Dr.புஷ்பராஜ்
(நவம்பர்-டிசம்பர் 2013)

மரியாளின் அந்த இராத்திரி
பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவள் மரியாள். வேத வசனங்களைக் குறிப்பாக தீர்க்க தரிசன வசனங்களை அறிந்தவளாகவே அவள் இருந்திருக்க வேண்டும். வாலிபப் பெண்ணாகிய அவளுக்கு திருமண ஏற்பாடு நடந்து நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.

திருமணத்துக்கு தேதி நிச்சயிக்கப்பட்டது. பக்தியுள்ள மாப்பிள்ளையும், தேவனுக்கும் அவருடைய வசனத்துக்கும் பயப்படும் ஒரு நல்ல மனிதனையே திருமணம் செய்யப் போகிறோம் என்ற சந்தோஷ கற்பனையில் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நாட்களில் ஒருநாள் இரவு அதிர்ச்சி தரும் செய்தியைத் தூதன் அறிவிக்கின்றான்.

திருமணம் நடப்பதற்கு முன்பே கர்ப்பம் தரிக்கப்போகிறாய் என்பதுதான் அந்த செய்தி! உண்மையில் அதை கற்பனை செய்து பாருங்கள். பின்னால் அது பாக்கியமுள்ள செய்தியாக சந்தோஷமுள்ள செய்தியாக அறிந்து அவள் ஆனந்தப்பட்டாலும் செய்தி கேட்டவுடன் அவள் நிலை எப்படி இருந்திருக்கும்?

முதலில் தன் வீட்டாருக்கு எப்படி புரிய வைப்பது? திருமணத்தன்று தன் புருஷனுக்கு எப்படி புரிய வைப்பது? அப்படிதான் புரிய வைக்க முயன்றாலும் அதன்பின் விளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? அப்பப்பா, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத நிலை.

ஆனால் இந்த செய்தி, மரியாளை எப்படி தாங்கச் செய்தது: முதலாவது அவள் கர்த்தருக்குப் பயப்படுகிற பிள்ளை. மேசியா வரப்போகிறதை அவளும் வாசித்து அறிந்து எதிர் பார்த்திருந்தாள். அந்த எதிர்பார்ப்பும், வசனத்தை நம்பினதும்தான் இந்த அதிர்ச்சியான செய்தியைத் தாங்கவும் நம்பவும் வைத்தது.

செய்தி தேவதூதனின் நேரடி தரிசனத்தோடு வந்ததும், அந்த செய்தி கர்த்தரால் பரலோக திட்டத்தோடு தனக்கு அனுப்பப்பட்டது என்பதை, வயது முதிர்ந்த மலடியான எலிசபெத்துக்கு, இதே தேவதிட்டத்தின்படி குழந்தை பிறக்கப்போகிற அதிசயத்தை நேரில் கண்டு மரியாள் உறுதிப்படுத்தினாள். இதுவே மரியாளுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்க வேண்டும்.

யோசேப்பின் அந்த இராத்திரி
தனக்கு நிச்சயக்கப்பட்ட மரியாள் கர்ப்பமுற்ற விவரத்தை அறிந்தபோது அந்த இராத்திரி யோசேப்புக்கு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?

யோசேப்பு மற்றவர்களைப்போல சிறுவயதிலேயே தன் சரீரத்தைப் பரிசுத்தமாய் காத்துக்கொண்டவன். தேவனுக்கும் அவரது வசனத்துக்கும் பயந்து வாழ்பவன். வேதமே அவனை நீதிமான் என்று சாட்சி கொடுக்கிறது. இப்படிப்பட்ட தேவபயமுள்ள தனக்கு கறைபடிந்த களங்கமுள்ள ஒரு பெண்ணா மனைவியாக வாய்ப்பது, என்னதான் தூதன் அவளுக்கு தரிசனமளித்து அறிவித்தான் என்று அவள் கூறினாலும் எப்படி நம்புவது? தன் மனைவியின் வயிற்றில் மாற்றானின் கரு, பிள்ளையாக வளருகிறது என்றுதானே நினைக்கத் தோன்றும்! எப்படி இதை சகிப்பது? யார்தான் இதை ஏற்றுக் கொள்வார்கள்?

ஒரே போராட்டம், இரவு அவனால் தூங்க முடியவில்லை. யாரும் அறியாத இந்த பெரிய களங்கமுள்ள இரகசியத்தோடு மரியாளை எப்படி நேசித்து குடும்ப வாழ்க்கை நடத்துவது?

இந்த இரகசியத்தை யோசேப்பு மற்றவர் களுக்கு அறிவித்தான் என்று வைத்துக் கொள்வோம். என்னென்ன பயங்கரங்கள் நடந்திருக்கும். பழைய ஏற்பாட்டு சட்டப்படி திருமணத்துக்கு முன் கர்ப்பம் தரித்தால், தன் புருஷனின் தொடர்பு இல்லாமல் கர்ப்பம் உண்டானால், ஒழுக்கமற்ற பெண்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைதான் மரியாளுக்குக் கிடைக்கும். ஊர் ஜனங்கள் மரியாளை தள்ளி கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள்.

என்ன சோதனை இது! மரியாள் களங்கமில்லாதவள் என்று இவன் மனச்சாட்சி பூரணமாக நம்புகிறது. அதேசமயம் தான் அறியவந்த விஷயம் அவனை அந்த இராத்திரி தடுமாற வைத்தது. யாரிடம் இவ்விஷயத்துக்கு ஆலோசனை கேட்பது? ஒரு திட்டத்தை மனதிலே வரைந்துகொண்டான். மரியாளை ஜனங்கள் முன், ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டவள் என்று காட்டிக்கொடுக்க, அதனால் கல்லெறிந்து கொல்லப்பட மனம்விரும்பாமல், அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

அன்றிரவு தேவதூதன்மட்டும் வந்து விவரம் அறிவித்து மரியாளின் வார்த்தை உண்மை என்று சாட்சி கொடுக்காதே போயிருந்தால் யோசேப்பு மரியாளைத் தள்ளித்தான் வைத்திருப்பான். மரியாளுக்கு தூதன் அறிவித்த அன்றே யோசேப்புக்கும் இந்த இரகசியத்தை அறிவித்திருந்தால், இவ்வளவு போராட்டம் யோசேப்புக்கு இருந்திராதே! இத்தனை நாள் காலம் கடந்து கர்த்தர் ஏன் இதை அறிவிக்க வேண்டும்? இதற்கு பதில் வேதத்தில் இல்லை. ‘உன் வழிகள் என் வழிகள் அல்ல, என் நினைவுகள் உன் நினைவுகளுமல்ல’ என்று கர்த்தர் சொல்கிறார்.

இந்த கால தாமதமான அறிவிப்பில் என்னென்ன மாற்றங்களை கர்த்தர் எதிர் பார்த்தாரோ, அல்லது முன்பாகவே அறிவிப்பதால் ஏதாவது தன் திட்டத்துக்கு எதிரிடையான மாற்றங்கள் சம்பவித்துவிடும் என்று எண்ணினாரோ அறியோம். யோசேப்பு வசனத்தை அறிந்தவன். வசனம் உறுதியாக்கப்படும் திட்டத்தைக் கேள்விப்பட்டவுடன் அதற்கு தன் ஒத்துழைப்பைக் கொடுத்தான். மிகுந்த சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் மரியாளை ஏற்றுக்கொண்டான்.

சில கிறிஸ்தவ ஊழியர்களுக்கும்கூட இந்த பிறப்பின் விஷயத்திலே சந்தேகம். மனுஷ தொடர்பு இல்லாமல் மரியாளுக்கு குழந்தை பிறந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் சந்தேகமாகும். யோசேப்புக்கும் சந்தேகம் வந்தது. ஆனால் அவன் ஏற்கனவே மக்களை இரட்சிக்க மேசியா வரப்போவதை வசனத்தின் மூலம் அறிந்து வைத்திருந்தபடியால் தேவ வார்த்தை வெளிப்பட்டபோது சந்தேகம் மாறி தெளிவுபெற்று கர்த்தரின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தான். மரியாளும் வசனத்தை நன்றாக அறிந்திருந்தபடியாலும், தேவ திட்டத்தை எதிர்பார்த்தபடியாலும், மிகப் பெரிய அவமானத்தைத் தேவதிட்டத்துக்காக சந்தோஷமாக தாங்கினாள். இவ்விதம் தேவ திட்டத்துக்கு மரியாளும் ஒத்துழைப்பு கொடுத்தாள். வசனத்தை நம்பாதவர்களுக்கு எப்போதும் சந்தேகமிருக்கும். ஆரம்பத்தில் மரியாளும் அதிர்ச்சி நிமித்தம் செய்தியை நம்பவில்லை. அதனால்தான் தூதன் செய்தி சொன்னபோது இது எப்படியாகும்? என்று கேட்டாள்.

அவளின் சந்தேகத்தைத் தீர்க்க தூதன் உபயோகித்த வாக்கியம் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதாகும். இயேசுவின் பிறப்பை சந்தேகிக்கிறவர்களுக்கு வேதம் கூறும் வார்த்தை தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதேயாகும். ஒன்றுமில்லாததிலிருந்து கர்த்தர் உலகத்தை உண்டாக்கினார் என்பதை நீ நம்புவாயாகில் இந்த பிறப்பு உனக்கு சந்தேகத்தை உண்டாக்காது. மனிதர்களே இல்லாமல், ஸ்திரீ-புருஷன் தொடர்பு இல்லாமல் வெறும் மண்ணிலிருந்து ஒரு மனுஷனை உண்டாக்க கர்த்தரால் இயலும் என்பதை நீ நம்புவாயானால் இயேசுவின் பிறப்பில் உனக்கு சந்தேகமே உண்டாகக்கூடாது. ஒரே ஒரு ஆதாம் மட்டுமே உண்டு, பெண்கள் ஒருவரும் இல்லை, இந்த சூழ்நிலையில் ஆதாமின் எலும்பு ஒன்றை வைத்து, ஆதாமுக்கு மனைவியை சிருஷ்டிக்க கர்த்தரால் இயலும் என்பதை நீ நம்புவாயாகில் இயேசுவின் பிறப்பில் உனக்கு சந்தேகம் உண்டாக நியாயமில்லை. மனித பாவங்களைத் தீர்க்க கடவுள் ஒரு ஏற்பாட்டைக் கிருபையாக மனிதர்களுக்காக உருவாக்கினார். அது என்ன?

“ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவி.17:11), “இரத்தஞ்சிந்து தலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22). இப்படிப்பட்ட திட்டத்தை மனுஷருக்காக உருவாக்கி பெரிய மீட்பை உண்டாக்கும்படி இயேசு மனிதனாக அவதரித்து ஆரம்ப தேவ திட்டத்தை நிறைவேற்ற தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து இரத்தத்தை சிந்தினார்.

இது நடந்து ஏறக்குறைய 2000 வருடங் களாகிறது. ஆனால் இந்த மீட்பின் திட்டத்தை சந்தேகிக்காமல் நம்பி ஏற்றுக்கொண்டவர் களுக்குமட்டும்தான் பாவமன்னிப்பும், பாவத்திலிருந்து விடுதலையும் உண்டாகும்.

இயேசு சொன்னார்: “நானே அவர் என்று (அதாவது பாவ நிவாரண பலி என்று) நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்” (யோவான் 8:24).

மட்டுமல்ல, இந்த இயேசு உனக்காகத்தான் பலியாக மாண்டார் என்று நீ நம்பும்போது என்ன நடக்கிறது? வசனம் இப்படி கூறுகிறது: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை (இயேசுவை) ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவா.1:12). ஆகவே இதை வாசிப்பவர்கள் எந்த மதத்தினரானாலும் சரி, வெறும் பெயருக்கு கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களானாலும் சரி, இயேசு உனக்காக பலியாக இரத்தம் சிந்தி மரித்தார் என்று நம்பி விசுவாசிப்பாயானால் உன் பாவம் மன்னிக்கப்படுவதோடு அல்லாமல் நீ தேவ பிள்ளையாக மாற்றப்படுகிறாய்.

சந்தேகப்படாமல் வசனத்தை வாசி. வசனத்தை நம்பி, வசனத்தின்படி ஜீவி. அப்போது உன் சந்தேகம் மாறி உனக்குள் இயேசு பிறப்பதை மிக நன்றாக உணரமுடியும்.

யோசேப்பும், மரியாளும் அந்த இராத்திரி சந்தேகத்தை மாற்றிக்கொண்டு தெளிவு பெற்று தேவ திட்டத்துக்கு ஒத்துழைத்தார்கள். அதுபோல் வாசிக்கும் நீங்களும் தேவ திட்டத்துக்குள் வரவேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் சந்தேகம் தேவனின் பெரிய திட்டத்தைத் தடைபண்ணிவிடாதபடி சீக்கிரமே தெளிவு பெறுங்கள்.

சத்தியவசனம் வாசகர்களுக்கு என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!