ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2014

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நம்மை மீட்கும்படியாய் இவ்வுலகில் பாலகனாய் அவதரித்த அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வாண்டு முழுவதும் நமக்கு போதுமானவராய் இருந்து நம்மை போஷித்து நம் தேவைகளை சந்தித்து வழிநடத்திய தேவனை துதிப்போம். இக் கிறிஸ்துமஸ் நாட்கள் நமக்கு வெறும் கொண்டாட்டமாய் அமையாமல் இயேசு இவ்வுலகில் அவதரித்ததின் நோக்கத்தையும், மனுக்குலத்தின் மேல் அவர் வைத்த அன்பையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறதாய் அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசனம் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை வருகிற டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை கத்தீட்ரல் ஆலயத்திலுள்ள மில்லினியம் ஹாலில் நடைபெறும். மதுரையிலும் அதின் அருகாமையிலுமுள்ள பங்காளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்பாய் கேட்கிறோம். இவ்வாண்டு முழுவதும் சத்தியவசன ஊழியப் பணிகள் நடைபெறுவதற்கு ஊக்கமான ஜெபத்தினாலும் உதாரத்துவமான காணிக்கையினாலும் தாங்கின அன்பு பங்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழில் டாக்டர்.உட்ரோ குரோல் எழுதிய “முதற்பேறானவர்” என்ற தலைப்பில் அளித்திருக்கிற செய்தி பெத்லகேமில் பிறந்த இயேசுகிறிஸ்துவின் ராஜரீகத்தைக் குறித்தும் இவ்வுலகின் முதற்பேறான அவருடைய மகத்துவத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நித்தியமும் அழிவில்லாமையையும் உடைய இயேசுகிறிஸ்து நம்மை மீட்கும்படியாக எவ்வளவாய் தம்மைத் தாழ்த்தி இவ்வுலகில் பிறந்தார் என்பதை சகோதரி.சாந்தி பொன்னு அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். இருளிலே பிரகாசிக்கும் நட்சத்திரமாய் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்துதித்ததினால் நாம் அடைந்த ஆசீர்வாதங்களை பேராசிரியர்.எடிசன் விளக்கியுள்ளார்கள். அன்னாளின் அர்ப்பணிப்பின் வாழ்க்கையைக் குறித்து சுவி.சுசிபிரபாகரதாஸ் அவர்களும், காபிரியேல் தூதரைக் குறித்ததான வேதபாடத்தை கலாநிதி.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், ஒதுக்கப்பட்டவர்களாக இருந்த மேய்ப்பர்கள் கிறிஸ்துவின் பிறப்பின்போது பெற்ற சிலாக்கியத்தைக் குறித்து டாக்டர்.வாரன் வியர்ஸ்பி அவர்களும் சிறப்புச் செய்திகளை எழுதியுள்ளார்கள். சமாதானப் பிரபுவாய் பிறந்த ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானத்தைக் குறித்து வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் எழுதியுள்ளார்கள். இச்செய்திகள் அனைத்தும் நம் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமைவதோடு இயேசுவின் பிறப்பை அர்த்தத்தோடு அனுசரிக்க உதவும் என நம்புகிறோம்.

உங்கள் யாவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்