ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 28 ஞாயிறு

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது (சங்.8:1) தேவனுடைய ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், ராஜ்யத்தின் மகிமையையும், வல்லமையையும் குறித்து பேசி தொழுதுகொள்ளுகிற அனைத்து சபை ஆராதனைகளில் அளவற்ற தேவமகிமை நிரம்ப ஜெபம் செய்வோம்.

அடக்கிவைக்க முடியாத சுவிசேஷம்

தியானம்: 2019 ஏப்ரல் 28 ஞாயிறு | வேத வாசிப்பு: லூக்கா 24:1-12

‘அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்து, …இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்’ (லூக். 24:8,9).

ஒரு முக்கிய செய்தியை, அதிலும் அடுத்தவரைப் பற்றிய செய்திகளை அல்லது துர்செய்தி ஒன்றை அறிந்துவிட்டால் அதை உடனடியாக யாருக்காவது சொல்லி பரப்பி விடாவிட்டால் நமக்குத் தலையே வெடித்துவிடும். அதற்கு இன்று தொழில் நுட்பங்களும் ஆதரவளிக்கிறது. தொழில் நுட்பங்களினூடாக மாத்திரம் நற்செய்தி அறிவிக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள், ஆயிரமாயிரம் கிலோ-மீற்றர்களுக்கு அப்பால் வாழுகின்ற முகம் தெரியாதவர்களுக்குச் செய்தி அனுப்புகின்றவர்கள், அடுத்த வீட்டிலே இருக்கின்ற மூதாட்டியிடம், “உங்களுக்காக இயேசு இருக்கிறார்” என்று ஒருதரமாவது சொல்லி இருக்கிறோமா?

அன்று, சில பெண்கள் இயேசுவின் சரீரத்திற்குச் சுகந்தவர்க்கம் இடும்படிக்குத்தான் கல்லறைக்குச் சென்றார்கள்; மாறாக, எந்த அதிசயத்தையும் எதிர்பார்த்துச் செல்லவில்லை. அவர்கள் கவலையெல்லாம் கல்லறையை மூடியிருக்கிற கல்லேதான். ஆனால், இயேசுவில் கொண்ட அன்பினிமித்தம் அதிகாலையிலேயே வாஞ்சையோடு ஓடிய பெண்களுக்குக் காத்திருந்தது ஒரு அற்புத செய்தி. “அவர் உயிர்த்தெழுந்தார்”. அத்துடன், இயேசு முன்னர் சொன்ன வார்த்தைகளையும் தேவதூதர்கள் அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அவற்றை நினைவுபடுத்திய உடனேயே, அவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்து, தமக்குத் தெரிந்த சந்தோஷ செய்தியை சீஷருக்கு மாத்திரமல்ல, சந்தித்த எல்லோருக்கும் அறிவித்தார்கள். இது சுவிசேஷ நற்செய்தி.

அந்தப் பெண்களின் குதூகலத்தைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். “கர்த்தர் உயிர்த்தெழுந்தார்” என்று கூறிக் கூறிச் சென்றிருப்பார்கள். அவர்கள் அப்போது உயிர்த்தெழுந்த இயேசுவைக் காணவில்லை. அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்தபோதே அதை விசுவாசித்து, உயிர்த்தெழுந்த செய்தியைக் கூறி அறிவித்தார்கள். பிறரை வேதனைப்படுத்தக்கூடியதும், அடக்கிவைக்க வேண்டியதுமான செய்திகள் அதிகம் உண்டு. ஆனால், விடுதலையின் செய்தியை, அதிலும் அதை விசுவாசிக்கிற நம்மால் அதை அடக்கிவைக்க முடியுமா? இயேசுவின் உயிர்த்தெழுதல் எனக்கு நம்பிக்கை கொடுத்தது மெய்யானால், “புறப்பட்டுப்போய் இந்த சுவிசேஷத்தை அறிவியுங்கள்” என்று இயேசு சொன்னதை நான் மறக்கமாட்டேன். பாவத்திலிருந்து மீட்பு வந்துவிட்டது என்ற செய்தி அடக்கி வைக்கப்படுகின்ற செய்தியே அல்ல.

“சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, ….சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசாயா 52:7 ).

ஜெபம்: எங்களை பாவத்திலிருந்து இரட்சித்தவரே, இந்த மீட்பின் செய்தியை சுவிசேஷமாக அறிவிப்பதற்கு எங்களை ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை பயன்படுத்தும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 27 சனி

இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி.3:8) இவ்வாண்டிலும் சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்றப்பணிக்கு புதிய இடங்களில் வாசல்களை திறந்துதரவும், செய்தி அளிக்கும் தேவனுடைய தாசர்களை கர்த்தர் தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.

தோற்கடிக்கப்பட்டான் சாத்தான்!

தியானம்: 2019 ஏப்ரல் 27 சனி | வேத வாசிப்பு: யாக்கோபு 4:5-10

”… மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்’ (1தீமோ. 4:1).

இளவயதுப் பிள்ளைகளைத் தற்கொலைக்குத் தூண்டுகின்ற இணையத்தள விளையாட்டுப் பற்றிய செய்தி இன்று உலகத்தை உலுக்கி வருகிறது. சிலர் இதில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டனர். இயேசுவின் பெயரைச் சொல்லியே மனிதரைக் கவரக் கூடிய தவறான கொள்கைகளைக்கொண்ட சபைகளும் உருவாகி வருகின்றன. மேலும், சாத்தானை வெளிப்படையாக ஆராதிக்கின்ற சாத்தான் சபைகளும் தோன்றிவிட்டன. இச்சபைக்கான ஆட்சேர்ப்பு ஒருவகையான (மெற்றல்) இசை – பாடல் வாயிலாகவே நடக்கின்றது என்று சமீபத்திலே ஒரு பத்திரிக்கையிலே பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவ்வகைப் பொறிகளில் பெரும்பாலும் கிறிஸ்துவை அறிந்த பிள்ளைகளே அகப்படுகிறார்கள் என்பதே மிகப் பயங்கரமான விஷயம். இன்னும் என்னென்ன நடக்குமோ யாரறிவார்?

இயேசு உலகில் பிறந்தபோதே அவரைக் கொலை செய்ய வகைபார்த்தான் சாத்தான். இயேசு யோர்தான் நதியிலிருந்து வெளியேறியபோது அவரது ஊழியம் ஆரம்பமாகிறது என்று பயந்து, அதைத் தந்திரமாக முளையிலேயே கிள்ளியெறியப் பார்த்தான்; முடியவில்லை. ஊழியப்பாதையிலே பல தொந்தரவுகளைக் கொடுத்துப் பார்த்தான், அங்கும் தோல்விதான். இயேசுவின் சீஷன் மூலமாகவே அவரைக் காட்டிக்கொடுத்து, அவருடைய சொந்த ஜனங்களினாலேயே அவரைச் சிலுவைக்கு அனுப்பி அவரைத் தோற்கடித்துவிட்டதாக எண்ணினான். ஆனால் நடப்பதெல்லாம் பிதாவின் அநாதி சித்தத்தின் நிறைவேறுதல் என்றும், தன்னுடைய தலையே சிலுவையில் நசுக்கப்படும் என்றும் அவன் ஏன்தான் உணரவில்லையோ! இயேசு உயிர்த்தெழுந்தபோது சாத்தானின் வல்லமை முற்றிலும் முறிக்கப்பட்டது. அவன் இப்போது ஒன்றுமில்லை. வெறும் வாலாக மனிதரைப் பயமுறுத்துகிறான் என்பதை நாமும் மறந்துவிடுகிறோம். அவனது அட்டகாசங்கள், வஞ்சகங்கள், அவனுக்கான ஆராதனைகள் யாவுமே முன்னறிவிக்கப்பட்டவை என்று உணராமல் அவன் அழிவை ஏற்படுத்துகிறான் என்றால், இவற்றை அறிந்திருக்கிற நாம் அவனுடைய வலையில் சிக்கி, அவனுடைய சுபாவத்தை நமது வாழ்வில் வெளிப்படுத்துவது தகுமா?

சிலுவையில் தோற்கடிக்கப்பட்ட பிசாசின் கொடுக்கு பிடுங்கப்பட்டாயிற்று. வெகு சீக்கிரத்தில் அவன் நித்திய அக்கினியில் தள்ளப்பட்டுப் போவான். ஆகவே, அவனுக்குப் பயப்படுவதை விடுத்து, எந்த நிலையிலும் வெற்றி வேந்தனாம் இயேசுவுக்காக வைராக்கியமாக வாழுவோமாக.

“… பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” (யாக். 4:7).

ஜெபம்: அன்பின் தேவனே, கிறிஸ்துவின் சுபாவத்தால் தரிக்கப்பட்டு பிசாசுகளின் உபதேசத்திற்கும் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் எச்சரிக்கையோடு வாழ உமதருள் தாரும். ஆமென்.