Monthly Archives: April 2019

1 2 3 30

ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 30 செவ்வாய்

“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புலம்.3:22) இம்மாதம் முழுவதும் தேவன் நமது பெலவீனங்களில் பெலப்படுத்தி, போஷித்து தமது இரக்கத்தினாலும் கிருபையினாலும் நம்மை தாங்கி நடத்தி வந்திருக்கிறார். என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி என மனதார கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.


ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11).

சந்தேகமும் விசுவாசமும்!

தியானம்: 2019 ஏப்ரல் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 20:24-29

‘…நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார். உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்’ (யோவான் 20:27).

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சியும், சமைத்த உணவை அலங்காரம் பண்ணிக்காட்டிய விதமும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அதை நாமே செய்து அதன் சுவையை ருசிப்பதுபோல வருமா? இப்படித்தான் பல காரியங்களை நாம் பிறர் சொல்லக் கேட்டாலும், நாமே நேரிலே கண்டு நிச்சயப்படுத்தும் வரைக்கும் நமக்குத் திருப்தி இருக்காது. அது தவறல்ல. சிலர், கேட்டதும் நம்பிவிடுவார்கள்; சிலர் அத்தாட்சி இல்லாதபோதுத் தடுமாறுவார்கள். ஆனால், தாமே உறுதி செய்துவிட்டால் பின்னர் அதிலிருந்து விலகமாட்டார்கள். இந்த இரண்டாம் வர்க்கத்தைச் சேர்ந்தவன்தான் தோமா.

‘நம்பாத தோமா’ என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், தோமாவைக் குறித்த சில முக்கிய காரியங்களை மறக்கலாமா? “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்” என்றதும், “நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்” என்றதும் (யோவா.14:5) இதே தோமாதான். ஆயினும், இயேசு தோமாவை நன்கு அறிந்திருந்தார். சீஷர்கள் தாங்கள் இயேசுவைக் கண்ட சங்கதியைச் சொன்னபோது, இயேசுவின் காயங்களில்தான் விரலிட்டுப் பார்க்கும் வரைக்கும் நம்ப முடியாது என்று தோமா சொல்லிவிட்டான். அவன், அவனது பாணியில் ஒரு அத்தாட்சி தேடினான்; அவ்வளவும் தான். இயேசு அதை அலட்சியம் செய்யவில்லை. எட்டு நாட்களின் பின்னர், திரும்பவும் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் வந்த ஆண்டவர் தோமாவின் சந்தேகத்தைத் தீர்த்தார். ஆனால் அவன் இப்போது தன் விரலை விட்டுப் பார்க்கவில்லை. பதிலுக்கு “என் ஆண்டவரே, என் தேவனே” என்றான்.

கேள்வி கேட்பது தவறல்ல. கேள்வி பதிலை வருவிக்கும். பதில் ஏற்றுக்கொள்ளப்படும்போது அது சந்தேகத்தைப் போக்குவதுடன், ஒரு உறுதிப்பாட்டையும் கொடுக்கிறது. இந்தியாவுக்குச் சுவிசேஷத்தைக் கொண்டுசென்று, அங்கே குத்தப்பட்டு இரத்தச்சாட்சியாக மரிக்குமளவுக்கு தோமாவையும் இயேசுவின் பதில் வைராக்கியமடையச் செய்திருந்தது. ஆனால், மறுபக்கத்தில் இன்று பலருடைய சந்தேகம், அவர்களுடைய வாழ்வையே அழித்துவிட்டிருக்கிறது. ஆகவே, மனதிலே என்ன ஐயம் ஏற்பட்டாலும் தேவனிடம் அதை எடுத்துச்செல்வோம். அவர் அதைத் தீர்த்துவைத்து, நமது விசுவாசத்தைப் பெலப்படுத்து வார். உலக காரியங்களை அவசரமாக நம்புவது தீமையாகவும் முடியலாம். ஆனால், அவர் வார்த்தையைச் சந்தேகிக்காமல் விசுவாசிப்பதே உத்தமம்.

“…நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்” (யோவான் 20:29).

ஜெபம்: தேவனே, சத்துரு கொண்டுவருகிற சந்தேகங்களை இனங்கண்டு விட்டுவிடவும் உமது வார்த்தைகளை விசுவாசித்து பற்றிக்கொள்வதற்கும் கிருபை செய்யும். ஆமென்.

1 2 3 30
சத்தியவசனம்