அன்னாள்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(நவம்பர்-டிசம்பர் 2014)

கிறிஸ்துமஸ் காலத்திலே திருமறையை நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாக்கியத்தை ஆண்டவர் நமக்கு தந்ததற்காக ஸ்தோத்திரிக்கிறேன். இந்த செய்தியை வாசிக்கின்ற உங்கள் வாழ்விலே ஆண்டவர் பல திருப்பங்களை உண்டுபண்ண நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்போடு சம்பந்தப்பட்ட அநேக தேவ மனிதர்களைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். இந்த நாளில் அன்னாள் என்ற தீர்க்கதரிசியைக் குறித்து நாம் பார்க்கலாம்.

“ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்” (லூக்.2:36) என்று சொல்லப்படுகிறது. பழைய ஏற்பாட்டிலே தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். வெளிப்பாடுகளைச் சொல்லுகிறவர்கள் எல்லாரும் தீர்க்கதரிசிகள் அல்ல. தீர்க்கதரிசி என்பது ஆண்டவருடைய பணியிலிருக்கிற ஒரு பெரிய ஸ்தானம் ஆகும். ஒரு பெண்மணி தீர்க்கதரிசன ஊழியம் செய்ததை இந்த வேத பகுதியிலே நாம் வாசிக்கிறோம்.

அருமையானவர்களே, புதிய ஏற்பாட்டிலே தீர்க்கதரிசன வரம் உள்ளவர்களை நாம் திருமறையிலே பார்த்திருக்கிறோம். அகபு என்பவன் ஒரு பஞ்சம் வருமென்று சொன்னான், அப்படியே நடந்தது. அகபு என்பவன் பவுலினுடைய பாடுகளைக் குறித்துச் சொன்னான், அப்படியே நடந்தது. ஆனால், இன்றைக்குப் பலர் தீர்க்கதரிசனப் பணிகளைச் செய்கிறோம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லுவது எதுவுமே நடப்பதில்லை. அவர்கள் கர்த்தருடைய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டாதபடி தங்கள் சாம்ராஜ்ஜியங்களைக் கட்ட ஆரம்பிக்கின்றனர். இங்கே பாருங்கள், சிமியோன் தன் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினானா? இல்லை. அதேசமயத்திலே, அன்னாள் என்னும் தீர்க்கதரிசி தன் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினாளா? இல்லை. கர்த்தருடைய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டுவதற்காக ஆண்டவராலே பயன்படுத்தப்பட்ட ஒரு அருமையான பெண்மணி. இந்தப் பெண்மணியைக் குறித்து ஒருசில குறிப்புகளைத் திருமறையிலிருந்து நான் சொல்லுகிறேன்.

லூக்கா 2:36ஐப் பாருங்கள். இவள் ஒரு தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஒரு தீர்க்கதரிசி. அதுமாத்திரமல்லாமல், கன்னிப்பிராயத்தில் விவாகமான முதல் ஏழு வருஷம் புருஷனுடனே வாழ்ந்தவள். அவளுக்கு இளம் வயதிலே திருமணம் முடிந்து தன் புருஷனோடு ஏழு ஆண்டுகள் வாழ்ந்தாள். ஏழாவது ஆண்டிலே அவளுடைய புருஷன் மரித்திருக்கலாம். ஆக, இளம் வயதிலே அவள் விதவையின் கோலத்தைப் பெற்றவள். அதுமாத்திரமல்லாமல், இப்பொழுது அவளுடைய வயது 84. அதிக வயது சென்றவள். அப்படியானால், இளம் வயதிலிருந்து 84 வயது வரை என்று கணக்கிட்டால், ஏறக்குறைய நீண்டகாலமாக ஆண்டவரை சேவித்தவள். அதுமாத்திரமல்லாமல், நீண்டகாலமாக ஆண்டவருக்கு தன் வாழ்வை ஊற்றி தியாகம்பண்ணின ஒரு பெண்மணி. இந்தப் பெண்மணியைக் குறித்து இன்னொரு காரியம் சொல்லப்படுகிறது.

லூக்கா 2:37ல், “…அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்”. அவள் வீட்டிலே குடியிருந்தாள் என்றோ, அல்லது உறவினர்கள் இல்லத்திலே தங்கியிருந்தாள் என்றோ சொல்லப்படவில்லை. தேவாலயத்திலே இருந்தாள். தேவாலயத்தைவிட்டு அவள் நீங்கவேயில்லை. அதுமாத்திரமல்ல; இரவும் பகலும் உபவாசித்தாள். அன்னாளுடைய வாழ்க்கை யிலே அவளுக்கு ஆகாரமே உபவாசம்தான். உபவாசித்து அவள் தூங்கவில்லை. வேதம் சொல்லுகிறது, அவள் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே பாருங்கள், உபவாசிக்கிறார்கள்; ஆனால் ஜெபிக்கிறதில்லை. உபவாசிக்கிறார்கள்; ஆராதிப்பதில்லை. உபவாசிப்பார்கள்; ஆனால் தேவனையும், அவருடைய சமுகத்தையும் தேடுவதில்லை. ஆனால், அன்னாள் இரவும் பகலும் உபவாசித்தாள், ஆராதனை செய்தாள். இயேசுவின் தாயும் தகப்பனும் இயேசுவை ஆலயத்துக்கு கொண்டுவந்திருந்த, அந்த சமயத்திலே “அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்” (லூக்.2:38). அப்படியானால், ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து, அவர் மூலமாய் வரக்கூடிய மீட்பைக் குறித்து எல்லாருக்கும் அவள் பேசினாள். எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவைக்குறித்து பேசினாள்.

அருமையான சகோதரனே, சகோதரியே நமது வாழ்க்கையைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாருங்கள், ஆண்டவரை அறிவிப்பதற்கு ஒரு சிமியோனும் தேவை. ஆண்டவரைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு அன்னாளும் தேவை. ஒரு சிமியோன் மாத்திரம் வேதத்திலே எழுதப்பட்டு ஆண்டவரால் பயன்படுத்தப்பட்டிருப்பாரானால், ஒருவேளை ஆண்களைத்தான் தேவன் பயன்படுத்தியிருக்கிறார் என்று பெண்கள் எண்ணிவிடுவர். ஒருவேளை அன்னாளை மாத்திரம் பயன்படுத்திவிட்டு சிமியோன் காணப்படாமல் இருப்பாரானால் பெண்கள்தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்., ஆண்கள் அல்ல என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஆண்டவர், ஆணையும் பயன்படுத்தினார், பெண்ணையும் பயன்படுத்தினார். இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்துவந்த ஒரு விதவைப் பெண்ணையும் ஆண்டவர் பயன்படுத்தினார். இந்த இரண்டு பேரும் தேவ சமுகத்தில் காத்திருந்தார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவைகள் அப்படியே நிறைவேறியது. அந்த இரண்டு பேருடைய ஒரேயொரு நடு மைய நோக்கம் என்ன தெரியுமா? ஆண்டவரைக் குறித்து அறிவித்தார்கள், மகிமைப்படுத்தினார்கள்.

அருமையானவர்களே, என்னுடையதும் உங்களுடையதுமான பக்தி, ஜெபம், உபவாசம் ஆராதனை இவை எல்லாவற்றினுடைய நடு மையம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? நம்மை அல்ல, இயேசுவை அறிவிப்பதாக இருக்க வேண்டும். நம்மை அல்ல, இயேசுவையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.

ஒருநாளிலே ஒரு விளம்பரத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த விளம்பரத்திலே சுவரொட்டியிலே இப்படிப் போடப்பட்டிருந்தது: “இயேசுவின் மடியிலே படுத்திருந்து அவர் வாயினாலே முத்தத்தை வாங்கினவர் பேசுகிறார்” என்று.

இயேசு முத்தம் கொடுக்கலாம், அவர் மடியிலே படுக்கலாம், அதெல்லாம் நான் விவரித்துச்சொல்ல விரும்பவில்லை. ஆனால், அந்த செய்தியாளரோ அந்த நண்பரோ ஆண்டவரை மகிமைப்படுத்தவில்லை. தான் எப்படிப்பட்டவர், தான் எவ்வளவு முக்கியமானவர், தான் மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவு வேறுபட்டவர் என்பதை விளம்பரப்படுத்துவதாக இருந்தது. மற்றவர்களுக்கெல்லாம் ஆண்டவருடைய மடியிலே படுக்கமுடியாத ஒரு வாய்ப்பு; ஆனால் எனக்குக் கிடைத்தது. அவருடைய வாயினாலே முத்தத்தை வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி விளம்பரம் பண்ணியே அவர் ஒரு பெருங்கூட்டத்தை அவர் கூட்டிக் கொண்டிருக்கிறார். அருமையானவர்களே, இது மிகவும் விசனப்படுகிற நிலையாகும்.

ஆனால், நான் சிமியோனைக் குறித்து, அன்னாளைக் குறித்துப் பார்த்தபோது என் கண்களெல்லாம் குளமானது, என் இருதயம் உடைந்தது, அறைகூவல் எனக்கு நேராக விடப்பட்டது. என் தவறுகள் எனக்குச் சுட்டிக் காண்பிக்கப்பட்டது. என்னுடைய தடுமாற்றங்கள் எனக்கு அறிவிக்கப்பட்டது. உடனே ஆண்டவருடைய சமுகத்திலே இந்த இரண்டு பேருடைய மாதிரியை வைத்தே என்னை, என் தவறுகளை மறுபடியும் சரிபண்ண ஆரம்பித்தேன். ஆண்டவரே, என் வாழ்க்கையிலே இனி என்னைக்குறித்தும், என் தாலந்துகளைக் குறித்தும் அல்ல, என் பக்தியைக் குறித்து, என் அனுபவங்களைக் குறித்து அல்ல, என் வரங்களைக் குறித்து அல்ல, என் ஊழியத்திலே வந்த விளைவுகளைக் குறித்து அல்ல, எனக்கு வந்த பேர் புகழை அல்ல, இத்தனை நாடுகளுக்கு நான் சென்றேன் என்ற எண்ணிக்கையைக் குறித்து அல்ல; ஆண்டவரே, நான் உம்மைக் குறித்தே சொல்வேன் என்று அன்றைக்கு அர்ப்பணித்து நான் ஜெபித்தேன். அதற்கு என்னைத் தூண்டினவர்கள் இந்த இரண்டுபேர் ஆவார்கள்.

அதேபோல உங்கள் வாழ்விலே ஆண்டவரை விளம்பரப்படுத்தாதபடி, மகிமைப்படுத்தாதபடி, வாழ்ந்து கொண்டிருப்பீர்களானால் மனந்திரும்புவோம்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்கள் உங்கள் யாவருக்கும் சந்தோஷம் நிறைந்ததாய் அமைய வாழ்த்துகிறோம்!

சத்தியவசனம்