ஆசிரியரிடமிருந்து…

1 9 10 11

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2013)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

ஜீவ ஒளியாய் இவ்வுலகில் பிரகாசித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2013ஆம் ஆண்டின் இந்த நாள் வரையும் வழுவாமல் நம்மை வழிநடத்திய அன்பின் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி இவ்வருடத்தில் வேதத்தை வாசித்து முடித்தோர் தவறாமல் எங்களுக்கு எழுதித் தெரியப்படுத்தவும். அவர்கள் பெயர்களை இனிவரும் இதழில் பிரசுரிப்போம். இன்னும் அநேகர் வருகிற புதிய ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணையை உபயோகித்து வேதத்தை வாசிக்க உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்வாண்டிலே வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து நிகழ்ச்சிகள் வெளிவர உதவிய எமது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறுகிறோம். பங்காளர் சந்தாவை இதுவரை புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய்க் கேட்கிறோம்.

இவ்விதழில் நவம்பர் மாத தியானங்களை பல்வேறு தலைப்புகளில் தொகுத்து வழங்கியுள்ளோம். டிசம்பர் மாதத்திற்கு சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையையும் இரண்டாம் வருகையையும் ஒப்பிட்டு நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களைத் தியானங்களாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் யாவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்குப் பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம். இத் தியானங்களை எழுதிவருகிற தேவ பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்யுங்கள். இத்தியான நூலை அநேகருக்கு அறிமுகப்படுத்துங்கள்.

உங்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2013)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினால் நம்மை மீட்டெடுத்த அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் கடந்த இதழில் இடம்பெற்ற மிஷனரிகளின் வாழ்க்கையைக் குறித்ததான தியானங்கள் வாசகர்களுக்கு அதிக பிரயோஜனமாயிருந்ததை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தற்போது சத்தியவசன இணைய தளத்திலும் இத்தியானங்கள் தினமும் இடம்பெறுகிறது. இதன் மூலமும் அநேகர் பிரயோஜனமடைந்து வருகின்றனர். உங்கள் ஆவிக்குரிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சபை விசுவாசிகளுக்கும் இத்தியானநூலை அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி, இலக்கியம் ஆகியவற்றின் வாயிலாக போதிக்கப்படும் வேதாகம சத்தியங்கள் மூலமாக இன்னும் அநேகர் பிரயோஜனமடையவும், இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களைத் தாங்குகிற அன்பர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்.

டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய “இயேசு உங்களை விசாரிக்கிறவர்” என்ற புத்தக வெளியீடு அச்சுப்பணியில் உள்ளது. கூடிய விரைவில் பங்காளர்களுக்கு அதை அனுப்பி வைப்போம்.

சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களை செப்டம்பர் மாதத்திலும், சகோதரர் தர்மகுலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள தியானங்களை அக்டோபர் மாதத்திற்கும் தொகுத்து தந்துள்ளோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதுகிற தேவனுடைய பிள்ளைகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்டு 2013)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நீதியை வெளிச்சத்தைப்போல விளங்கச் செய்கிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வருடத்தில் இம்மட்டும் நம்மை வழிநடத்தின தேவன் இனிவரும் நாட்களிலும் நம்மை நடத்துவார். புதிய கல்வி ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நம் பிள்ளைகளுக்காகவும் மேற்படிப்பிற்காக சேர்ந்து பயில முயற்சித்துவரும் பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்கிறோம். கர்த்தர் உங்கள் பணத் தேவைகள் அனைத்தையும் சந்திக்க வேண்டுதல் செய்கிறோம். “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்தேயு 21:22).

தொடர்ந்து வேதாகமத்தை போதிக்கும் இவ்வுன்னதப் பணியை இணைக்கரம் நீட்டித் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி, தொலைகாட்சி, இணையதளம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாதம் நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இவ்வருடத்தில் பங்காளர் சந்தாவை இதுவரை புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இப்பணியைத் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

மிஷனரி அருட்பணியை மையமாகக் கொண்டு ஜூலை மாத தியானங்களை சகோதரர் பிரேம்குமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நம் ஒவ்வொருவருக்கும் ஆத்துமாக்களைக் குறித்தும் நம் தேசத்திற்காக வேண்டுதல் செய்யவும் நமக்கு பாரத்தைத் தரும் என கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். நாம் அவரது வருகைக்கு ஆயத்தப்படும் படிக்கு சிறந்த தியானங்களை ஆகஸ்டு மாதத்திற்கு சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதுகிற தேவனுடைய பிள்ளைகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

1 9 10 11
சத்தியவசனம்