நட்சத்திரம்!

பேராசிரியர் எடிசன்
(நவம்பர்-டிசம்பர் 2014)

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்தியவசனம் நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த கிறிஸ்துமஸ் காலங்களிலே நாம் இயேசுவின் பிறப்பைக் குறித்தும், அவருடைய பிறப்போடு ஒட்டிய பல நாமங்களைக் குறித்தும் பேசுவது வழக்கம். கிறிஸ்துமஸ் காலங்களில் அதிகமாக பேசப்படுகிற அல்லது கடைகளில் காணப்படுகிற ஒன்று என்னவென்றால் “நட்சத்திரம்”. இயேசு கிறிஸ்துவை “நட்சத்திரம்” என்றும் அழைத்திருக்கிறார்கள்.

“அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்”. (எண்.24:17).

பிலேயாம் பாலாக்கிடத்திலே பின்னால் வருகிற ஒரு காரியத்தை நான் உமக்குச் சொல்லுவேன் என்று சொல்லி, “அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (வச.17) என்றான்.

‘யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்’ என்று இயேசுகிறிஸ்துவின் பிறப்பை குறித்து அவன் இங்கே குறிப்பிடுகிறான். அவர் யூதா கோத்திரத்திலே வருவார், யூதா கோத்திரத்து சிங்கமாக அவர் பிறப்பார் என்பதைத்தான் ‘யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்’ என்று கூறினான்.

இன்னொரு வசனத்தையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். 2பேதுரு 1:19ஆம் வசனம், பிலேயாமின் தீர்க்கதரிசனத்திற்கு ஒரு தொடராக வருகிற ஒரு வசனம்: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்”. இவ்வசனத்தில் பேதுரு இயேசு கிறிஸ்துவை விடிவெள்ளி என்று அழைக்கிறார். வெளி.22:16ஆம் வசனத்திலும் இயேசு கிறிஸ்துவை விடிவெள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது: “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்”. இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து தன்னை “விடிவெள்ளி நட்சத்திரம்” என்றார். ஏன் இயேசுவை “நட்சத்திரத்தோடு ஒப்பிட்டார்கள் என்று நாம் பார்ப்போமென்றால் ஒரு மூன்று காரியங்களை நாம் எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.

1. விடிவெள்ளி நட்சத்திரம்
முதலாவதாக, அந்தக் காலத்திலே இயேசு பிறப்பதற்கு முன்னதாக நானூறு வருஷங்கள் ஒரு இருண்ட காலமாக இருந்தது. அது தேவனுடைய ஆலோசனைகளும் வழிநடத்துதலும் இஸ்ரவேலருக்குக் கிடைக்காத ஒரு காலம். அந்த இருண்ட காலத்திலே ஜனங்கள் நம்பிக்கையற்றவர்களாய் வாழ்ந்து வந்தனர். மக்கள் மேசியா வருவார், எப்பொழுது வருவாரோ என்ற எதிர்பார்ப்போடு இருந்தனர். தேவன் தமது அன்பை வெளிகாட்டும்படியாக இயேசு கிறிஸ்து பாலகனாக பூமியிலே பிறந்தார். ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஒரு திசையையும் குறிப்பதினால் அவரை நட்சத்திரம் என்று சொல்லுகிறோம். துருவ நட்சத்திரம் என்ற ஒன்றை நாம் பார்ப்போமென்றால் அது வடதிசை என்று அறிந்துகொள்வோம். அந்தவிதமாகவே இயேசுவை ஒருவன் கவனித்தால் பிதாவானவர் எப்படிப்பட்டவர் என்பது அவனுக்குத் தெரிந்து விடும். ஆகையால் அவர் அந்த இருளிலே இருக்கிறவர்களுக்கு ஒரு நட்சத்திரமாக, தேவனை வெளிப்படுத்திக் காண்பிக்கிறவராக வந்தபடியால் அவரை “நட்சத்திரம்” என்று சொல்லுகிறார். அதேவிதமாக, தேவனற்றவர்களாய் இருந்தவர்களுக்கு தேவனுடைய அன்பைக் கூறி அவருடைய பரம ராஜ்ஜியத்திற்குப் போகும் வழியையும் காண்பிக்கும்படியாக வந்தபடியால், அவர் விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறார்.

2. நம்பிக்கையின் நட்சத்திரம்
இரண்டாவதாக, ஏசாயா 9:1-3 வசனங் களில், “ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரை யருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” என்று இயேசுவைக் குறித்து முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால், அவர் கலிலேயாவிலேதான் தன் ஊழியத்தைச் செய்தார். யோர்தான் நதிக்கரையிலே இருந்தார். புறஜாதியாரின் கலிலேயாவிலே அவர் இருந்தார். அங்கே தேவனுடைய அன்பையும், அவருடைய பரிசுத்தத்தையும் ஜனங்களுக்குக் காண்பித்தார். அவருடைய வல்லமையை விளங்கப்பண்ணினார். காற்றை அடக்கமுடியும், கடலை அடக்க முடியும், வியாதியை நீக்கமுடியும், அசுத்த ஆவிகள்மேல் உள்ள அதிகாரத்தைக் காட்ட முடியும் என்று இத்தனையையும் சொல்லுவதற்காக அந்த இருண்ட தேசத்திலே அவர் ஒளியாக வந்தார். நாம் என்ன செய்வோம் என்று நம்பிக்கை இல்லாமல் இருந்த அந்த ஜனங்களுக்கு ஒரு “நம்பிக்கையின் நட்சத்திரமாக” தேவன் வந்தார். இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.

ஒரு இருண்ட காட்டிற்குள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று வழி தெரியாமல் திணறும்பொழுது, தூரத்திலே ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தால் உங்கள் உள்ளம் எவ்வளவாக சந்தோஷப்படும். அங்கே ஒரு இடம் இருக்கிறது, நான் போனால் எனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும், எனக்கு ஒரு ஆதரவு இருக்கும் என்று அந்த வெளிச்சத்தை நோக்கி நகருவீர்கள் அல்லவா! இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்தபொழுது அநேகர் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அவருடைய போதனைகளை ஆசையாய் கேட்டார்கள். அவரிடத்தில் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவர்களாய் அவர்கள் மாறினார்கள். பரிசேயரும் வேதபாரகரும் ஒருவரையொருவர் பார்த்து நீங்கள் செய்கிறதும் வீணென்று அறியீர்களா? உலகமே அவன் பின்னால் சென்று போயிற்று என்றனர். ஏனென்றால் அத்தனை பெரிய வெளிச்சமாக அவர் அந்த ஜனங்களுக்குக் காணப்பட்டார்! அவர்கள் மனதிலே இருந்த இருளை அவரது வெளிச்சம் நீக்கினது. ஆவிக்குரிய குருட்டாட்டத்தினின்று தேவனைப் பற்றும் அறிவிற்குள்ளாய் நடத்தி, நித்திய ராஜ்ஜியத்திற்குப் போகும் வழியை அவர்களுக்கு அவர் காட்டினபடியால் நம்பிக்கையின் நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார்.

3. வழிகாட்டும் நட்சத்திரம்
மூன்றாவது, இயேசுவை “நட்சத்திரம்” என்று சொன்னதற்கான காரணம் என்னவென்றால், அவர் வழிகாட்டுகிறவராக இருந்தார். “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்” (யோவான் 8:12). ஆண்டவர் நான் ஒளியாய் இருக்கிறேன், என்னைப் பார்த்தவர்கள் ஜீவ ஒளியை அடைந்திருப்பார்கள் என்று சொல்லவில்லை. அந்த வசனத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். “என்னைப் பின்பற்றுகிறவன்” இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான். பரலோகத்திற்குப் போவதற்கு ஒரு புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை ஜனங்களுக்கு காண்பிப்பதற்காக இயேசுகிறிஸ்து நட்சத்திரமாக ஒளியாக இந்த பூமிக்கு வந்தார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றார். அவர்தான் வழி!

ஒருமுறை ஒரு மனிதன் ஒரு காட்டிலே சிக்கிக்கொண்டான். வெளிச்சம் இருந்தது, ஆனால் பல திசைகளில் ஒத்தையடிப் பாதைகள் அநேகம் இருந்தது. இவனுக்கு தான் போக வேண்டிய இடத்திற்கு எது சரியான பாதை என்று தெரியவில்லை. இவன் திகைத்துநின்ற நேரத்திலே ஒரு மனிதர் வந்து, “என்னையா திகைத்து நிற்கிறீர்கள்?” என்று கேட்டார். நான் இந்த இடத்திற்குப் போகவேண்டும், எனக்கு வழி சொல்லுங்கள் என்றான். அப்பொழுது அந்த மனிதன் சொன்னான், “ஐயா, நான் சொன்னால் நீங்கள் அதன்படி நடந்துவருவது மிகவும் கடினம். நானே உங்களுக்கு வழிகாட்டியாக வருகிறேன், என்னைப் பின்பற்றி வாருங்கள்” என்று சொல்லி அந்த மனிதன் போகவேண்டிய இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றான்.

இயேசுகிறிஸ்துவும் இதையே நமக்கு செய்தார். எப்படி வாழவேண்டும் என்பதை அவர் தெளிவாக நமக்குக் காண்பித்தார். அவர் அதைச் சொல்லவும் செய்தார். “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”. (யோவான் 13:15) என்றார். அவர் வெறும் தத்துவங்களைப் போதிக்க வரவில்லை. நித்தியத்திற்கான வழியைக் காட்டுவதற்காக வந்தார். நமக்கு மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அதனால்தான் அவரை, “வழிகாட்டும் நட்சத்திரம்” (Guiding Star) என்று சொல்லுகிறோம். அதனால்தான் இயேசுவும் சொன்னார், “என்னைப் பின்பற்றுகிறவன்” என்று. பேதுரு தன் நிருபத்திலும் சொல்லுகிற காரியம் என்னவென்றால், “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார். அவர் பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை (1 பேதுரு 2:21)”.

இதை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, இயேசுகிறிஸ்து ஒரு நட்சத்திரமாக பூமிக்கு வந்தார். நீங்கள் அந்த நட்சத்திரத்திலிருந்து எதைக் கற்றுக்கொண்டீர்கள்? தேவனைப்பற்றிய அறிவு உங்களுக்கு உண்டாயிருக்கிறதா? தேவனை அறிந்தால் அவரை நேசிப்போம்.

அவரை நேசித்தால் அவரோடே கூட நாம் நடப்போம். “We will have a closer walk with Jesus”. அவர் ஒரு நட்சத்திரமாய் இருந்தால், அவர் தேவனை காண்பிப்பதை நீங்கள் விளங்கிக்கொண்டால் தேவனை நேசித்து தேவனோடு சஞ்சரிப்போம்.

இரண்டாவதாக, அவர் “நம்பிக்கையின் நட்சத்திரம்”. எனக்கு நித்தியத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையைத் தந்தார். ஏதேனிலிருந்து என்னைத் துரத்தி விட்டார், ஆனால் என்னைப் பரலோகத்தில் சேர்க்க அவரே வந்து வழியைக் காண்பித்தார்.

ஆகையால், எனக்கு ஒரு நம்பிக்கை, நான் ஒருநாள் பரலோகத்திற்குப் போவேன். அதற்கான வழியைக் காட்டும் விடிவெள்ளி நட்சத்திரமாக இயேசு வந்தார். அவரைப் பின்பற்றினால் நான் நிச்சயம் போவேன். அவர் வாழ்ந்து காட்டின வழியில் நானும் வாழ வேண்டும்.

சகோதரனே, இன்றைக்கும் நீங்கள் இந்த இயேசுவை ஒரு நட்சத்திரமாக அறிந்து அவர் என்னென்ன காரியங்கள் செய்தாரோ, அதையெல்லாம் நீங்கள் அப்படியே கடைப்பிடித்து, அவரைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கை ஒளி உள்ளதாக இருக்கும், வெளிச்சமாக இருக்கும், பேரொளியை அடைவீர்கள்.

சத்தியவசனம்