தாவீதோடே இருந்த கர்த்தர்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1 சாமுவேல் 16:1-18

அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, புத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான் (1சாமு.16:18).

கோலியாத்தை வெல்லும் முன்னர் தாவீது அதிக அளவில் புகழ் பெறவில்லை. ஆனாலும் சவுலின் வேலைக்காரன் ஒருவன் தாவீதை கவனித்து, ஆச்சரியப்பட்டு, சவுல் பொல்லாத ஆவியினால் கலங்கிய நேரங்களில் சுரமண்டலம் வாசிப்பதற்கு அவனே ஏற்றவன் என்று பரிந்துரை செய்தான்.

இஸ்ரவேல் தேசத்தில் அநேக இளைஞர்கள் பாடகர்களாகவும், போர் வீரர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும், அழகுள்ளவர்களாகவும் இருந்தனர். ஆனால் தாவீதிடம் இந்த வேலைக் காரனைக் கவர்ந்த அம்சம் கர்த்தர் அவனோடு கூடஇருந்ததே. கர்த்தர் சவுலுடன் இருந்தார்; ஆனால் அவனைவிட்டு நீங்கிவிட்டார் (1சாமு.10:7;16:14). கர்த்தர் ஆபிர காம்; (ஆதி.21:22), ஈசாக்கு (ஆதி.26: 28), யாக்கோபு (ஆதி.28:15), யோசேப்பு (ஆதி.39:2-3, 21-23), யோசுவா (யோசு.1:5) ஆகியோருடன் இருந்தார். எனவே தாவீதும் இத்தனித்துவமான குழுவில் இடம் பெற்றுள்ளார். தேவன் உங்களுடன்கூட இருக்கிறார் என்பதை விட வேறு உன்னதமான பாராட்டு எதுவுமில்லை. ஆனால் இதன் பொருள் யாது?

அது ஆவிக்குரிய பண்பு

சாமுவேல் தாவீதை அபிஷேகம் பண்ண ஈசாயின் வீட்டுக்குச் சென்ற பொழுது அவருடைய ஒவ்வொரு குமாரரும் அவனைக் கவர்ந்தனர். ஆனால் தேவனோ தோற்றத்தின்படி முடிவெடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். ஏனெனில் “கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1சாமு.16:7). சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசாப் தாவீதைப் பற்றி “இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்” (சங்.78:72) என்று பாடியுள்ளார்.

சவுல் பெருமையுள்ள இருதயத்தை உடைய இரு மனமுள்ளவன்; ஜனங்களுக்கு முன்பாக மகிமையை விரும்பிய வன் (1 சாமு. 15:30); ஆனால் தாவீதோ தாழ்மையுள்ளவன், ஆண்டவர் ஒருவரை மாத்திரமே மகிமைப்படுத்த விரும்பினான்; நற்குணங்களையுடையவன், தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவன் (13:14). இராபர்ட் முர்ரே மெக்கெய்ன் என்ற போதகர் “தேவன் உங்களிடமுள்ள சிறந்த தாலந்துகளைவிட நீங்கள் இயேசுவைப்போலிருப்பதையே விரும்புகிறார்” என்று எழுதியுள்ளார்.

அது தேவனுடைய வல்லமை

தாவீது இளைஞனாக இருந்தபொழுது ஒரு மேய்ப்பனின் கவணினாலே கோலி யாத் என்ற இராட்சதனைக் கொன்றான். தனது படைவீரர்களை வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று நடத்திச்சென்றான். எனவேதான் பெண்கள் அவனைப் புகழ்ந்து “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம்” (18:7) என்று பாடினார்கள். இது தாவீதின் பேரில் சவுலின் பொறாமை தீயை எழுப்பக் காரணமாயிற்று. எனவே அவன் தாவீதைக் கொல்ல விரும்பினான். ஆனால் தேவன் தாவீதைக் காத்துக்கொண்டார். தேவன் அழைத்தவர்கள் எவர்களோ அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து செயல்படுத்தும் ஞானத்தையும் கொடுக்கிறார். தாவீது கர்த்தருடைய வல்லமையைச் சார்ந்திருந்தார். தலைவர்களை உருவாக்கும் முறையையும் அவர் அறிந்திருந்தார் (அதிகாரம் 23). கர்த்தர் அவனோடே கூட இருந்தார்! அவனைக் கைவிடவில்லை. எனவே தாவீது, “யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்” (சங்.18:39) என்று பாடினார்.

அது எதிர்ப்பைக் குறிக்கும்

இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதை நேசித்து அவனைக் கனப்படுத்தினர். ஆனால் சவுலும் அவனைப் பின்பற்றிய வர்களும் அவனைக் கொல்ல வகை தேடினர். தேவனைக் கனப்படுத்தி, அவருடைய ஒளியைப் பிரகாசிக்கும் எந்த ஒரு உண்மையான ஊழியனும் இருளை விரும்பும் மக்களால் தாக்கப்படுவான். இதனை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் (யோவான் 3:19-21). சுமார் ஏழு ஆண்டுகளாக சவுல் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பின்தொடர்ந்தான். எனவே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தப்பிச்சென்றனர். சில வேளைகளில் குகைகளிலும் வாழ்ந்தனர். நீங்களும் நானும் இவ்வாறு படை வீரர்களால் துரத்தப்படாவிட்டாலும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவருக்கும் துன்பங்கள் உண்டு (2 தீமோ.3:12) என்று வேதாகமம் கூறுகிறது.

அது நித்திய ஆசீர்வாதத்தைத் தரும்!

1 இராஜாக்கள் 2 ஆம் அதிகாரம் தாவீதின் மரணத்தைப் பதிவுசெய்துள்ளது. ஆனால், அதன்பின்னரும் வேதாகமத்தில் அவருடைய பெயர் அநேக இடங்களில் காணப்படுகிறது. தாவீது தனது மரணத்துக்குப் பின்னரும் தனது மக்களுக்கு ஆசீர்வாதங்களை வைத்துச்சென்றார்; இன்றும் தேவனுடைய மக்களை ஆசீர்வதிக்கிறார். தேவனுடைய ஆலயக் கட்டுமான வரைபடத்தையும், அதற்கென்று திரளான பொக்கிஷங்களையும் சேகரித்து வைத்துச்சென்றார் (1நாளா. 28:11-20). படைகளுக்குத் தேவையான அநேக ஆயுதங்களையும் ( 2இராஜா. 11: 10; 2நாளா.23:9) ஆலயப் பாடகர்களுக்கான இசைக்கருவிகள் (2 நாளா.29: 26,27; நெகே.12:36) இனிமையான சங்கீதங்கள் ஆகியவற்றையும் அளித்துள்ளார். இன்று நாம் பாடும் அநேக பாடல்கள் தாவீதின் சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவும் தாவீதின் வம்சத்திலே தோன்றி தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார்.

தாவீது நமக்கு விட்டுச்சென்ற ஆஸ்திகள் இன்றும் நமக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று 1 யோவான் 2:17 உறுதி அளிக்கிறது. ஆண்டவர் நம்மோடே இருப்பாராக! தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிற தற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்” ( 1 நாளா. 28:20).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை