ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 29 திங்கள்

“நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான், நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள்” (உபா.33:23) என்ற வாக்குப்படியே சத்தியவசன அலுவலகத்திற்கென தேவன் நல்லதொரு இடத்தை தந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.

துதியோடு முன்செல்…

தியானம்: 2018 ஜனவரி 29 திங்கள்;
வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:16-40

“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங்கீதம் 34:1).

சூழ்நிலைகள் சுமூகமாக சமாதானமாக இருக்கும்போது தேவனைத் துதிப்பது இலகு. ஆனால், பாடுகள், நெருக்கங்கள், சூழ்நிலை மாற்றங்கள் என்று வரும்போது நம்மால் துதிக்க முடியுமா? முடியும் என்பதைத் தாவீது, பவுல் என்பவர்களின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

தாவீது ராஜா கடந்துசெல்லாத பாடுகளே இல்லை. சிலவேளைகளில் தற்பாதுகாப்புக்காக வேஷம்மாறி எதிராளிகளின் மத்தியில் ஜீவிக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. இப்படியாக, ஒரு தடவை, பெலிஸ்திய ராஜாக்களுக்குப் பொதுவான பெயராகிய அபிமலேக்கு என்று அழைக்கப்பட்ட ஆகீஸ் ராஜாவுக்கு முன்பாக தாவீது வேஷம்மாறி தன் முகநாடியை வேறுபடுத்தி ஒரு பித்தன் போல நின்றிருந்தான் (1சாமு.21:12-15). இதை அறிந்த ராஜா, தாவீதைத் துரத்திவிட்டான். ஒருவனால் கொலை அச்சுறுத்தல் துரத்திவரும் சூழலில், இன்னொருவனால் துரத்திவிடப்படும்போது தாவீதின் மனநிலை என்ன பாடுபட்டிருக்க வேண்டும்! ஆனால் தாவீதோ, தேவனைத் துதிக்க ஆரம்பித்தான். தாவீதின் வாயிலே எந்த நிலைமையிலும் அவர் துதிப்பாடல் இருந்துகொண்டே இருந்தது.

சுவிசேஷத்தினிமித்தமாகவும், தங்கள் ஊதியத்திற்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பவுலும் சீலாவும் சிறையிலடைக்கப்பட்டார்கள். அசையாதபடிக்கு அவர்களுடைய கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவிட்டார்கள். சுவிசேஷத்தை அறிவித்ததாலே இத்தனை வேதனையா என்று அவர்கள் முறுமுறுக்கவில்லை. மாறாக, தேவனைத் துதித்துப் பாடினார்கள். அதன் பலனாக, சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன. சிறைச்சாலைக்காரனும் இரட்சிப்பைப் பெற்றான் (அப்.16ம் அதிகாரம்).

எந்நேரமும், எந்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கும் துதி நமது நாவிலும் மனதிலும் நிறைந்திருக்கட்டும். தேவனிலும், அவருடைய வார்த்தையிலும் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும் அதுவே எடுத்துக்காட்டு.  தேவனைத் தேவனாய், அவர் நமக்குத் தம்மை வெளிப்படுத்திய பிரகாரமாய், அவருடைய வல்லமையை உணர்ந்தவர்களாய் அவரை உயர்த்துவதே துதி. மெய்யான துதி சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் தேவன் உயர்ந்தவர் என்று விசுவாசிக்கும்போது, நமது நாவில் எழுகின்ற துதி சத்தத்தை யாராலும் தடுக்கமுடியாது. மரணத்திலும் தேவனைத் துதிக்கலாம்.

“என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்” (சங்.86:12).

ஜெபம்: துதிக்குப்பாத்திரரே, என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே. உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 28 ஞாயிறு

“எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1யோவா.1:3) என்ற வாக்கு இந்த ஆராதனை நாளின் ஒவ்வொரு விசுவாசிகளுக்குள்ளும், ஒவ்வொரு திருச்சபைகளிலும் எதிரொலிக்க பாரத்துடன் ஜெபம் செய்வோம்.

பரிசுத்தத்தோடு முன்செல்ல…

தியானம்: 2018 ஜனவரி 28 ஞாயிறு; வேத வாசிப்பு: 1பேதுரு 1:15-16

“நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தர்; ஆகையால், … உங்க ளைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவி. 11:44).

‘வாழ்க்கையில் முன்செல்வதற்குக் கருத்திற்கொள்ளவேண்டியதும், நடைமுறைப்படுத்த வேண்டியதுமான முக்கிய விஷயங்கள்’ என்ற தலைப்பில், மதவேற்றுமையற்ற பல கருத்தரங்குகளும், விவாதங்களும் இன்று நடத்தப்படுகின்றன. இவை உலக கண்ணோட்டத்தில்தான் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கருத்தரங்குகள் எவ்வளவுக்கு பலனளிக்கின்றன என்பதுவும் ஒரு கேள்விதான். ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நோக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உண்டு. அது ‘பரிசுத்தம்’ ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பரிசுத்தம் முக்கியம் என்பதை பல்வேறு மதங்கள் பல்வேறு கோணங்களில் நோக்கி, பல்வேறு முறைகளில் அதைக் கையாளுகிறார்கள். ஆனால் நம்மைப் படைத்த தேவன், தமது ஜனமாகிய இஸ்ரவேலை, பரிசுத்தத்தை அறிந்திராத அடிமை வாழ்விலிருந்து மீட்டபோது, கர்த்தர், “நான் பரிசுத்தர்; ஆகையால், உங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக” என்று கட்டளையிட்டார். அவ்வாறாயின், மனித வாழ்விலே, முக்கியமாக இன்று பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்ட கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமது வாழ்விலே, பரிசுத்தம் எவ்வளவு முக்கிய இடம் வகிக்கிறது என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

“மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாக்குதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2கொரி.7:1) என்கிறார் பவுல். இது நம்மால் முடிகின்ற காரியமா? மறுபுறத்தில் நம்மால் கூடாத ஒன்றைத் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பாரா? தேவனுக்கு மாத்திரமே உரிய ‘பரிசுத்தம்’ என்ற விஷயத்தில், தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்ப்பது என்ன? மனுஷராகிய நம்மைப் பொறுத்தளவில் பரிசுத்தம் என்பது, ‘வேறுபடுத்தப்பட்ட அல்லது தனித்துவமான வாழ்வு’. இன்னும் சொல்லப்போனால் உலகத்தோடு ஒவ்வாமல், தேவனுடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்ற அற்புதமான வாழ்வு என்று பொருள்படும்.

இந்த தூய வாழ்வு வாழவே தேவாவியானவர் நமக்கு உறுதுணையாக இருக்கிறார். நமது பெலத்தைக்கொண்டு வாழ முடியாது என்பது தேவனுக்குத் தெரியாதா என்ன? அதற்காகவே பரிசுத்த ஆவியானவர் நமக்கு இருக்கிறார். உலகத்துடன் சேர்ந்து வாழுகின்ற வாழ்வை வெறுத்துத் தள்ளுவோமாக. தேவாவியானவருடைய பெலத்துடன் நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோமாக.

“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1பேதுரு 1:15).

ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, நாங்கள் எங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் வாழ்ந்து, தேவனை வெளிப்படுத்தும் வேறுபட்ட வாழ்வு வாழ எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.