தகுதிக்கு மீறிய ஆசை

சிறுவர் சோலை
(ஜனவரி-பிப்ரவரி 2015)

“எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு; ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்” (1கொரி.6:12).

பூக்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வண்ண வண்ண பூக்களைப் பார்க்கும்போது அவைகளையெல்லாம் அழகாய் சிருஷ்டித்த தேவனுடைய மகத்துவத்தை என்னவென்று சொல்ல! காட்டுப்புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவிக்கிறபடியால் நீங்களும் உடைக்காக கவலைப்பட வேண்டாம் என்று ஆண்டவராகிய இயேசுதாமே மத்தேயு 6 ஆம் அதிகாரத்தில் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார்.

ஒரு நாட்டிலே அந்த நாட்டின் ராஜா தினமும் ரோஜா மெத்தையில் படுத்து உறங்கி சொகுசான வாழ்க்கை வந்தார். அந்த ரோஜா மெத்தையை அலங்கரிக்கிற வேலையை ஒருவன் செய்து வந்தான். அவனுக்கு ஒரு ஆசை, நாம் எப்படியாவது இந்த மெத்தையில் படுத்து நித்திரை செய்யவேண்டும் என்று நினைத்தான். அப்படியே ஒருநாள் அந்த ரோஜா மெத்தையில் படுத்து உறங்கியும் விட்டான்.

அங்கே திடீரென வந்த ராஜா அவனைப் பார்த்துவிட்டார். உடனே காவலாளரை அழைத்து, அந்த வேலைக்காரனை சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டார். ஆனால் சவுக்கடி வாங்கிய அவன் வாய்விட்டு சிரித்தானாம். அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அந்த ராஜா, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டான். அதற்கு அந்த வேலைக்காரன் என்னுடைய தகுதிக்கு தகுந்தபடி வாழக் கற்றுக்கொள்ளாமல், ரோஜா மெத்தையில் ஒரே ஒருநாள் படுத்துவிட்டேன். நான் ஒருநாள் படுத்ததற்கே இவ்வளவு அடி கிடைத்தால் தினந்தோறும் இந்த மெத்தையில் படுக்கிற உங்களுக்கு எவ்வளவு அடி கிடைக்குமோ! அதை எண்ணிதான் சிரித்தேன் என்றானாம். அதைக் கேட்ட ராஜா அந்த வேலைக்காரனை தண்டிப்பதை நிறுத்திவிட்டார்.

பிரியமான தம்பி தங்கையரே! இந்த வேலைக்காரனைப்போல தகுதிக்கு மீறிய ஆசைகளுக்கு நாம் இடமளித்தால் தண்டனை நிச்சயம் உண்டு. அதேவேளையில், நம்மை சுற்றிலும் வாழ்கின்ற ஏழை மக்களுடைய ஆசைகளையும் எண்ணிப்பார்த்து முடிந்தளவு உதவிகளை அவர்களுக்கு செய்யவேண்டும்.

“தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்” என நீதிமொழிகள் 28:27ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஆம், சொகுசான வாழ்வினை நாம் வாழ்ந்துகொண்டு, ஏழைகளையும், வாழ்வில் கஷ்டப்பட்டவர்களையும், வறுமைக்குள் வாழுபவர்களையும் மறந்தால் வரும் தண்டனைக்குத் தப்பமுடியாது.

சத்தியவசனம்