்கு உதவி செய்கிறவர் என்பதை அறியத்தருகின்றன. இதனால்தான், 24ஆம் வசனத்தில் “நாங்கள் செங்கடலைக் கடந்தது போல நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தீர்கள்” என்று கூறுகின்றார். அதாவது நாற்பது வருஷங்களுக்கு முன்பு தேவன் எவ்விதமாகச் செயற்பட்டாரோ, அதேவிதமாக இப்பொழுதும் செயற்பட்டுள்ளார் என்பதையே யோசுவா சுட்டிக்காட்டுகின்றார்.

உண்மையில், யோர்தான் நதியைத் தங்களால் சுயமாகக் கடந்துசெல்ல முடியாது என்பதை அறிந்திருந்த யோசுவா, நாற்பது வருஷங்களுக்கு முன்னர் தேவன் எப்படி செங்கடலைக் கடக்க உதவி செய்தார் என்பதை நினைத்துப் பார்த்ததினால், தாங்கள் செங்கடலைக் கடந்தவிதமாக இந்த யோர்தான் நதியையும் கடப்போம் என்னும் நிச்சயத்துடன் மக்களை அந்நதிக்கரைக்கு அழைத்து வந்திருந்தார். தேவனும் அவனுடைய நம்பிக்கையின்படியே யோர்தானின் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் அதைக் கடப்பதற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன்மூலம், நாற்பது வருஷங்களுக்கு முன்பு தேவன் எப்படி செயற்பட்டாரோ அதேவிதமாக இப்பொழுதும் செயற்படுகிறவர் என்பதை யோசுவா இஸ்ரவேல் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுபவராக இருந்தார். இதைப் போலவே, கடந்தகாலத்தில் நம்முடைய வாழ்வில் செயற்பட்ட தேவன் இப்பொழுதும் செயற்படுகிறவர் என்பதை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக் காட்டவேண்டும். அப்பொழுது மாத்திரமே நம்முடைய பிள்ளைகள் நாம் வழிபடும் தேவனைத் தங்களுடைய தெய்வமாக ஏற்றுக்கொள்வார்கள்.

தேவன் நம்முடைய வாழ்வில் செய்த வற்றை நாம் நினைத்துப் பார்ப்பதற்காகவும், கடந்த காலத்தில் நம்முடைய வாழ்வில் செயற்பட்ட தேவன் நிகழ்காலத்திலும் அதே விதமாகச் செயற்படுவார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவும் நாம் வைத்திருக்கும் நினைவுச் சின்னங்கள், அவற்றைப் பற்றி நம்முடைய பிள்ளைகள் நம்மிடத்தில் விசாரித்துக் கேட்கின்ற விதத்தில் இருக்க வேண்டும். அதாவது தேவனைப்பற்றிய நம்முடைய நம்பிக்கையும் நடத்தை முறைகளும் நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் வழிபடும் தேவனைப்பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் தேவனுடைய செயல்களை நினைவூட்டும் சின்னங்களை நாம் வைத்திருப்பதில் நம்முடைய பிள்ளைகளுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. தற்காலத்தில் பல கிறிஸ்தவ குடும்பங்களில் பிள்ளைகள் பெற்றோரின் மார்க்க வழிகளைப் பின்பற்றுவதில்லை. பெற்றோரின் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும், பழக்கவழக்கங்களும் பிள்ளைகளுக்கு அறிவீனமானவைகளாகவும் அவசியமற்றவைகளாகவும் தென்படுகின்றன. இதனால்தான் தற்காலத்தில் மேற்கு உலகநாடுகளில் வயோதிபர் மாத்திரமே ஆலயங்களுக்குச் செல்வதையும், பல ஆலயங்கள் மூடப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம்.

இத்தகைய நிலைமை மாறவேண்டுமானால் வேதாகம காலத்தில் செயற்பட்ட தேவன் நம்முடைய வாழ்விலும் செயல்படுகிறவர் என்பதை நம்முடைய பிள்ளைகள் காண்கின்ற விதத்தில் நாம் வாழவேண்டியது அவசியம். நாற்பது வருஷங்களுக்கு முன்பு செங்கடலைக் கடப்பதற்கு உதவிசெய்த தேவன், இப்பொழுது யோர்தான் நதியையும் கடப்பதற்கு உதவி செய்வார் என்பதை யோசுவா தன் கால மக்களுக்கு நிரூபித்துக் காண்பித்தது போல, நாமும் நம்முடைய கால மக்களுக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் வேதாகமத்தில் செயற்பட்ட தேவன் இன்றும் செயற்படுகிறவர் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் யோர்தானைக் கடந்ததைப்பற்றி மட்டுமல்ல, தங்களுடைய மார்க்க சடங்காச்சாரங்களையும், வழிபாட்டு முறைகளையும், தேவனுடைய கட்டளைகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியவர்களாய் இருந்தனர் (யாத்.12:26-27, 13:14-16, உபா.6:20). இஸ்ரவேல் மக்கள் கில்காலில் நாட்டியிருந்த கற்களைப்பற்றி அவர்களுடைய பிள்ளைகள் அவர்களிடத்தில் கேட்டது போலவே நம் பிள்ளைகளும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும்பற்றி நம்மிடத்தில் கேட்கும்போது அவர்களுக்குப் புரியும்விதத்திலும், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் அவர்களுக்கு விளக்கங்கள் கொடுக்க வேண்டியது நமது கடமையாய் உள்ளது.

“நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு தேவனைப் பற்றிய சத்தியத்தைக் கற்றுக்கொடுக்காவிட்டால் அவர்கள் உலகத்தைப் பின்பற்றுகிறவர்களாகவே இருப்பார்கள்”.