ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 28 சனி

“.. என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.4:6) வாழ்வின் பலவிதத் தேவைகளோடும் போராட்டங்களோடும் இருக்கிற 8 நபர்களுக்கு சேனைகளின் கர்த்தர் தம்முடைய பராக்கிரமுமுள்ள வலக்கரத்தாலே தாங்கி தேவைகளை சந்தித்து வழிநடத்த ஜெபிப்போம்.

உணர்வடைந்த ஏசாயா

தியானம்: 2018 ஏப்ரல் 28 சனி; வேத வாசிப்பு: ஏசாயா 6:1-8

“அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5).

“நரகத்திற்குப்போக விரும்புவோர் எழுந்து நில்லுங்கள்” என்று ஞாயிறு ஆராதனையில் போதகர் ஒரு அழைப்புவிட்டபோது, ஒருவர் மாத்திரம் எழுந்து நின்றாராம். போதகர் அவரிடம், “நான் கேட்டது புரியவில்லையா? நரகத்துக்குப் போக விரும்புவோரையல்லவா எழுந்து நிற்கும்படிக்குச் சொன்னேன்” என்றார்.  அதற்கு அந்த மனிதர், “போதகர், நீங்கள் எழுந்து நிற்கிறீர்களே. நீங்கள் தனியாகப் போகவேண்டாம் என்றுதான் நான் துணைக்கு நின்றேன்” என்றாராம். அப்போதுதான் போதகர் தான் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தார். இதுபோல சிலர் இன்னமும் ஆலயத்தில் தமது சொந்த நிலையை உணராதவர்களாக இருக்கிறார்கள்!

ஏசாயாவின் நிலையோ முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது. பரிசுத்தமான தேவசமுகத்திலே, தான் பாவி என்பதை உணர்ந்து அவர் கதறுவதைக் காண்கிறோம். “நான் அதமானேன்” என்றபோது, “நான் அழிந்துவிட்டேன்” அல்லது, “தகுதியற்றுப்போனேன்; நான் மரித்தவனைப் போலானேன்” என்று பொருள்படும். அந்தளவுக்கு ஏசாயா தன் நிலையை உணர்ந்தார். அந்தப் பரிசுத்த பர்வதத்தில் நிற்க எந்த விதத்திலும் தான் தகுதியற்றவன் என்று உணர்வடைந்தபோதுதான், தேவனின் பரிசுத்தமாக்குதலை ஏசாயா பெற்றுக்கொண்டார். அதன்பின்னரே தேவபணி செய்ய தன்னை ஒப்புக்கொடுத்தார்.

தேவசமுகத்தில் நாம் எதை உணருகிறோம்? தேவனுடைய ஆலயத்திலும், அவரது சமுகத்திலும் நாம் நிற்கும்போது என்ன மனநிலையோடு நிற்கிறோம்? நாம் பாவிகள் தகுதியற்றவர்கள் என்ற உணர்வு எப்போதாவது நமக்குள் ஏற்பட்டதுண்டா? மாறாக, நமது நாகரீகத்தை வெளிக்காட்டுவதிலும், நமது செல்வச் சிறப்பை வெளிப்படுத்துவதிலும், ஆளுக்கு ஆள் மிஞ்சியவர்கள் அல்ல என்ற போட்டி மனப்பான்மையிலும், அல்லது நான் நீதிமான் என்னில் எந்தப் பிழையுமே யாரும் சுட்டிக்காட்ட முடியாது என்ற இறுமாப்பிலும் நின்று கொண்டிருக்கிறோமா? தேவசமுகத்தில் நாம் உணர்வடைந்து, மனந்திரும்பாவிட்டால் பின்னர் எப்போது மனந்திரும்ப முடியும்? நமது நிலையை உணர்ந்து பரிசுத்தமாக்குதலைப் பெற்றுக்கொள்ளாமல் நாம் செய்யும் எந்தப் பணியும் விருதாவாகப் போய்விடும். தேவன் நம்மை அங்கீகரிக்காவிடில் நமது பணியை மாத்திரம் எப்படி அங்கீகரிப்பார் என்பதை உணர்ந்துகொள்வோம்.

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13).

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, இன்றைய தியானத்தின் வாயிலாக எனது அவல நிலையை உணருகிறேன். நான் என் பாவங்களை உமது சமுகத்தில் அறிக்கையிடுகிறேன். என்னைப் பரிசுத்தப்படுத்தியருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 27 வெள்ளி

“தேவனே உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்.36:7) சத்தியவசன அலுவலகத்திற்கென சொந்த இடம் கிடைக்கப்பெறுவதிலும் தேவனுடைய கிருபையும் ஆலோசனையும் வழிநடத்துதலும் நிறைவாய் தந்தருள  பாரத்துடன் ஜெபிப்போம்.

ஜெபவீரன் தானியேல்

தியானம்: 2018 ஏப்ரல் 27 வெள்ளி; வேத வாசிப்பு: தானியேல் 6:10-16

“அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தததைக் கேட்பார்” (சங்கீதம் 55:12).

“என்னால் எனது அலுவல்களைச் செய்யமுடியவில்லை; பிறரின் உதவி தேவைப்படுகிறது. நான் நினைத்த இடத்திற்குப் போகமுடியவில்லை; பிறரின் தயையை நாடவேண்டியுள்ளது. விரும்பியதைச் சாப்பிடமுடியவில்லை; உடலுக்கு ஒத்துப்போகக் கடினமாயுள்ளது. ஆனாலும், இருந்த இடத்திலிருந்தே வல்லமையான ஜெப ஊழியத்தைச் செய்ய என்னால் முடிகிறது என்றால் நான் இன்னமும் வல்லமையை இழக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது” என்றார் ஒரு மூத்த தாயார். பலர் காணச் செய்வது ஊழியமல்ல; மறைவில் செய்கின்ற ஜெப ஊழியம் மிகுந்த வல்லமை மிக்கது.

‘ஜெப வீரன்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு ஜெபத்தில் உறுதியாய் நின்ற ஒரு வாலிபன்தான் தானியேல். அவரது ஜெப வாழ்வை நாட்டின் சட்டதிட்டங்களோ, கர்ச்சிக்கும் சிங்கங்களின் இரைச்சலோ, மரண பயமோ தடை செய்யவில்லை. எல்லாத் தடைகளுக்கும் மேலாக தான் விசுவாசித்திருக்கும் தேவனுடைய வல்லமையை அவர் நம்பினார். எந்தச் சூழ்நிலைக்குள் தேவன் தன்னை நடத்தினாலும், அதற்கூடாகக் கடந்துசெல்ல அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டதால், சூழ்நிலைகளைக் கண்டு அவர் பதட்டமடையவில்லை. தான் நம்பியிருக்கும் தேவனையும், அவருடைய வல்லமையையும் உணர்ந்து கொள்ளுமளவுக்கு தேவனோடு நெருங்கிய உறவுகொண்டிருந்ததால் எல்லா சூழ்நிலைகளிலும் நிமிர்ந்து நின்றார் தானியேல். அதற்குக் காரணம் ஜெபம்.

நமது ஜெப ஜீவியத்தில் நாம் எங்கே நிற்கிறோம்? பலவிதமான போராட்டங்கள் நமக்கும் வரலாம்; சோதனைகளைச் சந்திக்கலாம்; எதிர்பாராத சூழ்நிலைகளைக் கடந்துசெல்ல நேரிடலாம். அந்த வேளைகளில் நமது நிலை என்ன? ஜெபத்தில் உறுதிகொண்டவர்களாக தேவபெலனோடு சூழ்நிலைகளை எதிர்கொள்ளுகிறோமா, அல்லது சோர்வடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறோமா? நமது ஜெபத்தில் நம்பிக்கையிழந்து ஊழியர்களையும் பெரிய பிரசங்கிமாரையும் நோக்கி ஓடுகிறோமா. இயேசுவை நோக்கி கடலில் நடந்த பேதுரு தாழப்போனபோது, “ஆண்டவரே இரட்சியும்” என்றான். ஆண்டவரோ அவனைப் பார்த்து: “ஏன் சந்தேகப்பட்டாய்” என்றார். தானியேலோ  சிங்கக்கெபியில் போடப்பட்டபோதும், தேவவல்லமையைச் சற்றும் சந்தேகிக்காமல், நிதானம் இழக்காமல் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார். அது எப்படிச் சாத்தியமாயிற்று? நாள் தவறாமல் மூன்று வேளையும் தேவனுடைய சந்நிதானத்தில் நின்றிருந்தார் தானியேல். அதுதான் இரகசியம்.

“துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது. செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்” (நீதிமொழிகள் 15:8).

ஜெபம்: ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கும் தேவனே, தானியேலைப்போல நானும் என் ஜெப வாழ்வில் நான் இன்னும் வளர உதவியருளும். ஆமென்.