ஒரு நிகரற்ற புத்தகம்!

நேன்சி லே டிமாஸ்
(மே-ஜுன் 2016)

நான் ஒரு முறை கூடைப்பந்து விளையாட்டு ஒன்றை காணப்போயிருந்தபோது ஒரு சிறு பெண்ணை கவனித்தேன். அவளுடைய சகோதரன் அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவளோ ஒரு புத்தகத்தை மிகக்கவனமாக வாசித்துக்கொண்டிருந்தாள்.

அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த பந்து விளையாட்டை சிறிதும்கூட அவள் பார்க்கவில்லை. அவள் கவனம் முழுவதும் அவள் வாசித்துக்கொண்டிருந்த அந்த புத்தகத்தில் இருந்தது. நான் அவளைப் பார்த்தபோது என் சிறுவயதின் நாட்கள் என் மனதில் வந்தது.

என் சிறு வயதில் நானும் அவளைப் போலவே இருந்ததை நினைவுகூர்ந்தேன். அவளைப்போலவே நானும் புத்தகங்களை வாசிப்பதுண்டு. எப்போதும் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பது என் வழக்கம். என்னைச் சுற்றி எது நடந்து கொண்டு இருந்தாலும் என் கவனம் முழுவதுமாக நான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில்தான் இருக்கும். புத்தகங்கள் வாசிப்பதை நான் மிகவும் விரும்புவேன். அநேக நல்ல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அது மட்டுமல்ல; என் வாலிப நாட்களிலேயே வேத புத்தகத்தின் மேல் ஒரு விருப்பத்தையும் வாஞ்சையையும் வளர்த்துக்கொள்ள தேவன் எனக்கு உதவினார். வேத புத்தகத்தைப் போல மற்றொரு புத்தகத்தை நாம் கண்டுகொள்ளவே முடியாது. ஆகவே தான் ஆங்கிலத்தில் வேதத்தை ‘UNIQUE BOOK’ (நிகரற்ற புத்தகம்) என்று சொல்வதுண்டு. வேதத்திற்கு நிகரான மற்றொரு புத்தகம் கிடையவே கிடையாது. இது மிகவும் உண்மை. எக்காலத்திலும் அதிகமாக விற்கப்படும் ஒரே புத்தகம் வேதம்தான். உலக முழுவதுமாக ஒரு நாளைக்கு விற்பனையாகும் புத்தகங்களில் வேதபுத்தகங்கள் மாத்திரமே அதிகமாக விற்பனை ஆகின்றன. உலக சரித்திரத்தில், அநேக மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட புத்தகம் வேத புத்தகம் ஒன்றுதான். அநேக மக்களால் வாசிக்கப்படுவதும் வேதம்தான். உலக கலாச்சாரம், இலக்கியம், பண்பு மற்றும் கலை உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது வேத புத்தகம்தான்.

பரிசுத்த வேதாகமம் 66 தனித்தனியான புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இவையனைத்தும் ஏறக்குறைய 1500 ஆண்டுகளாக, மிகவும் வேறுபட்ட கலாச்சாரங்கள், பின்னணிகளிலிருந்து வந்த 40 பேரால் எழுதப்பட்டிருக்கின்றன. இவர்களில் இருவர் அரசர்கள், இருவர் ஆசாரியர், ஒருவர் வைத்தியர், சிலர் மீன் பிடிப்பவர்கள், ஒரு சிலர் மேய்ப்பர்கள் ஆவர்.

அப்போஸ்தலர் பவுல் ஒரு பரிசேயரும் வேத அறிஞரும்கூட. மத்தேயு வரி வசூலிக்கும் ஒரு ஆயக்காரர். யோசுவா ஒரு போர்ச் சேவகன். எஸ்றா என்பவர் எழுத்தர். நெகேமியா ஒரு பானபாத்திரக்காரர். இவ்வாறாக வேதத்தில் உள்ள புத்தகங்களின் ஆசிரியர்கள் பலதரப்பட்டவர்கள். 1500 ஆண்டுகளாக 40 பேரால் எழுதப்பட்டிருப்பினும் வேதப் புத்தகத்தில் முரண்பாடுகள் ஒன்றுமில்லை. ஒரே நபரால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் போல இருக்கின்றது. இதை ஒன்றாக இணைத்துக் கட்டியிருப்பது கடவுளின் தன்மையும் அவருடைய இரட்சிப்பின் திட்டமுமே ஆகும். தேவன் மனிதனிடம் கொண்டுள்ள அளவற்ற அன்பே இதின் மையக்கருத்து. ஆகவே அதைச் சார்ந்தே எல்லா புத்தகங்களும் பின்னப்பட்டு இருக்கின்றன.

வேதப் புத்தகம் ஒரு தன்னிகரற்ற புத்தகம் என்பதற்கு அநேக சான்றுகள் உண்டு. அதற்கு ஒரு முக்கியமான சான்று வேதத்தில் காணும் தீர்க்கதரிசனங்கள். எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் கூறப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளில் பல நிறைவேறிவிட்டன, பல நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இன்னும் நிறை வேறி முடிக்காத அநேக தீர்க்கதரிசனங்கள் உண்டு. தேவன் வேதத்தை எழுதின அவரது மக்களுக்கு முன்கூட்டியே வெளிப்படுத்தினவை அவை. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட பல தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டு காலத்தில் நிறைவேறின. பழைய ஏற்பாட்டில் தானியேலின் புத்தகத்தில் அநேக தீர்க்கதரிசனங்களைக் காணமுடியும். அந்தக் காலத்தில் இல்லாத அநேக சாம்ராஜ்யங்களைப் பற்றி சிறு குறிப்புகள்கூட அந்தத் தீர்க்கதரிசனங்களில் காணலாம். இவ்வாறான சாம்ராஜ்யங்கள் உருவானதற்கு பல வருடங்களுக்கு முன்பே அவைகளைப் பற்றி தானியேல் கூறியிருக்கின்றார். பல வருடங்களுக்குப் பின் தோன்றப் போகும் சாம்ராஜ்யங்கள் எப்படி அமையும் என்ற விவரங்களை தானியேல் கூறுவதை வாசிக்கின்றோம்.

மேலும் மேசியாவைப் பற்றி ஏறக்குறைய 300 தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் காணலாம். அவை இயேசுகிறிஸ்துவின் பிறப்பில் நிறைவேறின. இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அவர் பிறப்பின் அம்சங்களை 60 தீர்க்கதரிசனங்கள் விவரமாக அறிவித்திருக்கின்றன.

பழைய ஏற்பாட்டில் அவர் பிறக்கும் இடம், நேரம் முதலியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர் எப்படி பிறப்பார் என்பதுகூட காணலாம். மேலும் அவரது ஊழியம்பற்றியும், அவர் செய்யப்போகும் அதிசயங்கள்பற்றியும், அவர் உபயோகிக்கும் உவமைகளைப் பற்றியும்கூட தீர்க்கதரிசனங்களில் காணலாம். அவர் காட்டிக்கொடுக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சிலுவை மரணம் நடைமுறையில் இல்லாத ஒரு காலத்தில் இயேசு சிலுவையில் அறையப்படுவார் என்ற தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. சங்கீதங்களின் புத்தகத்தில் மேசியா சிலுவையில் அறையப்படுவது பற்றி வாசிக்கின்றோம். அந்த நாட்கள் சிலுவை மரணம் பற்றி மக்கள் கேட்டிராத காலம். மக்கள் சிலுவையில் அறையப்படாத காலம். ஆனாலும் கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் பற்றி சங்கீதங்களில் வாசிக்கின்றோம். அநேகர் இதைக் குறித்து வியப்படைந்து இருக்கின்றனர், இதைப்பற்றி ஆய்வுகளும் நடந்திருக்கின்றன.

பீட்டர் ஸ்டோனர் என்பவர் ‘விஞ்ஞானம் பேசுகிறது’ என்ற தனது புத்தகத்தில் இந்த தீர்க்கதரிசனங்களைப்பற்றியும் அவை நிறைவேறின விதத்தைப்பற்றியும் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதி இருக்கின்றார். தொல் பொருள் ஆராய்ச்சிகளும் வேதத்தில் காணும் சத்தியங்கள் உண்மை என்று வெளிப்படுத்தியிருக்கின்றன. ஒரு யூத தொல்பொருள் ஆராய்ச்சியாளர் “தொல்பொருள் ஆராய்ச்சிகளும், கண்டு பிடிப்புகளும் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு எதிராக ஒன்றும் கூற முடியாது” என்று ஆணித்தரமாக கூறியிருக்கின்றார்.

பழைய ஏற்பாட்டில் காணும் பண்பாடுகளும், நகரங்களும் உண்மையாகவே இருந்திருக்கின்றன என்று சமீபகால கண்டுபிடிப்புகள் மூலம் மக்கள் உணர்ந்தனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடங்களுக்கே சென்று ஆராய்ச்சிகள் நடத்தி வேதத்தில் குறிப்பிட்டவை எல்லாம் உண்மை என்று அறிவித்திருக்கின்றனர். விஞ்ஞான ஆராய்ச்சிகள் யாவுமே தேவனுடைய வார்த்தை உண்மை என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.

வேதம் நம் அலமாரியில் உள்ள ஏனைய புத்தகங்களில் ஒன்றாக கருதப்படலாமா? நாம் வாசிக்கும் கதைப் புத்தகங்கள், பாடப் புத்தகங்களுக்கு சமமாகவோ அதைவிட சற்று முக்கியத்துவம் குறைவாகவோ நம் வேதப்புத்தகத்தை மதிக்கலாமா? அது தேவனுடைய வார்த்தை அல்லவா? தேவனுடைய இதயத்தை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் அல்லவா? அவரே அதை நமக்காக அளித்திருக்கின்றார் அல்லவா?

வேதபுத்தகத்திற்கு நிகர் ஏதுமில்லை. வேதப்புத்தகம் முழுமையின் இருப்பிடம், வாழ்வுக்கு வழி காட்டியாக வேதபுத்தகத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று உங்களை அழைக்கிறேன்.

அநேகர் வேதப்புத்தகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை எனக் கூறுகின்றனர். ஆம், 40 வருடங்களுக்கு மேலாக வாசிக்கும் எனக்கும் புரியாதவை சில உண்டு. இன்றும்கூட எனக்கு சில பாகங்கள் கடினமாகத்தான் தோன்று கின்றன. அநேகமுறை திரும்ப திரும்ப வேதத்தை வாசித்திருக்கின்றேன். ஆனால் அதை முழுமையாக புரிந்துகொண்டேன் என கூற முடியாது. ஆனால் வேதாகமம் புரியவே இல்லை எனக் கூறுபவர்களில் அநேகர் தேவனை அறியாதவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு கிறிஸ்துவோடுகூட உறவு இல்லாதபடியால் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள தேவையான ஆவிக்குரிய திறமை இல்லாமல் இருக்கலாம். மற்றும் சிலர் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதே இல்லை. எனக்கு தொடர்பே இல்லாத தொல்பொருள் துறையைச் சார்ந்த பாடப்புத்தகம் ஒன்றை எடுத்து மேலோட்டமாக நான் வாசித்தேனானால் எனக்கு ஒன்றுமே புரியாது. ஆனால் அதே புத்தகத்தில் முழுகவனத்தையும் செலுத்தி அதிக நேரம் செலவழித்து வாசித்தால் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

தேவன் அருளும் ஞானம் பூமியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் முத்துக்கள் போன்றது என வேதம் கூறுகின்றது. சாலையில் நடந்து போகும்போது வைரமோ, விலையுயர்ந்த கற்களோ, தங்கமோ உங்கள் கால்களில் தட்டுப்படாது. அவைகளை நீங்கள் கண்டுகொள்ள விரும்பினால் பூமியின் ஆழத்தில் தோண்டவேண்டும். கடினமாக உழைக்கவேண்டும். இதைப்போன்று கடினப்பட்டு வேதத்தின் உண்மைகளைக் கண்டுகொள்ள முயலும்போதுதான், அரிய கருத்துக்களைக் காணமுடியும். வேதம் எவ்வளவு சிறந்தது எனவும் உணரமுடியும்; அது வாழ்க்கையையே மாற்றக்கூடியது.

ஆகவே வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று வேதம் வாசிப்பதை தவிர்த்திருப்பீர்களென்றால் தயவுசெய்து சற்று சிந்தித்துப் பாருங்கள். வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். கவனமாக வாசிக்க முயலுங்கள். அப்போது பொக்கிஷங்களைக் காண்பீர்கள். வேதத்தில் அநேக பொக்கிஷங்கள் உண்டு. அவை உங்களை உருவாக்கும், உங்களுக்கு வாழ்வு அளிக்கும். உங்கள் வேதத்தை எடுத்து பொக்கிஷங்களை இன்றே தேட ஆரம்பியுங்கள். நீங்கள் வாசித்த இந்த செய்தி உங்களை வேதம் வாசிக்க தூண்டட்டும். உங்களை ஊக்குவிக்க தேவன் கிருபை பாராட்டுவாராக. தேவனின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்வை நிரப்பும். நீங்கள் சமாதானமான வாழ்வை தேடுபவரானால், இன்றே வேதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பியுங்கள். தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும்.

ஜெபம்: ஆண்டவரே, இந்த விலை மதிப்பற்ற நிகரே இல்லாத வேதப்புத்தகத்திற்காக உம்மை துதிக்கின்றோம். நன்றி செலுத்துகிறோம். எத்தனையோ முறை, இதன் அருமையை உணராமல், ஏதோ ஒரு சாதாரண புத்தகத்தைப்போல அதை கருதி அதற்குரிய மரியாதையையும் கவனத்தையும் செலுத்த தவறியிருக்கின்றேன். உமது வார்த்தையை நாங்கள் நேசித்து, ஆராய்ந்து பார்க்க உதவி செய்யும். அது எங்கள் வாழ்வை மாற்றி அமைக்க அருள் செய்யும், வேதத்தை வாசித்து ஆராய்ந்து அனுபவிக்கத் தெரியாத மக்களுக்காக ஜெபிக்கின்றேன். அதை வாசிப்பதற்கான வாஞ்சையை அருளும்.

வேதத்தை வாசித்துக்கொண்டிருந்தவர்கள், எந்தக் காரணத்தினாலாவது வாசிப்பதை நிறுத்தியிருப்பார்களானால், அவர்களை உணர்த்தும். புதிதாக மறுபடியும் ஆரம்பிக்க கிருபை செய்யும். மறுபடியும் உம்மிடம் வந்து சேரட்டும். உம்மை அறிவதே நித்திய வாழ்வு. உமது வேதமே எங்களை உயிர்ப்பிக்கும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்