ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தின் மத்திய நாட்களை வரை கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நடத்தி வந்திருக்கிறார். கடந்த மாதங்களில் தேர்வுகளை எழுதின பங்காளர் பிள்ளைகள் யாவருக்காகவும் ஜெபித்தோம். கர்த்தர் நம்மனைவரின் ஜெபத்தையும் கேட்டு பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதின பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற கிருபை செய்திருக்கிறார். அவர்களது மேற்படிப்பு மற்றும் புதிய கல்வியாண்டிற்குள் செல்லும் ஒவ்வொரு பிள்ளைகளையும் கர்த்தர் இவ்வாண்டிலே ஆசீர்வதிக்கவும் ஒவ்வொருவரதுத் தேவைகளையும் கர்த்தர் நிறைவாய் சந்தித்திடவும் தொடர்ந்து  வேண்டுல் செய்கிறோம்.

மே 16ஆம் தேதி நடைபெற்ற நம்முடைய சட்டசபைத் தேர்தலுக்காக நாம் ஜெபித்தோம். சமாதானமான முறையில் தேர்தல் நடந்து முடியவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மக்களுக்கு நன்மை செய்கிற அரசாக திகழ தொடர்ந்து பாரத்தோடு ஜெபிப்போம்.

இவ்வாண்டிலே பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும், வானொலி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தங்கள் ஆதரவான காணிக்கையாலும் ஜெபத்தாலும் இவ்வூழியத்தைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை மையமாக வைத்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். பரி.வேதம் ‘ஒரு நிகரற்ற புத்தகம்’ என்ற தலைப்பில் சகோதரி நேன்சி லே டிமாஸ் அவர்கள் எழுதிய கட்டுரையும், கர்த்தருடைய வார்த்தையின் மூலமாகவே நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதை ‘தேவனுடைய சித்தத்தை அறிவதற்கான சிறந்த வழி’ என்னும் தலைப்பில் சகோ.டேவ் ஒட்லி அவர்கள் எழுதிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. மேலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பலவித மாற்றங்களை சந்திக்கும் இவ்வுலக வாழ்வில் நாம் கடைபிடிக்கவேண்டிய ‘வேதாகமத்தில் தரப்பட்டுள்ள தேவ நியமங்களை’க் குறித்து Bro.D.O.Howard அவர்கள் எழுதிய கட்டுரையும், ‘வேதத்தில் தியானமாயிருத்தல்’ என்பதை விளக்கி வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்களும், கர்த்தருடைய சத்தத்தை எவ்விதமாக கேட்கமுடியும் என்பதை அறிந்துகொள்வதற்கு ‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களும், ‘உறவுகளை’ப் பற்றி வலியுறுத்தி சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், எழுதியுள்ளார்கள். Dr.தியோடர்.எச்.எஃப். அவர்களுடைய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர் செய்தி வழக்கம்போல் பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரைகள் யாவும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்