ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

புத்தாண்டில் இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். 2023ஆம் வருடம் முழுவதும் தேவன் நம்மை பாதுகாத்து நம் தேவைகளை யெல்லாம் சந்தித்து வழிநடத்தினபடியால் அவருக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம். 2024ஆம் ஆண்டில் பிரவேசித்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் குடும்பமாக ஆசீர்வதிக்க தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம். இவ்வாண்டில் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர தேவன் கிருபை செய்வாராக! இப்புதிய ஆண்டில் சத்தியவசன ஊழியப் பணிகளை தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் தேவைகள் அனைத்தையும் சந்திக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வூழியங்கள் வாயிலாக நற்செய்தி அறிவிக்கப்படவும் பங்காளர்கள் வேண்டுதல் செய்ய அன்போடு கேட்கிறோம்.

2024ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் 78ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும். சத்தியவசன ஊழியத்தைக் கடந்தாண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம். தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணை யைப் பயன்படுத்தி 2023ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் இவ்விதழிலிருந்து ஒரு புதிய தொடராக வெளிவருகிறது. ஜனவரி மாதமும், பிப்ரவரி 20-24 வரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், பிப்ரவரி மாதத்தில் 1-19 தேதி வரை சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதிய தியானங்களும், ஏனைய தினங்களுக்கு தியானங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.

கே.ப.ஆபிரகாம்