சத்திய வசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஜெபத்தைக் கேட்கிற நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். “பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது” (யோபு.8:9) என்ற வாக்கைப்போல இவ்வருடத்தின் ஒன்பது மாதங்களும் வேகமாக ஒடி மறைந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் கர்த்தர் கொடுத்த பாதுகாப்பிற்காக வழிநடத்துதலுக்காக தேவனை ஸ்தோத்திரிப்போம். சத்திய வசனம் சஞ்சிகையிலுள்ள செய்திகள் வாயிலாக அநேகர் ஆசீர்வாதமடைந்து வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம்.

ஞாயிறு தோறும் நண்பகல் 12 மணியளவில் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சத்தியவசன நிகழ்ச்சிகள் இம்மாதத்திலிருந்து ‘புதிய யுகம்’ என்ற சேனலில் ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாகும். இந்த மாற்றத்தை தாங்கள் கவனித்து மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தும்படியாக அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை ஆதரவாளர்களாக இணைந்து தாங்கவும் ஜெபிக்கவும் வேண்டுகிறோம்.

இவ்வருடத்தில் விசுவாசப்பங்காளர் காணிக்கையைப் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளவும் நினைவூட்டுகிறோம். நீண்ட வருடங்களாக தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களுக்கு பத்திரிக்கை அனுப்பப்படுவது நிறுத்தப்படும்.

இவ்விதழில் ‘ஜெபவீரர் இயேசு’ என்ற தலைப்பில் சகோ.லெனின் மாதவன் அவர்கள் எழுதிய கட்டுரையையும், ‘ஜெபத்தின் திறவுகோல்கள்’ என்ற தலைப்பில் ரெவ.மைக் டி.லக்கானிலாவோ அவர்களது கட்டுரையும், யோபுவின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய இழப்புகளில் கர்த்தர்மேல் நம்பிக்கையோடிருப்பது எப்படி என்பதை விளக்கும்வண்ணம் ‘இழப்புகளில் நம்பிக்கை’ என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களும், சகோதரி சாந்திபொன்னு அவர்கள் ‘ஒரே வாழ்வு, ஒரே நோக்கு’ என்ற தலைப்பில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் நோக்கத்தைக் குறித்தும் எழுதியுள்ளார்கள். மேலும் சகோதரி சுசி கிறிஸ்டோபர் அவர்கள் எழுதிய பெண்கள் ஜெபிக்கையில் என்ற கட்டுரையும், டாக்டர் தியோடர் எச்.எப். அவர்களுடைய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர் செய்தியும், இடம்பெற்றுள்ளது.  இக்கட்டுரைகள் யாவும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்