ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 30 வியாழன்

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும் (சங்.89:28) ஆண்டவருடைய பெரிய கிருபையால் பதினோராவது மாதத்தின் இறுதிநாளை காணச் செய்துள்ளார். மலைகள் விலகிப்போனாலும் விலகாத தமது கிருபையால் நம்மை பாதுகாத்து வந்த கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26).

ஒன்றுகூட்டிய இரத்தம்!

தியானம்: 2023 நவம்பர் 30 வியாழன் | வேத வாசிப்பு: எபேசியர் 2:13-18

YouTube video

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபேசியர் 2:13).

தனது சகோதரியுடன் மிகுந்த மனஸ்தாபத்துடன் இருந்த ஒரு சகோதரி சில மாதங்கள் கழித்து அதே சகோதரியுடன் இணைந்து வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ‘மனஸ்தாபங்களினால் என்ன லாபம்? வேதனைதான் மிச்சம். நாங்கள் ஒன்றுசேர்ந்துவிட்டோம்’ என்று இருவரும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

யூதர்கள் புறஜாதி மக்களுடன் உறவாடவோ, சேர்ந்து உணவு அருந்தவோ விரும்புவதில்லை. அவர்களைப் புறக்கணித்தே வாழ்ந்தார்கள். தாம் யூதர்கள் என்ற பெருமை அவர்களுக்குள் இருந்தது. புறவின மக்களோ, அவர்களுக்கு அந்நியரானார்கள். அந்த புறவின மக்கள் நம்பிக்கையற்றவர்களும் மெய்த் தேவனை அறியாதவர்களுமாயிருந்தார்கள். ஆனால் கிறிஸ்துவோ சகல மனிதரின் பாவத்தையும் சுமந்து, தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி, பாவ சாபத்திலிருந்து முழுமனுக்குலத்தையும் மீட்டுக்கொண்டார். இதினிமித்தமாக, யூதருக்கும் புறஜாதியாருக்கும் இடையே பிரிவினையாக நின்ற நடுச்சுவரைத் தகர்த்து சமீபமாயிருந்த யூதரையும் தூரமாயிருந்த புறஜாதியாரையும் கிறிஸ்து ஒன்றாக்கினார் (எபேசி.2:14). சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை தம்முடைய இரத்தம் சிந்துதலினால் ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி பகையை சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்குள் ஒப்புரவாக்கினார். இனி யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர், தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் சமீபமான தேவனாயிருக்கிறார். மாத்திரமல்ல, பாவத்தினிமித்தம் பிளவுபட்டு வெகுதூரமாய் வாழ்ந்த மனுக்குலத்தையும் கல்வாரியில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் தூய இரத்தத்தினாலே தமக்கு சமீபமாக்கி ஏற்றுக்கொண்டார்.

இப்படியிருக்க, அற்ப மனிதராகிய நாம் இன்னமும் பிரிவினைகளை வைத்திருப்பது எப்படி? மற்றவரின் தவறை மன்னியாமல் கடின இருதயத்துடன் வாழ்வது தகுமா? அப்படி நாம் வாழ்ந்தால், எப்படி கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் என நம்மைச் சொல்லிக்கொள்ள முடியும்? பிறரின் பெலவீனங்களையும், குறைகளையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போமானால் நமது பெலவீனங்களுக்கு நாமே தூபம் போடுகிறவர்களாவோம். அவற்றை தாமதிக்காமல் அறிக்கை செய்து விட்டுவிடுவோம்.

தேவபிள்ளையே, பிரிவினையைப் புறம்பே தள்ளி நேசரின் தூய இரத்தத்தால் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக வாழ்வதற்கு நாம் முன்வருவோமாக. ஏனெனில், நினையாத நாழிகையில் நான் வருவேன் என்று ஆண்டவர் சொல்லிப் போயிருக்கிறாரல்லவா?

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் என்னை உம்முடன் ஒப்புரவாக்கினீர். உமக்கு ஸ்தோத்திரம். பிரிவினையை நான் வெறுத்து எல்லோருடனும் அன்புடன் வாழ்வதற்கு தயவாய் உமது கிருபையை எனக்கு ஈந்தருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 29 புதன்

பிள்ளைகளே திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் (எரேமி.3:22) போதை வஸ்துகள், கஞ்சா இதுபோன்று பலவிதமான பாவத்தின் அடிமைத்தனத்தில் உள்ள சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இரட்சிக்கப்படுவதற்கும் அவர்கள் ஆண்டவருடைய அன்பின் அழைப்பின் சத்தத்துக்கு செவி கொடுக்கத் தக்கதாக மன்றாடி ஜெபிப்போம்.

இரட்சிப்பு இறுதிவரை!

தியானம்: 2023 நவம்பர் 29 புதன் | வேத வாசிப்பு: மாற்கு 15:17-20

YouTube video

…கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன் (கலா.4:19).

‘பிரசவத்திற்காக மருத்துவமனைக்குப் பயத்துடனும் வேதனையுடனும் சென்றேன். எனது குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் எனக்கு இருந்த பயம், வேதனை அனைத்தும் பறந்துபோயிற்று. உள்ளத்தில் மகிழ்ச்சியே பொங்கியது’ என்று கூறினாள் ஒரு தாய். ஆம், பரிசுத்த பவுலும், ‘கிறிஸ்து உங்களில் உருவாகும்வரை நான் கர்ப்பவேதனையடைகிறேன்’ எனக் கூறினார். அப்படியா னால் ஒரு மனுஷனுடைய வாழ்விலே இயேசுவைக் காணும்போது அவர் தாம் பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்து மகிழ்ந்திருப்பாரல்லவா!

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு ஒரு தாய் அனுபவிக்கும் வேதனை சொல்லிமுடியாது. இழந்துபோன மனுஷனை மறுபடியும் மீட்டுக்கொள்வதற்காக, இயேசுகிறிஸ்து, சிலுவையிலே கர்ப்பவேதனையிலும் பலமடங்கான வேதனையை அடைந்தாரல்லவா! அவமானம், இகழ்ச்சியான வார்த்தைகள், தாங்க முடியாத கசையடிகள், உடலெல்லாம் காயங்கள், சிலுவையின் பாரம், பொய்யான குற்றச்சாட்டுகள் இறுதியில் மரணம். வேதனைப்பட்டு பிள்ளையைப் பெற்ற போதும், அதன் முகத்தைப் பார்த்ததும் ஒவ்வொரு தாயும் தான் அடைந்த வேதனையை மறந்துபோகிறாள். ஒரு மனிதன் மீட்கப்படும்போது, ஆண்டவர் ஒரு தாயைவிடவும் அதிகமாக மகிழுவார் அல்லவா! பெற்றெடுத்த பிள்ளையைப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்க்கிறார்கள் பெற்றோர். ஒரு நாளைக்குப் பெற்றோரைப் பிரிந்து சொந்த வாழ்வுக்குள் கடந்துசெல்லும் பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர் இத்தனை கரிசனை எடுத்தால், நித்தியமாய் தம்முடனேயே வாழப் போகும் நமக்காக ஆண்டவர் எவ்வளவு கரிசனை கொண்டிருப்பார்! அதற்காகவே அவர் தமது ஜீவனைக் கொடுத்து நமக்குப் பாவமன்னிப்பின் ஈவாகிய இரட்சிப்பை அருளினார். இந்த இரட்சிப்பை நாம் என்ன செய்கிறோம்?

‘…இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்’ (எபி.2:4). முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் (மத்.24:13) என்று இயேசுவே கூறியுள்ளார். இப்படியிருக்க, கிருபையாயப்; பெற்ற இந்த இரட்சிப்பை நாம் துச்சமாக எண்ணி வாழலாமா? இந்த இரட்சிப்பில் நின்று நிலைத்துநிற்க, இரட்சிப்பின் காரணராகிய கிறிஸ்துவைச் சார்ந்து வாழக் கற்றுக்கொள்வோமாக. ‘காலை தோறும் உமது கிருபை புதியது’ என்றபடி தினமும் அதிகாலையில் தேவனுடனான உறவைப் புதுப்பித்துக்கொள்வோமாக. நாம் மீட்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்குள் ஒலிக்கட்டும். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபேசியர் 2:8). அவர் தந்த இந்த மாபெரும் ஈவுக்காக எப்பொழுதும் நன்றியுடையவர்களாய் இருப்போமாக .

ஜெபம்: இரட்சிப்பின் ஊற்றாகிய உன்னதரே, நீர் கிருபையாகத் தந்திட்ட இரட்சிப்பில் என்றும் நிலைத்து வாழ என் வாழ்வின் இறுதிவரை நீர் என்னோடிரும். ஆமென்.