காபிரியேல்

Dr.தியோடர் வில்லியம்ஸ்
(நவம்பர்-டிசம்பர் 2014)

இரட்சகருடைய பிறப்பைப் பற்றி நாம் திருமறையிலே வாசிக்கும்பொழுது அந்த பிறப்பில் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல, தேவதூதர்களைப் பற்றியும் வாசிக்கிறோம். மத்தேயு எழுதின நற்செய்தி நூலிலும், லூக்கா எழுதின நற்செய்தி நூலிலும் அநேக முறை தேவதூதர்கள் குறிக்கப்படுகிறார்கள். லூக்காவிலே அதிகமாக இந்த தேவதூதர்களைப் பற்றி வாசிக்கிறோம். முதல் அதிகாரத்திலும் இரண்டாவது அதிகாரத்திலும் தூதர்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவதூதர்களைப் பற்றி திருமறை என்ன கூறுகிறது? எபிரெயருக்கு எழுதின நிருபம் முதல் அதிகாரத்தில் சில சத்தியங்களைப் பார்க்கிறோம்.

எபிரெயர் 1:7 “தேவ தூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது”. தேவதூதர்கள் காற்றைப்போலவும், அக்கினி ஜுவாலையைப்போலவும் மகிமையுள்ளவர்களாகவும் பிரகாசமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கடவுளுக்கு ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. அதே அதிகாரம் 14ஆவது வசனத்தில் “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ் செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று பார்க்கிறோம். தேவ தூதர்கள் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு, இரட்சிப்பைச் சுதந்தரிக்கும் விசுவாசிகளுக்கு பணிவிடை செய்யும் ஆவிகளாயிருக்கிறார்கள் என்று இந்த வசனத்திலிருந்து அறிந்து கொள்ளுகிறோம். மீட்பின் மகிமையை அனுபவித்தவர்கள் மனிதர்தான். தேவதூதர்கள் அந்த இரட்சிப்பைக் காண்பதற்கு ஆவலாயிருந்தார்கள்.

ஆனால், அந்த இரட்சிப்பை அவர்கள் அனு பவிக்க முடியாது, ஏன்? அவர்கள் பாவத்தில் விழவில்லை. அவர்களுக்காக அவர்களை இரட்சிப்பதற்காக இரட்சகர் வரவில்லை. பாவத்தில் விழுந்த தேவதூதர்கள் முரட்டாட்டம் பண்ணினவர்கள். அவர்கள் தண்டனைக்காக ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று இரட்சிப்பின் திட்டத்தை தேவன் ஏற்படுத்தவில்லை. ஆனால், மனிதருக்கோ மீட்பின் திட்டத்தை ஏற்படுத்தினார். இப்படி மீட்கப்படும் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக தேவதூதர்கள் இருக்கிறார்கள் என்று நாம் திருமறையில் பார்க்கிறோம். இந்த தேவ தூதர்களை நாம் வணங்கக்கூடாது என்றும் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து அறிந்து கொள்ளுகிறோம். தூதர்களின் பெயர்கள் சாதாரணமாக திருமறையிலே கொடுக்கப்படவில்லை. ஆனால், இரண்டு தூதர்களின் பெயர் மட்டும் திருமறையில் குறிக்கப்படுகிறது. முதலாவது, தானியேல் நூலிலே 10ஆவது அதிகாரத்திலே ஒரு தூதனைப் பற்றி பார்க்கிறோம். “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்” (தானி.10:13) என்று வாசிக்கிறோம். அதே அதிகாரத்தில் மறுபடியும் இந்த மிகாவேலைக் குறித்து நாம் பார்க்கிறோம். இந்த மிகாவேலைக் குறித்து தானி. 10:20,21 ஆவது வசனத்தில் “நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம் பண்ணத் திரும்பிப் போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடே கூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை” என்று வாசிக்கிறோம். அங்கே மிகாவேல் என்கிற தூதனைக் குறித்து நாம் பார்க்கிறோம்.

லூக்கா முதல் அதிகாரத்திலே காபிரியேல் என்கிற தூதனைப் பற்றி நாம் பார்க்கிறோம். இந்த இரண்டுதூதர்களின் பெயர்மட்டும் நமக்குத் திருமறையிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. காபிரியேலைக் குறித்து என்ன பார்க்கிறோம்? லூக்கா 1:11ஆவது வசனம் “அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் (சகரியாவுக்கு) தரிசனமானான்” என்று எழுதியிருக்கிறது. பிற்பாடு 19ஆவது வசனத்தில் “தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்” என்று கூறுகிறார். அதே காபிரியேல் 26, 27ஆவது வசனத்தில் மரியாளுக்கு தரிசனமாகிறார்; “ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்” என்று வாசிக்கிறோம். இப்படி இந்த தேவதூதனின் பெயர் “காபிரியேல்” என்று முதல் அதிகாரத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. 2ஆவது அதிகாரத்தில் 10ஆவது வசனத்தில் “தேவதூதன்” என்று மட்டும் அவன் குறிக்கப்படுகிறான். 9ஆவது வசனத்தில் “கர்த்தருடைய தூதன்” என்று குறிக்கப்படுகிறான். அவனது பெயர் அங்கு கூறப்படவில்லை. ஒரு வேளை அதுவும் காபிரியேல் தூதனாகவே இருந்திருக்கலாம்.

“மிகாவேல்” என்கிற பெயருக்குப் பொருள் என்ன? கடவுளுக்குச் சமமானவர் யார்? ஒப்பற்ற கடவுளின் பிரதிநிதியாக மிகாவேல் வந்தான் என்று இந்தப் பெயரிலிருந்து தெளிவாகிறது. “காபிரியேல்” என்கிற பெயரின் பொருள் “தெய்வ மனிதன்” என்பது. கடவுளுக்கு அர்ப்பணம் செய்தவன், அவருடைய திட்டத்திற்கு முழுவதுமாகத் தன்னை விட்டுக் கொடுத்தவன் என்பது பொருளாகிறது. காபிரியேல் தூதனைப்பற்றி சில விவரங்களை நாம் கவனிப்போம். ஒரு தேவ ஊழியன், கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுகிறவன் எவ்விதமாக இருக்கவேண்டும் என்பது இவனுடைய அனுபவத்திலிருந்து நமக்குத் தெளிவாகிறது.

காபிரியேல் தூதனைப் பற்றி லூக்கா 1:19ஆவது வசனத்தில் சில விவரங்களை நாம் வாசிக்கிறோம்: “தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்” என்று கூறுகிறான். அவனுடைய செய்தியைக் கேட்டு சகரியா சந்தேகப்படுகிறான். அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறான். “அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான்” (லூக்.1:18). அவன் தன்னுடைய சூழ்நிலையை நோக்கிப் பார்த்து விட்டு, தனக்கு மகன் பிறப்பான் என்கிற செய்தியை ஏற்றுக்கொள்ளுவதற்குத் தயங்கினான். இதற்கு அடையாளம் என்ன? எப்படி நான் இதை நம்பமுடியும் என்று கேட்கிறான்? அதற்குப் பிரதியுத்தரமாக காபிரியேல், தன்னை அறிமுகப்படுத்துகிறான். தனது பெயர் என்னவென்றும், தனது நிலை மற்றும் பதவி என்ன வென்றும் கூறுகிறான். தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் நான் என்று தன்னை அறிமுகப்படுத்துகிறான். அதாவது, கடவுளுக்கு அர்ப்பணம் செய்தவன். முழுவதுமாக அவருடைய சித்தத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன் என்று தன்னை அறிமுகப்படுத்துகிறான். பிறகு தேவ சந்நிதானத்தில் நிற்கிறவன் என்று கூறுகிறான். அவனுடைய இருப்பிடம் தேவனுடைய சமுகம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

என் அருமையான சகோதரனே, சகோதரியே நாம் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமானால் முழுவதும் “தெய்வ மனிதன்” என்று அழைக்கப்படும் நிலையிலே இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை முழுவதுமாய் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அவருக்குமட்டும் சொந்தமானது என்கிற நிலையில் நாம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவருடைய சமுகத்திலே ஜீவிக்கிறவர்களாய் நாம் இருக்க வேண்டும். தேவ சமுகம் நம்முடைய வாழ்க்கையைச் சூழ இருக்கவேண்டும். அப்பொழுது மாத்திரமே, அவருடைய ஊழியக்காரர்கள் என்ற தகுதிபெற்றவர்களாக இருக்க முடியும். இன்னும் அவர் தன்னைக் குறித்து என்ன கூறுகிறார்? ‘உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்’ என்று கூறுகிறார். “தேவனால் அனுப்பப்பட்டவன்”. தூதர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய, அவருடைய கட்டளையை நிறைவேற்ற எப்பொழுதும் அவர் சமுகத்தில் காத்திருக்கிறவர்கள்.

எவ்வளவு அருமையான ஒரு கருத்து பாருங்கள்! கர்த்தருடைய சமுகத்திலே தரித்திருந்து, அவருடைய வார்த்தைக்குக் காத்திருந்து, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்தான் ஊழியக்காரர்கள். “நற்செய்தி” என்கிற வார்த்தை உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பற்றிய நற்செய்திக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். மனிதர் மீட்கப்பட்டவர்கள்தான்; நற்செய்தியை அறிவிப்பதற்காக அழைப்பு பெற்றவர்கள். ஆனால் இங்கே காபிரியேலும் நற்செய்தியை அறிவிப்பதற்காக அனுப்பப்படுகிறான். இரட்சகரின் பிறப்பைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் சிலாக்கியம் காபிரியேலுக்குக் கிடைத்தது. இவ்விதமாக கடவுளின் சமுகத்திலிருந்து அவருடைய வார்த்தைக்குக் காத்திருந்து, அவரால் அனுப்பப்படும் சிலாக்கியத்தைக் காபிரியேல் பெற்றிருந்தார்.

லூக்கா 1:26,27,28ஆவது வசனங்களை எடுத்துப்பார்ப்போம், “ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்”.

காபிரியேல் தூதன் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக அவர் சமுகத்தில் காத்திருந்தவன். முழுவதுமாக தன்னை அவருக்கு அர்ப்பணித்து அவருக்குக் கீழ்ப்படியும் நிலையில் இருந்தவன். ஆகையினாலே, தேவாலயத்திற்கு அனுப்பப்படுகிறான். நாசரேத் ஊருக்கு அனுப்பப்படுகிறான். எவ்வளவு பெருத்த வித்தியாசம் பாருங்கள். எருசலேம் நகரம் பரிசுத்த நகரம் என்று கருதப்பட்டது. அந்த நகரத்திலும் விசேஷமான ஒரு இடம் தேவாலயம். அது தேவமக்களுக்கு விசேஷமான ஒரு இடமாக இருந்தது. அந்த இடத்திலே தூபம் காட்டும் இடத்திலே சகரியாவுக்கு தூதன் தரிசனமாகிறான். ஆனால், நாசரேத் ஊரோ அசுத்தத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் பேர் பெற்ற ஒரு ஊராய் இருந்தது. பாவம் நிறைந்த ஒரு ஊராய் இருந்தது. அந்த ஊரிலுள்ள ஒரு சாதாரண கன்னிகைக்கு செய்தி கொடுக்கும்படியாக அனுப்பப்படுகிறான்.

தேவனின் திட்டத்திற்கு நாம் கீழ்ப்படியும்பொழுது, நம்மை ஒப்புக்கொடுத்திருக்கும் பொழுது எந்த இடமானாலும் சரி அந்த இடத்திற்கு அவருடைய நாமத்திலே செல்லுவதற்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருப்போம். தூய்மையுள்ள இடமானாலும் சரி, அசுத்தமுள்ள பாவம் நிறைந்த இடமானாலும் சரி, பட்டணமானாலும் சரி, கிராமமானாலும் சரி, தேவாலயத்திற்குள் இருக்கும் பரிசுத்த ஸ்தலமானாலும் சரி, சாதாரண ஒரு வீடானாலும் சரி எங்கேயும் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காகச் செல்லுவோம்.

என் அருமையான நண்பனே, தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதிலேதான் உன் பாதுகாப்பு உண்டு. உனது சூழ்நிலை அல்லது நீ செல்லுகிற இடம், நீ வாழுகிற இடம் முக்கியமல்ல. எந்த இடத்திலே அவருடைய திட்டத்தை நிறைவேற்றுகிறாயோ அதிலேதான் விசேஷம் அடங்கியிருக்கிறது. இதை காபிரியேல் நன்றாய் அறிந்திருந்தான். அதுமட்டுமல்ல, காபிரியேல் கடவுளுடைய திட்டத்தையும் அவருடைய உள்ளத்தையும் நன்றாய் அறிந்திருந்தான். அவர் என்ன செய்தியைச் சொல்லச் சொன்னாரோ, அதை அப்படியே தெளிவாகக் கூறுகிறான். இதுவும் தேவ ஊழியருக்கு இருக்கவேண்டிய ஒரு தன்மையாகும்.

தேவன் நம்மிடத்தில் என்ன சொல்லச் சொல்லுகிறாரோ, அதை நாம் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். வேத வசனத்தை நன்றாய் கற்றறிந்து, அவரது சித்தத்தை ஆழமாய் அறிந்தவர்கள்தான், அவருடைய தூதர்களாய் செய்தியாளர்களாய் இருக்க முடியும். கர்த்தடைய நாமத்திலே மக்களிடத்தில் நீ பேச வேண்டுமானால் அவருடைய உள்ளத்தையும் சித்தத்தையும் அறிந்தவனாய் இருக்க வேண்டும். அவருடைய வேத வசனத்தை நன்றாய்க் கற்று, அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் தெளிவான முறையிலே அவருக்கு ஊழியம் செய்யமுடியும்.

சத்தியவசனம்