Daily Archives: October 20, 2018

வாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 20 சனி

அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமி.24:7)
வேதவாசிப்பு: எரேமி.23,24 | 2தெசலோனி.3

ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 20 சனி

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட … அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (ஆமோஸ் 8:12) இப்படிப்பட்ட நாள் சமீபித்திருப்பதால் அந்த நாட்களுக்கு முன்னதாக கர்த்தருடைய வசனத்தால் மக்களுடைய இருதயம் நிரப்பப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.

திட்டவட்டமான தீர்மானம்

தியானம்: 2018 அக்டோபர் 20 சனி; வேத வாசிப்பு: ரூத் 1:1-18

அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன் (ரூத்1 :16).

ஒவ்வொருவரும் எடுக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே அவர்களுடைய வாழ்வின் திருப்புமுனை அல்லது முடிவும் அமைகின்றது. இலகுவான சூழ்நிலைகளைப் பார்த்து எடுக்கின்ற தீர்மானம் இடர்கள் நிறைந்தவை. ஏனெனில், சூழ்நிலைகள் எப்போது மாறும் என்று யாரும் அறியமாட்டோம். ஆனால், கடினங்கள் நிறைந்த சூழ்நிலைகளென்றாலும் நாம் உறுதியாக எடுக்கின்ற தீர்மானங்கள் முடிவில் நிச்சயம் நம்மை வெட்கப்படுத்தாது.

இன்றைய தியானப்பகுதியில், ரூத், தன் மாமி நகோமியைப் பின்தொடர நினைத்தது சற்று வித்தியாசமானது. மாமிக்கும் மருமகளுக்கும் தொடர்புடைய ரூத்தின் கணவனும் இறந்துவிட்டான்; அவளுக்குப் பிள்ளைகளும் இல்லை. இந்த நிலையில் மாமி – மருமகள் என்ற உறவில் காணப்பட்ட நேசம் மேலானது. நகோமியின் பேச்சைக் கேட்டு மற்ற மருமகள் ஓர்பாள் முத்தமிட்டுத் தன் வழியில் போய்விட்டாள். ரூத் அவள் வழியே போகாமல், தன் மாமியைப் பின்தொடரத் தீர்மானம் எடுத்தாள். ஆனால், ஒரு புதிய இடம், புதிய ஜனங்கள், புதிய சூழ்நிலை … ஆக, இது ஒரு கடினமான சூழ்நிலையில் எடுத்த கடினமான தீர்மானம். ஆனால், அவள் சந்தேகப்படவில்லை. தன் மாமியை விடாமல் பற்றிக் கொள்வது என்ற தீர்மானம் ஒன்றே அவளுக்குள் இருந்தது.

ரூத் ஒரு மோவாபிய ஸ்திரீ. லோத்துவுக்கும் அவனுடைய மூத்த குமாரத்திக்கும் இடையில் ஏற்பட்ட தவறான உறவினால் உருவான மோவாபிய பரம்பரையைச் சேர்ந்தவள் (ஆதி.19:37). அப்படியிருந்தும், “உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று தன் மாமியின் தேவனைச் சார்ந்து நின்றாள் ரூத். அவள் எடுத்த இந்த உறுதியான தீர்மானமே ஒரு வெற்றிப்படியினூடாக ஏறிச்செல்லும் ஆசீர்வாதமான உயர்வை அவளுக்குக் கொடுத்தது. அவள் மாமிக்கு கீழ்ப்படிந்து தன் நற்குணத்தை வெளிப்படுத்தினாள். இயேசுகிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் இவள் பெயரும் சேர்க்கப்பட்டது எத்தனை ஆசீர்வாதம்!

அருமையானவர்களே, நாமும் பல தீர்மானங்கள் எடுக்கிறோம். ஆனால் பலவேளைகளில் சூழ்நிலைகள், சுயநலங்கள், சுயதிட்டங்கள் நமது தீர்மானத்தை ஆளுகை செய்ய நாம் விட்டுவிடுகிறோம். அன்று ரூத்துக்குத் தேவனைத் தெரியாது. ஆனால் மாமியின் தேவனைத் தெரியும். இன்று நாமோ தேவனுடைய பிள்ளைகள்; தீர்மானங்களில் பிசகிப்போகலாமா?

“கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங். 25:4).

ஜெபம்: அன்பின் தேவனே, முன்பின் யோசியாமல், என்னையே மையமாக வைத்து எடுத்த சடுதியான தீர்மானங்களால் நான் சஞ்சலப்பட்டு சலித்து நின்ற நாட்களுக்காக மனம் வருந்துகிறேன். இனி உமது சித்தத்தின்படி தீர்மானம் எடுக்க அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்