1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்!
வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜனவரி – பிப்ரவரி 2024)
Dr.உட்ரோ குரோல்
வேதாகமம் ஏன் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கிறது? தனிச்சிறப்பு வாய்ந்ததாயிருக்கிறது? என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா?
இது அதிகம் விற்பனையாகும் புஸ்தகம் என்பது இதற்குக் காரணம் அல்ல. இது 2000 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் காரணம் அல்ல. இது ஒரு மிகப் பழமையான புத்தகம் என்பதும் காரணம் அல்ல. இது உண்மையானது என்பதாலும் அல்ல. இது பல்வேறு அமைப்புகளிலும் வடிவங்களிலும், பதிப்புகளிலும் வெளியிடப்பட்ட தாலும் அல்ல.
இந்த உலகில் வெளியிடப்பட்டுள்ள எல்லா புத்தகங்களைவிடவும் இது தனிச் சிறப்பும் பெற்றிருப்பதன் காரணம் வேதாகமத்தின் எழுத்தாளர் தேவன் என்பதே! இது அவருடைய புத்தகம்! இதை வாசிப்பதன் மூலம் நாம் கடவுளைப் பற்றியும் அவரோடுள்ள நமது உறவையும் தெரிந்துகொள்ளலாம்.
சத்தம் இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! பேச்சு இல்லை; யென்றால் செவிக்குக் கேட்கும் வேலை இல்லை. எந்தவகையான செய்தி தொடர்பும் இல்லை. எங்கும் ஒரே அமைதிதான்!
ஹெலன் கெல்லருக்குப் பார்வை இல்லை. காதும் கேட்காது, இந்த வகையான அமைதியை அனுபவித்தவர் அவரே. போர்க் கைதிகள் ஏறக்குறைய இதுபோன்ற அமைதியை அனுபவித்திருப்பார்கள். அவர்களால் கேட்க முடியாது என்பதல்ல; கேட்கமுடியும். ஆனால், போர்க் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவரோடொருவர் பேசக்கூடாது. இப்படி மற்றவர்களோடு அவர்கள் பேச முடியவில்லை; ஆனால், இவர்கள் அனுபவிப்பது தனிமைச் சிறையே!
இந்தப் பூமியில் இருக்கும் நமக்கு தேவனோடு உறவு கொள்ள முடியாத நிலை இருக்குமானால், அது எவ்வளவு பரிதாபமான நிலை! ஆனால் அவர், நாம் அவரோடு தொடர்பு கொள்ளவும், பேசவும் ஒரு மார்க்கத்தைத் தந்திருக்கிறார். அதுதான் ஜெபம்; அதுபோலவே தேவனும் நம்மோடு தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ! தேவன் மனிதரோடு தொடர்புகொள்ளும் மார்க்கமே வேதாகமம்; வேதாகமத்தின் மூலமாக தேவன் நம்மோடு பேசுகிறார். நம்முடைய உள்ளத்துக்கு தேவன் தமது உள்ளத்தை வேதாகமம் மூலம் வெளிப்படுத்துகிறார்.
தேவன் தம்மை வெளிப்படுத்த வேண்டியதின் அவசியம்.
தேவன் தம்மை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தாரானால், நாம் அவர் இருக்கிறார் என்ற ஒன்றைத்தவிர வேறு எதையும் அறிந்திருக்கமாட்டோம். தேவன் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இந்த ஒழுங்கு எப்படி வந்தது?
- நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தம்தம் நிலைகளில் சென்றுகொண்டிருக்கின்றன.
- கிரகங்கள் ஒவ்வொன்றும் தம்தம் வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
- சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவை தவறாமல் நடைபெறுகின்றன.
தேவனே இந்தப் பிரபஞ்சம் முழுவ துக்கும் அதிபதி! அவர் எல்லாவற்றுக்கும் மேலானவராக உயர்ந்திருப்பதால், அவரது படைப்புகள் அவரை நெருங்க முடியாமல் இருக்கிறது. அவர் தம்மை வெளிப்படுத்தினால் மட்டுமே படைப்புகள் அவரை அறியமுடியும்.
“கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர் எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்” (சங். 97:9).
“கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனுக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்” (சங்.113:4-6).
தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்த தீர்மானிக்காவிட்டால், அவரது தன்மை, பண்பு, குணாதிசயம் இவற்றை நாம் அறிந்துகொள்ள முடியாது. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு, கரிசனை, பராமரிப்பு இவற்றைப் புரிந்துகொள்ளவும் முடி யாது.
தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எப்படி?
இறையியலாளர்கள் இரண்டு வகையான வெளிப்பாடுகளைக் கூறுகிறார்கள்.
1. முதலாவது பொதுவான வெளிப்பாடு
இது தேவன் ஒருவர் உண்டு; அவர் நிலைத்திருக்கிறார் என்றுமட்டும் நமக்குக் காட்டும். அவரது தன்மைகள், பண்பு, குணாதிசயம் இவற்றை நமக்கு வெளிப்படுத்துவதில்லை. உதாரணமாக, தேவன் ஒர் அழகான உலகத்தைச் சிருஷ்டித்தார்.
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்.19:1).
“காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?” (யோபு 38:41).
தேவன் நம்மை பராமரிக்கிறவர் என்பதற்கு இதுவே சான்று!
“உன்னதமானவர் மனுஷனுடைய இராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக்கொடுத்து…” (தானியேல் 4:17).
தேவன் மனிதனுடைய ஆளுகையில் தலையிடுகிறார்.
தேவனைப்பற்றி நாம் அறிய விரும்பும் அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்தப் “பொது வெளிப்பாடு” போதாது. தேவனோடுள்ள நமது உறவு அவர் திட்டமிட்டபடி உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள அது போதாது. எனவே தேவன் தம்மை வெளிப்படுத்துவதில் இன்னும் ஒருபடி தாண்டிச் சென்றார்.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்