Rev.மைக் டி.லக்கானிலாவோ
(செப்டம்பர்-அக்டோபர் 2015)

நாம் ஏன் ஜெபிக்கவேண்டும்?

உலகெங்கிலும், ஆவிக்குரிய வாழ்க்கையில், மனிதன் அதிகமாக செய்வது ஜெபமே. ஜெபம் பண்ணாத யாராவது ஒருவர் உண்டா? நாஸ்தீகர்கள்கூட தங்கள் ஆழ்ந்த துன்ப வேளைகளின்பொழுது, தாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று ஈடுபாடோடு வேண்டுதல் செய்கின்றனர். இதிலிருந்து மெய்யாகவே எல்லாரும் ஜெபிப்பதுண்டு என்பது தெளிவாகிறது. ஆனால் எத்தனை பேருக்கு ஒழுங்காக ஜெபிக்கத் தெரியும்?

ஜெபம், தேவனை நோக்கி ஓர் சாதாரண கூப்பிடுதலாக இருப்பினும், அதில் ஓர் ஆழமான ஆவிக்குரிய ஒழுங்கு இருக்கிறது. ஜெபம் நாம் சொல்லும் சில வார்த்தைகளுக்கு மேலானது; இது இந்த அண்டசரா சரத்தின் தேவனை, அசைத்து நமக்காக செயல்பட வைக்கிறது.

எனவேதான் இயேசுவின் சீஷர்கள் “எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுதாரும்” என்றனர் (லூக். 11:1). சீஷர்கள், “பிரசங்கிக்கக் கற்றுத்தாரும்”, “பிசாசுகளை விரட்ட கற்றுத்தாரும்” என்றோ கேட்டதாக ஆதாரமில்லை. இயேசு ஜெபித்தபோது, தாங்கள் இதுவரை அறியாத வல்லமையான ஒருவரிடம் அவர் தொடர்புகொள்ளுவதைப் பார்த்து சீஷர்கள் “எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும் என வேண்டினார்கள்”.

இயேசுவின் பதில்

மத்தேயு 6 மற்றும் லூக்கா 11 ஆகிய அதிகாரங்களில் சீஷர்களின் வேண்டுதலுக்கு இயேசுவின் பதிலைக் காணலாம். ஜெபம் பண்ண வேண்டிய விதத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவர்கள் தேவராஜ்ஜியத்தின் அங்கமாகையால், அவர்கள் ஏனைய உலக மக்களைவிட, வித்தியாசமாக ஜெபிக்க வேண்டியதை நினைவுபடுத்தினார்.

மற்றவர்களின் ஜெபத்தைப் பார்க்கிலும் ஒரு விசுவாசியின் ஜெபம் எவ்விதம் வேறுபட்டிருக்க வேண்டும்?

கொடுத்தல், இரட்சிப்பு ஆகிய இரண்டு ஆவிக்குரிய தன்மையோடு இயேசுவானவர் ஜெபத்தை ஒப்பிட்டுக் கூறினார். கொடுக்கிற செயலிலும், ஜெபத்திலும் சில பொதுவான குணாதிசயங்களுண்டு. இவ்விரண்டும் மறைவில், பரபரப்பில்லாமல் செய்யப்பட வேண்டும். இரண்டும் எளிதான வைகளாகவும், சிக்கலில்லாதவைகளாகவும் இருக்க வேண்டும். ஜெபம், கொடுப்பது ஆகிய இவ்விரண்டும் உள்ளான வாழ்வின் வெளிப்பாடாகும். உங்களின் கொடுத்தலும் ஜெபித்தலும் தேவனுக்கு மகிமை கொண்டு வருகிறதா?

மற்றபடியாக, இரட்சிப்பிற்கும் ஜெபிப்பதற்கும் வேற்றுமை உள்ளது. இரட்சிப்பு ஒரு திறந்த வாசலைக்காட்ட, ஜெபம் அடைக்கப்பட்ட வாசலைப் பிரதிபலிக்கிறது. இரட்சிப்பு என்பது அடைக்கப்பட்ட வாசலுடன் துவங்குகிறது. யாரொருவர் அதைத் திறக்கிறார்களோ அவர்கள் இரட்சகரை ஏற்றுக்கொள்கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 3:20இல் இவ்விதமாக பார்க்கிறோம்: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்”.

இதற்கு மாறாக ஜெபம் திறக்கப்பட்ட கதவோடு துவங்கி பின்னர், பிதாவோடு நெருங்கிய உறவிற்காக மூடப்படுகிறது. மத்.6:6இல் “நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு” எனப் பார்க்கிறோம். தெளிவான பார்வை உள்ள ஒரு தேவமனிதர் இவ்விதமாய் எழுதி வைத்துள்ளார்: எப்பொழுது சீஷர்கள் கதவை பூட்டினார்களோ, தனக்கு நல்ல ஒரு வரவேற்பு உள்ளது என கிறிஸ்துவுக்கு நிச்சயமாகத் தெரியும். திறந்த வாசலின் உள்ளே நிலவும் சத்தம், குழப்பம் இவைகள் மத்தியில் அவர் அவர்களின் செவியைச் சென்றடைய முடியாது. உலகத்திற்கு கதவை அடைப்பது, கிறிஸ்துவுக்கு கதவை திறப்பதாகும். கதவை அடைக்க பயப்படாதீர்கள். போதகர் உள்ளே வர அது நல்ல அழைப்பாக அமையும்.

நாம் ஏன் ஜெபிக்கவேண்டும்?

கிறிஸ்தவர்கள் ஜெபிக்க முதல் கட்டாய காரணம் அது நமக்கு தேவகட்டளையாயிருக்கிறது. லூக்கா 18:1 இல் “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும்” என்பதைக் குறித்து அவர்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார். ஜெபிப்பது, போதகரும் இரட்சகருமாகிய இயேசுவின் வாயிலிருந்து வந்த ஒரு கட்டளையாகும். இந்த ஒரு சிந்தனைமட்டுமே நம்மை உறுதியாக அவருக்கு கீழ்ப்படிய வைக்கவேண்டும். நம் தேவன், தொடர்ந்து அவரது கட்டளையை இப் பகுதியில் இரண்டு வழிகளில் அறிவுறுத்துகிறார். முதலில் ஒரு குறித்த காலத்தைக் காட்டினார். பின்னர் ஓர் உவமையைக் கூறினார்.

1.ஜெபிக்க ஒரு சமயம்

இதின் முன் அதிகாரத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்” (லூக். 17:26). ஆதியாகமம் 6ஆம் அதிகாரத்தில் நோவாவின் நாட்களில் என்ன நடந்தது என நமக்காக எழுதப்பட்டுள்ளது. பாவக்கேடும், நாற்றமும் மிகுதியாக இருந்தமையால், அவை உன்னத பரலோகத்தை போய் எட்டியது. அது தேவனையே துக்கப்படுத்தியது.

தேவன் இதனைப் பார்த்தார். “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு,” (ஆதி.6:5). அவர்கள் வெளிப்படையாகவும், வெட்கம் இல்லாமலும் செய்த இரகசியப் பாவங்களையும் பார்த்தார். தேவன் இதைக் குறித்து வருத்தப்பட்டார். “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” (ஆதி.6:6). “வருத்தப்படுதல்” (grief) என்ற சொல் ஒரு அன்பான சொல் என்று நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்ததுண்டா? நம்மால் நேசிக்கப்படும் ஒருவரின் வருத்தத்தைப் பார்த்து நாம் துயரப்படுவோம். அதே போல, தான் நேசிப்போரின் பாவத்தைப் பார்த்ததும் அறிந்ததும், அன்புள்ள தேவனின் உள்ளம் உடைந்தது.

தேவன் இதை நியாயந்தீர்த்தார். “அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல் … நிக்கிரகம்பண்ணுவேன்; … அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்” (ஆதி.6:7-13) என்றார்.

நீடிய பொறுமையுள்ள நம் தேவன் மனந் திரும்பாத, பாழாக்கும் மனிதவர்க்கத்தினிடம் பெற்றது, போதும், போதும் என்றாகிவிட்டது. தேவன் இரக்கமுள்ளவர். அவருக்கு நியாயந் தீர்ப்பு வழங்குவதில் சந்தோஷம் இல்லை. பாவத்தை தண்டனைக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. தேவன் பரிசுத்தமும், நீதியும் உள்ளவரானபடியால் பாவம் தண்டிக்கப்பட வேண்டியதாயிற்று. நோவாவின் நாட்களில் பாவமும், கேடும் இருந்தது போல் இந்நாட்களிலும் இருக்கிறது. இவ்வித சூழ்நிலையில் இயேசு ஒரு உவமையின் மூலம் ஜெபத்தின் தேவையை அழுத்திச் சொன்னார்.

ஜெபத்தைக் குறித்த ஒரு உவமை

லூக்கா 18 இல் தொடர்ந்து விடாப்பிடியாக செயல்பட்ட ஒரு விதவையின் உவமையைப் பார்க்கலாம். பரவலாக இது விடாப்பிடியாக நிற்பதின் பயனைக் கற்பிக்கிறதாக நம்பப்படுகிறது. இந்த விதவையைப்போல் நாமும் அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டு, விடாப்பிடியாக நெடுநேரம் நிற்கும்போது, தேவன் களைத்துப் போய் நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.

இந்த உவமையில் வேற்றுமை உள்ளது; அதை ஒப்பிட முடியாது. விசுவாசிகள் அந்த விதவையைப் போலல்ல. முக்கியமாக தேவன் அந்த அநீதி உள்ள நியாயாதிபதியைப்போல் பேச இயலாது. ஆனால் முக்கிய வேறுபாடு இந்த அநீதி உள்ள நியாயாதிபதிக்கும், நம்முடைய நீதி படைத்த தேவனுக்குமே; தேவன் எவ்வித வேறுபாடுமின்றி நமக்காக செயல்பட விரும்புகிறார்.

ஓர் தகப்பனின் தன்மையை விளக்கும் இன்னொரு உவமையை லூக்கா 11:11-13இல் இயேசு கூறுகிறார்: “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்”.

ஏன் நாம் ஜெபிக்க வேண்டுமென்றால் நம் பரலோக பிதா அன்புள்ளவர், நீதிபரர் நமது ஜெபங்களுக்கு பதில் தர ஆவலாய் இருக்கிறார்.

2. நாம் வெற்றி பெற போட்டி ஒன்று உண்டு.

நாம் ஜெபிக்க இரண்டாவது காரணமென்ன வெனில், நாம் வெற்றியை அடைவதற்குப் போட்டி ஒன்று நமக்கு உண்டு. மத்தேயு 26:41 இல் இயேசு, “நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்”. இரண்டு போட்டியாளர்கள் நம்மில் போட்டியிடுகின்றனர். முதலாவது ஜெபத்தின் வல்லமைக்கும் சோதனை என்ற குழிக்கும், இரண்டாவது ஆவியானவரின் விருப்பத்திற்கும் மாம்ச பலவீனத்திற்கும் போட்டி உண்டு.

சோதனை நிஜமானது; இதனை வேதாகமம் மறுக்கவில்லை (1கொரி.10:13; யோவான் 2:16). இயேசுவானவரும் மனிதருக்கு நேரிடுகிற பொதுவான சோதனைகளையும் எதிர் நோக்கினார். எபிரெயர் ஆக்கியோன் இவ்வாறு கூறுகிறார்: “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபி.4:15).

கிறிஸ்து சோதனைகளிலிருந்து விலக்கப் படவில்லை; ஆனால் வெற்றியின் அடிப்படையை நமக்குக் காட்டினார். அவரது இரகசியம்? அது ‘விழித்திருந்து ஜெபியுங்கள்’ என்பதாகும்.

சோதனைமேல் வெற்றியின் இரகசியம் என்ன?

கெத்செமனே தோட்டத்தில் இயேசு அனுபவித்தது, ஒருவேளை அவருக்கு மிகப்பெரிய சோதனையாக இருந்தது. பாவம் நிறைந்த மனிதர்களின் கரத்திலிருந்து தனக்கு வரவிருந்த கடுமையான பாடுகளையும், தாழ்வுபடுதலையும் முழுமையாக அறிந்திருந்த அவர் மாம்ச பலவீனத்தினால் சோதிக்கப்பட்டு கல்வாரிக்கு செல்வதில் சிறு தயக்கம் காட்டினார்.

இயேசுவானவர் பிதாவிடம் வேண்டியதை மத்தேயு தனது நற்செய்தி நூலில் இவ்விதம் பதிவு செய்திருக்கிறார். “அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது …என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்” (மத்.26:38,39). ஜெபத்தின் தொடர்பு மூலம் மாத்திரமே, அவர் பிதாவிற்கு பணிந்தார். “ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்”.

கண்ணால் காணக்கூடாத சத்துருவாகிய சாத்தானோடேகூட கிறிஸ்து கடுமையான ஜெபத்தின் மூலம் போராடினார். கெத்செமனேயின் ஜெபத்தின் மூலம் அவர் கல்வாரி சிலுவையில் வெற்றிசிறந்தார். இந்தத் தோட்டத்தில் இயேசு ஆவியின் உற்சாகத்தையும், மாம்சத்தின் பலவீனத்தையும் காட்டினார். அவர், தன் சீஷர்களிடம், “நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள்” (மத்.26:38) என்று மூன்று முறை வேண்டியிருந்தும், அவர்கள் ஜெபிக்காமல் நித்திரையாய் இருப்பதை இயேசு கண்டார்.

மாம்சமோ பலவீனமுள்ளது! இயேசு அவர்களுடையதும், நம்முடையதுமான பலவீனங்களை அறிந்திருக்கின்றார். ஆகிலும் அவர் நம் பலவீனத்தினிமித்தம் நம்மை தள்ளிவிடுவதும், அல்லது விட்டுவிடுவதும் இல்லை. பதிலாக, அவர் நம் ஆவியை உற்சாகப்படுத்துகிறார். ஆவியோ, அவரை பிரியப்படுத்தி அவருக்குக் கீழ்ப்படிய விருப்பமாக உள்ளது. அவர் நம்மை அதிகம் விழித்திருந்து ஜெபிக்கக் கட்டளையிட்டிருக்கிறார். ஆம், நாம் ஒரு போட்டியை மேற்கொள்ளவேண்டியது இருக்கிறது; அதனை ஜெபத்தினால் மட்டுமே மேற்கொள்ளமுடியும்.

3.நாம் ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்.

கிறிஸ்தவர்கள் ஜெபிக்க மூன்றாவது காரணம், நாம் ஒரு நிபந்தனையை நிறைவேற்றியாக வேண்டும். நம்மில் பலர் ஜெபிக்கிறோம். நம்மில் சிலர், மற்றவர்களைவிட அதிகம் ஜெபிக்கின்றோம். நாம் யாவரும் நம் ஜெபம் வல்லமை உள்ளதாக இருக்க வேண்டும் என வாஞ்சிக்கிறோம்.

யாக்கோபு 5:16இல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “.. நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”. எப்படிப்பட்ட ஜெபம் என முதலாவது கவனிப்போம். வல்லமை பொருந்திய, பலன் உள்ள ஜெபம் பரலோகத்தை அசைத்து தேவகரத்தை விஸ்தாரப்படுத்தும். பின்பு எவ்விதம் ஜெபம் ஏறெடுக்கப்படுகின்றது என கவனியுங்கள் (ஒருவர் பண்ணுகிற ஜெபம்). வல்லமையும், பலனுமுள்ள ஜெபத்தை, ஒருவரால் ஏறெடுக்க முடியும். அவரது வாழ்க்கையில் கீழ்க்கண்ட நிபந்தனைகள் இருந்தாலே இது சாத்தியமாகும்.

முதலாவது நம் வாழ்க்கை விசுவாசத்தையும், நம்பிக்கைக்கு பாத்திரத்தையும் தெளிவாகக் காண்பிக்க வேண்டும். யாக்கோபு 5:15 விசுவாசத்தோடு ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தைக் குறித்துப் பேசுகிறது; தேவசித்தம் இன்னது என்று அறிந்து அதனைக் கேட்டால் “அது நிறைவேறும்”. நாம் ஒன்றை தேவசித்தம் என்று அறிந்தால்தான் விசுவாசத்தோடு ஜெபிக்க முடியும்.

இரண்டாவதாக, நாம் ஐக்கியத்தில் அங்கமாக இருக்கவேண்டும். யாக்கோபு 5:16 கூறுகிறது: “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்”. பலருடைய ஜெபம் பலம் குன்றியதாயும், தடுக்கப்படுகிறதாயும், பதில் கிடைக்காததுமாயிருக்கிறதற்குக் காரணம் ஜெபிக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிற கசப்பும், கெட்ட சிந்தனைகளுமே ஆகும்.

முறிக்கப்பட்ட ஐக்கியம், நம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கும்; இது கணவன்மாருக்கு 1பேது.3:7இல் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்”.

மூன்றாவது, நாம் ‘ஆவிக்குரிய தகுதி’ என்ற நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”. எப்படிப்பட்ட மனிதன் நீதிமான் என்னப்படுவான்? ஏன் பலர் ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு ஜெபத்தினைப் பற்றி மிகவும் கொஞ்சமே தெரிந்திருக்கிறது? ஏனெனில் அவர்கள் பாவங்கள், அவர்களை தேவன்முன் மாய்மாலக்காரர்களாக்குகிறது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் லண்டன் மாநகரின்மேல் குண்டு வீச்சு கடுமையாக இருந்தபொழுது, ஓர் ஆலயம்முன் ஒரு விளம்பர அட்டை இவ்விதம் தெரிவித்தது: “உங்கள் முழங்கால்கள் பயத்தினால் ஒன் றொன்டொன்று மோதுமானால் முழங்காலிடுங்கள்”. நாம் வாழும் துன்பம் சூழ்ந்த நாட்கள் நம்மை ஜெபசிந்தை உள்ளவர்களாகவும், விசுவாசம் நிறைந்தவர்களாகவும் மாற்றட்டும். ஆயத்தமாக இருக்கும் நம் ஆவிக்கு, உற்சாகமூட்டும் நம் தீர்மானங்கள் மிகவும் முக்கியமானது. நாம் விழித்திருந்து, ஜெபித்து நம் ஆவியைத் தாங்குவோம்.

ஜெபிக்க கொடுக்கப்பட்ட மூன்று காரணங்களில் எது உங்களை அதிகமாக அசைக்கிறது?