சகோதரி. சுசி கிறிஸ்டோபர், இலங்கை
(செப்டம்பர்-அக்டோபர் 2015)

பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஜெபம் ஓர் இன்றியமையாத அம்சமாகக் காணப்படுகின்றது. விசுவாசப் போராட்டத்தின் வெளிப்பாடாகவே ஜெபம் அமைந்துள்ளது.

பரிசுத்த வேதாகமத்தில் பல பரிசுத்தவான்கள் ஜெபவீரர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக ஆபிரகாம், மோசே, யாபேஸ், எஸ்தர், அன்னாள் போன்றோரைக் குறிப்பிடலாம். இச்செய்தியின் மூலம் ஜெபத்தைக் குறித்த ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள தேவன் தந்துள்ள இச்சந்தர்ப்பத்துக்காக தேவனைத் துதிக்கிறேன்.

1. ஜெபத்தின் வல்லமை

நெற்றியில் வழியும் வியர்வையைக்கூட துடைக்கமுடியாத வேகத்தில் பெண்களாகிய நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். காலைச் சமையலை முடித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவசர அவசரமாக வேலைக்கு ஓடி மாலையில் வீடு திரும்பும்போது, சுருக்கென்று ஒரு குற்ற உணர்வு இதயத்தில் ஏற்படுகின்றது. எத்தனை அழகாய்த் திட்டமிட்டு இந்த நாளின் அலுவல்களை கவனித்தும் சொல்ல முடியாத ஓர் பாரம் இதயத்தை அழுத்துகிறது. அப்போதுதான் காலையில் நாம் தவறவிட்ட ஜெபவேளையை எண்ணிப்பார்க்கிறோம்.

எனக்கருமையான சகோதரிகளே, இதுதானா இன்று நமது நிலையும்! சிந்தித்துப்பாருங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று யாக்கோபு 5:16இல் வாசிக்கின்றோம். திட்டமிட்டு வேலைகளைச் செய்யும் முன்னதாக தினமும் கர்த்தர் பாதத்தில் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டாமா? நம் சுய நலத்திற்காக, இனிமையான ஜெப வேளையை அனுபவிக்க மறக்கலாமா? பெண்கள் ஜெபத்திற்கென முதலிடம் கொடுக்கும்போது அதின் விளைவாக சபைகளிலும், பெண்கள் ஊழியங்களிலும், வேதப்படிப்பிலும், கிறிஸ்துவிற்கான ஒவ்வொரு பணியிலும் பெரிதான வல்லமையுள்ள எழுப்புதல் ஏற்படும் என்பதில் ஐயமேயில்லை. நீதிமான்களாய் மாறுவோம். ஊக்கமாய் ஜெபிப்போம். வல்லமை பெறுவோம்.

2. ஜெபத்திற்குத் தடையானவைகள்

ஜெபிக்கவென்று வந்துவிட்டால் போதும். தடைகள் தாமாகவே வந்துவிடும். அநேக வேளைகளில் விழித்திருந்து கருத்துடன் போராடி ஜெபித்து உடனடியாக பதிலைப் பெற்றுக் கொள்கிறோம். உண்மைதான். ஆனால், நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி உருண்டாலும் சில விண்ணப்பங்களுக்கு பதிலே வருவதில்லை. சில சமயங்களில் பதில் வரத்தாமதமாகிவிடுகின்றது அல்லவா; ஏன் என்று கேட்டால், தாவீது இப்படிக் கூறுகிறார்: “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்.66:18). ஜெபமென்னும் ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் நாம் சற்றே நின்று கீழே பார்க்கவேண்டாமோ? ஏன் திடீரென நம் ஜெபத்தில் தடைகள் ஏற்படுகின்றது. மற்றவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நம்மைநாமே பெருமைப்படுத்திக்கொள்கின்றோம். நம்மையும் நம் குறைவுகளையும் மறந்துவிட்டு மற்றோருக்காக ஜெபித்துக்கொள்கிறோம். தேவன் நம்மைக் கொண்டு செய்யும் செயல்களை பிறர் மத்தியில் சாட்சி என்ற போர்வையில் தம்பட்டம் அடித்துக் கொள்கிறோம். இது தேவனுடைய பார்வையில் பிரியமற்றதொன்றல்லவா! இதுவே நம் ஜெபத்திற்கும் பெரிதான ஒரு தடையாக வீழ்ச்சியாக அமைந்துவிடுகின்றது.

எனவேதான் இவை யாவற்றிலுமிருந்து, நம்மை விலக்கி சுத்தம் செய்வதற்கு, உண்மையும் நீதியுமுள்ளவருமான பரிசுத்த தேவனை நோக்கி நமது குறைகளை அறிக்கையிடுவோம். தடையாக நிற்கும் சுவரைத் தகர்த்து ஜெயம் கொள்ளும் ஜெபவீரர்களாக மாறுவோம்.

3. ஒருமனமான ஜெபம்

ஒரு மழலையானது ஆரம்பத்தில் தவழ்ந்தும் பின்னர் பக்கத்துணையுடன் எழுந்து நின்றும் அதின்பின்பு தானாகவே தத்தித் தத்தி நடந்தும் படிப்படியாக, நடக்க ஆரம்பிக்கின்றதல்லவா! அவ்வாறுதான் நாமும் ஜெப நிலையில் வளர்ந்துள்ளோம். ஆரம்பகாலத்தில் காணப்பட்ட வெட்கமும் பயமும் அகன்று தைரியமாகவே இப்போது குழுக்களிலும் சபையிலும் ஜெபிக்கக் கற்றுக்கொண்டுள்ளோம். ஆரம்ப நாட்களில் நாம் ஜெபிக்கையில் நமது மனோநிலை எப்படி இருந்ததோ அப்படித்தானா இன்றும் இருக்கிறோம்? இதை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

ஆதி அப்போஸ்தலர்கள் மத்தியில் அதிகமாய் காணப்பட்டது என்ன? அது ஒருமனம் என்றால் சற்றும் மிகையாகாது (அப்.1:14). இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? தேவனுடைய நாமத்தில் ஜெபிக்கவென்று இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கி ஒன்று கூடுகின்றோம். ஆனால் அங்கிருந்து வருவது வெறும் ஓசையுள்ள போலியான வார்த்தைகள்தானே. உள்ளமும் உதடும் ஒன்றுக்கொன்று எதிரிடையாகத் செயல்படுகின்றதல்லவா? எனவேதான், இதனைக்குறித்து நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதற்குப் பல காரணங்கள் இருப்பினும் சிறப்பாக ஒன்றை மட்டும் ஆராய்ந்துபார்ப்போம். தேவனுடன், தனிப்பட்ட ஜெபத்தில் மணிக்கணக்கில் உறவாடுவதில் பெரியதோர் இன்பமாக காணப்படுகின்றது. இருப்பினும் குழுவாக ஜெபிக்கையில் ஒருவர் மாத்திரம் நீண்டநேரம் ஜெபிப்பது வளர்ச்சியடையாத, ஆரம்ப விசுவாசிகளுக்கு ஒருமனமாக ஜெபிக்கத் தடையாக இருக்கலாம்.

எனவேதான், ஒருவர் சுருக்கமாக ஜெபிக்கையில் ஏனையோர் அதே விண்ணப்பத்திற்காக ஒருமனமாக மெளனமாய் வேண்டுதல் செய்ய முடியுமல்லவா! நீண்டு செல்லும் ஜெபமானது அநேகரை நீடிய நித்திரைக்கு அழைத்துச் சென்றுவிடும். இன்னும் சிலரை வேறு சிந்தனைகளுக்கு செல்ல வழி அமைத்துவிடும். இன்னும் சிலர் அடுத்ததாக தாம் ஜெபிக்கும்போது எப்படிப்பட்ட வசனம் அல்லது வாக்குத்தத்தத்தை உபயோகிப்பது எனத் திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். இதனை நம்மில் பலர் அனுபவ ரீதியில் சந்தித்ததும் அனுபவித்ததும் உண்டு. தேவன் வானத்திலும் நாம் பூமியிலும் இருக்கிறோம்; வார்த்தைகளை சுருக்கி தேவ சமுகத்தில் இருதயங்களை ஒருமனப்படுத்தி ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம்.

4. தேவசித்தமும் ஜெபமும்

உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கும் ஆன்மீக ரீதியான வாழ்க்கைக்கும் பலவகையான நிபந்தனைகள் உண்டு. இதற்கு ஒரு சிறு உதாரணத்தைக் கூறமுடியும். கடைத்தெருவிற்குச் செல்லும் கணவனிடம், மனைவியானவள் தேவையுள்ள பொருட்பட்டியலை கொடுத்து விடுவது வழக்கம். அப்படிக் கொடுக்கும்போது, குறிப்பிட்ட தொகை பணத்துக்கு மேலாக செலவு செய்ய வேண்டாமென்று அன்புடன் நிபந்தனையும் போட்டுவிடுவது வழக்கந்தானே. இது இப்படி இருக்குமானால், நம் ஆவிக்குரிய பிதா நமக்கு விதிக்கும் நிபந்தனைதான் எப்படிப்பட்டது? மேற்கூறப்பட்ட மனைவியைப்போல, நாமும் நம் ஜெப வேளையில் தேவனிடத்தில் விண்ணப்பித்த ஜெபங்களுக்கு விதித்த அல்லது விதிக்கும் நிபந்தனைகள்தான் எத்தனை எத்தனை? திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளவயதினர் தாமாகவே ஒருவரைத் தெரிவுசெய்துவிட்டு பின்பு தேவசித்தத்தைக் கேட்டு ஜெபிப்பதுண்டு. இங்கு நாம் போடும் நிபந்தனை தேவசித்தத்தை செயல்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. ஜெபப்பட்டியலில் ஓங்கி நிற்பது நம் விருப்பங்களேதான். மணிக்கணக்காய் முழங்காலில் நின்றும், உபவாசித்தும் நாம் ஏறெடுத்த ஜெபங்களுக்கு விடையே இல்லை. விடையற்ற ஜெபத்திற்கு நம் சுயவிருப்பங்களே தடை. எனவே, ஜெபம் பண்ணும்போது தேவன் நமக்களித்த நிபந்தனையைக் கருத்தில் கொள்வது மிகமிக அவசியம். 1யோவான்5:14 தேவனுடைய நிபந்தனை என்னவென்று தெளிவாக இப்படிக் கூறுகின்றது: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்”. தேவசித்தப்படி நாம் ஜெபிக்கும்போது, நம் ஜெபநிலையிலும் தனிப்பட்ட நம் வாழ்விலும் பெரிதோர் மாற்றம் ஏற்படுவது மிகவும் உண்மை. நமக்காக தேவன் வைத்துள்ள திறந்த வாசலுக்குள் தைரியத்தோடே நுழையவேண்டுமானால் அவர் சித்தமே நம்மில் நடைபெற இடம்கொடுக்க வேண்டும். விடைதேடும் உங்கள் வினாக்களுக்கு தேவனின் விருப்பம் எதுவென்று கண்டறிந்து தடையின்றியே பதில் பெறுவோம்.

5. எங்கு ஜெபிப்பது?

நாம் எங்கெல்லாம் ஜெபிக்கமுடியும் என ஆராய்ந்த வேளையில் ஆச்சரியமான ஓர் விடையைப் பெற்றுக்கொண்டேன். ஒரு சிறுபிள்ளை தனக்கு மிகவும் பிரியமானதொன்றை தன் சகோதரர்கள் அறியாவண்ணம் தன் பெற்றோரிடம் இரகசியமான முறையில் சூழ்நிலை சாதகமாக அமையும்போது பெற்றுக்கொண்டு விடுகிறது. தாவீது என்ற பக்தனும் கூட தான் தேவனுடன் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஓர் இரகசியமான உறவைக் கொண்டிருந்தான். அவன் படுக்கையில் கூட தேவனுடன் பேசினான். சங்.4:4 கூறுகிறது: “உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்” என்று. மாத்திரமல்லாமல், தானியேல் கூட அப்படியே மூன்று வேளை ஜெபித்தான். “..தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (தானி.6:10). வெளியரங்கமான ஜெப நிலையில் வெற்றிகொள்ள வேண்டுமானால் அதற்கு நம் தனிப்பட்ட ஜெபம் மிகவும் அவசியமாயுள்ளது.

தனிப்பட்ட ஜெபத்திற்கென, வீடுகளில் யாருமே அறியாதபடி தமக்கென ஓர் சிறு இடத்தை இரகசியமாக வைத்துள்ள பெண்கள் பலருண்டு. சமையலறைகளும் குளியலறைகளும் ஜெபகோபுரங்களாகிவிட்டன என்றால் அதில் வியப்பேயில்லை. இயேசுவானவர்கூட தன் பரமபிதாவுடன் உறவாடி மகிழ்ந்துகொள்வதற்கு வனாந்தரத்தையும், மலையடிவாரத்தையும், கெத்சமெனே பூங்காவையும் தெரிந்து கொள்ளவில்லையா! அப்படியானால், ஜெபிப்பதற்கு இங்குதான் அங்குதான் என்றில்லாமல் எங்குமே ஜெபிக்கலாம் அல்லவா! ஜெபிக்கும்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமற்ற ஒன்றாகும்.

சாலொமோன் ராஜா தேவனை சாஷ்டாங்கமாய்த் தொழுதுகொண்டான் (2 நாளா.7:3). இயேசுவானவர் முழங்காற்படியிட்டு ஜெபித்தாரே (லூக்.22:41). நாம் எங்கு எப்படி இருந்து ஜெபித்தாலும் அவருடைய செவிகள் நமது கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை (சங்.34:15).

6. எப்போது ஜெபிப்பது?

தூரதேசங்களில் செறிந்து வாழும் நம்மவர் மத்தியில் தொலைபேசி மிகவும் பயனுள்ள ஓர் தொடர்பு சாதனமாக அமைந்துள்ளது. தொலை பேசிமூலம் பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்பவர்கள் பலர் என்று கூறலாம். இந்த வேளைகளில் மணிக்கணக்காய் விட்டகதை பட்டகதையென்று பத்தும் பலதும் பகிர்ந்து கொள்வார்கள். தொடர்பற்ற உறவில் விரிசல் ஏற்படுவது நிஜமல்லவா! இதனைப் போன்றதுதான் தேவனுக்கும் நமக்கும் இடையிலான ஆவிக்குரிய உறவும். பரி.பவுலடிகள் தெசலோனிக்கேய சபை மக்களுக்கு இப்படிக் கூறுகிறார்: “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று. 1 தெச.5:17இன் மூலம் தேவனுடனான உறவை நாம் பெலப்படுத்திக் கொள்ளமுடியும். இதுவே நமது ஆவிக்குரிய தொடர்பு சாதனம் என்றால் அது மிகையாகாது. ஆவிக்குரிய வாழ்க்கை அணையாதிருக்க வேண்டுமானால் ஜெபமென்னும் எண்ணெய் இடைவிடாமல் ஊற்றப் படவேண்டும்.

எப்போது ஜெபிப்பது என்பதற்கு ‘இடைவிடாமல்’ என்பதே தேவனுடைய பதிலாக இருக்கின்றது. இடைவிடா ஜெபத்தின்மூலம் நமக்கு இடையூறான எந்தத் தீயசக்தியையும் முறியடித்து விடமுடியும். மற்றோருடன் உறவாடும்போது நமது இருதயத்திற்குள் உருவாகும் தீய எண்ணம், கசப்பு, பொறாமை, குரோதம் போன்ற பழக்க வழக்கங்களும்கூட இடைவிடா ஜெபத்தினால் சீரமைக்கப்பட ஏதுவாகும். அது மட்டுமல்லாமல், நம்மை இகழ்வோரையும், நிந்திப்போரையும், விரோதிப்போரையும், நேசிக்கக்கூடிய மனவலிமையை இது ஏற்படுத்துகின்றது. தேவனுடன் உறவாடும்போது, மற்றோரின் தேவைகளைக் கூட தேவன் நமக்கு உணர்த்துகின்றார். ஜெபிக்கவும் ஏவுகின்றார். எனவே எப்போதும் இடைவிடாமல் ஜெபிப்போம். விழித்திருப்போம்! பொல்லாங்கனை ஜெயித்திடுவோம்!

அருமையானவர்களே! இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கை நிலையில் நாம் எந்தப் பட்டியலில் நிற்கிறோம்? சிந்தித்துப்பாருங்கள். உங்கள் ஜெப ஜீவியத்திற்கு வல்லமை தேவையென்று உணர்கிறீர்களா? அப்படியானால் ஜெபத்திற்குத் தடையானவைகளை நீக்கி ஒருமனமாக தேவசித்தத்திற்கு முற்றிலுமாக உங்களை ஒப்புக்கொடுங்கள். எங்காவது எப்படியாவது உன் சிருஷ்டி கர்த்தரை நோக்கி இடைவிடாமல் ஜெபிப்பதற்கு இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள். ஜெபமே ஜெயமுள்ள வாழ்க்கையின் அடையாளம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!