ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 31 ஞாயிறு

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்.28:6) மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஆராதனை சிறப்போடும், விசுவாசிகள் அனைவரும் மிகுந்த மனமகிழ்ச்சியோடும் ஆசரிப்பதற்கும், இம்மாதம் முழுவதுமாய் நம்மை நடத்திய அவருடைய மகத்துவத்திற்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 30 சனி

சத்தியவசன ஊழியப்பணிகளுக்காக ஜெபித்துவரும் ஜெபக்குழுக்களுக்காகவும், திருச்சபைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஆதரவான காணிக்கையை அனுப்பி தாங்கிவரும் பங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, அவர்களை உயர்த்தி மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 29 வெள்ளி

சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகிய கிறிஸ்து குற்றமற்றவராய் சிலுவையில் பலியானதை அனுசரிக்கும் பெரியவெள்ளி ஆராதனையில் செய்திகொடுக்கும் செய்தியாளர்களை கர்த்தர் கரத்தில் எடுத்து உபயோகிக்கவும். இரட்சிக்கப்படாத வாலிபர்கள் இந்நாளில் கர்த்தருக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கத்தக்கதாக ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 28 வியாழன்

நமக்காக தம்மைத்தாமே தாழ்த்தி மாதிரியைக் காண்பித்துச் சென்றுள்ள அருள்நாதரை நினைவுகூரும் இன்றைய சிறப்பு திருவிருந்து ஆராதனையில் பங்குபெற்று, நாமும் கிறிஸ்துவின் மாதிரிகளாக தாழ்மையின் ஜீவியத்தை செய்யவும் மற்றவர்களையும் கிறிஸ்துவின் வழியில் நடத்துகிறவர்களாக காணப்படுவதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 27 புதன்

வடஇந்திய ஊழியங்களில் மதவாதிகளால் சந்திக்கிற பிரச்சனைகள், சுவிசேஷப் பணிகளுக்கு துன்பங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்துகிற இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், கட்டப்பட்டுள்ள ஆலயங்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து வசதிகளற்ற இடங்களில் ஊழியர்களுக்குத் தேவையான வாகனங்கள் கிடைக்கப்பெறுவதற்கும் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 26 செவ்வாய்

பரிசுத்த வாரத்தில் அதிகமாக நம்மை கர்த்தருடைய சமுகத்தில் தாழ்த்தி பரிசுத்த வாழ்வுக்காக ஜெபிப்போம். இன்று முதல் ஆரம்பமாக உள்ள 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்காகவும், தேர்வுகளில் பங்குபெறும் அனைத்து மாணவர்களும் பயமில்லாமல் காணப்பட்டு எல்லாபாடங்களிலும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சியடைய மன்றாடுவோம்.