சிலுவையில் அறையப்பட்டாயா?

தியானம்: 2024 மார்ச் 17 ஞாயிறு | வேத வாசிப்பு: கலாத்தியர் 2:1-21

YouTube video

கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையுண்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலா.2:20).

வருடந்தோறும் லெந்து நாட்கள் வருகிறது; நாமும் சிலுவைத் தியானங்களைத் தியானித்து வருகிறோம். பெரிய வெள்ளியன்று இயேசு சிலுவையில் பேசிய வார்த்தைகளையும், மரணத்தையும் ஓரளவு துக்கத்துடன் தியானிப்பதும் உண்டு. ஆனால் இந்த உணர்வும் துக்கமும் எத்தனை நாட்களுக்கு? இயேசு எனக்காகவே சிலுவையில் அறையப்பட்டார் என்பதை விசுவாசித்தும், “என்னைப் பின்பற்றிவர விரும்புகிறவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னைப் பின்பற்றி வரக்கடவன்” என்று இயேசு விடுத்த அழைப்பை மனதார அறிந்தும், கிறிஸ்தவன் என்ற பெயரில் வாழுகின்ற நம்மில் எத்தனைபேர், நமக்காக சிலுவை சுமந்த இயேசுவின் நாமத்தில், நமது சிலுவையைச் சுமந்து அவர் வழிநடக்கவும், அறையப்படவும் நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம்? அல்லது, இனிமேலாவது அறையப்பட ஆயத்தமா?

யூதமத வைராக்கியமும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவருமாய் இருந்த சவுலுக்கு நடந்தது என்ன? யூத மதத்திற்கு எதிராகவும் சவாலாகவும் யார் எழுந்தாலும், உடனே சனகெரிப் சங்கத்தைக் கூட்டி, அனுமதி பெற்று, அதை இல்லாதொழிக்க எந்தவிதமான தயக்கமுமின்றி போய்விடுவார் சவுல். அப்படியேதான், கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறி எழுந்தவர்தான் இந்த சவுல். இப்படிப்பட்டவர்களைக் கண்டாலே அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவர அனுமதிபெற்றுப் புறப்பட்ட அவர் தமஸ்குவைச் சமீபித்தபோது நடந்த சம்பவத்தில், தலை நிமிர்ந்தவன் என்று பெயர் பெற்ற சவுல், தரையிலே விழுந்தான். தன்னுடன் பேசிய சத்தம் கேட்டு “நடுங்கித் திகைத்தான்.”

அடுத்தது, இதுவரை மேட்டிமையாகப் பார்த்த கண்கள் பார்வை இழந்திருந்ததை உணர்ந்தான். மொத்தத்தில் சவுல் என்ற படித்தவன், யூதன், ரோம குடியுரிமை கொண்டவன், அதிகாரம் மிக்கவன் செத்தான், அதாவது அவனுக்குள் இருந்த யாவும் செத்துப்போனது. “நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” என்று கர்த்தர் இந்த சவுல் என்ற பவுலைக் குறித்து அனனியாவிடம் சாட்சி கொடுக்கிறார். எப்போது இந்த சாட்சி கொடுக்கப்பட்டது? பவுல் தனக்குள் தானே செத்த பிற்பாடு என்பதைக் கவனிக்கவேண்டும். அன்று தன் சிலுவையைத் தூக்கிய பவுல், மரண தண்டனைக்கு ஆளாகும்வரைக்கும் அந்த சிலுவையை இறக்கி வைக்கவில்லை.

இதையே பவுல், “கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் நானும் அறையப்பட்டேன்” என்று எழுதுகிறார். இனி பவுல் அல்ல, பவுலின் ஆசை இச்சைகள் அல்ல; அவை சிலுவையில் செத்துவிட்டன. இப்போது அவருக்குள் வாழுவது கிறிஸ்துவே! ஆம், “நான்” எனக்குள் சாகும்வரைக்கும் கிறிஸ்து எனக்குள் வாழமுடியாது. நான் சாகவேண்டுமானால் என் சிலுவையைச் சுமந்து, அதில் என் ஆசை இச்சைகளை அறைந்துவிட வேண்டும். முடியுமா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, அனுதினமும் என் சிலுவையை எடுத்துக்கொண்டு உம்மைப் பின்தொடர்ந்து வர எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

சகலமும் நன்மைக்கே . . .

தியானம்: 2024 மார்ச் 16 சனி | வேத வாசிப்பு: ரோமர் 8:26-39

YouTube video

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது (ரோமர் 8:28).

ரோமர் 8:28ஆம் வசனத்தை நாம் அடிக்கடி நினைப்பதுண்டு. தேவசித்தம் அறியாமல், மனம்போனபடி நடந்துவிட்டு, அதனால் வரும் விளைவுகளையெல்லாம் ‘தேவன் யாவும் நன்மைக்குத்தான் அனுமதிக்கிறார்’ என்று நா கூசாமல் சொல்லிவிடுகிறோம். ஆனால், நாம் எதை விதைக்கிறோமோ, அதையேதான் அறுப்போம், இல்லையா!

இந்த வாக்கியத்தை பவுல் ரோமருக்கு எழுதியபோது, “சகலமும் நன்மைக்கே” என்ற ஒரு வரியை மட்டும் எழுதவில்லை. இதற்கு முன்னே, நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாதவர்கள், அதினால் ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார்; ஆகையால் நமது வேண்டுதல்கள் ஆவிக்குள்ளானதாக தேவசித்தத்தை அறிகிறதாக இருக்கவேண்டியது முக்கியம். இதை எழுதிய பின்னரே பவுல், “அன்றியும்” என்று ஆரம்பிக்கிறார். ஆகவே முதலாவது படி இன்னதென்பதை நாம் உணரவேண்டும். நமது இஷ்டத்திற்கு ஜெபித்துவிட்டு கர்த்தரில் பாரத்தைப்போட்டு முறுமுறுக்கக்கூடாது.

அடுத்தது, “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு” என்று பவுல் தெளிவாக எழுதியுள்ளார். அவர்களுக்குத்தான் இந்த வாக்குறுதி; அவர்களுக்கே சகலமும் நன்மைக் கேதுவாக நடக்கிறதே தவிர சகலருக்குமல்ல. தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் என்றால், அவர்கள் யார்? அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள். தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் என்றால், என்னதான் கடினமாகத் தோன்றினாலும், தேவனுடைய வார்த்தையைவிட்டு வலது இடபுறம் வழிதடுமாறிப்போகாதவர்கள். அதாவது, தேவனுடைய வார்த்தையில் உறுதியான விசுவாசமுள்ளவர்கள்; அவர்கள் எப்போதும் தேவனுக்குப் பயந்து அவர் வழியிலேயே நடப்பவர்கள். இவர்களுக்கே “சகலமும்” என்று பவுல் எழுதுகிறார். சகலமும் என்றால், சகலமும்தான்.

தேவபிள்ளையே, நமக்கும் உலகத்தின் பார்வைக்கும் தீமைபோலத் தோன்றினாலும், அதற்குள்ளிருந்தும் நன்மை முளைத்தெழுவது உறுதி. அந்த விசுவாசமே அவர்களை இக்கட்டிலும் முன்செல்லப் பெலன் அளிக்கிறது. அடுத்தது, சகலமும் நன்மைக்கு அல்ல, “நன்மைக்கு ஏதுவாக” என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அவர்களின் வாழ்வில் நடப்பது யாவும், தேவசித்தப்படி அவரின் அனுமதியுடன் நடப்பதால், அவை நன்மையையே பிறப்பிக்கும். அடுத்தது, முக்கியமாக இது என்ன நன்மை என்பதை 29ஆம் வசனம் தெளிவுபடுத்தியுள்ளது. “அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.” இதுவே அந்த நன்மை. நமக்கு நேரிடுகிற சகல காரியங்களுக்கூடாகவும் தேவன் நம்மைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக்கி வருகிறார். இதைவிட வேறொன்று நமக்குத் தேவையா?

ஜெபம்: அன்பின் தேவனே, என் வாழ்வில் சகலவற்றையும் நன்மைக்கு ஏதுவாக நீர் நடத்துகின்றபடியால் உம்மை துதிக்கிறேன். ஆமென்.

நீ என்னை நேசிக்கிறாயா?

தியானம்: 2024 மார்ச் 15 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 21:1-25

YouTube video

யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ … என்னை
நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்ட
படியினாலே, பேதுரு துக்கப்பட்டு… (யோவான் 21:17).

ஏதாவது ஒரு சம்பவம் இருமுறை சம்பவித்த அனுபவம் நமக்குண்டா? “1977 ஆம் ஆண்டு ஒரு இக்கட்டான சமயத்திலே, “தேவனே என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்” என்ற 139ஆம் சங்கீத வாக்கியங்களின் அடிப்படையில் நான் கேட்ட பிரசங்கத்திற்கு நான் செவிசாய்க்கவில்லை. சரியாகப் பத்து வருடங்களின் பின்னர் 1988ஆம் ஆண்டு, எல்லாம் இழந்துவிட்ட நிலையில் இன்னொருவர் மூலமாக அதே வார்த்தைகளைக் கொண்டு தேவசெய்தி பிரசங்கிக்கப்பட்டபோது, நான் உள்ளம் உடைந்து தேவபாதத்தில் விழுந்தேன்’ என்று ஒரு சகோதரி தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கெனேசரேத்துக் கடற்கரையிலே நின்ற இரு படகுகளில் ஒன்றில் இயேசு ஏறிய படகு சீமோனுடையது. இது தற்செயல் நிகழ்வு அல்ல; இயேசு யாவையும் அறிந்தவர். அன்று நடந்த அற்புதம் பேதுருவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தப் படவில் இருந்தபடியே இயேசு சீமோனை அழைத்தார். அவனும் யாவையும் விட்டு இயேசுவின் பின்னே சென்றான். இயேசுவை நேசிக்காமலா பேதுரு அவருடன் சென்றான்? மூன்றரை வருடமாக அவன் இயேசுவுடனேயே இருந்தான். அவர், அவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். அவனும் இயேசுவுக்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்றான். ஆனால், “சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று இயேசு எச்சரிக்கை கொடுத்திருந்தும், சந்தர்ப்பம் நேரிட்டபோது பேதுரு மூன்றுதரம் இயேசுவை மறுதலித்தே விட்டான். திரும்பி இயேசுவின் கண்களைச் சந்தித்தபோது மனம்கசந்து அழுதான் என்று வாசிக்கிறோம். இந்தக் குற்ற உணர்வு பேதுருவைத் துளைத்துக் கொண்டே இருந்திருக்கவேண்டும்.

இந்த இடத்திலேதான், முன்னர் சந்தித்த அதே கடலின் இன்னுமொரு பகுதியிலே, திபேரியாக் கடலோரத்திலே, முன்னர் நடந்ததுபோன்றதான ஒரு நிகழ்வினூடாக கர்த்தர் பேதுருவைச் சந்திக்கிறார். இவர்தான் நமது ஆண்டவர்! தன்னை மூன்று தடவைகள் மறுதலித்த பேதுருவின் குற்ற உணர்வு முற்றிலும் நீங்கும்படி, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று மூன்று தடவைகளாகக் கேட்டு, கர்த்தர் அவனது காயத்தை ஆற்றினார். அவன் தம்மை நேசிப்பதைக் கர்த்தர் அறிவார், என்றாலும் அவனது வாயின் அறிக்கையை இயேசு கேட்க விரும்புகிறார்.

மாத்திரமல்ல, “சீமோனே” என்று அவனுடைய சொந்தப் பெயரை அழைத்தே கேட்கிறார். அவனை அவனாகக் காண்கிற கர்த்தர், அந்த இடத்திலே அவனைப் பேதுருவாக நிலைநிறுத்தியதைக் காண்கிறோம். ஆம் பிரியமானவர்களே, நாம் கர்த்தரை நேசிப்பதை அவர் அறிவார், என்றாலும் இன்று நாம் எங்கே நிற்கிறோம்? கர்த்தர் இன்று நம்மிடம் கேட்பது, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்பதே. நமது பதில் என்ன?

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் பேதுருவிற்கு செய்ததுபோல எனது குற்ற உணர்விலிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டுதல் செய்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே! ஆமென்.

உன்னைப் புரிந்துகொண்டவர்

தியானம்: 2024 மார்ச் 14 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 19:25-42

YouTube video

அப்பொழுது இயேசு …தம்முடைய தாயை நோக்கி, ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார் (யோவான் 19:26).

மனிதரிடையே உள்ள உறவுப் பிணைப்பும், பந்தபாசமும் ஆச்சரியான விஷயமே! கர்ப்பத்தில் தன் பிள்ளையைச் சுமந்த தாயன்பை நாம் உணர்ந்திருப்போம். நமது தகப்பன் “இவனே என் மகன;; என் மகள்” என்று கட்டி அணைக்கிறானே அந்தப் பாசத்தை என்ன சொல்ல! பெற்றோருக்கு ஒரு ஆபத்து என்றால் நாம் ஆடிப்போகிறோம்; பிள்ளைக்கு சாதாரண ஜூரம் வந்தாலே தாய் துடித்துப்போகிறாள்; தாயன்பு மனதை உருக்கும், வலிமைமிக்க தகப்பன் அன்போ சகலத்தையும் தாங்கும். மாத்திரமல்ல, குடும்ப உறவுக்குள் ஒவ்வொருவருடைய பொறுப்பும் வித்தியாசமானதாக இருந்தாலும், அதை அவர்கள் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றும்போது, அதிலும் நாம் தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பையே பிரதிபலிக்கிறோம். ஆக, மனித வாழ்வில் உறவுப் பிணைப்பும் பொறுப்பும் தேவன் அருளிய ஈவாகவே இருக்கிறது.

பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு இவ்வுலகிற்கு வந்த இயேசு, அதை நிறைவேற்றி, கடமை முடிந்தது என்று வெறுமனே சென்றுவிடவில்லை. அவர் மனிதனாகப் பிறந்ததிலிருந்து அப்பா, அம்மா, சகோதரர் என்று ஒரு குடும்ப உறவுப்பிணைப்பிலேயே முப்பது வருடங்களாக வாழ்ந்தார். யோசேப்பு மரித்துப் போக குடும்பத்தில் மூத்தவராக தாய் மரியாளுக்கு உறுதுணையாக, தமது சகோதரருக்கு நல்ல சகோதரனாகவே இருந்திருப்பார்; எப்படியெனில், ஒரு மனிதனாக இவ்வுலக சோதனைகளுக்கு ஆளாகியும் “அவர் பாவமில்லாதவராய் இருந்தார்” என்கிறது வேதவாக்கியம். அவர் தெய்வீக புருஷராய் இருந்தும், தமது தெய்வீகத்தைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், ஒரு முழு மனிதனாகவே வாழ்ந்திருந்தார். பிதாவின் வேளை வந்தபோதும், அவர் முதலாவது யோர்தான் நதியோரத்தில் தம்மை மனிதரோடு மனிதனாக அடையாளப்படுத்திய பின்னரே, ஊழியத்தை ஆரம்பித்தார். இந்த உலகில் இருந்தபோது முழு மனிதனாக, மனித உணர்வுகளுக்கு முகம்கொடுத்தவராகவே வாழ்ந்திருந்தார்.

ஒன்றும் இயலாதவராக சிலுவையில் தொங்கியபோதும், ‘என்னை சிலுவையில் அறைந்துவிட்டார்களே’ என்று சலிப்படைந்து எதையும் புறக்கணிக்கவுமில்லை, உலகில் தமக்குரிய பொறுப்பை மறந்துவிடவுமில்லை. தன்னைப் பெற்று முப்பது வருடங்கள்வரை வளர்த்த தமது தாய் மரியாளின் துயரத்தை வேதனையை புரிந்துகொண்ட இயேசு, சிலுவையில் தொங்கிய நிலையிலும், தனக்கு அன்பான சீஷனாகிய யோவானிடம் மரியாளை ஒப்புவித்த செயல், இன்றைய நவீன பிள்ளைகளுக்கு ஒரு பெரிய சவாலை விடுக்கிறது.

ஆம் தேவபிள்ளையே, எந்நிலையிலும் நம்மைப் புரிந்துகொண்டு, நமக்கான யாவையும் செய்து முடிக்கிறவரே நமது ஆண்டவர்! அப்புறம் ஏன் நாம் மனித தயவுகளை நாடி அலைந்து வெட்கப்படவேண்டும்?

ஜெபம்: அன்பின் தேவனே, நான் இருக்கும் சூழ்நிலையை நீர் புரிந்துகொண்டு எனக் காக யாவையும் செய்துமுடிக்க வல்லவராயிருக்கிறீர். உமக்கே ஸ்தோத்திரம். ஆமென்.

ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்!

தியானம்: 2024 மார்ச் 13 புதன் | வேத வாசிப்பு: யோவான் 15:9-17

YouTube video

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல, நீங்களும்
ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே
என்னுடைய கற்பனையாயிருக்கிறது (யோவான் 15:12).

“அன்பு” முழு உலகமுமே இவ்வன்பினை மையமாகக் கொண்டே சுழலுகிறது. தேவன் மனிதனை அன்பாகப் படைத்ததுமன்றி, மனித உறவையும் அன்பிலேயே அஸ்திபாரமிட்டார். ஆனால், எப்போது பாவம் மனிதனுக்குள் நுழைந்ததோ, தேவனுக்கும் மனிதனுக்குமான அன்பின் உறவை மாத்திரமல்லாமல், மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவையும் அது கறைப்படுத்திவிட்டது. இந்தக் கறையைப் போக்கி, மனிதன் இழந்துபோன தேவன் – மனிதன், மனிதன் – மனிதன், இந்த இரண்டு உறவுகளையும் ஒப்புரவாக்குவதற்கே தேவன் மனிதனாக உலகிற்கு வந்தார். மேலும், இந்த இரண்டு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி, போதித்ததுமன்றி, செய்தும் காட்டினார். அவரது அடிச்சுவட்டை நாம் பின்பற்றுகிறோமா?

இரண்டு விஷயங்களை இயேசு வலியுறுத்துகிறார். ஒன்று, “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என்பதாகும். பிதாவின் அன்புக்கு பாத்திரமாக தான் எப்படி வாழ்ந்தேனென்று இயேசுவே கூறுகிறார்; “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல” பின்னர், நாம் எப்படித் தமது அன்புக்குப் பாத்திரராய் வாழமுடியும் என்பதையும் கற்பிக்கிறார்; “நீங்களும் என் கற்பனை களைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.” ஆக, நாம் ஆண்டவரை நேசிக்கிறோம் என்றால், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழுவதே அந்த அன்புக்குச் சாட்சி.

அடுத்தது, “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாக இருக்கிறது.” ஒன்று, நாம் நினைத்தபடியல்ல, இயேசு நம்மை நேசிப்பதுபோலவே நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும். அடுத்தது, இது கர்த்தரின் கற்பனை; தெரிந்தெடுப்பு அல்ல, கட்டளை. “ஒருவரிலொருவர்” இதை இயேசு தமது சீஷர்களிடமே கூறுகிறார். ஆக, முதலாவது நாம் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்கவேண்டும்; அடுத்தது, நமது விசுவாச சகோதரரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும். இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி தமது பிள்ளைகளுக்காகத் தமது ஜீவனையே கொடுத்தார். நாம் ஜீவனைக் கொடுக்காவிட்டாலும், நமது சகோதரர்களுக்காக எதை இழக்க நேரிட்டாலும் தயங்காது அதைச் செய்யவேண்டுமே! ஒருபுறம் ஆண்டவரில் அன்புகூராதவனால் தன் சகோதரனிடத்தில் அன்புகூருவது கடினம்; மறுபுறத்தில், சகோதரனிடத்தில் அன்புகூராமல், நான் ஆண்டவரை நேசிக்கிறேன் என்று சொல்வது எப்படி? “தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:20). இதற்கு நமது பதில் என்ன?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்ற தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு என்னிலிருக்கும் தடைகளை நான் களைந்து உமது கட்டளையை நிறைவேற்ற எனக்கு கிருபை தாரும். ஆமென்.

எரிந்து பிரகாசிக்கும் விளக்கு

தியானம்: 2024 மார்ச் 12 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 5:30-47

YouTube video

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்;
நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர
மனதாயிருந்தீர்கள் (யோவான் 5:35).

சாதாரணமாக மெழுகுவர்த்திகள் பருமனாக இருப்பதில்லை; உயரத்தில் வேறுபட்டிருந்தாலும், பற்றவைக்கும்போது முதலில் மெதுவாக எரியத் தொடங்கி, மெழுகு உருக ஆரம்பிக்க பிரகாசமாக ஒளிகொடுக்கும். ஒருமுறை பெரிதான ஒரு மெழுகுவர்த்தியை ஒருவர் எனக்குப் பரிசளித்தார். அதைப் பற்றவைக்கும் போது வெளிச்சத்துடன் நறுமணமும் வரும் என்றார். பெரிய மெழுகுதிரி, அதிக நாட்களுக்கு உபயோகிக்கலாம் என்று சந்தோஷப்பட்டேன். ஆனால், அதைப் பற்றவைத்தபோது, அது அகலமாக இருந்ததால் மெழுகு உருகி வடியாமல் அதினுள்ளேயே தேங்கிநின்றது; அதினால் திரி மங்கலாகவே எரிந்தது, வெளிச்சமும் மங்கலாக இருந்தது. சிறிது நேரத்தில் திரி மெழுகில் மூழ்கி அணைந்துபோனது. தோற்றம் அழகாக இருந்தது, நறுமணமும் வீசியது, ஆனால், எல்லாமே சொற்ப நேரத்துக்குத்தான்! ஆனால் விளக்கு, எண்ணெய் ஊற்ற ஊற்ற எரிந்து பிரகாசித்துக்கொண்டே இருக்கும்.

“அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்” என்று இயேசு யோவான் ஸ்நானனைக் குறித்தே சொல்லுகிறார். அவன் இயேசுவாகிய மங்காத நித்திய ஒளியை அறிமுகம் செய்யும்படி அவருக்கு முன்னோடியாக வந்தவன்; அதற்காக அவனும் எரிந்து பிரகாசிக்கும் விளக்காகவே இருந்தான். அவன் வாழ்ந்த காலம் ஒரு இருண்டகாலம். இருளிலே இருப்போருக்கு வெளிச்சத்தைக் காட்டவே யோவான் வந்தான். அவன் கிறிஸ்துவுக்காய் பிரகாசித்தான். அந்த பிரகாசத்தினால், அவனது பிரசங்கத்தினால் ஈர்க்கப்பட்டு மக்கள் அவனிடத்தில் வந்தார்கள். அவர்களை மனந்திரும்புதலுக்குள் வழிநடத்தி, கிறிஸ்துவுக்காக ஆயத்தம் செய்து அவர்களுக்கு மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தையும் கொடுத்து, அவர்களை கிறிஸ்துவாகிய ஒளியினிடத்திற்குத் திருப்பிவிட்டான். அதற்காகவே அவன் பிறந்தான். “நான் அந்த ஒளியல்ல, ஒளியைக்குறித்து சாட்சி கொடுக்க வந்துள்ளேன்” என்று கூறிய யோவான் தனது அழைப்பில் தெளிவுள்ளவனாயிருந்து, மக்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்துவைத்தான். “நான் சிறுகவும் அவர் பெருகவும்” என்ற மனநிலையுடன் யோவான் பணியாற்றினான்.

சாதாரணமாக மெழுகுவர்த்தி தன்னை உருக்கி தான் இருக்கும் இடத்தில் வெளிச்சம்கொடுக்கும்; ஒரு விளக்கு தனக்குள் உள்ள எண்ணெய் தீர்ந்துபோகுமட்டும் வெளிச்சம் கொடுக்கும். நாம் இன்று எதுவாயிருந்தாலும், நமது வெளிச்சம் இயேசுவை அறியாத மக்கள் மத்தியில் பிரகாசிக்கிறோமா என்பதே கேள்வி! மேலும், இந்த லெந்து நாட்களில் பிரகாசித்து எரிந்துவிட்டு, இந்த நாட்கள் முடிந்ததும் அணைந்து போய்விடக்கூடாது. மெழுகுதிரி எரிவதற்கு காற்று வேண்டும், விளக்கு வெளிச்சம் கொடுக்க எண்ணெய் வேண்டும். நாம் தொடர்ந்து கர்த்தருக்காய் பிரகாசிக்க தேவஆவியானவர் நம்மில் நிறைந்திருக்க நம்மைத் தரவேண்டும். தருவோமா?

ஜெபம்: அன்பின் தேவனே, முடிவுபரியந்தமும் கிறிஸ்துவுக்காய் எரிந்து பிரகாசிக்கிற விளக்காக மாற என்னை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். ஆமென்.