Dr.தியோடர் எச்.எஃப்
(செப்டம்பர்-அக்டோபர் 2015)
3. விசுவாசிகளின் எதிரிகளும், அவர்களுடைய தாக்கும் உத்திகளும்
(எபேசியர்6:11, 12,16)
விசுவாசிகளின் முக்கியமான எதிரி யார் என்று எபேசியர் 6:11 இல் கூறப்பட்டுள்ளது. இதே வசனத்தில் பவுலின் கட்டளையும் அடங்கியுள்ளது. “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்”. ‘பிசாசு’ ‘சாத்தான்’ என்றும் அறியப்படுகிறான். எனவே சாத்தான்தான் விசுவாசியின் முக்கியமான எதிரி ஆவான்.
அதிலிருந்து உலக அமைப்புகளும், மாம்சமும் விசுவாசிகளுக்கு எதிரிகளாயிருந்தாலும், அவர்கள் ஆவிக்குரிய போராட்டத்தில் முக்கியமாக எதிர்கொள்ளவேண்டிய முக்கிய எதிரி சாத்தான்தான் என்பதை அறிகிறோம். எபேசியர் 6ஆம் அதிகாரம் குறிப்பிடும் ஆவிக்குரிய போராட்டம் அவனுக்குள்ளிருந்து வருவதில்லை. ஆனால் விசுவாசிக்கு வெளியிலிருந்து வருவதாகும். எபேசியர் நிருபத்தின் ஆரம்பப் பகுதியில் விசுவாசியின் உள்ளான எதிரியாகிய மாம்சத்தை மேற்கொள்ளுவது எப்படி என்று அறிவுரையாக கூறியுள்ளார். இந்த உபதே சங்கள் தெளிவாக எபேசி.4:22 முதல் 24 வரை உள்ள வசனங்களில் இந்த அறிவுரைகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
“அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகுங்கள்” (எபேசி.4:22,23). இப்படிப் பவுல் நம்மிடம் செய்யச் சொன்னதைச் செய்துவிட்டோமானால் நாம் நம்முடைய சுயத்தை அல்லது மாம்சத்தை ஒரு வெற்றி கொள்ளப்பட்ட எதிரி என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும் பழைய தன்மையின் சுபாவங்களின்படி உள்ள ஆசைகளும் விருப்பங்களும் தொடர்ந்து நம்மிடம் இருந்துகொண்டிருக்கின்றன. எனவே நம்முடைய மாம்சம் இத்தகைய பழைய சுபாவத்தின் விருப்பங்களுக்கு இடம் கொடுத்துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நம்முடைய உள்ளான எதிரியை மேற்கொள்வதில் உண்மையுடன் இருந்த நாம் இனி வெளியரங்கமான எதிரிகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய சுயத்தைக் கட்டுப்படுத்தி, நமது சித்தத்துக்கு உட்படுத்தத் தவறிவிட்டால் நாம் சாத்தானை மேற்கொள்வது இயலாத காரியமாகும். நம்முடைய தனிநபர் பிரச்சனைக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் மக்கள் உதாரணமாக, இணையாக வந்துகொண்டிருக்கின்றனர்.
இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் சுய விருப்பங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டும், தேவனுக்கு எதிராக முறுமுறுத்துக் கொண்டும் வனாந்தரத்தில் அலைந்தார்கள். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த வருஷங்களில், தேவனால் அவர்களிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் இஸ்ரவேலர் தேவனுடைய வாக்குத்தத்தத்தையோ, வார்த்தைகளையோ நம்பவில்லை. கீழ்ப்படியவில்லை. தேவனுடைய கட்டளையின்படி கானானுக்குள் பிரவேசிக்கவுமில்லை.
அங்கு குடியிருந்தவர்களைத் துரத்தியடிக்கும்படி யுத்தம் செய்யவும் இல்லை. எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் பழைய தலைமுறையினர் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் வனாந்தரத்தில் மடிந்துபோனார்கள். ஆனால் இஸ்ரவேலில் புதிய தலைமுறையினர் தேவனை விசுவாசித்தார்கள். வனாந்தரத்தைப் பின்னே தள்ளிவிட்டு, முன்னேறி, தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்குள் பிரவேசித்தார்கள். அங்கே அவர்கள் தேவனுக்கும், அவர்களுக்கும் பொதுச் சத்துருக்களாய் இருந்தவர்களுடன் யுத்தம் செய்தார்கள். தேவன் கானான் தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்திருந்தபோதிலும், அவர்கள் அதில் பிரவேசித்து, அங்கு குடியிருந்த மக்களுடன் விசுவாசத்துடன் யுத்தம் செய்து, பிரயாசப்பட்டு பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஏற்கனவே தங்களைக் கட்டுப்படுத்தி தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருந்தபடியால் கானானியருடன் யுத்தம் செய்யும்போது ஜெயங்கொள்ளுகிறவர்களாய் சத்துருக்களை மேற்கொண்டு வெற்றி கண்டு வந்தார்கள்.
இதுபோலவே நாமும் நம் சுயத்தைக் கட்டுப்படுத்தி, தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் இருக்கும்போது, சாத்தான் நம்மைத் தாக்க அவசியம் இல்லை. நாம் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, விசுவாசித்து, விசுவாசத்துடன் வாழ்ந்து வருவோமானால், நாம் சாத்தானின் தாக்குதல்களை உணரமுடியும்.
தேவனை விசுவாசிக்கவும் வேண்டாம். யுத்தத்தில் ஈடுபடவும் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்தார்கள். அவர்களைப் போலவே விசுவாசிகளும் ஆவிக்குரிய வனாந்தரத்தில் இருந்துகொண்டு ஆவிக்குரிய போராட்டங்களைத் தவிர்க்க முடியும். ஆனால் ஒரு விசுவாசி ஆண்டவரைக் கிட்டிச்சேர முன்வரவில்லையானால், அவன் அறியவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிற ஆவிக்குரிய வெற்றியின் சந்தோஷத்தை அவன் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. ஒரு விசுவாசியின் சித்தத்துக்கும், ஆண்டவருடைய சித்தத்துக்கும் இடையே முரண்பாடும், சிக்கலும் ஏற்படலாம். ஆனால் அது எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் ஆவிக்குரிய போராட்டம் அல்ல.
எபேசியர் 6ஆம் அதிகாரம் 10 முதல் 20 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டிருக்கும் போராட்டத்தில் ஆண்டவர் ஏற்கனவே சம்பாதித்துள்ள வெற்றியில் நாமும் பங்கேற்றுக்கொள்ளுகிறோம். சாத்தானைக் கண்டு நாம் பயந்து அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் கிறிஸ்து இயேசு ஏற்கெனவே சாத்தானை மேற்கொண்டு ஜெயம் பெற்றவராகிவிட்டார். அந்த வெற்றியின் மகிழ்ச்சியை மட்டும் நாம் அவருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
பலவானைக் கட்டுதல்
மத்தேயு 12:28 முதல் 30 வரை உள்ள வசனங்கள் ஆவிக்குரிய போராட்டம் பற்றி ஒரு பாடத்தைத் தருகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாத்தானின் வல்லமையைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அதற்கு அவர் அளித்த பதில்: “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” (மத்.12:28-30). ஆண்டவராகிய இயேசு பரிசேயரிடத்தில் தன்னால் பிசாசுகளை எப்படித் துரத்தமுடிகிறது என்பதற்குக் காரணம், தனக்குச் சாத்தானின் மீது அதிகாரம் உண்டு என்பதே என்றார்.
“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்” (வச.30) என்று இயேசு கூறுவது சாத்தானைக் கட்டுவதில் நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து கொள்ளாததைக் குறிக்கிறது. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தபின் அவருடைய சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தம் பரலோகப் பிதாவினண்டையில் ஏறிச்சென்றார். இயேசு சாத்தான் மீது வெற்றிகண்டு, இந்த உலகம் முழுவதற்கும் இரட்சிப்பை சம்பாதித்துத் தந்தார். நம்மில் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் ‘திருச்சபை’ என்னும் அவருடைய சரீரத்தில் அங்கங்கள் ஆகிறோம். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாத்தானால் கட்டப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மனதை சாத்தான் குருடாக்கியுள்ளான் (2கொரி.4:3,4). விசுவாசிகள் என்ற நிலையில் நம்முடைய பொறுப்பு, சாத்தானால் மனம் குருடாக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்பதாகும். ஏனென்றால் இவ்விதமாக நாம் ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபடுகிறோம். சாத்தானை ஜெயங்கொள்ளுவதில் நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து நிற்கிறோம். அதாவது நாம் பலவானை முந்திக் கட்டுகிறோம் (மத்.12:29).
நடுநிலை என்று ஒரு இடம் இங்கு இல்லை. ஒன்றில் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருப்பான்; அல்லது கிறிஸ்துவுக்கு எதிராளியாக இருப்பான் (மத்.12:30). இயேசுகிறிஸ்துவோடு உள்ள தொடர்பில் நடுநிலை என்று ஒரு இடம் இருக்கமுடியாது. யோசுவாவுக்கும், இஸ்ரவேலருக்கும் கானான் தேசத்தைத் தருவதாக வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் அவர் களை நேரில் சென்று அங்கு குடியிருப்பவர்களுடன் யுத்தம் செய்து துரத்தியடித்துவிட்டு, நாட்டைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கூறினார். அதுபோலவே கிறிஸ்து சாத்தானைத் தோற்கடித்து, அவன்மேல் வெற்றிகொண்டு, நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து சாத்தானால் கட்டப்பட்டிருப்பவர்களுக்காக ஜெபம் செய்து, விடுதலை செய்து தேவனுடைய மந்தையில் சேர்ந்து கொள்ளச் செய்யவேண்டும் என்று கூறுகிறார். ஜெபத்தின் மூலம் நாம் கட்டப்பட்டிருக்கிறவர்களைச் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கமுடியும். இப்படி விடுதலையாக்கப் பட்டிருக்கிறவர்களைக் கிறிஸ்துவுக்காகக் கூட்டிச் சேர்க்கமுடியும்.
இஸ்ரவேலர் கானானுக்குள் பிரவேசித்துச் சில வருஷங்கள் ஆனபின்பும் கூட அவர்கள் கானானை முழுவதுமாக சுதந்தரித்துக் கொள்ளவில்லை. அவர்களால் பிடிக்கப்படாத பல பிரதேசங்கள் இருந்தன. அப்பொழுது யோசுவா அவர்களிடம், “.. உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்” (யோசுவா 18:3) என்று கேட்டான். அது போலவே இன்றும் கர்த்தர் விசுவாசிகளில் பலர் ஏன் இன்னும் தங்களை வெற்றியடைந்த கிறிஸ்துவுடன் இணைத்துக்கொண்டு, ஆவிக்குரிய போராட்டம் செய்து, சாத்தானின் பிடியிலிருக்கிற மக்களை விடுவித்து கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க ஏன் முன்வரவில்லை என்று ஆச்சரியப்படுகிறார்.
நம்முடைய போராட்டம் மற்ற மனிதர்களுடனல்ல. சாத்தானுடன் போர் செய்யவேண்டும். எபேசி.6:11 கூறுகிறது: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாக வேண்டும்”. 12 ஆம் வசனத்தில் “..மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல … பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.
(தொடரும்)
மொழியாக்கம்: G.வில்சன்