திரு.R.லெனின் மாதவன், இலங்கை
(செப்டம்பர்-அக்டோபர் 2015)

இயேசுகிறிஸ்து ஜெபித்தார். நமக்கும் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். இவ்வுலகில் இயேசுவைப்போல் ஜெபித்தவர்கள் எவருமே இல்லை. அவரைப்போல ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தவர்களும் இவ்வுலகில் இல்லை. ஜெப வீரர்களின் ஜெபங்களும் அனுபவங்களும் அருமையானவைகளே. ஆனால், இயேசுவின் ஜெபமும் அனுபவமும் அதற்கும் மேலானவை. இயேசு ஜெபத்தின் தன்மையையும் மகிமையையும் அதின் அவசியத்தையும் நன்கறிந்திருந்தார். அவரது வாழ்வே ஜெபமாக இருந்தது. இயேசுகிறிஸ்து எப்போதும் ஜெபிப்பவராக இருந்தார்.

அற்புதங்கள் செய்யும்போது ஜெபித்தார்.  (யோவான் 11:41,42). துக்கத்தினால் நிறைந்திருக்கும்போதும் ஜெபித்தார் (லூக்.6:11,12). மற்றவர்கள் இகழும்போதும் ஜெபித்தார் (மாற்கு 15:32). அவர் அடிக்கப்படும்போதும் மரணத்தருவாயிலும் ஜெபித்தார். இரவெல்லாம் அதிகாலையிலும் ஜெபித்தார் (மாற்கு 1:35). பகல்வேளையில் ஜெபித்தார். மாலையிலும் அவர் ஜெபித்தார் (மாற்கு 15:34). பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார் (எபி.5:7).

ஜெபமே இயேசுவின் மூச்சாக இருந்தது. உண்மையில் அவர் ஒரு ஜெபவீரராக இருந்தார்.

இயேசுவின் வாழ்வு முழுவதும் ஜெபங்களால் நிறைந்திருந்தது. சில நேரங்களில் அவர் சுருக்கமாக ஜெபித்தார் (யோவா.12:28). சில வேளைகளில் அதிகமாக ஜெபித்தார் (யோவான் 17) என்பதை சுவிசேஷப் புத்தகங்களில் நாம் வாசிக்கலாம். எனினும், சுவிசேஷப் புத்தகங்களில் அவர் செய்த ஜெபங்களின் முழு விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. இயேசு தன் ஜெபநேரங்களில் பிதாவோடு அதிக இரகசியங்களைப் பேசியிருப்பார். தான் செய்யப்போகின்ற அற்புதங்களுக்குத் தேவையான வல்லமையையும் அபிஷேகத்தையும் ஜெபத்தின்மூலம் கேட்டார் (லூக்.3:21). இதினால்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் தன்னுடைய கிரியைகளைத் தெளிவான முறையில் வெளிப்படுத்தினார்.

அவர் சிறுவயதில் நாசரேத்தில் தாயாரோடும், சகோதரரோடும் இருந்து வேலை செய்து வந்த காலத்தில் எத்தனை ஜெபங்கள் செய்திருப்பார்? ஒருமுறை, “என் பிதாவுக்கடுத்த காரியங்களில் நான் இருக்கவேண்டியதில்லையா” என்று இயேசு கேட்டார் (லூக்.2:49). இது அவரது சிறு பிராய ஜீவியத்திற்கான ஆதாரமாய் உள்ளது. சிறுவயதிலேயே இயேசு தன் குடும்பத்திற்காகவும், தன் ஜனங்களுக்காகவும், தன் ஊழியப் பணிக்காகவும், இன்னும் பல காரியங்களுக்காகவும் ஜெபித்தார்.

இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் ஜெபத்தைப் பற்றி பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் ஜெபம் அவசியமில்லை என்னும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். தேவன் சகலவற்றையும் அறிந்திருக்கின்றார். அவரது திட்டத்தின்படிதான் எல்லாம் நடக்கும். நம் ஜெபத்தின்மூலம் தேவனுடைய திட்டத்தை மாற்ற முடியாது என்பது இவர்களது தர்க்கமாயுள்ளது. இவர்களது கருத்தின்படி நாம் தேவனிடம் எதுவும் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர் சகலமும் அறிந்தவர். நமது உள்ளத்தின் நிலைமையையும், நாம் கேட்பதற்கும் முன்பே நம் தேவையை அவர் அறிந்துள்ளார் என இவர்கள் கூறுகின்றனர். உண்மையில் இவர்கள் ஜெபத்தின் வல்லமையை அறியாதவர்கள். ஜெபத்தின் அனுபவங்களுக்குள் நுழையாதவர்கள். இவர்கள் தம் தேவைகளைக் கேட்பதுதான் ஜெபம் என்று எண்ணுகின்றனர். ஆனால், அதைத் தாரும், இதைத் தாரும் என்று கேட்பதுமட்டும் ஜெபம் அல்ல. நாம் தேவனோடு பேசுவதும் நம் உள்ளான இதயத்தின் உணர்வுகளை யும் எண்ணங்களையும் தேவனோடு பகிர்ந்து கொள்வதும்தான் உண்மையான ஜெபமாகும்.

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் முழுமையான தேவனாகவும் முழுமையான மனிதனாகவும் இருந்தார் (யோவா. 4:6,18). அவர் முழுமையான தேவனாக இருந்தமையால் அவர் ஜெபித்திருக்கத் தேவையில்லை. ஆனால், அவரோ தன்னை அனுப்பின பிதாவோடு ஒவ்வொரு நிமிடமும் தொடர்பு வைத்திருந்தார் (யோவான் 17:1,2). நாம் பள்ளிக்குப் போகும்போது நமக்குப் புத்தகங்கள் தேவை என்று நம் அப்பாவுக்குத் தெரியும். எனினும், நாம் அவரிடம் போய்க் கேட்டால் தான் அவர் நமக்குப் புத்தகங்கள் வாங்கித் தருவார். இதைப்போலத்தான், நம் ஆவிக்குரிய தகப்பனும், பலவந்தமாக எதையும் செய்யமாட்டார். நாம் ஜெபத்தில் கேட்கும்போது அவர் நம் தேவையைச் சந்திக்கிறவராக இருக்கின்றார்.

ஜெப வாழ்வானது அந்தரங்கமானது. நமது ஜெபங்கள் தேவனிடமே செல்கின்றன. இயேசு பல சந்தர்ப்பங்களில் அந்தரங்கத்தில் ஜெபித்தார் (லூக்.5:16). இயேசுவின் குடும்பத்தினரும் அவரது சீடர்களும் இதை அறிந்திருக்கவில்லை. “இயேசு அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய், அங்கே ஜெபம் பண்ணினார் (மாற்.1:35). இது எவருக்கும் தெரியாமல் அவர் செய்த ஜெபமாகும். கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்விதம் அந்தரங்கத்தில் ஜெபிக்கின்றவர்களாய் இருக்கின்றோமா?

பகலில் ஊழியம் செய்த இயேசு இரவில் ஜெபித்தார் (லூக்.5:17,6:12). தனிமையில் இரகசியமாக ஜெபிக்கும்போது நம் இதயம் பரவசமடைகிறது. உண்மையில் அந்தரங்க ஜெபத்தில்தான் ஜெபத்தின் சுவையையும் வல்லமையையும் அனுபவித்திடலாம். ஜெப வாழ்வானது அந்தரங்கமானது. அதின் இரகசியங்கள் அத்தகைய ஜெபத்தில் ஈடுபடுவதினாலேயே அறியப்பட்டுள்ளன. இயேசுகிறிஸ்து அந்தரங்க ஜெபத்தின் இரகசியங்களை அறிந்திருந்தார். நம் ஜெபவாழ்க்கை எப்படிப்பட்டதாயிருக்கிறது? இயேசுவைப்போல தனிமையில் நாம் ஜெபிக்கின்றோமா?

இயேசுவுக்கு வேலைகள் எவ்வளவு அதிகரித்ததோ அவ்வளவாய் அவர் ஜெபித்தார். திரளான ஜனங்கள் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களுக்காக ஜெபித்தார். வேதவசனத்தைப் பிரசங்கித்த அவர் வியாதியஸ்தர்களையும் பிசாசின் பிடியிலிருந்தவர்களையும் குணமாக்கினார். நாள்முழுவதும் அவருக்கு வேலையிருந்தது. அப்படியிருந்தும் அவர் ஜெபிக்கத் தவறவில்லை. அற்புதங்கள் செய்வதற்கு முன்பும் பின்பும் ஜெபித்தார் (யோவா. 6).

நமக்கு வேலைகள் அதிகம்; செய்ய வேண்டிய ஊழியப்பணிகள் அதிகம். இதினால் ஜெபிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை என்று நாம் சொல்லலாம். ஆனால், இயேசுவின் உதாரணம் நமக்கு சிறந்த உதாரணமாயும் சவாலாகவும் உள்ளது.

இயேசு ஊழியம் செய்த காலத்தில் ஜெபிக்கத் தவறியதில்லை. ஊழியத்திற்கு முன்பும் பின்பும் ஜெபித்தார். ஆனால் நாமோ, இயேசுவைப் போல ஜெபிப்பதில்லை. ஊழியத்தின் பின்னர் நம் ஊழியத்தின் மகத்துவங்களைப் பற்றிப் பேசுகின்றோம். நடைபெற்ற அற்புதங்களைப் புகழ்கின்றோம். ஆனால், தேவன் நம் ஊழியத்தில் செய்த காரியங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்த மறந்துவிடுகிறோம். நாம் ஒரு வேலையைச் செய்வதற்கு முன் எவ்வளவு ஜெபிக்கின்றோமோ, அந்த அளவு அவ்வேலையைச் செய்து முடித்தபின்பும் ஜெபிக்க வேண்டும்.

ஜெபத்தின் மூலம் இயேசு தேவ வல்லமையைத் தன்னோடு வைத்துக்கொண்டார். மூன்றரை வருட ஊழியக்காலத்தில் அவரது வெற்றிகரமான ஊழியத்திற்கு ஜெபமே மூலகாரணமாய் இருந்தது. அவரைத் தெய்வமாய்க் கொண்டுள்ள நாமும் அவரைப்போலவே ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.