ஆனால், ஏன் மேய்ப்பர்கள்?

Dr.வாரன் வியர்ஸ்பி
(நவம்பர்-டிசம்பர் 2014)

இயேசுவானவர் பிறந்தபொழுது இக்காலத்திய விளம்பரங்கள்போல ஒன்றும் இல்லை. அச்சம்பவம் பக்தியாக, அமைதியாக, தூய்மையாக, தாழ்மையாக இருந்தது. தேவனுடைய குமாரன் ஒரு மாட்டுத்தொழுவத்திற்கு இறங்கி வந்ததை சற்றே கற்பனை செய்துபாருங்கள்! படைப்பின் சிருஷ்டி கர்த்தா ஒரு சிறு கிராமத்திலே வசிப்பதை சிந்தித்துப் பாருங்கள்! ராஜாதி ராஜனை வரவேற்றவர்களை சிறிது கற்பனை செய்யுங்கள் – மேய்ப்பர்கள்! ஏன் மேய்ப்பர்கள்?

ஆண்டவரின் கிருபையின் அத்தாட்சி
அவரை மேய்ப்பர்கள் வரவேற்றதற்கு ஒரு காரணம் அது ஆண்டவரின் கிருபையின் அத்தாட்சியாகும். மேய்ப்பர்கள் அநேக யூதர்களால் ‘தள்ளுண்டவர்கள்’ (Out-Castes) என்று கருதப்பட்டார்கள், அவர்கள் செய்துவந்த வேலையினிமித்தம் அவர்கள் எப்பொழுதும் முறைமைகளின்படி (Ceremonially) தீட்டுப் பட்டவர்களாக இருந்தார்கள். அடிக்கடி வாரக் கணக்காய் வயல்வெளிகளிலே இருப்பதால் ஆலயத்தின் ஆராதனைகளில் பங்குபெற முடியாமல் இருந்தார்கள். ஆனபோதிலும், தேவன் இவர்களை முன்னணைக்கு அழைத்துச்செல்ல தூதர்களை அனுப்பினார். “எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்… பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1:26-29).

உலகத்தில் தோன்றிய வேளையிலிருந்து நம் ஆண்டவர் சிறுமைப்பட்டவர்களுடன் தன்னை ஒன்றாக்கிக் கொண்டார். அவர் மனித வர்க்கத்துடன் வசிப்பதற்கு தன்னையே தாழ்த்திக்கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களால் விலக்கப்பட்டவர்களுடன் வசிக்க தன்னைத் தாழ்த்தினார். இதுதான் தேவனுடைய கிருபையாகும். உண்மையாக நமது ஆண்டவர் தள்ளுண்டவர்களுடன் தன்னை அவ்வளவு அதிகமாக ஒன்றுபடுத்திக் கொண்டதால், அவருடைய விரோதிகள் அவரை, “ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதர்” என்று அழைத்தார்கள். இந்தக் குற்றஞ்சாட்டுதலை அவர் புகழுரையாக ஏற்றுக்கொண்டார். அதற்காக நாம் சந்தோஷப்படுகிறோம். ஏனென்றால் வழிதவறின பாவிகளைத் தேடவும், இரட்சிக்கவும், இயேசுவானவர் வராவிட்டால் நாம் யாவரும் என்ன ஆவோம்? “இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரிய முள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்” (லூக். 1:51-53) என்று மரியாள் பாடவில்லையா?

திருச்சபையானது அவரது மாதிரியைப் பின்பற்றுகிறதா என்று அறிய ஆசைப்படுகிறேன். சில ஊழியங்கள், முக்கியமாயிருப்பவர்களின் ஆதரவிற்காக அலையும்பொழுது பெத்லகேமின் தாழ்மையை மறந்து நவீன விளம்பரங்களின் ஆடம்பரத்தை விரும்புகின்றன என்று என் மனதிலே படுகிறது. மண்ணழுக்குப் படிந்த மேய்ப்பர்களின் ஒரு கூட்டத்துடன் சம்பந்தம் வைக்க சில ஊழிய ஸ்தாபனத்தார் விரும்பமாட்டார்கள். ஆனால், நம் ஆண்டவருடைய உலக ஊழியம் அவர்களுடன்தான் ஆரம்பமாயிற்று.

ஆலயத்தின் மந்தைகளை மேய்த்தார்கள்
நம் ஆண்டவர் மேய்ப்பர்களுடன் ஐக்கியம் வைத்ததற்கு நான் இன்னொரு காரணம் தரக்கூடும். “அவர்கள் ஆலயத்தைச் சேர்ந்த மந்தைகளை மேய்த்து வந்தார்கள்”. அவர் உலகத்தின் பாவங்களைத் தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி. ஆலயத்திலே வருடந்தோறும் அனுசரிக்க வேண்டிய பலிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் தேவைப்பட்டன. காலையிலே ஒன்றும், சாயங்காலத்திலே ஒன்றும், ஓய்வு நாளிலே அதிகமாக இரண்டும் பலிசெலுத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஏழு ஆண் ஆட்டுக்குட்டிகளும், ஒரு ஆட்டுக்கடாவும் பலிபீடத்திற்கு வேண்டியதிருந்தது. மற்றைய பண்டிகைகளுக்கும் விசேஷித்த தேவைகளிருந்தன. ஆகவே, இஸ்ரவேலின் மார்க்கத்திற்கு மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் கண்காணிப்பது முக்கியமாயிருந்தது.

ஆனால் மாட்டுக்கொட்டிலில், சிறு குழந்தையாய் படுத்திருந்த இயேசுவை அந்த மேய்ப்பர்கள் பார்த்தபொழுது, மிருக பலிகள் எல்லாவற்றுக்கும் மேலாக முற்றுப்புள்ளி வைக்கப்போகும் பரிசுத்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தார்கள். ஆண்டவர் இயேசு பிதாவிடம் உரைத்ததாவது:

“பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகன பலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்” (எபி. 10:5-7).

அநேக ஆட்டுக்குட்டிகளுக்குப் பதிலாக ஒரே ஆட்டுக்குட்டி! மனிதனுடைய ஆட்டுக் குட்டிக்குப் பதிலாக தேவ ஆட்டுக்குட்டி! சும்மா ஒரு சடங்காச்சாரத்தை நிறைவேற்றாமல் பாவத்தைத் தீர்க்கும் ஆட்டுக்குட்டி! ஒரு ஜனத்திற்கு மட்டுமல்லாமல் முழு உலகத்திற்காக மரிக்கும் ஆட்டுக்குட்டி! அந்த இரவிலே அந்த மேய்ப்பர்களுக்கு எவ்வளவு அதிசயமான காட்சியை தேவன் அளித்தார்! அதன் பின் வருஷங்களாய் இவர்கள் ஒவ்வொரு தடவையும் ஆட்டுக்குட்டி ஒன்றைத் தூக்கினபோது இயேசுவானவரை நினைவுகூர்ந்திருப்பார்கள்.

இயேசுவானவர் ஒரு மேய்ப்பர்
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இயேசுவானவர் ஒரு மேய்ப்பராக வந்தார். உண்மையிலே அவர் ஈடுபட்டிருந்தது தச்சுவேலை. ஆனால், அவர் நாசரேத்திலிருந்து தச்சுப்பட்டறையை விட்டுவிட்டுத் தன் ஊழியத்தைத் துவங்கினபோது, அவர் ஒரு மேய்ப்பனானார்.

வேதாகமத்திலே மேய்ப்பர்களாய் ஜீவித்தவர்களைத் தேடிப் பார்த்திருக்கிறீர்களா? ஆபேல் ஒரு மேய்ப்பனாய் இருந்தான்; முதல் இரத்த சாட்சியுமாயிருந்தான். “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11) என்று ஆண்டவர் இயேசு சொன்னார்.

ஆபிரகாம் தான் பிறந்த தேசத்தைவிட்டு புதிய பிரதேசத்திற்கு முன்னோடியாக வந்து ஒரு புதிய ஜாதியை நிலைப்படுத்த வந்த ஒரு மேய்ப்பன். தனது ஆடுகளை ஒரு பரலோக மந்தையாக கூட்டிச் சேர்ப்பதற்கு இயேசுவானவர் பரலோகத்தைவிட்டு உலகத்திற்கு வந்தார்.

ஈசாக்கு ஒரு மேய்ப்பன். அவன் மனப்பூர்வமாய் தன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து தன்னையே பலிபீடத்தில் வைத்தான். “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்” (யோவா.10:17) என இயேசு கூறினார்.

மோசேயும் தன் ஜனத்தால் தள்ளப்பட்டிருந்த மேய்ப்பனாய் இருந்தான். ஆனாலும் அவர்களை மீட்பதற்கு தேவனால் அனுப்பப்பட்டவன் அவனே. அவன் தள்ளப்பட்டபோது, இப்போது நம் ஆண்டவர் தன் மணவாட்டியை சேர்ப்பதுபோல், புறஜாதியிலிருந்து மனைவியைத் தெரிந்துகொண்டான்.

தன் விரோதிகளைத் தோற்கடித்து ராஜாவான தாவீதும் ஒரு மேய்ப்பனாய் இருந்தான். தாவீதின் மகத்தான குமாரன் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து, கடைசி விரோதியான மரணம் உட்பட எல்லா விரோதிகளையும் தோற்கடித்துவிட்டு இன்று மகிமையில் அரசாளுகிறார். ஒருநாள் அந்தத் தலைமை மேய்ப்பன் தரிசனமளித்து தன்னுடைய மந்தையை மகிமைக்குக் கொண்டு செல்வார்!

நம்பிக்கையுள்ள, தைரியமுள்ள சாட்சிகள்
மேய்ப்பர்கள் ஏன்? இதோ இன்னொரு காரணம்: ஆண்டவர் நம்பிக்கையுள்ள, தைரியமுள்ள சாட்சிகளை விரும்புகிறார். ஒரு நல்ல மேய்ப்பனாயிருப்பதற்கு அதிக பெலனும் தைரியமும் தேவை. ஏனென்றால் மேய்ப்பன் வெளியிலே வசித்து, மழை வெயில் குளிரிலும், காடுகளின் அபாயங்களின் மத்தியிலும் பாதுகாப்பில்லாமல் இருப்பார்கள். பசியால் அலையும் மிருகங்களிலிருந்து காக்க வேண்டும். வழிதவறிப்போன ஆடுகளைத் தப்புவிப்பதற்கு அபாயகரமான பாதையில் செல்ல வேண்டியதிருக்கும். மிகக் கடினமான வாழ்க்கையே! ஆனால், யாரும் நாட்டுப்புறத்து மேய்ப்பர்கள் தேவதூதர்களைக் காண்பதை எதிர்பார்க்க மாட்டார்கள். தேவதூதர்களைப் பார்த்ததாக ஒரு ஆசாரியன் அல்லது வேத பாரகன் சொல்லியிருந்தால், கேட்டவர்கள் தங்கள் தலைகளை ஆட்டிக்கொண்டு, “ஆம், அது அவர்களுடைய ஊழியத்தைச் சேர்ந்தது” என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மேய்ப்பர்கள் தேவதூதர்களைப் பற்றியும், இரட்சகரின் பிறப்பைப் பற்றியும் பேசத் துவங்கினால் மக்கள் கவனத்துடன் கூர்ந்து கேட்பார்கள்!

நான் உள்ளூர் ஆலயங்களில் பணி செய்யும் போது எனது சபையாரிடம் ஞாபகப்படுத்துவது என்னவென்றால், “போதகர் இரட்சிப்பைப் பற்றிப் பேசுவதற்கே இருப்பதால், சபையார் மக்களுக்கு சாட்சி சொல்வார்களானால், அது போதகருடைய சாட்சியைவிட அதிக கனமுள்ளதாயிருக்கும்” என்று. ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாதவர்களை நான் சந்திக்கப்போகும் பொழுது, அவர்கள் என்னை சம்பளத்திற்கு வைத்திருக்கும் விற்பனையாளர் (Paid Sales man) என்று நினைக்கிறார்கள் என்று நான் சொல்வதுண்டு. ஆனால் நீங்கள் இயேசுவானவருக்காக சாட்சி சொல்லும்போது, உங்களை விற்றதை வாங்கி திருப்தியடைந்தவர்கள் (satisfied customers) அதாவது, சாட்சியை ஏற்று மனம்மாறி சந்தோஷம் அடைந்தவர்கள் என்று உங்களைக் காண்பார்கள்.

“கண்டு, அந்தப்பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (லூக்.2:17,18). ஆரம்பத்திலிருந்தே தேவன் சாதாரண (Lay man) மனிதரின் சாட்சியைத்தான் சார்ந்திருந்தார். இயேசுவானவர் உலகத்திற்கு வந்தபோது அவரைப்பற்றிய சாட்சியை மேய்ப்பர்கள் கொடுத்தார்களேயொழிய, ஆசாரியரும், வேத பாரகரும் அல்ல. அந்தவிதமான சாட்சிகள்தான் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.

முழுநேர சாட்சி
இரட்சகரைப் பார்த்தபிறகு மேய்ப்பர்கள் தங்கள் வேலையை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தங்களுடைய மந்தைகளிடமே திரும்பினார்கள். அதே மனிதர்கள், புது ஜீவியத்துடன் அதே வேலை. ஆனால், புதிய நோக்கம். அன்று இரவிலிருந்தே தருணம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களிடம் பெத்லகேமில் பிறந்த இரட்சகரைப் பற்றிச் சொன்னார்கள். இவ்வித அனுபவம் இன்றைக்கு நேரிட்டிருக்குமானால், அவர்கள் அநேகமாய் அவர்கள் வேலையை விட்டுவிட்டு ஒரு புதிய ஸ்தாபனத்தை நிறுவி தங்கள் கதையை வியாபாரச் சரக்காக ஆக்கியிருப்பார்கள். அவ்விதம் செய்யாமல் தேவனுக்கு வல்லமையான சாட்சியளித்த தாழ்மையைத் தரித்த சாதாரண மனிதர்களாகவே இருந்தார்கள்.

ஒரு மனிதனோ, ஒரு பெண்ணோ, படகை அல்லது கலப்பையை அல்லது வரி வசூலிக்கும் பணியை விட்டுவிட்டு முழுநேர ஊழியமாக (Full time Christian service) இயேசுவானவரைப் பின்பற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்தவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் நாம் வேலை செய்யும் இடத்திலேயே முழுகிறிஸ்தவ ஜீவியத்தில் (Full time Christian living) ஈடுபட்டிருக்கும் சகோதர, சகோதரிகளுக்காகவும் நன்றி செலுத்த வேண்டும். அவர்களுடைய ஊழியமும் இலேசானதல்ல. ஆனால் நிச்சயமாய் அதுவும் முக்கியமானதே.

இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில் அநாம தேயமான (anonymous) மேய்ப்பர்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறார்கள். தேவன் அவரது கிருபையில் தள்ளப்பட்டவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தன் பிள்ளைகளாக்குகிறார் என்பதை ஞாபகப்படுத்துகிறார். இயேசுவானவர் ஏன் பாவங்களுக்காக மரிக்க ஆட்டுக்குட்டியாய் வந்தாரென்றும், அவர் நாளுக்கு நாள் என்னை பராமரித்து வருகிறாரென்றும் அந்த மேய்ப்பர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள். தேவன், தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய தைரியமான, உண்மையான சாட்சிகளைத் தேடுகிறார் என்பதை மேய்ப்பர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள்.

தேவன் இந்த சிறுமைப்பட்ட பயிற்சி பெறாத மேய்ப்பர்களை உபயோகித்தார். நாமும் அவருக்கு இடங்கொடுத்தால் நம்மையும் உபயோகிக்கமுடியும்.

சத்தியவசனம்