Dr.தியோடர் வில்லியம்ஸ்
(நவம்பர்-டிசம்பர் 2013)

லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலே ஆண்டவருடைய பிறப்பைக் குறித்த அதிகமான விபரங்களை நாம் அறிந்துகொள்ளலாம். முதல் இரண்டு அதிகாரங்களிலும் அவற்றைப் பார்க்கலாம். இரட்சகரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி லூக்கா முதல் அதிகாரம் 5ஆம் வசனத்திலிருந்து லூக்கா எழுத ஆரம்பிக்கிறார். இந்த வசனத்திலிருந்து இரட்சகரின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், அவரது பிறப்பிற்கான சூழ்நிலைகளைப் பற்றியும் அவர் நமக்குக் கூறி அறிவிக்கிறார். அவரது குழந்தைப் பருவத்தைப் பற்றியும், அவரது வாலிபப் பருவத்தைப் பற்றியும் இந்த செய்தியில் நாம் பார்க்கலாம்.

லூக்கா ஆண்டவருடைய உறவினர்களைப் பற்றி முதல் அதிகாரத்தில் 5ஆம் வசனத்தில் அறிமுகப்படுத்துகிறார். “யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து”. ஆண்டவரின் ஆரம்ப வாழ்க்கை வரலாற்றை அவர் நமக்கு அறிவிக்கும்பொழுது சகரியாவிலிருந்து தொடங்குகிறார். சகரியா ஆசாரியனாயிருந்தான் என்று பார்க்கிறோம். அவனது வாழ்க்கையில் எதிர்பாராதவேளையில் கடவுள் குறுக்கிட்டதை சற்று சிந்திப்போம்.

சகரியாவின் வாழ்க்கையிலே, அவன் எதிர் பார்த்திராத ஒரு வேளையிலே, தேவன் குறுக்கிட்டார். பெரும் திட்டங்களை சாதிப்பதற்காக தேவன் இந்த நாட்களிலும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலே அவர்கள் எதிர்பாராத சமயங்களிலே குறுக்கிடுகிறார். சில சமயத்திலே நாம் திட்டங்கள் போட்டு வைத்துக் கொள்ளுகிறோம். நம்முடைய மார்க்க வாழ்க்கைக்கும்கூட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கும்கூட நாமே திட்டங்கள் போட்டு இவ்விதமாய்த்தான் இருக்கவேண்டும் என்று எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிக்கொள்ளுகிறோம்.

இந்த சமயத்திலே எதிர்பாராத வேளையிலே நம்முடைய திட்டங்களுக்கு அப்பாற்பட்ட விதத்திலே தேவன் செயல்படுவார். அதற்கு நாம் இடம் கொடுக்கிறோமா? அல்லது அவிசுவாசத்தினாலும், கீழ்ப்படியாமையினாலும் முரட்டாட்டம்பண்ணி, அவருடைய செயலை நாம் தடுத்துவிடுகிறோமா? அவருக்கு இடையூறாகக் காணப்படுகிறோமா?

சகரியாவின் வாழ்க்கையை எடுத்துப் பார்ப்போம். தேவனுடைய கற்பனைகளின்படி வாழ்ந்தான். சன்மார்க்க நியதிகளை அவன் கைப்பற்றினான். மார்க்க ஆசாரங்களையும் ஒழுங்காக கைப்பற்றினான். தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் அவனும், அவன் மனைவியும் நீதிமான்களாக்கப்பட்டவர்களாய், ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே அவர்களுடைய வாழ்க்கையிலே ஒரு பெரும் குறைவு இருந்தது. லூக்கா 1:7இல் அதைப் பார்க்கிறோம். “எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்”. பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை இனி அவர்களுக்குக் கிடையாது. ஏன்? அந்த வயதைத் தாண்டிவிட்டார்கள். வயது சென்றவர்களாயிருந்தார்கள்.

அந்த நாட்களிலே இஸ்ரவேல் மக்கள் நடுவிலே ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லையென்றால் கடவுளின் சாபம் அல்லது அவர்கள் கடவுளை துக்கப்படுத்திவிட்டார்கள் என்றெல்லாம் பலவிதமாக அவர்களைத் தூற்றுவார்கள். பழித்துப் பேசுவார்கள். ஒருவேளை எலிசபெத்தைப் பற்றியும், சகரியாவைப் பற்றியும் மற்றவர்கள் இவ்விதமான வசைச் சொற்களையெல்லாம் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் நீதிமான்களாய் நடந்தார்கள் என்று தேவன் கூறுகிறார்.

உன் வாழ்க்கையிலும் புரிந்துகொள்ள முடியாத சம்பவங்கள் உண்டு. ஒருவேளை திருமணமாகி அநேக ஆண்டுகளாகிவிட்டன. குழந்தை கிடையாது. மற்றவர்கள் சொல்லுவார்கள் ஏதோ தேவனுக்கு விரோதமானதைச் செய்துவிட்டாய் அல்லது உன்மேல் சாபமிருக்கிறது. ஆகையினால்தான் பிள்ளை இல்லை என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டிய காரியம், கடவுள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதுதான். அவருக்கு முன்பாக நீ வெளிச்சத்தில் நடந்து அவரைப் பிரியப்படுத்தும் வாழ்வில் இருப்பாயானால் உன்னுடைய குறைபாடுகளெல்லாம் உண்மையாகவே குறைபாடுகள் அல்ல. ஏனென்றால் எல்லாவற்றையும் அவர் அறிவார். மற்றவர்கள் குறை என்று கூறலாம். ஆனால் ஆண்டவர் அதைக் குறையாகக் காண்பதில்லை. எல்லாம் அவருடைய ஆளுகையின்கீழ் இருக்கிறது.

ஆம், சகரியாவும், எலிசபெத்தும் நீதிமான்களாயிருந்தார்கள். குற்றமற்றவர்களாய் நடந்தார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தது. அந்த நாட்களிலே மேசியா தங்கள் குடும்பத்திலே பிறப்பார் என்று அநேகர் எதிர்பார்த்தார்கள். தங்கள் வயிற்றிலே மேசியா பிறப்பார் என்று அநேக பெண்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவர்களுக்கோ அந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது. எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களாக, மேசியாவோடு தங்களுக்கு எந்த உறவும் இருக்கும் என்ற நம்பிக்கையும் இழந்தவர்களாக, காணப்படுகிறார்கள். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே தேவன் அவர்களை சந்திக்கிறார்.

ஆம், நம்பிக்கையற்ற சூழ்நிலையிலே, நமது பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாது என்ற நிலையில் நாம் இருக்கும்போது தேவன் நம்மை சந்திக்கிறார். நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதைத்தான் இங்கே காண்கிறோம். 8ஆவது வசனம், “…அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்”. 24,000 ஆசாரியர்கள், 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் தேவாலயத்திலே ஊழியம் செய்வது உண்டு. ஆகையினாலே ஒரு ஆசாரியன் தன் வாழ்க்கையிலே ஒருமுறைதான் தூபம்காட்டும் சிலாக்கியத்தைப் பெறுவான். அந்த சிலாக்கியம் இப்போது சகரியாவுக்குக் கிடைத்திருந்தது. தனது ஊழியத்தின் கடமையைப் பொறுப்பாய் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வேளையிலே தேவன் அவனைச் சந்திக்கிறார்.

இது எவ்வளவு ஒரு நல்ல சத்தியம் பாருங்கள்! நமக்குக் கிடைத்த வெளிச்சத்திலே நாம் உண்மையுள்ளவர்களாய் நடக்கும்போது, தேவன் நமது வாழ்க்கையிலே குறுக்கிட்டு நம்மை சந்திக்கிறார். உனக்கு கிடைத்த வெளிச்சத்திலே நீ நடக்கிறாயா? கிடைத்த வெளிச்சத்தை விட்டுவிட்டு, வேறு வெளிப்பாடுகள் வேண்டும், தரிசனங்கள் வேண்டும், அனுபவங்கள் வேண்டும் என்று காத்திருப்பாயானால் அசுத்த ஆவிகள், ஏமாற்றும் ஆவிகள் உன்னை வஞ்சிக்கக் கூடும். உன் வாழ்க்கையில் பிரவேசித்து உன்னைத் தவறானப் பாதையில் திருப்பக் கூடும். ஆகையினால் தான் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் குறித்து நாம் எச்சரிக்கையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.

எந்தெந்தக் காரியத்திலே பாவம் இருக்கிறது, குறை இருக்கிறது என்று ஆண்டவர் காட்டுகிறாரோ, அவைகளை அறிக்கையிட்டு, கழுவப்பட்டு, அவரது வெளிச்சத்தில் நடப்பதற்கு பதிலாக வேறு அனுபவங்களையும், தரிசனங்களையும் தேடிக்கொண்டிருப்போமானால் அசுத்த ஆவிகளும், வஞ்சிக்கிற ஆவிகளும், உனக்கு தரிசனங்களைக் கொடுக்கக் கூடும். அவைகள் உன்னை வேறு வழியிலே திருப்பக்கூடும். தேவதூதர்கள் மூலமாய் தரிசனங்கள் கிடைத்தது என்று சொல்லும்போது, அவைகள் எந்த தேவ தூதர்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையினாலே வெளிச்சத்திலே நடக்கும்போது, நமது கடமையை ஒழுங்காய் நாம் செய்யும்போது, தேவனுடைய சரியான வெளிப்பாடு நமக்குக் கிடைக்கும்.

சகரியா தேவாலயத்திற்குள் பிரவேசித்து தூபம் காட்டிக் கொண்டிருந்தான். மகா பரிசுத்த ஸ்தலத்தில் அல்ல, பரிசுத்த ஸ்தலத்திலே. மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் மட்டும்தான் செல்லமுடியும். சகரியா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து தூபம் காட்டிக்கொண்டிருந்தான். இந்த தூபம் காட்டுவது ஜெபத்திற்கு அடையாளமாயிருக்கிறது. அவன் தேவசந்நிதியிலே ஜெபித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஜனங்கள் வெளியிலே நின்று ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்கள். “தூபங் காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்” (லூக்.1:10). 13ஆவது வசனத்தை எடுத்துப் பார்ப்போம் “தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது” என்று கூறுகிறான். 10ஆவது வசனத்திலே ஜெபம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 13ஆவது வசனத்திலே வேண்டுதல் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் ஜெபம் பண்ணினார்கள். சகரியா வேண்டுதல் செய்தான். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஜெபம் என்பது வழக்கமாக, ஆசாரமாக செய்கிற ஜெபத்தைக் குறிக்கிறது. வேண்டுதல் என்பது தேவையின் அடிப்படையிலே செய்யப்படுவதாகும். தேவையுள்ளவனாக, தன் தேவையை உணர்ந்தவனாக சகரியா தேவனிடத்திலே விண்ணப்பம் செய்து கொண்டான் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆகையினாலே மக்கள் செய்த ஜெபத்திற்கும், சகரியா செய்த ஜெபத்திற்கும் வேறுபாடு இருந்தது.

ஒன்று தேவையை உணர்ந்து அறிக்கையிட்டு செய்யப்பட்ட ஜெபம். ஆம், எப்பொழுது நம்முடைய தேவையை உண்மையாகவே ஒப்புக்கொள்ளுகிறோமோ நம்முடைய உதவியற்ற நிலையை ஒப்புக்கொள்ளுகிறோமோ, அப்பொழுது ஆண்டவர் நமது ஜெபத்தையும் கேட்கிறார். இவ்விதமாக சகரியாவின் வேண்டுதல் கேட்கப்படுகிறது. சடங்காச்சாரமாக வழக்கம்போல் செய்யும் ஜெபங்கள் அநேகமாய் கேட்கப்படமாட்டாது.

எதற்காக அவன் வேண்டியிருக்கக் கூடும்? தனக்கு பிள்ளை பிறக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பானா? இல்லை. ஏன்? அந்த நம்பிக்கையை அவன் இழந்துவிட்டிருந்தான் என்று நாம் பின்னாலே பார்க்கிறோம்.

18ஆவது வசனத்தில் சகரியா தேவ தூதனை நோக்கி, “…இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே” என்று கூறுகிறான். ஆகையினாலே தனக்கு பிள்ளை பிறக்கவேண்டும் என்று அவன் ஜெபித்திருக்க முடியாது. பின் எதற்காக அவன் ஜெபித்திருப்பான்? தன்னுடைய மக்கள், இஸ்ரவேல் மக்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும், அவர்கள் மீட்கப்படவேண்டும், மேசியா பிறக்கவேண்டும் என்று அவன் ஜெபித்திருக்க வேண்டும். இஸ்ரவேலின் மீட்புக்காக, மேசியாவின் வருகைக்காக அவன் ஜெபித்திருக்க வேண்டும். தன் மக்களின் தேவையை உணர்ந்தவனாக அவர்களுக்காக அவன் ஜெபிக்கும்போது, தேவன் அவனுக்குப் பதில் கொடுக்கிறார். நமது சொந்தத் தேவைகளை மட்டுமல்ல, மற்றவர்களுடைய தேவைகளையும் உணர்ந்து, நம் தேவைகளாக அவற்றை நாம் ஆண்டவரிடத்தில் கொண்டு வரும்பொழுது, அவர் அற்புதமான விதத்தில் குறுக்கிட்டு செயல்படுகிறார்.

என் அருமையான சகோதரனே, சகோதரியே, நீ எதிர்பாராத விதத்திலே தேவன் உன் வாழ்க்கையிலே குறுக்கிடுவாரானால் அதற்கு நீ இடம் கொடுப்பாயா?.