Dr. உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2015)

தற்கால உலகமானது பலவித பேராபத்துகளுக்குள்ளாகி வருகிறதை நாம் காண்கிறோம். நாடுகளுக்கிடையே போர்கள், பொருளாதார வீழ்ச்சிகள், படுகொலைகள், சதித்திட்டங்கள், தீவிரவாதச் செயல்கள், இயற்கையின் சீற்றங்கள், ஒழுக்கக்கேடுகள், ஊழல்கள், படுகொலைகள் என அழிவின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

நல்லவர்களுக்கு தீய காரியங்கள் நடப்பதைக் காண்பது அரிதல்ல; ஆனால் தேவனுடைய மக்களுக்கும் அவ்வாறே நடக்கிறது. எனவே நாமும், “இவ்வாறு நிகழ நான் என்ன தவறு செய்தேன்?” என்பது போன்ற பல வினாக்களை எழுப்புகிறோம். நாம் மனிதர்கள் என்பதை நினைப்பூட்டவே இவ்விதம் நிகழ்கின்றன. நாம் நம்முடைய சூழ்நிலைகளைச் சார்ந்து இவ்விதமான கேள்விகளை எழுப்புவதைவிட தேவன்மேல் வைக்கும் ஒரு விசுவாச வாழ்வு வாழவேண்டும். சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் மனந்தளராது தங்களுடைய வாழ்வைத் தொடரும் மக்களை நான் காணும்பொழுது தேவனைத் துதிக்கிறேன். ஏனெனில் அவர்கள் தேவனை நம்பும் ஒரு விசுவாச வாழ்வை நடத்துகிறார்கள். துயரமான வேளைகளில் உங்கள் நண்பர்களை நாடுவதைவிட தேவனுடைய வார்த்தையைத் தேடுங்கள். அவருடன் செலவிடும் ஒவ்வொரு வேளையும் வாழ்வின் மேடு பள்ளங்களைச் சந்திக்க உங்களைச் சிறப்பாக ஆயத்தப்படுத்தும்.

வேதபுத்தகத்தில் பலவித துயரங்களைச் சந்தித்த பக்தன் யோபுவின் சரித்திரத்தை நாம் தியானிக்கும்பொழுது நாம் அநேக காரியங்களை அறிந்துகொள்ளுகிறோம். இதை நீங்கள் தியானிக்கும்போதுகூட உங்களிலும் சிலர் யோபுவைப் போன்று இருப்பதை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உங்கள் வாழ்விலும் துன்பங்கள் அலையலையாக மோதியடிக்கின்றனவா? பேராபத்துக்கள் நம்மைத் தாக்கும்பொழுது அதனை எப்படி சமாளிப்பது என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். வேதாகமத்தில் நாம் வாசிக்கும் யோபு என்ற பக்திமான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதேபோன்று ஒரு காலத்தில் மிகவும் துயரமும் அடைந்தார். அவர் ஓர் உத்தமன், நீதிமான், செல்வந்தர், குடும்பத்தலைவர். அவரைப் போல கிழக்கத்தி புத்திரர்களில் ஒருவரும் இல்லை என்று வேதம் கூறுகிறது.

ஒருமுறை சாத்தான் கர்த்தருடைய சந்திதியில் வந்து நின்றபொழுது, “கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப்பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்” (யோபு 1:8). அதாவது, “யோபின் வாழ்க்கைமுறையை கவனித்தாயா? அவன் என்னை நேசிக்கிறான்; எனக்கு பயப்படுகிறான்; என்னை மதிக்கிறான் என்றார்”. அதற்கு சாத்தான் நேர்மாறான சந்தேகமான விமர்சனத்தைத் தருகிறான். “ஆம், யோபு உம்மை வணங்குகிறான்; நீர் அவனை செல்வந்தனாக்கினீர். ஆகவேதான் அவன் உம்மை சேவிக்கிறான். நீர் அவனது ஐசுவரியத்தையெல்லாம் எடுத்துவிட்டால் அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்றான். எனவே கர்த்தர் யோபுவைத் துன்புறுத்த சாத்தானுக்கு ஒரு வாய்ப்பைத் தந்தார். ஆயினும் கர்த்தருடைய எல்லைக்குட்பட்டே அவன் அதைச் செய்யவேண்டும். இவ் வாறாக ஒரு மனிதனுக்கு பூரண மாற்றத்தை உண்டாக்கும் சம்பவத்தை அரங்கேற்ற ஒரு மேடை தயாரானது.

“பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டு போனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப் போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டு போனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்ச ரசம் குடிக்கிறபோது, வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்” (யோபு 1:13-19).

யோபு இவ்விதமான பேரிடர் செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாக கேட்கும்பொழுது, அவருடைய நிலையை எண்ணிப்பாருங்கள். இதை போன்ற துயரங்களை யாரும் அனுபவித்திருக்கமாட்டோம். யோபு தன் வாழ்க்கையிலே மிகுந்த மனத்துயரை அடைந்தார். உச்சி மீது வான் இடிந்து விழுந்தது மாத்திரமல்ல, காலடியில் இருந்த பூமியும் பிளந்ததைப் போன்று உணர்ந்தார். ஆனாலும் அவர் அமிழ்ந்து போகவில்லை. யோபுவின் குணாதிசயங்களை இந்த துயரங்களின் மூலமாக நாம் ஆராய்வோம்.

இப்புத்தகத்தின் ஆசிரியர் யோபுவின் சரித்திர நாடகத்தில் நம்மை அதன் பார்வையாளராக மாற்றியுள்ளார். அங்கு நடந்ததை நாம் அறிவோம். ஆனால் யோபு அவற்றை அறியமாட்டார். சன்மார்க்கனாக வாழ்ந்துகொண்டிருந்த யோபுவின் பாதுகாப்பு வேலியில் ஒரு திறப்பு காணப்பட்டது. இரக்கமற்ற எதிரியின் தாக்குதலுக்கு நிலைகுலையும் சூழல் ஏற்பட்டது.

இப்பேரிடர்கள் யாவும் யோபுக்கு ஒரேநாளில் ஒருவேளை ஒரே நேரத்தில் நடந்திருக்கலாம். அவை ஓர் ஆண்டில் அல்லது மாதத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன. இந்நிகழ்வுகளை அதில் தப்பிப் பிழைத்தவர்களே நேரில் வந்து யோபுவிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். இதனை வாசிக்கும் நமக்கே அதிக மனவருத்தத்தைத் தருகிறது எனில் யோபுவின் நிலையை விவரிக்கவும் இயலுமோ?

இப்பேரிடர்கள் நான்கு தொடர்களாக நிகழ்கின்றன. பொதுவாக துன்பங்கள் மூன்று என்ற எண்ணிக்கையாக வரும் என அநேகர் ஒத்துக் கொள்ளுகின்றனர். ஷேக்ஸ்பியர் கூறுவது போல், “துன்பங்கள் தனியான எதிரியாக அல்ல; ஒரு பட்டாளமாகவே வருகின்றன”. இதனை நம்மைவிட யோபு அதிகம் அறிந்திருப்பார். தத்துவ அறிஞர்கள் இயற்கையின் அழிவுக்கும் மனிதனின் பேரிடருக்கும் வேறுபாடு காண விரும்புகின்றனர். அவ்வாறு நோக்கின் இரண்டு இயற்கையால் ஏற்பட்ட அழிவும், இரண்டு மனிதர்களால் உண்டான அழிவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதன், இயற்கை, மனிதன், இயற்கை என்ற வரிசையில் காணப்படுகிறது. இதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் உங்கள் வாழ்வில் ஏற்படும் பேராபத்துக்களைக் கையாளுவதைக் கற்றுக்கொள்ள இது அவசியம்.

முதல் அழிவு சபேயர்களால் ஏற்பட்டது. இவர்கள் யாரென்று சரியாக வரையறுக்க இயலவில்லை. ஆனால் அரேபியாவுக்கு தென் மேற்கே உள்ள ஷீபா என்ற இடத்திலிருந்து வந்திருக்கலாம் அல்லது ஆதியாகமம் 10:7 இல் காணப்படும் வட அரேபியாவிலுள்ள ஷீபா என்ற பட்டணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். எவராயிருந்தாலும் சபேயர்கள் இரக்கமற்றவர்கள். எந்த ஒரு எச்சரிப்பும் இன்றி, திடீரென்று இந்த இரக்கமற்ற மக்கள் யோபுவின் வயலில் வந்து உழுதுகொண்டிருந்த 500 எருதுகளையும் தாக்கினர். கழுதைகள் அந்த வயலின் அருகே மேய்ந்துகொண்டிருந்தன. ஆனால் சபேயர்கள் அந்த எருதுகள் மற்றும் கழுதைகளை சாய்த்துக்கொண்டு போயினர் என்று கூறப்பட்டுள்ளது. வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள். ஒருவன் மாத்திரம் இச்சோகத்தை அறிவிக்க தப்பி வந்தான்.

வசனம் 16இல் இந்த வேலைக்கார உழவன் வந்து யோபிடம் நடந்ததை விவரித்துக்கொண்டிருக்கும்பொழுது, மற்றொரு வேலைக்கார மேய்ப்பன் அதிவேகமாய் வந்து; ‘வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப் போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்’.

வானத்திலிருந்து வந்த தேவனுடைய அக்கினி என்பது ஒருவேளை மின்னலைக் குறிக்கலாம். அதைப் பற்றி நமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே வினாடியில் அனைத்து ஆடுகளும் கருகிவிட்டன என்பதை மாத்திரம் இம்மனிதன் அறிந்திருந்தான். 7000 ஆடுகளையும் சுட்டெரிக்கவேண்டும் எனில் அந்த மின்னலின் சக்தியை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடியுமா? அது ஆடுகளை மாத்திரமல்ல, ஒருவனைத் தவிர அனைத்து மேய்ப்பர்களையும் கொன்றுபோட்டது. அது நம்ப முடியாத ஒரு காரியம். ஆனால் யோபுவின் வாழ்வில் நிகழ்ந்ததை நாம் வாசிக்கிறோம். நம்மால் அதனை கணக்கிடமுடியாது. ஒரே வினாடியில் ஏழாயிரம் ஆடுகளும் மாண்டன!

அடுத்ததாக, மூன்றாவது ஒரு துன்ப அலை எழும்பியது. இது மனிதர்களால் உருவானது. கல்தேயர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து சூறையாடினார்கள். அவர்கள் யோபின் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போனார்கள். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 300 ஒட்டகங்கள் இருந்திருக்கவேண்டும். பயமுறுத்தப்பட்ட ஒட்டகக் கூட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். அவை வெவ்வேறு திசைகளில் ஓடும் தன்மையுள்ளவை. அவைகளைப் பிடிப்பது மிகவும் கடினம். ஒருமுறை ஓர் அரேபிய சிறுவன் ஒட்டகத்தையும் அதன் குட்டியையும் பிடிக்க முயன்றதை நான் கண்ணுற்றேன். ஒட்டகம் ஒரு திசையிலும் அதன் குட்டி ஒரு திசையிலும் இச்சிறுவன் ஒரு திசையிலும் ஓடுவதைக் காண்பது நகைப்புக்குரியதாயிருந்தது.

ஆனால் இக்கல்தேயரோ யோபுவின் ஒட்டகங்கள் அனைத்தையும் ஓட்டிக்கொண்டு போயினர். சபேயர்களைவிட கல்தேயர்கள் நாகரிகமானவர்கள். ஆயினும் அவர்கள் கொள்ளையடிக்கும் உணர்வினைக் கொண்டிருந்தனர். மிருகங்களின்மீது காட்டிய இவ்விரக்கமற்ற தாக்குதலில் அனைத்து வேலையாட்களையும் வெட்டிப் போட்டனர். ஒரேயொருவன் மட்டும் தப்பிவந்து அத்துயரச் செய்தியை யோபுக்கு அறிவித்தான்.

யோபுடைய மந்தைகளும் ஆடுகளும் அவரது செல்வத்தைப் பறைசாற்றின. கிழக்கத்திப் புத்திரர் அனைவரிலும் யோபு பெரிய சீமானாய் இருந்தார். அவரிடம் 7000 ஆடுகள், 3000 ஒட்டகங்கள், 1000 எருதுகள் 500 பெண் கழுதைகள் இருந்தன. இப்பொழுதோ அவைகளில் மீதி ஒன்றும் இல்லை. ஒரு நொடியில் அனைத்தும் அழிந்தன.

உன்னுடைய அந்தஸ்து உன் செல்வத்தை சார்ந்துள்ளதா? அவை அனைத்தும் அழிந்துவிட்டால் நீ என்ன சொல்லுவாய்? யோபு தேவனுடைய கரத்தில் இருந்தார். அவரிடமிருந்த செல்வங்களுக்கு அவர் முக்கியத்துவம் தரவில்லை. ஆனால் அவர் ஜீவனுள்ள தேவனுடன் வைத்திருந்த உறவை சிறப்பாகக் கருதினார். இங்கு யோபுடைய கால்நடைகள் மாத்திரமல்ல, அவைகளைக் காத்துக்கொண்டிருந்த மனிதர்களும் கொலை செய்யப்பட்டனர். வானத்து அக்கினியும் வேலையாட்களை சுட்டெரித்தது. மூன்றுபேர் மாத்திரம் தப்பி வந்தனர். அவர்களே யோபுவிடம் அந்த அழிவின் செய்தியை அறிவித்தனர்.

இறுதி அழிவைப் பற்றி வசனம் 18 மற்றும் 19 இல் நாம் வாசிக்கிறோம். நான்காவது ஊழியக்காரன் மூச்சிறைக்க ஓடிவந்தான். அவன் கூறிய செய்தி யோபின் இருதயத்தை பட்டயத்தால் குத்தியது போன்று இருந்தது. “உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்”. யோபுவின் துக்கம் அளவு கடந்துவிட்டது. அவனுடைய பிள்ளைகள் யாவரும் மூத்தகுமாரரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். யோபுவின் பத்து பிள்ளைகளும் அங்கிருந்தனர். பெருங்காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதினது. ஒரே விபத்தில் பத்துபேரும் மாண்டனர். அந்த விருந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேலையாட்களும் இறந்து விட்டனர். ஒருவன் மட்டும் இந்த துயரச் செய்தியை மனமொடிந்திருந்த யோபுவிடம் அறிவிக்கவந்தான்.

இந்த நிகழ்வை நாம் அறிவுபூர்வமாக அறிந்துகொள்ளலாம். ஆனால் உணர்ச்சிகளால் இதனை அறியமுடியாது. ஒரு சில நிமிடங்களில் செல்வந்தராய் இருந்த யோபு ஒன்றுமில்லாத வறியவரானார். நூற்றுக்கணக்கான விசுவாசமுள்ள வேலையாட்களைக் கொண்டிருந்த யோபு அனைவரையும் இழந்தார். பத்துபேரையுடைய குடும்பத்தலைவரான யோபு பிள்ளையில்லாத தகப்பனாகிவிட்டார். அவருடைய வாழ்வும் முடிந்துவிட்டதாக எண்ணினார்.

ஒருவேளை இன்று யோபு உயிரோடிருந்து நீங்கள் அவருடைய நண்பராக இருந்திருந்தால் அவரை எவ்வாறு தேற்றுவீர்கள்? அவருடைய வீட்டுக்குச் சென்று அவருடன் சிறிது கண்ணீர் சிந்தி அவருடைய ஆறுதலுக்காக வேத வசனங்களை வாசிப்பீர்கள். இந்நிலையிலிருக்கும் ஒரு மனிதரைத் தேற்ற நம்மால் இயலாது. ஆயினும் நான் அங்கிருந்தால் சங்கீதம் 37ஐ அவருக்கு வாசித்திருப்பேன். இங்கு தாவீது என்ன சொல்லுகிறார்?

“பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப் போவார்கள். கர்த்தரை நம்பி நன்மைசெய், தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப் போலவும் விளங்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” (சங்.35:1-9).

பிள்ளைகள் அனைவரையும் இழந்து, ஆஸ்தியையும் சம்பாத்தியத்தையும் இழந்து நிற்கும் ஒருவரை எவ்வாறு தேற்றுவது? இச்சங்கீதம் துன்ப இருளின் நடுவில் ஒரு நம்பிக்கையைத் தருகிறது. யோபு தனது மந்தைகளை அழித்தவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்தார். தேவனிடத்தில் கோபப்படவில்லை. கர்த்தருக்குக் காத்திருந்தார். சாத்தான் தனது வாழ்வில் கொண்டுவந்த துன்பங்களுக்கு யோபு சரியானபடி நடந்துகொண்டார். அக்கினியின் மத்தியிலும் தனது தேவபக்தியைக் காண்பித்தார். வாழ்க்கையின் துன்பங்களின் நடுவே சரியான பாதையைத் தெரிந்தெடுத்தார்.

கெனட் மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் 1941ஆம் ஆண்டு ரஷ்மோர் மலைக்குப் பயணம் சென்றதை நினைவுகூர்ந்தார். அவர் அப்பொழுது கல்லூரியில் சேர்ந்த ஆண்டு. அவர்களுடன் அங்கு செல்லும் பொழுது அம்மலைக்கு மிகத் தொலைவிலேயே வாஷிங்டன் மற்றும் லிங்கனின் உருவங்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த உருவம் அடால்ஃப் ஹிட்லர் போன்று தோன்றியது.

இன்னும் அருகே நெருங்கியவுடன் நெற்றியில் முடியை சீவியதற்குப் பதிலாக சுருட்டை முடி தெரிந்தது. மீசைக்குப் பதிலாக சாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உருவத்தைப் பற்றி அவர் ஒரு கையேட்டு பத்திரிக்கையில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “பத்து மைல்களுக்கு அப்பால் தாமஸ் ஜெபர்சனாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்த சிலை அடால்ஃப் ஹிட்லராகத் தோற்றமளித்தது”. இந்த அனுபவம் ஒரு உவமையாக மாறியது. அனைத்து முக்கியமான பிரச்சனைகளும் தூரத்தில் மோசமாகவேத் தோன்றும். ஆனால் அருகில் நெருங்கினால் மாத்திரமே அது மிகவும் தேவையானதாகத் தோன்றும்.

உங்கள் வாழ்வில், நீங்கள் எந்தவிதமான நெருக்கங்கள் மற்றும் பாடுகளுக்கூடாக செல்லு கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை அது உங்கள் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரின் இறப்பாக இருக்கலாம். அல்லது உலக சொத்துகளின் இழப்பாக இருக்கலாம். துன்பம் என்பது நமது வாழ்வின் ஒரு பகுதி. நாம் ஒவ்வொருவரும் துன்பங்களையும் இழப்பு களையும் சந்தித்திருக்கிறோம். ஒரு சிலருக்கு அவை குறைவாகவும் ஒரு சிலருக்கு அது அதிக மாகவும் இருந்திருக்கலாம். ஆனால் நம்மில் எவருமே யோபைப் போன்று அதிகமான துன்பங்களை ஒரே நாளில் சந்தித்திருக்க மாட்டோம்.

ஆனாலும் இத்துன்பங்களின் மத்தியில் அவருடைய செயல்பாடு நமக்கு ஒரு படிப்பினையாக அமைகின்றது. யோபு கர்த்தருக்குக் காத்திருந்தார். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருந்தார். அவர் தனது வாழ்வை தொடர்ந்து தேவனுக்கு அர்ப்பணித்தார். இதுவே ஒரு ஆவிக்குரிய முதிர்ச்சியான வாழ்வு! இது ஓர் உத்தமனுடைய செயல்பாடு!!

இன்று வாழ்வு உங்களுக்குக் கசப்பாக உள்ளதா? நீங்கள் ஏன் உங்களுடைய வேதாகமத்தை எடுத்து ஒருமணிநேரம் வாசிக்கக் கூடாது? அல்லது சங்கீதம் 37இல் முதல் ஒன்பது வசனங்களைத் தியானியுங்கள். வேதம் கூறும் நல்ல ஆலோசனை இதுவே. துன்பங்கள் நெருக்கும்பொழுது, தேவன் அவைகளை மிக ஆச்சரியமான அற்புதமான காரியங்களாக மாற்ற இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். யோபின் அனுபவம் உங்களின் அனுபவமாக மாறட்டும். கர்த்தரை நம்புங்கள். அவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருங்கள். அவருக்குக் காத்திருங்கள். அவர் சிறந்தவற்றை உங்கள் வாழ்வில் உருவாக்குவார்.

இந்தநாளில் மிகவும் துக்க சாகரத்தில் மூழ்கியிருப்பவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். நீங்களும் என்னோடே ஜெபிப்பீர்களா?

ஆண்டவரே, எங்களுடைய வாழ்விலே துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். இதை வாசிக்கும் சிலர் ஆழ்ந்த துன்பத்தில் இருப்பார்கள். ஒரு சிலர் விவாகரத்தினால் மனத்துயரம் அடைந்துள்ளனர். அது அவர்கள் வாழ்வை சீரழித்து சின்னா பின்னமாக்கிவிட்டது. இத்தயை பேராபத்துகளின் மத்தியில் அவர்கள் விசுவாச பாதையைக் கண்டுகொள்ள நீர் உதவி செய்ய உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன். ஒரு சிலர் வியாதியினால் துன்புறுகிறார்கள். அவர்கள் விரும்பாத ஒரு முடிவினை மருத்துவரின் சோதனை அறிக்கை தெரிவிக்கிறது. சிலர் வேலையை இழந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிமையில் வாடுகின்றனர். சிலர் குடும்பத்திலே அவச்சொல்லை சுமந்தவர்களாய் வாழ்கின்றனர். ஒரு சிலர் சட்டப் பிரச்சனைகளில் சிக்குண்டு துன்பப்படுகிறார்கள்.

ஆண்டவரே, எங்கள் வாழ்விலே எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் யோபுவைப்போல நாங்களும் உம்முடைய உத்தமத்தை நம்பி அவற்றை எதிர்கொள்ளும் வழியைக் கற்றுக்கொள்ள உதவி செய்யும். துன்பத்தை மேற்கொண்டு ஒரு விசுவாச வாழ்வு வாழ உதவும். இதை வாசிக்கும் அனைவருக்கும் கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் வெற்றியைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், பிதாவே. ஆமென்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை