கருவறையில் கடவுளா!

சகோதரி.சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2014)

“.. அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (1 தீமோ.6:15,16).

“நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (1தீமோ.1:17).

“வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரும்…” (வெளி.10:7).

“.. இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (1 இராஜா.8:27) என்று சாலொமோன் தேவனுடைய மகிமையை மகிமைப்படுத்த, “.. வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி” (ஏசா.66:1) என்று கர்த்தர் தாமே ஏசாயா மூலம் தமது மாட்சிமையை உரைத்திருக்கிறார்.

மேலும், “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது;” (ரோ. 11:33-36)

இப்படியாக நமது தேவனுடைய மகிமை மாட்சிமை மகத்துவத்தைக் குறித்து ஏராளமான வார்த்தைகளை பரிசுத்த வேதாகமத்திலே, நமக்கு விளங்கக்கூடிய விதத்திலே பரிசுத்தாவியானவர் வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், இவை எதுவும் மனித அறிவுக்கு இன்னும் எட்டமுடியாத சிகரங்கள், விசித்திரங்கள். இந்தக் கடவுள் ஒரு பெண்ணின் கருவறைக்குள் இருந்தாரா?

அண்டசராசரம் முழுவதையும் படைத்து, ஆளுகை செய்கிறவரும், இயற்கையின் அசைவுக்கெல்லாம் வழி அமைத்தவரும், அவற்றுக்கெல்லாம் எல்லையிட்டவருமான இந்த தேவாதி தேவன், தன்னை ஒடுக்கி முடக்கி பேறுகாலத் திட்டத்தின் காலம் நிறைவேறும் வரை ஒரு கன்னியின் கருவறையில் கிடந்தார் என்பதை எந்தவொரு மனித அறிவாலும், அதற்கு மிஞ்சிய சக்திகளாலும்கூட சிந்தித்துப் பார்க்கமுடியாது. கடவுள்தான் மனிதனாக வந்தார் என்றால், அந்தக் காலப்பகுதியில் யார் கடவுள் என்று கேலி செய்கிறவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆம், இதுவும் மனித அறிவுக்கு எட்டாத ஒன்றுதான். ஆம், கிறிஸ்தவ வாழ்வு என்பது தரிசித்து நடப்பதில் அல்ல, விசுவாசித்து நடப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று வேதம் போதித்திருக்கிறது. நாம் மோசேயைப்போல தேவனைத் தரிசித்தோமா? அவருடைய குரலைக் கேட்டோமா? ஏசாயா எரேமியாவின் அனுபவம் நமக்குண்டா? இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோமா? அவர் தொங்கிய சிலுவையைக் கண்டோமா? அல்லது, அந்த வெறுமையான கல்லறையைத்தான் கண்டோமா? (இன்று இஸ்ரவேலுக்குப் பயணம் போகிறவர்களுக்கு இதுதான் கல்லறை என்று காட்டுகிறார்கள். அது எவ்வளவு உண்மையோ யார் அறிவார்?) அல்லது, பவுல் பேதுருவைத்தான் முகமுகமாய் கண்டு பேசினோமா? அப்படியிருந்தும், எப்படி நாம் தேவாதி தேவனை நம்புகிறோம், இயேசு பிறந்தார் என்று அறிவிக்கிறோம். அதுதான் தேவன் நமக்குள் வைத்த விசுவாசம். அது தேவனுடைய சுத்த கிருபை. இதுவும் மனித அறிவுக்கு எட்டாத அதிசயம்தான்!

கன்னி வயிற்றில் தோன்றிய தேவன், ஒரு குழந்தையாக மரியாளின் கருவறைக்குள் வந்து உட்காரவில்லை. ஒரு மனிதன் எப்படி கருவறையில் தோன்றுவானோ, அதாவது, ஒரு கரு – just a cell – மிக நுண்ணிய அளவு கொண்ட ஒரு கருவாக – இப்படியாகத் தம்மை ஒடுக்கி ஒரு கன்னியின் கருவறையில், வானாதி வானங்களும் கொள்ளாத தேவன் வந்து அமர்ந்தார் என்பதை மனித மூளை எந்தக் கணக்கிலே சேர்க்கும்? மாத்திரமல்ல, உலகம் தள்ளிவைக்கின்ற எந்தவொரு எளியவனும் கூட தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவா என்று எண்ணும்படிக்கு, அவர் ஒரு எளிமையான கோலத்தில், வெகு சாதாரண கன்னிப் பெண்ணின் கருவறையில் வந்துதித்தார்.

மரியாளும் யோசேப்பும் நாசரேத்தூரிலே தங்கள் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாமர மக்கள். ஆனால், கடவுள் மரியாளின் வயிற்றில் வந்துதித்த காலம், பேறுகாலம் குடிமதிப்பு எழுதப்படும் நாட்களாக இருக்கத் தக்கதான கணக்கில் இருந்தது என்ற தேவ திட்டமும் பெரிய ஆச்சரியம்தான்! ஏனெனில், குடிமதிப்புக் கணக்கெடுப்பிற்காகவேதான் மரியாளும் யோசேப்பும் நாசரேத்தூரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேமுக்குப் போக நேரிட்டது. அங்கே அவர்களுக்கு தங்கியிருக்க இடமில்லாமற்போனது. அதனால்தானே ஆண்டவர் மாட்டுத்தொழுவத்தில் படுக்க வைக்கப்பட்டார். அப்போ, இப்பாழுலகில் அகதிகளாக்கப்படும் மக்களையும், ஒரு அடி நிலம்கூட சொந்தமற்ற மக்களையும், ஒவ்வொரு எளிய மனிதனையும் நினைத்தா, அவர் குடிமதிப்பு எழுதப்படும் நாட்களில் வந்து பிறந்தார்! இதுவும் மனித அறிவுக்கு எட்டக்கூடிய விஷயம் அல்ல!!

“பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது” (சங்.24:1) அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், “தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி.2:7). ஐசுவரிய சம்பன்னராகிய கர்த்தர் ஒரு அடிமையாக இப் பாவ உலகிற்குள் வந்து, தமது பரிசுத்த கால்களினால் இப் பூமியில் நடமாடியது எப்படி?

பரிசுத்தமும் நீதியும் உள்ள தேவாதி தேவன், மனிதன் பாவத்தைத் தழுவிக்கொண்டதும் கோபங்கொண்டு அவனை அழிக்காமல், மனுக்குலத்தின்மீது தமது கோபாக்கினையை ஊற்றாமல், அதேசமயம் தமது பரிசுத்தத்தையும் நீதியையும் விட்டுக்கொடுக்காமல் அவற்றை நிலைநாட்டுவதற்காகவே தமது இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படுத்தி, தம்மையே ஏக பலியாக்கி முழு உலகிற்கும் மீட்பு அருளினாரே; அது எப்படி?

வெளிப்பட்ட தேவ அன்பு:
இக்கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் ‘அன்பு’ ஒன்றுதான். தேவன், உலகத் தோற்றத்தின் முன்னரே, மனிதன் படைக்கப்படும் முன்னரே மனிதன்மீது அன்பு வைத்தார் (எபே. 1:4). மாத்திரமல்ல, கிறிஸ்துவால் உண்டான இரட்சிப்பு என்பதுவும் உலகத் தோற்றத்திற்கு முன்னரேயே தேவனால் குறிக்கப்பட்ட ஒன்று. “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்” (1பேதுரு 1:20). நாம் இன்று பெற்றுக்கொண்ட கிறிஸ்துவுக்குள்ளான விடுதலையும், கிறிஸ்துவே இரட்சகர் என்பதுவும் மனிதன் பாவத்தில் விழுந்த பிற்பாடு ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடு அல்ல; நாம் தோன்றுமுன்னதாகவே நியமிக்கப்பட்டிருந்ததை மேலுள்ள வார்த்தை நமக்கு உறுதிப்படுத்துகிறது. மனிதனில் தேவன் இத்தனை கொள்ளை கொள்ளையாக அன்புகூர நாம் எம்மாத்திரம்!

இவை எதுவும் நமக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள சத்தியங்கள் அல்ல. நமது அறிவுக்கு எட்டிய இந்தக் காரியங்கள், நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையானால் நாம் பரிதாபத்திற்குரியவர்களே! இந்த தேவாதி தேவனுடனா மனிதன் போராடுகிறான்? கடவுள் மனிதனாக வந்துதித்த மேன்மையை இன்று மனிதன், கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட சற்று விளையாட்டாக எடுத்துக் கொண்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. கடவுள், மனிதன் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தி, வெறுமையாக்கி, பாவிகளில் ஒருவராகவும் அக்கிரமக்காரரில் ஒருவராகவும் எண்ணப்படுமளவுக்கு சிலுவையிலே அநாதரவாகத் தொங்கியதால்தானா, நாம் கிறிஸ்தவ வாழ்வை சற்று இலகுவானதாக எண்ணிவிட்டோமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. மகா உன்னத தேவன் ஒரு கன்னியின் கருப்பையில் வந்துதித்ததால் அவரை வெகு இலகுவாக எடுத்துக்கொள்வது எப்படி? இயேசு பிறந்ததை நினைவுகூருவது என்ற பெயரில் இன்று நாம் எப்படி கடவுளைக் கொண்டாடுகிறோம் என்பதைச் சற்று சிந்திப்போமாக.

கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்படும் நோக்கம் என்ன? இது வெறும் கொண்டாட்டமா? அல்லது, நமது கொண்டாட்டத்தினூடாக நாம் மனிதனாய் வந்த கடவுளை உலகுக்கு எடுத்துரைக்கிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுப் பார்ப்பது அவசியம்.

அநாதியாய் மனிதனில் அன்புவைத்த தேவன், அன்பாய் அவனைப் படைத்து, அன்பாய் அவனை வாழவைத்து, அன்பான கட்டளையைக் கொடுத்து, அன்பாகவே இருந்தார். இதற்காக அவர் மனிதனிடத்தில் எதனையும் எதிர்பார்க்கவில்லை. மனிதன் பாவத்தில் விழுந்தபோதும், அன்பு நிறைந்த தேவன், அவனை மீட்கும் திட்டத்தை அந்த ஏதேனிலேயே அந்த விநாடியிலேயே வெளிப்படுத்தியதை ஆதியாகமம் 3:15இல் காண்கிறோம். அந்த தீர்க்கதரிசன வாக்கை நிறைவேற்றும்படி தாமே மனிதனாக வந்த தேவன், எந்த மனுஷி முதலில் வஞ்சிக்கப்பட்டாளோ, அந்தப் பெண் வர்க்கத்தில் ஒருத்தியாகிய ஒரு கன்னியையே தமது முதல் வருகைக்காகத் தெரிந்தெடுத்த தேவ அன்பை நாம் என்னென்று சொல்ல!

சீனாய் மலையில் வெளிப்பட்ட தேவகிருபை:
சீனாய் மலையின் உச்சிக்கு மோசேயை அழைத்து, மனிதனை நியாயந்தீர்க்கும் நியாயப்பிரமாணங்களை, அவற்றில் ஒன்றில் தவறினாலே முழு பிரமாணங்களையும் மீறியதற்குச் சமம் என்று எண்ணப்படுகின்ற நியாயப்பிரமாணங்களை, மனிதனை ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்படுத்துகிற நியாயப்பிரமாணங்களை மாத்திரம் தேவன் கொடுத்தனுப்பியிருந்தால் அவர் ஒரு பயங்கரமான பழிதீர்க்கும் தேவனாகவே இருந்திருப்பார். ஆனால், கர்த்தரோ, கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகளுடன், தம்மை ஆசரிக்கவேண்டிய ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரியையும் கொடுத்தனுப்பியது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அந்த ஆசரிப்புக்கூடாரத்தினை அமைக்கும்போது, மக்களிடம் பெற்றுக்கொள்ளும் காணிக்கையிலிருந்து முதலாவதாக தேவன் கொடுத்த மாதிரி சாட்சிப்பெட்டிக்குரியது என்பதைக் கவனிக்கவேண்டும். அதற்குள் வைக்கப்படவேண்டியது சாட்சிப் பிரமாணம் அடங்கிய கற்பலகை. அத்துடன் விட்டிருந்தால் திரும்பவும் அவர் பழிதீர்க்கும் தேவனாவார். ஆனால், அதற்கு அடுத்ததாக சாட்சிப் பெட்டியின் அதே நீள அகலத்தில் கிருபாசனத்தை அமைத்து சாட்சிப்பெட்டிக்கு மேலே வைக்கும்படி (யாத்.25:9-22) சொன்ன தேவனுடைய அன்பை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்’ என்று கர்த்தர் மோசேயிடம் சொன்னார். ஆக, மோசேயிடம் பேசும்போதே, பிரமாணம் அல்ல; தமது கிருபையே மனிதனுக்குத் தேவை என்பதை வெளிப்படுத்திய தேவ அன்பை நாம் என்ன சொல்ல!

கருவறையில் தோன்றினாலும் அவரே கர்த்தர்:
பிரியமானவர்களே! ஒவ்வொரு ஆண்டும் நம்மைவிட்டுப் பறந்துசென்று கொண்டிருக்கிறது. ஆண்டவருடைய வருகை மிக சமீபமாகிவிட்டதை இன்னொருவர் சொல்லி நாம் புரியவேண்டிய அவசியமே இல்லை. ஆகவே, கொண்டாட்டங்களிலும் களியாட்டங்களிலும் மேலாக, நமது தேவனை, கன்னியின் கருவறைக்குள் தம்மை ஒரு கருவாகத் தாழ்த்தி வந்த தேவனை, சிலுவையிலே நமக்காகவே மரித்த தேவனை, உயிர்த்து இன்றும் நம்முடன் வாழுகின்ற தேவனை, மறுபடியும் நியாயாதிபதியாய் வருகின்ற தேவனைத்தான் நாம் ஆராதிக்கிறோம் என்பதை சற்று நிதானித்து இந்நாட்களில் நமது காரியங்களை முன்னெடுப்போமாக.

“.. சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின…” (வெளி.15:3,4).

கருவறையில் தோன்றிடினும்
கர்த்தர் கர்த்தரே!
காரிருளில் வாசம்பண்ணிடினும்
காருண்யர் காருண்யரே!
கல்நெஞ்சன் உன்னைத்தான்
இன்றவர் தேடுகிறார்;
கர்த்தர் இயேசு வந்தமர
உன் இதயத்தைத் திறந்திடு!

சத்தியவசனம் சஞ்சிகை வாசகர்கள் யாவருக்கும், சத்தியவசனம் ஊழியர் சார்பாகவும் எனது சார்பாகவும் அன்பான கிறிஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள்!

சத்தியவசனம்