2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!
வேதாகமத்தின் தனிச்சிறப்பு (செப்டம்பர் – அக்டோபர் 2024)
Dr.உட்ரோ குரோல்
தம்முடைய வார்த்தை எழுதப்படும் போது தேவாவியானவர் எழுதுபவர்களின் உள்ளத்திலிருந்து எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர்கள் எழுதினர். எழுதும்படி பொருளைத் தூண்டிக்கொண்டிருந்தவர் தேவஆவியானவரே!
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2தீமோ. 3:16,17).
எரேமியா தீர்க்கதரிசி இப்படி எழுதியிருக்கிறார். நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக (எரே.1:7.). கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது (2 சாமு.23:2).
இந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எழுதும் செயலைத் தொடங்கிவைத்தவர் தேவனே. தேவன்தான் பேசினார். தேவன்தான் செய்தியைக் கொடுத்தார். தேவன் தான் எழுதவேண்டியதைக் கொடுத்தார். அவர்கள் எழுதினார்கள். தாவீது, எரேமியா போன்ற எல்லா வேதாகம புத்தக எழுத்தாளர்களும் தேவனுடைய வெளிப்படுத்தலை முதலில் பெற்றுக்கொள்ளுவார்கள். தேவன் வெளிப்படுத்திய செய்தியை அவர்கள் எழுதும்போது, வார்த்தைகள் தெய்வீகமாக அவர்கள் உள்ளத்தில் தூண்டப்பட்டன. அவர்கள் ஆவியானவரின் உதவியுடன் தங்களுக்குத் தரப்பட்ட செய்திகளை எழுதி வைத்தார்கள்.
இது எப்படி நடந்தது? பவுலும், பேதுருவும், யோவானும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருந்தும் எழுதும்போது அவை எப்படி தேவசெய்தியாக மாறியது? அவர்கள் எழுதியது தேவன் அவர்கள் மூலம் எழுத விரும்பிய செய்திதானா என்று உறுதி செய்வது எப்படி? எது நடக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் ஆவியானவரின் அகத்தூண்டுதல் எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
தேவன் தம்முடைய வார்த்தைகளை எவ்வாறு எழுதச்செய்தார் என்பது குறித்து ஐந்து தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவை ஒன்றின் மூலமும் ஆவியானவரின் அகத்தூண்டுதல் நடந்திருக்க முடியாது. அந்தப் புனைவுக் கருத்துக்களைக் காண்போம்.
1. அகத்தூண்டுதல் குறித்த இயற்கைக் கொள்கை
வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர். அவர் நாடகங்களை எழுதும்போது, ஒருமுறை கூட தாம் எழுதிய ஒரு வரியை அடித்ததில்லையாம். அவர் ஒரு அகத்தூண்டுதல் பெற்றுத்தான் அந்த நாடகங்களை எழுதினார்.
அதுபோலவே வேதாகமப் புத்தக எழுத்தாளர்களும் இயற்கையான ஒரு அகத்தூண்டுதலைப் பெற்று எழுதியிருக்கலாம். நம் எல்லாரிடமும் ஒரு தெய்வீகப் பொறி உண்டு. இந்த எழுத்தாளர்களிடம் அது சற்று அதிகமாக இருந்திருக்கும்; எனவே அவர்கள் எழுதினர்.
இந்தக் கொள்கையின்படி இத்தகைய அகத்தூண்டுதல் அறிவுத்திறன்மிக்க மேதைகள், கவிஞர்கள். பாடகர்கள் போன்ற தனித்திறமையும் படைப்பாற்றலும் உள்ளவர்களிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், மனிதனின் மன உந்துதலும் தூண்டுதலும் தேவனுடைய தூண்டுதல் அல்ல. மனிதனுடைய ஆவியின் தூண்டுதலால் ஒரு கிரியையை அவன் செய்வானானால் இயல்பாகவே அவனிடம் உள்ள தவறு செய்யும் தன்மை அவனுடைய எழுத்தில் பிரதிபலிக்கும்.
வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடைய தாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது (2பேது.1:20). எனவே வேதாகமத்தில் உள்ள எந்தக் காரியமும் ஒரு மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள உந்துதலினால் எழுதப்பட முடியாது.
2. சொல்வதைக் கேட்டெழுதும் அகத் தூண்டுதல் கொள்கை
இந்தக் கொள்கையின்படி வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தேவனால் கூறப்பட்டவை. இதை எழுதினவர்கள் தேவன் கூறியதைக் கேட்டு அலுவலகங்களில் எழுத்தர்கள் எழுதுவதுபோல எழுதிவைத்தனர் என்பதாம்.
ஜமைக்காவில் உள்ள வேதாகமத்துக்குத் திரும்புக ஊழியத்தின் தலைவர் சாமுவேல் பிட்ஸ் ஹென்றி என்பவர் ஜமைக்கா முழுவதும் பல இடங்களில் “நிர்வாகப்யிற்சிக்கல்லூரி” நடத்தி வருகிறார். இந்தச் சாமுவேலின் தகப்பனார் ஒரு அற்புதமான இயந்திர அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் புத்தகப் பகுதிகள் தெளிவாகவும், வேகமாகவும் வாசிக்கப்பட்டன. சாமுவேல் எட்டுவயதாய் இருக்கும்போதே இந்த இயந்திரத்தின் உதவியுடன் மிக வேகமாகச் செய்திகளைப் பதிவு செய்யப் பழகிவிட்டார். சாமு வேலுக்கு வயது 8 இருக்கும்போதே இதைச் செய்தார். இவர் தன்னைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகமான வயதுள்ளவர்களைக் காட்டிலும் அதிகத் திறமையாகச் செய்துமுடித்துவிட்டார். சாமுவேல் பிட்ஸ் ஹென்றிக்கு இந்த முறையில் தேவன் கூறுவதை எழுதிவிட முடியும். ஆனால், தெக்கோவா ஊர் மேய்ப்பனான ஆமோஸ்-க்கும், கப்பர்நகூமில் உள்ள மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த பேதுருவுக்கும் சுலபமாய் இருக்குமா? நிச்சயமாக அவர்களால் முடி யாது. அவர்கள் எழுதும்படி தேவன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருத்திருக்க முடியாது.
வேதாகமம் தெய்வீக அன்பின் சரிதையைக் கூறும் ஒரு புத்தகம். நம்மை அதிகமாக நேசித்ததால் நமக்காக மரிக்கும்படி தமது குமாரனையே அனுப்பித்தந்த தேவன் வெறும் ஒரு இயந்திரம் அல்ல.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்