ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 29 செவ்வாய்

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் அநேகமாயிரமான மக்களுக்கு நல்லதொரு ஆத்தும போஜனமாக இருக்கிறதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, இத்தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் சகோதரி சாந்தி பொன்னு யாவரையும் கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.

பயத்தை விரட்டுவோம்!

தியானம்: 2019 ஜனவரி 29 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 20:18-23

…சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால், கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” (யோவான் 20:19).

பல தாலந்துகளைக்கொண்ட கெட்டிக்கார வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் நன்றாகப் பயிற்சி செய்து, மேடைக்கு ஏறினாலும், ஒரு இனம் புரியாத பயம் அவனைப் பிடித்துக்கொள்ளும். அதனால் மேடை ஏறியவுடன் அவனுக்குப் பாடல் வரிகளே மறந்து விடும். பாடலின் ராகம் சிக்கிப்போகப் பயந்து நிற்பான். இதயம் படபடக்க, கைகால்கள் நடுங்க, சொல்ல நினைத்ததையும் மறந்து, பேச்சும் தடுமாறி நிற்பான். இப்படிப் பலமுறை மேடையில் அவமானப்பட நேர்ந்தது. இதனால் முன்நின்று பாடுவதற்கு சாக்குச்சொல்லி மறுத்துவிடுவான். அவனுக்குப் பாடத்தக்க வரம் இருந்தும், அவனுக்குள்ளிருந்த இனம் புரியாத பயம், தானே தனக்குப் பூட்டுப்போட அவனை தூண்டிவிட்டது.

மரித்த இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட பின்னரும், சீஷர்கள், வெளியே வருவதற்கு யூதருக்குப் பயந்தனர். பூட்டப்பட்ட அறைக்குள்ளே தங்களைப் பூட்டி வைத்துக்கொண்டிருந்தனர். எழுந்து செயற்பட முடியாதபடி யூதரைக் குறித்த பயம், தங்களுக்கு இனி என்னவாகுமோ என்ற ஒரு பயம், இப்படியாக பயம் அவர்களை கட்டிப் போட்டிருந்தது. ஆனாலும் ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. பூட்டியிருந்த அறைக்குள்ளேயே அவர்களைத் தேடி வந்தார் இயேசு; அவர்களைத் தைரியப்படுத்தி, அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்தை நினைவுபடுத்தி, அந்த ஊழியத்தை வல்லமையோடு செய்வதற்கு தாம் அருளப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த முன் அனுபவத்தையும் கொடுத்தார்.

இன்று கிறிஸ்துவின் வல்லமையை அதிகமாக அனுபவிக்கின்ற நாமும், அவருக்காய் எழும்பிச் சாட்சி பகிர வேண்டியிருக்க, பயத்துக்கு இடங்கொடுத்து, நம்மையும் தேவன் தந்த திறமைகளையும் பூட்டிவைப்பது நியாயமா? அன்று பூட்டிய அறைக்குள் வந்த இயேசு, இன்று நமது இருதயத்தின் வாசலில் நிற்கிறார். அவருக்கு நாமேதான் இடமளிக்கவேண்டும். அப்போது பயம் நீங்கிப்போகும். அடுத்தது, ஆண்டவர் அருளிய சமாதானத்தை நாம் இழந்துவிடக் கூடாது. மேலும், நாம் அவருக்காய்ச் செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உண்டு. அதற்காய் நம்மைப் பெலப்படுத்தி வழிநடத்த இன்று பரிசுத்தாவியானவர் நமக்கு இருக்கிறார் அல்லவா! பின்னர் என்ன பயம்? பயம், சாத்தானின் ஆயுதங்களில் ஒன்று. அதை முறியடித்து எழும்புவோமாக.

“நான் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி. 22:13).

ஜெபம்: விடுதலையின் தேவனே, நீர் என்னோடு இருக்கிறபடியால் பயத்துக்கு இடமளித்து, உமக்காய் உழைக்கின்ற தருணங்களை நான் இழந்துவிடாதிருக்க கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 28 திங்கள்

நான் … உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன் (யாத்.34:24) இவ்வாக்குப்படியே எல்லாவற்றையும் ஆராய்ந்தறிகிற கர்த்தர் தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தை வாக்குப்பண்ணி ஊழியங்களை ஆசீர்வதித்து எல்லைகளை விரிவாக்கிடவும், தேவைகளைச் சந்தித்திடவும் வேண்டுதல் செய்வோம்.

சீடர்களுக்கே பயமா!

தியானம்: 2019 ஜனவரி 28 திங்கள் | வேத வாசிப்பு: மாற்கு 4:35-41

“அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்க ளுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்” (மாற். 4:40).

கடற்கரையில் விளையாட யாருக்குத்தான் விருப்பமில்லை! ஆனால், சுனாமி அனர்த்தத்தின் பின்னர், அதனால் பாதிக்கப்பட்ட ஒரு இடத்தில் சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வை நடத்திவிட்டு, இறுதியில், “நாம் இப்போது கடற்கரைக்குச் சென்று விளையாடுவோமா?” என்று கேட்டபோது, பிள்ளைகளுடைய முகங்கள் உடனே பயத்தினால் வெளிறிவிட்டது என்று அந்த நிகழ்வை நடத்தியவர்கள் கூறினார்கள். சில சம்பவங்கள் நம்மைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன அல்லவா!

ஆனால், இயேசுவின் சீஷர்கள் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகச் செய்தவர்கள். கடலில் பல சுழல்காற்றைக் கண்டிருப்பார்கள். இப்போது அவர்களுக்கு என்னதான் நடந்தது? அவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது பலத்த சுழல்காற்று உண்டானது. படகு தண்ணீரினால் நிரம்பத்தக்கதாக அலை மோதி அடித்தது. சீஷர்கள் பயந்து விட்டார்கள். கப்பலின் அடித்தட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த இயேசுவை எழுப்பி, “நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என கேட்கிறார்கள்.

கலிலேயாக் கடல் 680 அடி ஆழமானது; மலைகளால் சூழப்பட்டது. ஆகையால், காற்று வீசும்போது, தண்ணீரானது மலைகளில் மோதித் திரும்பி, கடல் நீரைக் கொந்தளிக்கச் செய்து, அலையாக உயர எழும்பும். ஆனால் இவர்கள் இப்படி எத்தனையோ கொந்தளிப்பைக் கண்டிருந்தாலும், குறிப்பாக அந்த நாளிலே அவர்கள் பயந்துவிட்டார்கள். இந்த சீஷர்கள் இயேசுவோடு கூடவே இருந்தவர்கள். அவரது வல்லமையை அன்றாடம் அனுபவித்தவர்கள். அவரது அந்த வல்லமை, ஆபத்திலே தங்களைக் கைவிடாது என அவர்களால் நினைக்க முடியாமற்போனது ஏன்?

நமது நிலையும் இதுதான். ஏறத்தாழ இருபத்தியொரு நூற்றாண்டுகளாக இயேசு நம்மோடு இருக்கிறார். அவரது கரத்திலிருந்து எவ்வளவோ நன்மைகளை அனுபவித்திருக்கிறோம். அவருடைய மாட்சிமையைக் குறித்து உணர்ச்சிவசப்பட்டுப் பாடுகிறோம். ஆனால், அவருடைய வல்லமையை நாம் எவ்வளவுக்கு மதிப்பட்டு வைத்திருக்கிறோம் என்பது, ஒரு நெருக்கம் சோதனை வரும்போதுதான் வெளிப்படுகிறது. அந்த சமயங்களில் கர்த்தருக்குள் அமர்ந்திருக்க நமக்கு மனதில்லை. விசுவாசத்தில் ஆடிப்போகிறோம். வார்த்தை என்ன சொல்லுகிறது:

“நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர். நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்” (சங். 139:8).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் என்னோடு கூடவே இருக்கும்போது, கொந்தளிக்கும் வாழ்க்கைப் புயலுக்கு நான் அஞ்சாமல் தைரியத்தோடு முன் செல்ல கிருபை தாரும். ஆமென்.