பலிபீடம்!
அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: எஸ்றா 3 :1-13
அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள் (எஸ்றா 3:2).
கி.மு.538இல் பாபிலோனுக்குச் சிறைபட்டுச்சென்ற சுமார் ஐம்பதாயிரம் யூதர்கள் எருசலேம் தேவாலயத்தைத் திரும்பக்கட்டவும் நகரத்தை மீட்டுப் புதுப்பிக்கவும் திரும்பினர். அவர்களுக்கு வாழ்க்கை எளிதாக இல்லை; ஏனெனில் நகரம் பாழாகியிருந்தது, மேலும் எருசலேம் புதுப்பிக்கப்படுவதை இஸ்ரவேலின் எதிரிகள் விரும்பவில்லை. ஆனால், யூதர்கள் ஒன்றுபட்ட மக்களாக இருந்தனர் (எஸ்றா 3:1,9). கர்த்தரும் அவர்களுடன் இருந்தார். அவர்களின் முன்னுரிமைகள் சரியாக இருந்தன. ஆலயம் கட்டுமுன் பலிபீடத்தைக் கட்டியெடுத்து தேவனுக்கு அன்றாட பலிகளைச் செலுத்தத் தொடங்கினர்.
இங்கு ஒரு புதிய தலைமுறை ஒரு தேசமாக ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்கியது. ஆனால் அவர்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை; பண்டைய மோசேயின் பிரமாணத்தின் வழிமுறைகளுக்கும் தேவனின் வார்த்தைக்கும் கீழ்ப்படிந்தனர். இன்றும் சில விசுவாசிகள் இவர்களது முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும்.
நமக்கு ஒரு பலிபீடம் உண்டு. அது பூமியிலுள்ள ஆலயத்தின் முன் அல்ல, மாறாக, பரலோக சிங்காசனத்தின் முன் இருக்கிறது. பரத்துக்கு ஏறியவரும் மகிமைப்படுத்தப்பட்ட தேவகுமாரனே நமது பலிபீடம் (எபி.13:10). அவர் மூலமாகவே நாம் ஆவிக்கேற்ற பலிகளை தேவனுக்குச் செலுத்துகிறோம் (1பேதுரு 2:5). “திருச்சந்நிதானத்துக்கு வந்து இறைவனைச் சந்தியுங்கள்” என்று பிரசங்கிகள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பூமியில் அவ்வித பலிபீடங்கள் எங்கும் இல்லை. இயேசுகிறிஸ்து பரலோகத்திரை வழியாக மகாபரிசுத்த ஸ்தலத்திற்குச் சென்று, அங்கிருந்து அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (எபி.6:20). பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருந்த வெண்கல பலிபீடத்தில் தேவன் தம் மக்களைச் சந்தித்துவந்தார் (யாத்.29:42,43, 38:30). ஆனால், இன்று நாம் குமாரன் மூலமாகவும் (யோவான் 14:6) ஆவியானவர் மூலமாகவும் பிதாவினிடத்தில் வருகிறோம் (எபே.2:18). எபிரெயர் 4:14-16ன்படி நாம் தைரியமாகவும் “பேச்சு சுதந்திரத்துடன்” கிருபையின் சிங்காசனத்திற்கு வரலாம். நமது ஆராதனைகளின் பலிகள் மூலமாக நம்முடைய தேவைகளைத் தெரியப்படுத்த முடியும்.
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் ஓர் ஆசாரியரே! (1 பேதுரு 2:5,9; வெளி.1:6) தேவனை ஆராதிப்பதற்கும் ஊழியம் செய்வதற்கும், “ஆன்மீக பலிகளைக்” கொண்டு வருவதற்கும் நமக்கு உரிமை உள்ளது.
“ஆன்மீகம்” என்ற சொல் பொருளற்றதல்ல; மாறாக, அது தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆன்மீகப் பண்பாகும். ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் என் சரீரத்தை நான் ஜீவபலியாக தேவனுக்கு சமர்ப்பிக்கவேண்டும் (ரோமர் 12:1-2). மேலும், விண்ணப்பம் செய்யவும் (சங்.141:1-3), துதிகளை ஏறெடுக்கவும் (எபி.13:15) நேரம் ஒதுக்கவேண்டும். பகலில் அவரை கனப்படுத்தும் நற்காரியங்களைச் செய்யவும் (வச.16), நம்முடைய பொருள் வளங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவும் நற்காரியங்களைச் செய்யவேண்டும் (பிலி.4:14-18; ரோமர் 15:27).
சபை மக்கள் ஒன்று கூடிவரும்பொழுது அது ஆன்மீகப் பலிகளைச் செலுத்தும் ஒரு “ஆசாரியர்களின் ராஜ்யம்” ஆகும். ஆண்டவரை மகிழ்வித்து மகிமைப்படுத்துவதே நமது விருப்பம். அவருக்கு சிறந்த காணிக்கைகளைக் கொண்டு வரவேண்டும். மலிவான பலிகளைக் கொண்டுவந்ததற்காக ஆசாரியர்களை மல்கியா தீர்க்கதரிசி கண்டிக்கிறார். ஒர்னானிடமிருந்த களத்தை வாங்கியபொழுது “நிச்சயமாக நான் அதை முழுகிரயத்துக்கு வாங்குவேன். நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடமாட்டேன்” (1 நாளா.21:24) என்று தாவீது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. நாம் எதைக் கொடுக்கிறோம், எப்படிக் கொடுக்கிறோம் என்பவை தேவனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பினை வெளிப்படுத்துகிறது. ஆராதனை என்ற சொல்லின் பொருள் “மதிப்பு” என்பதாகும்.
நீங்கள் எதிர்பார்க்கும் திட்டம் எதுவாக இருந்தாலும் முதலில் பலிபீடத்தை உரு வாக்குவதை உறுதிப்படுத்தவேண்டும். நம்மையும் நம்மிடம் உள்ளதையும் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும். இலவசமாகப் பெற்றதை அவருக்குக் கொடுக்கவேண்டாம். உங்களுக்கு தேவையற்றதை அவருக்குத் தரவேண்டாம்.
“நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; … அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்” (மல்கியா 1:8-9).
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை