சமாதானப் பிரபு

பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார்
(நவம்பர்-டிசம்பர் 2014)

அன்பான சத்தியவசன வாசகர்களே, கிறிஸ்து இயேசுவின் நாமத்திலே உங்களை நான் வாழ்த்துகிறேன்.

இயேசுவின் முதலாம் வருகைக்குத் தன்னை ஆயத்தப்படுத்தியிருந்த சிமியோன், அவன் தேவபக்தியுள்ளவன், அவன் நீதியுள்ளவன், அவன் பரிசுத்த ஆவியானாலே நிரப்பப்பட்டவன், அவன் மேசியாவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தான்.

சிமியோன் இயேசுபாலகனைக் கண்டு, அவரைத் தனது கைகளில் ஏந்தி, “.. உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்” (லூக்.2:29-32). இயேசு பாலகனைக் கையிலே ஏந்தினதே அந்த சிமியோனுக்கு அத்தனை சமாதானம் என்றால், அவரை நமது உள்ளங்களில் ஏந்தினவர்களாக இருக்கும் பொழுது, நமக்கு எத்தனை சமாதானம்!

இதைச் சொல்லும்பொழுது, இன்னொன்றுங்கூட என் சிந்தனைக்கு வருகிறது. அன்று மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கும்படியாகப் போகிறாள். அந்த எலிசபெத்து மரியாளைப் பார்த்து, ஒரு வார்த்தை சொல்லுகிறாள்: “என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்த பாக்கியம் என்று”; யோசித்துப் பாருங்கள்!

இயேசுவின் தாயாராகிய மரியாளைக் கண்டதே, அந்த எலிசபெத்துக்கு அத்தனை சந்தோஷமானால், அந்த இயேசுவையே தங்கள் வாழ்க்கையிலே காண்பதும், தரிசிப்பதும், அவரைக் கொண்டவர்களாக இருப்பதும் எத்தனை சந்தோஷம்! அதைப்போலவே, இங்கே சிமியோன் இயேசுவை கையிலே ஏந்தினதே அத்தனை சமாதானம் என்றால், இயேசுவை உள்ளத்திலே ஏந்தி, வாழ்க்கையிலே ஏந்தி, வாழ்கிறவர்களுக்கு எவ்வளவு பெரிய சமாதானம்!

அருமையானவர்களே! இன்றைக்கு உலகம் சமாதானத்தைத் தேடுகிறது. இந்த சமாதானத்திற்காக மக்கள் பற்பலவிதங்களிலே முயற்சி செய்கிறார்கள். இன்றைக்கு உலகத்தின் நிலவரத்தைப் பார்த்தால், தனிப்பட்ட வாழ்க்கையிலே மக்களுக்கு சமாதானமில்லை. அநேக மக்களுக்குக் குடும்பத்திலே சமாதானமில்லை. சிலருடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர்களுடைய தொழிலிலே, அவர்களுடைய பணியில், அவர்களுக்கு சமாதானமில்லை என்கிற நிலை வருகிறது. ஏன், உலகத்தின் நிலையை எடுத்துக்கொண்டாலும் கூட, ஆங்காங்கே சச்சரவு, போராட்டம், பகைகள், எதிர்ப்புகள், கொலை, கொள்ளை இப்படிப்பட்ட காரியங்களைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு உலகம் முழுவதிலுங்கூட மக்களுக்கு சமாதானம் இல்லை என்கிற நிலையிலேதான் உலகமும் சென்று கொண்டிருக்கிறது.

செய்தித்தாள்கள் அறிவிப்பதைப்பற்றி நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள். சரி, ஒரு நாளின் செய்தித்தாளை எடுத்து வாசியுங்கள்! எத்தனை நல்ல செய்திகளை நீங்கள் வாசிக்கமுடிகிறது? அதிகமாக வருவது எல்லாம் துர்ச்செய்திகள்தான்! பொதுவாக செய்தித்தாளிலே துர்ச்செய்தியைத்தான் பெரிய எழுத்துக்களிலே போட்டு பிரகடனப்படுத்துகிறார்களேயொழிய, நல்ல செய்திகள் இருக்குமேயானால், அதை ஏதோ ஒரு மூலையிலே போட்டுவிடுகிறார்கள். ஏனோ தெரியவில்லை! மக்களுக்கு நற்செய்தியைக் கேட்பதில் பிரியமில்லை போலும். துர்ச்செய்தியைத்தான் கேட்க ஓர் ஆவல் ஏற்பட்டுவிட்டதோ? என்னவோ? உண்மைதானே! ஒரு நாளிலே நாம் கேட்ட செய்திகளிலே, நல்ல செய்தி எத்தனை, துர்ச்செய்தி எத்தனை, என்று கணக்கிடுவோமேயானால், நாம் ஒரு நாளிலே கேட்கிற செய்திகள் அத்தனையிலும் துர்ச்செய்திதான் அதிகமாக இருக்கிறதேயொழிய நற்செய்தி அதிகமாக இருக்கிறதில்லை. ஆம், நாம் வாழும் உலகம் சமாதானமற்றுக் கிடக்கிறதால் துர்ச்செய்திகளைத்தான் நாம் அதிகமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

வேதத்தின் அடிப்படையிலே, இயேசுவான வரைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், “அவர் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” (ஏசா.9:6) என்பதாகும். அவர் சமாதானத்தை உலகத்திலே கொண்டு வந்தார். ஆம், அந்த சமாதானப் பிரபுவைக் கையிலே ஏந்தினது சிமியோனுக்கு அத்தனை சமாதானம்! நீங்கள் வேதத்தின் அடிப்படையிலே இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பின் துவக்கம் முதல் பார்த்தால், எல்லாம் சமாதானம் என்கிற நிலைமையிலேயே இருக்கிறது என்று பார்க்கலாம். அவர் பிறந்தபொழுது தூதர்கள், “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை, பூமியிலே சமாதானம்” எனப் பாடினார்கள்.

அத்தோடு முடிந்துவிடவில்லை. இயேசுவானவர் “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று பிரசங்கித்தார். அவர் தமது சீஷர்களைப் பிரசங்கிக்க அனுப்பினார். என்ன சொல்லி அனுப்புகிறார் தெரியுமா? நீங்கள் ஒரு வீட்டிற்குள் நுழையும்போது, “அந்த வீட்டுக்கு சமாதானம்” என்று சொல்லி வாழ்த்துங்கள். அது மட்டுமல்ல பிரியமானவர்களே, அவருடைய பாடுகளின்போது எதிரிகளாய் இருந்த இருவர் சமாதானமடைந்ததைப் பார்க்கிறோம். ஏரோதுக்கும், பிலாத்துவுக்கும் ஒரு பெரிய கசப்பு இருந்ததாம். ஆனால் இயேசுவின் பாடுகளை முன்னிட்டு, பிலாத்துவும் ஏரோதுவும் ஒரு சமாதானத்துக்குட்பட்டார்கள் என்பதை நாம் வேதத்தின் வாயிலாக அறிகிறோம். நெடுநாள் அவர்களுக்குள்ளே இருந்த அந்த சமாதானக் குறைவு, அந்த கசப்பு, அந்த விரோதம், எல்லாம் இயேசுவின் பாடுகளை முன்னிட்டு மாறிப்போனது. அங்கேயும் அவர் சமாதானப் பிரபுவாக, சமாதானக் காரணராக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உயிரோடே எழுந்த பிறகும்கூட, தம்முடைய சீஷர்களுக்கு என்ன சொன்னார்? தெரியுமா? “உங்களுக்கு சமாதானம்!” என்று சொன்னார். உண்மைதான்! இப்படிப்பட்டவரை கையிலே ஏந்தி, அந்த சிமியோன் சொல்கிறான்: “உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே, அதாவது மனநிறைவுடனே நீர் போகவிடுகிறீர்” என்பதாக அவன் கூறினான்.

இந்நாளிலும், இந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் சகோதரனே, சகோதரியே! உன் வாழ்க்கையிலே மனசமாதானம் இல்லையா? நீ என்ன நினைக்கிறாய்? வேறு எந்த வழியிலாவது, விதத்திலாவது நீ சமாதானத்தைக் கண்டடையலாம் என்று நினைக்கிறாயா? சமாதானம் அடைவதற்கு ஒரேயொரு வழி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரையல்லாமல் வேறு வழியில்லை. “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார். இந்த சமாதானத்தைக் குறித்து அருமையான பாடல் ஒன்று சாஸ்திரியார் அவர்கள் பாடியிருக்கிறார்கள்:

“சமாதானம் ஓதும் இயேசுகிறிஸ்து இவர் தாம் (3)
மெய்யாகவே மேசையாவுமே நம்மை
நாடினாரே கிருபை சூடினாரே” (2)

சமாதானப் பிரபு இயேசுகிறிஸ்து. அவரைப் பற்றிக்கொண்டால், அவரை ஏற்றுக்கொண்டால், இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே நிச்சயம் சமாதானம் உண்டு. இயேசுகிறிஸ்துவை புறக்கணித்துவிட்டு, நம்முடைய வாழ்க்கையிலே சமாதானத்தை நாம் கண்டடையவே முடியாது. சிமியோன் கர்த்தருடைய வருகைக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் காத்திருந்தவன்; சிமியோன் கிறிஸ்து இயேசுவைக் கையிலே ஏந்தி சமாதானத்தைக் கண்டடைந்தவன். நீயும் அவரை இரட்சகராக ஏற்று உலகம் கொடுக்கக்கூடாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளமாட்டாயா?

சத்தியவசனம்