முதற்பேறானவர்

Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2014)

மற்றுமொரு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் கொண்டாட இருக்கின்றோம். இந்நாட்களில் முதல் கிறிஸ்துமஸ் தினத்தின் முக்கியத்துவத்தையும் அதன் தனிச் சிறப்புகளையும் நாம் சற்று ஆராய்வோம்.

கிறிஸ்துமஸ் காலத்தில் அனைத்து வீடுகளிலும் அலங்கரிக்கப்படும் ‘குடில்’ நம் அனைவரையும் கவரும் ஒரு பொருளாகும். இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பிறப்பை அது மற்றவர்களுக்குத் தெளிவாக விளக்குகிறது. அதில் காணப்படும் மாந்தர்களின் முக்கியத்துவத்தை நாம் காண்போம். முன்னணை, அதைச் சுற்றி நிற்கும் மேய்ப்பர்கள், கன்னிமரியாள் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்கள் யாவரும் இயேசுகிறிஸ்துவின் முக்கியத்துவத்தைக் காட்டும் அடையாளங்களாகக் காணப்படுகின்றனர். முக்கியத்துவம் என்ற சொல்லுக்கு அநேக அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் கூறுகிறது அல்லது அடையாளமாக அமைகிறது எனலாம்.

அவரது பிறப்பின் முக்கியத்துவம் என்று கூறும்பொழுது, நாம் இயேசுகிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகிறோம். அவருடைய பிறப்புடன் தொடர்புடைய அனைத்துமே அவரையே அடையாளம் காண்பிக்கிறது. “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்” (வெளி.1:1,2). இங்கு ‘அனுப்பி’ ‘வெளிப்படுத்தினது’ என்ற சொற்களை நாம் வாசிக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்களைக் கூறுகிறது. அதுபோலவே மத்தேயு மற்றும் லூக்காவின் நற்செய்தி நூல்கள் கிறிஸ்துவின் முதல் வருகையை அதாவது அவர் குழந்தையாக வந்ததை விளக்குகிறது.

முதலாவது, அவர் பிறந்த ஊரான பெத்ல கேமின் முக்கியத்துவத்தை நாம் பார்ப்போம். பிலிப்ஸ் புரூக் என்ற கவிஞர் ஓர் அழகான பாடலை நமக்குத் தந்துள்ளார்.

“ஓ பெத்லகேமே சிற்றூரே, என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான் வெள்ளி,
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே.
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே.”

இவ்வூரின் முக்கியத்துவம் யாது?
“அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்” (லூக்கா 2:1-5).

இது மிகச்சிறந்த ஓர் அரசரான தாவீதின் ஊராகும். இங்குதான் இஸ்ரவேலின் இராஜாவைக் கண்டுபிடிக்க தீர்க்கதரிசியான சாமுவேல் அனுப்பப்பட்டார். “கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்து கொண்டேன் என்றார்” (1சாமு.16:1).

மீகாவும் தமது தீர்க்கதரிசன உரையில் “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா.5:2) கூறியுள்ளார்.

எனவே கிறிஸ்துமஸ் என்றதும் நாம் யூதேயாவிலுள்ள இந்த பெத்லகேம் சிற்றூரையே நினைக்கிறோம். கலிலேயாவில் மற்றொரு பெத்லகேம் என்ற ஊர் இருந்தது. ஆனால் இது தாவீதின் ஊர் அல்ல; இங்கு கிறிஸ்து பிறக்கவில்லை. அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறந்தார். இந்த பெத்லகேம் அரசர்கள் பிறந்த ஊராகும். இச்சிறிய ஊரானது இஸ்ரவேலுக்கு ஒரு சிறந்த அரசரைத் தந்தது மாத்திரமல்ல, அரசருக்கெல்லாம் மாபெரும் அரசர் ஒருவரை இச்சிற்றூர் தரப்போகிறது என இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளும் அறிந்திருந்தனர்.

இவ்வூரில் அநேக குழந்தைகளும் இறந்தனர். “ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.

ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக் குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்” (மத்.2:1-8).

கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் அரசரைத் தேடி வந்தனர். ஆனால் ஏரோது அரசருக்கு அந்தக் குழந்தையை வணங்கும் எண்ணம் சிறிதேனும் இல்லை. அதைக் கொன்றுவிட வேண்டும் என எண்ணியே இரண்டு வயதுக் குட்பட்ட ஆண் குழந்தைகளைக் கொல்லும்படி உத்தரவிட்டார்.

பெத்லகேம் அரசர்களது பிறப்பிடம். தேவனுடைய விவரிக்கமுடியாத ஈவானது இந்த சிற்றூரான பெத்லகேமிலே வெளிப்பட்டது. உங்களில் சிலர் பெத்லகேமுக்குச் சென்றிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரவேல் தேசத்துக்கு நான் செல்லும்பொழுது, ஒரு நாளை பெத்லகேமில் செலவிடுவேன். எருசலேம் மிகப்பெரிய பட்டணமாயிருந்தாலும், பெத்லகேமே தேவன் வந்திறங்கின இடம். தேவன் மனிதனாய் இறங்கி இந்த உலகத்தில் வந்து நம்முடன் வாசம்பண்ணத் தெரிந்துகொண்ட இடம் இதுவே. பெத்லகேம் என்னும் ஒரு சிற்றூரில் முன்னணையில் தேவனுடைய கொடை நமக்குக் கிடைத்தது. அவரை இரட்சகராக விசுவாசிப்பவர்கள் யாவரும் இராஜாதி இராஜாவான அவருடன் என்றென்றும் அரசாளுவார்கள்.

பெத்லகேம் என்னும் இவ்வூர் கிறிஸ்துமஸ் நிகழ்வை நினைவுபடுத்துவது மாத்திரமல்ல; உலக இரட்சகரை நமக்கு அடையாளமும் காட்டியது. யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். தாவீது பெத்லகேம் ஊரைச் சார்ந்தவர். இத்தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் அந்த இரவிலே பெத்லகேமிலே நிறைவேறிற்று.

“அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார்;
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும் அமைதியால் ஈவார்
கேளாதே அவர் வருகை இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்.”

நீங்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள இதுவே சரியான தருணம். இயேசு கிறிஸ்து பிறந்த அந்த ஊரை நாம் வணங்குவதில்லை. ஆனால் அந்த ஊரில் பிறந்த கிறிஸ்துவையே நாம் தொழுகிறோம்.

இனி நாம், இயேசுகிறிஸ்து “முதற்பேறான குமாரன்” என்பதன் முக்கியத்துவத்தை ஆராய்வோம். “அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக்.2:6,7). புதிய ஏற்பாட்டில் ‘முதற்பேறான குமாரன்’ என்பது இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அடைமொழியாகும். புற ஜாதிகளாகிய நமக்கு இதனுடைய முக்கியத்துவம் தெரிவதில்லை. ஆனால் யூத மதத்தினருக்கு முதற்பேறானவர் அல்லது சேஷ்ட புத்திரன் என்பதற்கு மிக ஆழமான பொருள் உண்டு. மற்ற பிள்ளைகளுக்கு இல்லாத பல உரிமைகளும் சலுகைகளும் இந்த மூத்த மகனுக்கு உண்டு.

இயேசுகிறிஸ்து மரியாளுக்கு முதல் குமாரன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார். மாற்கு 6:3 இல் மரியாளுக்கும் யோசேப்புக்கும் வேறு பிள்ளைகளும் இருந்தனர் என்று நாம் வாசிக்கிறோம். இதனை நாம் மறுக்க முடியாது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. இயேசுகிறிஸ்துவுக்கு யோசேப்பு உயிரியல் சார்ந்த தகப்பன் அல்ல. அவர் வளர்ப்புத் தந்தையாகி, சட்ட ரீதியான தந்தையுமானார். ஆனால் மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்ததினால் அவளது முதற்பேறான குமாரன் ஆனார்.

முதற்பேறானவர் என்பதின் பொருள் என்ன?
“வேதாகமத்தில் முதற்பேறானவர் என்பதற்கு அதிக மேன்மையும் முன்னுரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. முதற்பேறானவருக்கே அக்குடும்பத்தாரின் பரம்பரைச் சொத்துக்கள் சேரும். யாத்திராகமம் 4:22இல் கர்த்தர் இஸ்ரவேலரைத் தமது சேஷ்டபுத்திரன் என்று அழைக்கிறார். மேன்மை முன்னுரிமை பெறுதல், மாபெரும் உயர்வு இவை யாவையும் இச்சொல் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு இப்பட்டத்தைத் தருவதில் தயக்கம் எதுவும் இல்லை” என்று டாக்டர் வாரன் வியர்ஸ்பி அவர்கள், ‘The Wonderful Name of Jesus’ புத்தகத்தில் எழுதியுள்ளார். வியர்ஸ்பி கூறுவது சரியே.

முதலில் பிறப்பது மாத்திரம் முக்கியம் அல்ல; அவருக்கு மேலும் சில சிறப்புரிமைகளும் உண்டு. முதலாவது அவர் ஒரு சந்ததி மேலானவர். எனவேதான் படைப்பின் அனைத்திலும் அவர் முதற்பேறானவர். “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ.1:15) என்று சத்திய வேதம் நமக்கு விளக்குகிறது. இயேசுகிறிஸ்து முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்று பொருளாகாது. அவர் சிருஷ்டிப்பு அனைத்துக்கும் முதலிடத்தைப் பெறுகிறார். அனைத்து படைப்புக்கும் அவரே தலையானவர்.

“… எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற் பேறுமானவர்” (கொலோ.1:18). “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற் பேறானவராயிருக்கும்பொருட்டு..” (ரோ.8:29) என்றும் எழுதியிருக்கிறது. இயேசுகிறிஸ்து செய்த அனைத்துமே மனுக்குலம் அனைத்துக்கும் அவர் தலையானவர் என்பதைத் தெளிவாக்குகிறது. நாம் அவரை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்பொழுது நாமும் அவரது குடும்பத்தின் உறுப்பினராகிறோம்.

எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற பஸ்கா பண்டிகையின் இரவிலே முதற்பேறான அனைத்தும் இரத்தத்தால் காப்பாற்றப்பட்டன. எனவே அவை யாவும் கர்த்தருக்கு உரியதாயிற்று. “கர்ப்பந் திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்” (யாத்.34:19). ஆம், தேவன் முதற்பேறானவர்களை மிகவும் சிறப்பாகக் கருதுகிறார்.

கிறிஸ்து பிறந்த அன்றைய நாளில், அவர் அனைத்துப் படைப்புகளுக்கும் முதற்பேறானவரானார். தேவனுடன் உறவு வைத்துள்ள யாவருக்கும் அவர் தலையானவர். எனவே இந்த கிறிஸ்துமஸ் நிகழ்வானது மிக முக்கியமான ஒரு காலமாகும். இயேசுகிறிஸ்து யார் என்பதை நாம் ஆராயும் ஒரு காலம். மரியாளுக்கு மாத்திரம் அவர் முதற்பேறானவர் அல்ல; தேவனிடமிருந்து ஒரு புதிய சந்ததியை அவர் உருவாக்கினார். தேவனுடைய குமாரர்களாய், குமாரத்திகளாய் மறுபடியும் பிறந்த அனைவருக்கும் அவர் ஒரு மூத்த சகோதரர். அவரை விசுவாசித்து இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும் நீங்களும் நானும் சர்வலோகத்தின் தேவனுடைய பிள்ளைகளாவது சாத்தியமே.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்