ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நமக்காக மரிப்பதற்காகவே இவ்வுலகில் மனிதனாக பிறந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாண்டு முழுவதும் சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி பணிகளை ஆதரவாளராக இருந்து தாங்கிய யாவருக்காகவும், விசுவாசப் பங்காளர்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம்.

இப்போதும் மழையினால் மிகவும் பாதிப்படைந்த சென்னை பட்டணத்திற்காகவும் கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்காகவும் நாம் அதிகமாக ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம். நமது பங்காளர் குடும்பங்களில் அநேகர் இந்த இயற்கை சீற்றத்தினாலே பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வேதனையடைகிறோம். அவர்கள் இழந்த எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வதற்கும், தங்களது இயல்பான நிலைக்கு அவர்கள் வருவதற்கும், இந்த இக்கட்டான நிலையில் தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவுகளும் அவர்களுக்கு கிடைப்பதற்கும் பாரத்தோடு ஜெபிக்கிறோம்.

நவம்பர் 28 ஆம் தேதி கோயம்புத்தூர் பங்காளர்களுக்கு அறிவித்திருந்தபடி அன்று மாலை பிஷப் பெக்ஸல் ஹாலில் வைத்து சத்தியவசன கீத ஆராதனை கர்த்தருடைய கிருபையால் ஆசீர்வாதமாக நடைபெற்றது. அநேக பங்காளர்கள் பங்கெடுத்தனர். கீத ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் நன்றி கூறுகிறோம். 2016ஆம் வருட சத்தியவசன காலண்டர் பணிகள் நடந்து வருகின்றன. கொஞ்சம் தாமதம் ஆனாலும் கூடிய விரைவில் அதை பங்காளர்களுக்கு அனுப்புவதற்கு ஜெபத்தோடு முயற்சிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் உள்ள வேதவாசிப்பு அட்டவணைப்படி ஒரு வருடத்திற்குள் பரி.வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்கு எழுதுங்கள்.

இவ்விதழில் மரியாளின் முன்மாதிரியான வாழ்வை விளக்கி அதன் வாயிலாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான சத்தியங்களை Dr.காவூட் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். ஸ்திரீயின் வித்தாக முன்னறிவிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தை Dr.உட்ரோ குரோல் அவர்கள் விளக்கியுள்ளார்கள். சகோதரி சாந்திபொன்னு அவர்கள் தேவன் நம்மேல் வைத்த தமது அநாதி அன்பின் மாண்பை நாம் அனைவரும் அறிந்து அவரைத் துதிக்கும்வண்ணம் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கான அடிப்படை காரணங்களை மறந்துவிட்டு வெறுமனே கொண்ட்டாட்டங்களை மாத்திரம் முக்கியப்படுத்துவது அர்த்தமற்றது என்பதை சகோ.எம்.எஸ்.வசந்குமார் அவர்கள் எழுதிய செய்தி நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. Dr.தியோடர் எச்.எஃப். அவர்களுடைய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர் செய்தி வழக்கம்போல் பிரசுரமாகியுள்ளது. பிறக்கவிருக்கும் புதிய ஆண்டு சந்தோஷகரமாக அமைவதற்கு ஏற்றவாறு சில ஆலோசனை அடங்கிய சிறப்புச் செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரைகள் யாவும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன பங்காளர்கள் நேயர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்