2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (நவம்பர் – டிசம்பர் 2024)
Dr.உட்ரோ குரோல்

3. அகத்தூண்டல் பற்றிய கருத்துக் கொள்கை

இந்தக் கொள்கைக்காரர்கள் வேத வசனங்களை அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை அல்ல. எழுதப்பட்டிருப்பவைகளின் பொதுக்கருத்து மட்டுமே அகத்தூண்டல் பெற்றவை. வேதாகம நூல்களை எழுதியவர்கள் தேவனுடைய கருத்துத் தொகுதிகளைத் தெரிந்துகொண்டு வந்து அந்த மூலக் கருத்துக்களை விளக்கித் தங்களாகவே தங்கள் சொந்த வார்த்தைகளில், மொழிநடையில் எழுதினர். அவர்கள் தேவனுடைய கருத்துக்களை எப்படிப்புரிந்து கொண்டிருந்தார்களோ, நினைவில் வைத்திருந்தார்களோ, அவற்றின் அடிப்படையில் எழுதினார்கள். இப்படி மனிதர்கள் வேதாகமத்தை எழுதியிருந்தார்களானால், அது தெய்வீகமாய் இருக்க முடியாது. மனுஷீகமாகத்தான் இருக்கும். இந்தக் கருத்து வேதாகமத்தில் உள்ள பல வசனங்களுக்கு முரணாய் இருக்கிறது (2 பேதுரு 1:20; கலா.3:16 1 கொரி.2:12,13 மத்.5:18).

4. அகத்தூண்டுதல் மாறுபடும் கொள்கை

இந்தக்கொள்கை வேதாகமத்தில் சில பகுதிகள் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை. மற்றவை அப்படி அல்ல என்பது.

முற்போக்குக் கொள்கையுள்ள பல சபைப் பிரிவுகளும், இறையியற் கல்லூரிகளும் இறையியலாளர்களும் வேதாகமத்தில் சிலபகுதிகள் மட்டும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று போதிக்கிறார்கள். அவர்களுக்குச் சம்மதம் இல்லாத மீதிப்பகுதிகள் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவைகள் அல்ல என்கிறார்கள். அவர்கள் பாவம், இரத்தத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்தல், எதிர்கால நியாயத்தீர்ப்பு இவைக் குறித்த வேதப்பகுதிகள் அவர்களுக்குப் பிரியம் இல்லாதவை. எனவே இப்பகுதிகளைப் புறக்கணித்துத் தள்ளிவிடுகின்றனர். இவை தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்று கூறுகிறார்கள். எனவே வேதாகமம் அரைகுறையாக அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்று வாதிடுகிறார்கள். அவர்கள் தாங்களே வேதாகமத்தில் இன்னின்ன பகுதிகள் எல்லாம் அகத் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை; இந்த இந்தப் பகுதிகள் எல்லாம் தேவனுடைய தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை அல்ல என்று தீர்ப்பு கூறுகிறார்கள். இது எவ்வளவு முடடாள்தனம்!

5. அகத்தூண்டுதல் பற்றிய R E M S கொள்கை

REMS என்பது ஒரு சுருக்க வார்த்தை. நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது.

R – Religious – சமய சம்பந்தமான

E – Ethical – நீதி ஒழுக்கம் சார்ந்த

M – Moral – அறநெறி சார்ந்த

S – Spiritual – ஆவிக்குரிய

இந்தக் கொள்கைக்காரர்கள் இந்தக் குறிப்பிட்ட நான்கு தலைப்புகளிலும் உள்ள வேதப்பகுதிகள்மட்டும் தேவனால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை. மற்றப்படி, வரலாறு சம்பந்தப்பட்டவைகளையும் அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவைகளையும் கல்வி அறிவூட்டுதல் சம்பந்தப்பட்டவைகளையும் உலகப் பொருட்கள் சம்பந்தப்பட்டவைகளையும் பற்றிக் கூறும் வேதப்பகுதிகள் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. இந்தக் கொள்கைக்காரர்கள் கூறுவதுயென்னவென்றால் வேதாகமம் ஒரு புவியியல் பாடப்புத்தகமாகவோ, அறிவியல் பாடப்புத்தகமாகவோ இருக்கப் போவதில்லை. எனவே அப்பகுதிகளில் எல்லாம் விளக்கக் குறிப்புகள் சரியாக இருக்காது. ஆனால் இயேசு கூறுகிறார்: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12).

இந்தப் பூமிக்கடுத்த காரியங்களில் நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையானால், நித்திய காரியங்களைக் குறித்து அவர் கூறும்போது எப்படி விசுவாசிப்போம்?

இல்லை, வேதாகமம் சிலபகுதிகளில் மட்டும், அல்லது ஆவிக்குரிய காரியங்களைப் போதிக்கும் இடங்களில் மட்டும் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டதல்ல. “அகத்தூண்டல்” என்பது இருந்தால் முழுவதிலும் இருக்கும், இல்லையேல் ஒன்றிலும் இருக்காது என்பது அவர்களின் வாதம்.

தேவன் கூறுகிறார்: வேதாகமம் முழுவதும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது. நூறுசதவீதம் ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுதான். தேவனுடைய ஆவியானவர் சில மானிட எழுத்தாளர்களை தேவனுடைய சிறப்பான வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள உதவினார். இப்படி தேவவெளிப்பாடு பெற்று, தேவஆவியானவரின் அகத்தூண்டுதலுடன் எந்தத் தவறும் இல்லாமல், எதுவும் விடுபடாமல் வேத நூல்களை எழுதினார்கள்.

அகத்தூண்டுதல் பற்றிக் குறிப்பிடும் போது, இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுவதுண்டு அவை:

1. Plenaryமுழுமையான, குறைவற்ற என்று பொருள்.

2. Verbalஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாகச் சரியாக அமைதல்.

இவற்றில் முழுமையான அகத் தூண்டுதல் என்பது வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களும் தேவஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்பதைக் குறிக்கும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (1 தீமோ.3:16). வார்த்தைகளின் அகத்தூண்டுதல் என்பது, வேதநூல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலும்-புவியில் சம்பந்தப்பட்டவைகள், அறிவியல் சம்பந்தப்பட்டவைகள், வானவியல் சம்பந்தப்பட்டவைகள் போன்ற வார்த்தைகளைச் சரியானதாகவும், பொருத்தமானதாகவும், இலக்கண முறைப்படி சரியான அமைப்பிலும் வரும்படியாக எழுதும்படி தேவன் தமது ஆவியானவர் மூலம் உதவி செய்வார்.

தேவன் எல்லா வேதநூல் எழுத்தாளர்களையும் சமமான அளவில் அகத்தூண்டுதல் கொடுத்து எழுத உதவினார். தேவன் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அமையும் படி உதவினார். அவர் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சரியாக அமையும்படி உதவினார்.

பவுல், பேதுரு, மோசே மற்றும் எல்லா வேதாகமப்புத்தக எழுத்தாளர்களும் எழுத வேண்டிய காரியங்களை தேவ ஆவியினால் அருளிச்செய்தார். இந்த அகத்தூண்டுதல் வேதாகமத்தை மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியாசமானதாகக் காட்டுகிறதா? ஆம்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் வரம் பெற்ற நாடகாசிரியராய் இருக்கலாம். அவர் சரியான வார்த்தைகளைத் தெரிந்தெடுக்கவும். தான் வெளிப்படுத்த விரும்பியதைச் சரியாக வெளிப்படுத்தவும் தேவஆவி யானவர் அவருக்கு உதவி செய்யவில்லை.

பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் அற்புதமான நூலை ஜாண் பனியன் எழுதினார். அவருக்கும் எசேக்கியேல், தாவீது, மோசே, மத்தேயு போன்றவர்களுக்கு தேவஆவியானவரின் தூண்டுதல் கிடைத்ததுபோல அகத்தூண்டுதல் கிடைக்கவில்லை.

வேதாகமம் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவனுடைய வாயினால் பேசப்பட்டவைகளாய் இருக்கிறபடியால் இது உலகில் வெளியிடப்பட்ட மற்ற எல்லாப் புத்தகங்களிலிருந்தும் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் புத்தகங்களிலெல்லாம் உலகெங்கும் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக வேதாகமம் காணப்படுகிறது. வாழ்க்கையை மாற்றும் ஒரே புத்தகம் இதுவே. இதைப் போன்று வேறு புத்தகம் எதுவும் இல்லை.

வேதாகமத்தை இன்றே வாசித்து, அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுது வேதாகமத்தை எழுதிய ஆக்கியோன் தேவனையும் கண்டுகொள்வீர்கள். அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளுவீர்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்