Dr.தியோடர் வில்லியம்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2014)

ஆவிக்குரிய வாழ்க்கையிலே செய்ய வேண்டிய தீர்மானங்களைச் சரியான சமயத்திலே ஆண்டவருக்கு ஏற்றபடி செய்யாமல் நாம் தப்பிக்கொள்ளவும் முடியாது, தள்ளிப் போடவும் முடியாது. இதைப் பிலாத்துவின் அனுபவத்திலிருந்து அறிந்து கொள்கிறோம்.

லூக்கா 23ஆம் அதிகாரத்திலே பிலாத்துவுக்கு முன்பாக இயேசுவானவர் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறார். அவரை நியாயந்தீர்க்க வேண்டிய பொறுப்பு, அவன் மேல் விழுகிறது. இந்த சந்தர்ப்பம், அவனுடைய ஆத்தும ரட்சிப்பிற்கு ஏதுவாக மாறியிருக்கக் கூடும். வாழ்க்கையிலே தன் விருப்பப்படி வாழ்ந்தவன், எத்தனையோ குற்றமற்ற மக்களின் இரத்தத்தைச் சிந்தினவன். மனச்சாட்சியைக் கடினப்படுத்தித் தனக்காகவே வாழ்ந்தவன். ஆனால், இந்த சமயத்திலே அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. உலக ரட்சகர் அவனுக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்.

அவர் யூதருக்கு ராஜா அல்லது மேசியா என்று அவன் கேள்விப்படுகிறான். அவர் தேவனுடைய குமாரன் என்றும் கேள்விப்படுகிறான். இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும் பொழுது கலக்கமடைந்தான். இப்படி அவனுக்கு ஒரு வாய்ப்பை தேவன் தருகிறார். என் அருமையான சகோதரனே, சகோதரியே! எதிர்பாராத சமயங்களிலே, எதிர்பாராத வழிகளிலே ஆண்டவர் நம்மைச் சந்திக்க முயலுகிறார். மற்ற மக்களின் மூலமாகவும் சூழ்நிலைகளின் மூலமாகவும் தம்முடைய வேதவசனங்களின் மூலமாகவும் பேசுகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மோடு வாதாடுகிறார். இதை நாம் அறிந்திருக்கிறோமா? விசேஷமாய் நமது ஆண்டவருடைய பாடுகளைப் பற்றி தியானிக்கும் நாட்களிலே ஆண்டவர் நம்மோடு பேசுகிறதை நாம் உணருகிறோமா? பலவிதமான சத்தங்களை நமது வாழ்விலே கேட்கிறோம்.

பிலாத்துவின் வாழ்க்கையிலும் அவன் இந்த யூதமக்களின் மூலம் இயேசுகிறிஸ்துவானவரைப் பற்றிய சில சத்தியங்களைக் கேட்கிறான். இவ்விதமாக கடவுளின் சத்தம் அவனுக்கு வருகிறது. தனது சொந்த மனைவியின் சத்தத்தையும் கேட்கிறான். அவர் குற்றமற்றவர், நிரபராதி என்று அவனுக்கு செய்தி சொல்லி அனுப்புகிறாள் அவன் மனைவி. இதை மத்தேயு 27 ஆம் அதிகாரத்திலே பார்க்கிறோம். அவனுடைய மனச்சாட்சியின் சத்தம் வேறு. நீதியின்படி, நியாயத்தின்படி அவன் நடக்க வேண்டும். அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்து கொள்ளுகிறான். மூன்று முறை இதைப் பிலாத்து அறிக்கையிடுகிறான்.

பிற்பாடு, மக்களின் சத்தத்தைக் கேட்கிறான். மக்கள் கூட்டத்தின் சத்தம் …. இந்த சத்தம் என்ன கூறுகிறது? அவரை சிலுவையில் அறையவேண்டும் என்று கூறுகிறது. லூக்.23: 21இல் “அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்” என்று காண்கிறோம். இறுதியில் மக்களின் சத்தத்துக்குத் தன்னை அவன் ஒப்புக்கொடுத்துவிட்டான்.

என் அருமையான சகோதரனே! சகோதரியே! ஆண்டவரின் சத்தத்தைக் கேட்கும்பொழுது மற்ற எல்லா சத்தங்களையும் நாம் ஒதுக்கிவிட வேண்டும். மற்ற சத்தங்களுக்குக் கதவை அடைத்துவிட வேண்டும். இல்லையெனில், மற்ற சத்தங்களுக்குக் கொஞ்சமாவது இடங்கொடுப்போமானால், ஒரு ஜன்னலையாவது திறந்துவைத்து அந்த சத்தம் நம்மை எட்டிச் சேரும்படி இடங்கொடுப்போமானால், நாம் சரியான தீர்மானத்தைச் செய்யமுடியாது. கடவுளுடைய சத்தத்தைக் கேட்கிறோம். இது கறுப்பு அல்லது வெள்ளை என்பதை அவர் நமக்குத் தெளிவாகக் கூறுகிறார். தீர்மானிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. கறுப்பைக் கறுப்பு என்றும், வெள்ளையை வெள்ளை என்றும் ஏற்றுக்கொண்டு தீர்மானிக்கவேண்டும். ஆனால், தீர்மானிக்காதபடி நாம் தப்பி ஓட எண்ணும்போது அல்லது அதைத் தள்ளிப் போட எண்ணும்போது நமக்குள்ளே பெருங்குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. சன்மார்க்க சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. தீர்மானிக்கும் சக்தியை இழந்துவிடுகிறோம். தீர்மானம் எடுப்பதற்குண்டான தைரியமும், பலமும் நமக்கு இல்லாமற் போய்விடுகிறது. இதை நம்முடைய வாழ்க்கையில் அறிந்திருக்கிறோமல்லவா!

உன் சொந்த வாழ்வில் நீ எதைச் செய்ய வேண்டும்? எந்த வழியில் நடக்கவேண்டும்? என்று திட்டமாக ஆண்டவர் உன்னோடு பேசியிருக்கிறார். ஆனால், உனது சுயநலத்திற்கு இடங்கொடுத்து அந்தத் தீர்மானத்தைச் செய்யாதபடி தள்ளிப்போடுகிறாய். மற்றவர்களின் சத்தம் உன் காதில் விழுவதற்கு இடங்கொடுத்துவிட்டாய். மற்றவர்களின் சத்தம் மேலோங்கி நிற்கிறது. கடவுளின் சத்தமோ உன்னிடத்தில் அதிகம் தெளிவாகக் கேட்காதபடி மங்கிவிடுகிறது. இப்படிப்பட்ட நிலையிலே வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. குடும்ப வாழ்விலும் இதைப் பார்க்கிறோம். பிள்ளைகளைப் பொறுத்தமட்டிலே எந்தத் தீர்மானத்தைச் செய்யவேண்டும் என்று ஆண்டவர் உன்னோடு தெளிவாகப் பேசியிருக்கிறார். ஆனால், அந்தத் தீர்மானத்தைச் செய்யாதபடி தள்ளிப்போடும்பொழுது உறவினர்களின் சத்தம், பாரம்பரியத்தின் சத்தம், பலவிதமான முறைப்பாடுகளின் சத்தம் உன்னுடைய வாழ்க்கையிலே உன்னை மேற்கொள்ளுகிறது.

செய்யவேண்டிய தீர்மானத்தைச் செய்யக் கூடாதபடி நீ பலனற்றவனாய்ப் போய்விடுகிறாய். இதைத்தான் பிலாத்துவின் வாழ்க்கையிலே பார்க்கிறோம். பண்டிகைதோறும் யாராவது ஒரு குற்றவாளியை விடுதலை பண்ணுவது வழக்கம். ஆனால், பிலாத்து பரபாஸ், இயேசு ஆகிய இரண்டுபேரை இங்கு தெரிந்துகொள்கிறான். இந்த இரண்டுபேரிலே ஒருவரை மாத்திரம் விடுதலை ஆக்க வேண்டுமென்று அந்த மக்களிடத்தில் அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்கிறான். விடுதலை பண்ணவேண்டியதும் தீர்மானிக்க வேண்டியதும் அவனுடைய பொறுப்பு. ஆனால், அவனோ அவர்களைத் தீர்மானிக்கும்படி கேட்கிறான்.

அவர்கள் அனைவரும் பரபாசைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். இயேசுவை ஒதுக்கி விடுகிறார்கள். அவர்களுடைய தீர்மானத்திற்கு பிலாத்து தலைவணங்க வேண்டியதாயிற்று. நாம் செய்யவேண்டிய தீர்மானங்களை நாம் செய்யாதபடி, மற்றவர்கள் நமக்காகத் தீர்மானிக்கும்படி நாம் கோழைகளாகி விடுவோமானால், மற்றவர்களின் தீர்மானத்திற்கு நாம் தலை குனிய வேண்டியதாயிருக்கும். அவர்களுடைய தீர்மானத்தின் விளைவுகளுக்கும் நாம் உள்ளாகிவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலைக்கு ஆண்டவர் நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும்.

என் அருமையான சகோதரனே! சகோதரியே! மற்றவர்கள் உனக்காகத் தீர்மானிக்கும்படி, நீ இடங்கொடுத்துவிடாதே. ஆண்டவர் எதை உனக்கு எடுத்துக்காட்டுகிறாரோ, அதின்படி நீ கீழ்ப்படிய வேண்டும்.

லூக்கா 23ஆம் அதிகாரம் 23ஆம் வசனத்திலே, அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டே இருந்தார்கள் என்று பார்க்கிறோம். அவர்களும், பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. மற்ற எல்லா சத்தங்களும் மங்கிவிட்டன. அவர்களுடைய சத்தம் மேற்கொண்டது.

இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையிலும் ஆகிவிடும். இதற்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது. மனச்சாட்சியின் சத்தம், மனைவியின் சத்தம், தேவனின் சத்தம் இவையெல்லாவற்றையும்விட மக்களின் சத்தம் மேற்கொண்டது. அவர்களது விருப்பத்திற்குப் பிலாத்து இணங்கிவிட்டான். இதன் விளைவுகளை அவன் சந்திக்க வேண்டியதாயிற்று.

என் அருமையான சகோதரனே! சகோதரியே! நம் வாழ்க்கையிலே கோழைத்தனத்துக்கு இடங்கொடுத்து, கிறிஸ்துவை நாம் காட்டிக்கொடுக்கிறவர்களாய் இருந்துவிடக்கூடாது. நம் ஆண்டவர்தாமே நாம் செய்ய வேண்டிய தீர்மானங்களைச் செய்யவும், எதிலே கீழ்ப்படிய வேண்டுமோ அதிலே கீழ்ப்படியவும், இந்த நாட்களிலே பூரண ஒப்புக் கொடுத்தலின் மனதை நம் அனைவருக்கும் கொடுத்து நம்மை வழிநடத்துவாராக!