வேதாகமத்தில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள தேவ நியமங்கள்

D.O.Howard
(மே-ஜுன் 2016)

வேதாகமம் ஒருநாளும் மாறாத புத்தகமாகும். ஆனால் நாம் வசிப்பது மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு உலகமாகும். மனிதர் அனுசரிக்கும் பழக்கங்களும், அவனது நினைவுகளும் எண்ணங்களும் வருவதும் போவதுமாக இருக்கும்பொழுது, நாகரீக நடை உடை பாவனைகளும் நிலையற்றதாய் மாறிக்கொண்டே இருக்கும்பொழுது, மனிதர் ஈடுபடும் காரியங்களும் மாறிக்கொண்டே இருக்கும்பொழுது, ஒரு விசுவாசி எப்பொழுது எவ்விதம் தன் நிலையிலிருந்து மாற வேண்டும்? எப்பொழுது மாறாமல் இருக்கவேண்டுமென்பதைக் குறித்து இச் செய்தியில் தியானிப்போம்.

விசுவாசிகளை அடிக்கடி சங்கடப்படுத்தும் கேள்விகளில் ஒன்று என்னவென்றால்; நிலையான சத்தியங்களைக் கொண்ட வேதாகமத்தின் வெளிச்சத்தை ஆதாரமாகக் கொண்டு, மாறிக்கொண்டே போகும் உலகப்போக்கிற்கு ஏற்றபடி ஜீவிப்பது எப்படி? மாறிக்கொண்டே போகும் இவ்வுலகத்தில், வேதாகமத்தில் குறிப்பாக சொல்லப்படாத சில விஷயங்களை நாம் சந்திக்கும்பொழுது நம் வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும்? இந்த கேள்விகளைக் கண்டு குழம்பவேண்டியதில்லை.

தேவன் நமது வாழ்வு முறைக்கு வழி காட்டும் வார்த்தைகளையும் நியமங்களையும் வேதாகமத்தில் கொடுத்திருக்கிறார். இந்த நியமங்களை நம்முடைய மனம், உணர்ச்சி, சித்தம் ஆகியவற்றை உபயோகித்து கடைபிடிக்க நம்மிடம் விட்டுவிட்டார். நமது கிறிஸ்தவ நடத்தை ஏதோ ஒரு நபருடைய அபிப்பிராயத்திலிருந்தோ அல்லது மனச்சாட்சியிலிருந்தோ வராமல், நாமே ஆண்டவருடைய வார்த்தையை விளங்கிக் கொள்வதிலிருந்து வருவதற்காக, ஆண்டவர் கொடுத்திருக்கும் வேதாகம நியமங்களை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

நியமம் 1: தகுதியைப் பற்றிய நியமம்

“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது” (1 கொரி.6:12). ஆகையால் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி என்னவென்றால்; “நான் செய்ய விரும்பும் இந்தக்காரியம் எனக்கு தகுதியான நடத்தையா”. மேற்கூறிய வசனத்திற்கு முன்னே எழுதப்பட்ட வசனங்களை வாசிப்பீர்களாகில் பவுல் கொரிந்து சபையினரின் பழைய வாழ்க்கையிலிருந்து ஆண்டவர் அவர்களை மீட்டதைப் பற்றி எழுதியிருப்பதைக் காணலாம்.

மீட்படைந்தவர்களிடமே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. ஆகவே நமக்கு சந்தேகத்திற்கிடமாகத் தோன்றும் காரியம், கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள புதிய உறவிற்கு உகந்ததா? இக்காரியம் என் பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறதா? இதை அனுபவித்தால் என் எதிர்கால நிலை இனிதாயிருக்குமா? ஆகிய இக்கேள்விக்கானப் பதில், நமக்கு தயக்கம் தருமாகில் அதைவிட்டு விலக வேண்டும்.

நியமம் 2: அடிமைப்படுவதைப் பற்றிய நியமம்

“… எல்லாவற்றையும் எனக்கு அனுபவிக்க அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றுக்கும் அடிமைப்படமாட்டேன்” (1கொரி.6:12).

சந்தேகப்படக்கூடிய காரியம் செய்வதால் சரீரம், ஆத்துமா, ஆவிக்கு உண்டாகும் விளைவுகளைப்பற்றி யோசிக்கவேண்டும். ஏனென்றால் நான் என்னை எதுவும் அடிமையாக்க அனுமதிக்கக்கூடாது. இந்த இடத்திலே பவுல் உணவைப்பற்றி பேசுகிறார். அந்தக் காலத்திலே, புகை பிடித்தல், டெலிவிஷன் (T.V), லாகிரி வஸ்துக்கள் (drugs) போன்ற காரியங்களோ பிரச்சனைகளோ இல்லை. இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் எதற்கும் அடிமைப்படக்கூடாது என்ற நியமத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

அடுத்த முறை, புகை பிடிக்கிற ஒருவனை “நீ உன் சாட்சியைக் கெடுக்கிறாய்” என்று சொல்ல விரும்புவாயாகில் உனக்கு காப்பி மேலேயோ, பிரியாணி மேலேயோ மற்றும் எந்த விதத்திலோ உனக்கிருக்கும் அடிமைத்தனத்தைப் பற்றி ஞாபகப்படுத்திக்கொள்! அடிமைத்தனம் கண்கள் மூலமாகவோ, வாயின் மூலமாகவோ நுழையக்கூடும். ஆகவே, அது எதுவாயிருந்தாலும் அதின் விளைவுகளை அறிந்து விலகவேண்டும். சந்தேகம் உண்டாக்கும் காரியங்களை சரியாகப் புரிந்து கொண்டு, ஆண்டவரை விட்டு விலகச் செய்யும் எந்த அடிமைத்தனத்திற்கும் தூரமாகச் செல்ல வேண்டும்.

நியமம் 3: பக்தி விருத்தியைப் பற்றிய நியமம்

“…எல்லாவற்றையும் அநுபவிக்க அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது” (1கொரி.10:23).

இதை வைத்து வேதத்திலே தெளிவாக செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களாயில்லாவிட்டால் அவைகள் சரியானவைகள் என்று பவுல் சொல்லுகிறார் என்று அர்த்தப்படுத்தக்கூடாது. இவர் சந்தேகம் தரும் காரியங்களைக் குறித்தே பேசுகிறார் என்பதை விளங்கிக்கொள்வது அவசியம். கேள்வி என்னவென்றால், “இந்த காரியம் என்னை ஆவியில் வளர்ச்சியடையச் செய்யுமா? அல்லது ஆவியின் வளர்ச்சிக்கும் ஆண்டவருடன், நடப்பதற்கு தடையாயிருக்குமா? கிறிஸ்துவின் மீதிருக்கும் அனலைக் குறைக்குமா? அப்படி செய்யுமென்றால் அதனை நான் மறுக்கவேண்டும். மற்றவர்கள் என்ன செய்தாலும் அதைப்பார்த்து நம் வழியை நிர்ணயிக்கவே கூடாது. இந்த நியமத்தின்படி ஆண்டவர் என்னுடன் என்ன பேசுகிறார் என்பதுதான் முக்கியம்.

நியமம் 4: பலவீனரைக் குறித்த நியமம்

“ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் (Liberty) எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்” (1கொரி.8:9).

பலவீனர் என்பது கிறிஸ்துவுக்குள் இருக்கும் அதிகாரத்தை (Liberty) சரியாய் விளங்கிக்கொள்ளாத கிறிஸ்தவர்களைக் குறிக்கும். பவுல் இருந்த காலத்திலே இது மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறவர்களைக் குறித்ததாகும். நமது நடத்தை அப்படிப்பட்டவர்களை எவ்விதம் பாதிக்கும் என்பதை நாம் சற்று கவனிக்கவேண்டும். இந்த நியமத்தைக் கடைபிடிக்க நாம் செய்ய வேண்டியதென்னவென்றால், கிறிஸ்துவில் உனக்கு இருக்கும் சுயாதீனத்தினால் நீ செய்யும் காரியம் சத்தியத்தை முழுவதும் அறிந்துகொள்ளாத ஒரு சகோதரனுடைய நம்பிக்கையை அசைக்கும்படி செய்யக்கூடாது. இவ்விதம் சந்தேகம் விளைவிக்கும் காரியங்களைவிட்டு விலகுவது கிறிஸ்துவில் இருக்கும் சுயாதீனத்தைக் கைக்கொள்வதை விடச் சிறந்ததாகும்.

நியமம் 5: சாட்சியைக் குறித்த நியமம்

இரட்சிக்கப்படாதவர்களுக்கு முன் இருக்க வேண்டிய சாட்சியின் நியமம். “நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்”(1கொரி.10: 33). இது ஒரு முக்கியமான சத்தியமாகும். எத்தனையோ முறை விசுவாசிகளே, இரட்சிக்கப்படாதவர்களை தங்களது சாட்சிக்கேடான நடத்தையினால் ஆண்டவரிடம் இழுக்க முடியாதபடி செய்துவிடுகிறார்கள். இவ்விதம் கெடுதி செய்த பிறகு அவர்களது மனதை மாற்றுவது மிகவும் கஷ்டம். இன்னார் ஒரு கிறிஸ்தவன் என்றால் அவரிடம் இருந்து எனக்கு எந்தவொரு உபதேசமும் தேவையில்லையென இரட்சிக்கப்படாத அநேகர் சொல்வதைக் கேட்கிறோம்.

எனவே நீ செய்யலாமா; செய்யக்கூடாதா; என்று சந்தேகப்படும் காரியம் மற்றவர்களுக்கு நீ சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு இடையூறாக இருக்குமா என்பதை சோதித்து அதைவிட்டு விலகவேண்டும்.

நியமம் 6: நல்மனசாட்சியின் நியமம்

“கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனசாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே” (1தீமோ.1:5). மனசாட்சியைப் பற்றி சாதாரண மனிதன் விளங்கிக்கொள்ளாத அநேக காரியங்கள் உண்டு. நமது மனசாட்சி நமக்கு பிழையற்ற வழிகாட்டி. இருந்தபோதிலும் ஒரு விசுவாசி தவறு செய்யும்போது அது குற்றம் என்று காட்டுவதற்கு ஆண்டவர் அவனுடைய மனசாட்சியைத் தெளிவாக உபயோகிக்கிறார். மற்றவர்கள் ஒரு விசுவாசியைத் தீர்ப்பு செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனசாட்சி நிச்சயமாய்த் தீர்ப்பளிக்கும்.

ஒரு விசுவாசி ஆண்டவருடைய வார்த்தையில் வளரும்பொழுது, அவனுடைய மனசாட்சி ஆண்டவருடைய சித்தத்தின் தூண்டுதல்களுக்கு மனம்கொடுக்க ஏவுகிறது. அவனது மனசாட்சி மூலம்தான் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தைகளின் நியமங்களை கடைபிடிக்க ஏவுகிறார். ஆகையால் நான் செய்ய விரும்பும் காரியம் அல்லது செய்து கொண்டிருக்கும் காரியம் எனது மனசாட்சிக்கு கஷ்டம் கொடுத்துக் கொண்டிருக்குமேயாகில், அதை விட்டு விலக வேண்டும்.

நியமம் 7: ஸ்தோத்தரிக்கும் நியமம்

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரித்து” (எபே.5:20). நாம் செய்ய விரும்பும் அல்லது செய்துகொண்டு இருக்கும் இக்காரியத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்க முடியுமா? நான் இந்தக் காரியத்தை செய்ய முடியாதாலால் அல்லது இந்த வார்த்தைகளைப் பேச முடிவதால் அல்லது இந்த இடத்திற்குப்போக வழியிருப்பதால் உம்மைத் துதிக்கிறேன் என்று சொல்ல முடிந்தால் அதைச் செய்யுங்கள். அவரை ஸ்தோத்தரிக்க முடியாவிட்டால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்!

மேலே கூறப்பட்ட நியமங்களைத்தவிர, விசுவாசிகளுக்கு வேறே நியமம் இல்லை என்று சொல்லுவதற்கில்லாவிட்டாலும், இவைகளை நீ செய்வதற்கு சந்தேகம் விளைவிக்கும் காரியங்களுக்கு உண்மையாய் உபயோகிப்பாயாகில், உன் நடத்தை என்னதாயிருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ளுவாய். ஆனால் இவைகளை இன்னொரு கிறிஸ்தவனுக்கு அப்படியே உபயோகிக்காதே. சகோதரர் ஒருவர் வேதாகமத்தில் செய்யக்கூடாது என்று திட்டமாய் சொல்லியிருப்பதை சொல்வாரேயானால்மட்டுமே அது தவறு என்று தீர்ப்புசெய்து அவரைத் திருப்புவதற்கு முயற்சி செய். நாம் இந்தச் செய்தியிலே வேதாகமத்தில் கூறப்படாத காரியங்களை செய்வதைப்பற்றி கவனித்தோம். ஆகவே இவைகளைப்பற்றி மற்றவர்களுக்கு தீர்ப்பு செய்கையில் மிக ஜாக்கிரதையாயிருக்கவேண்டும்.

நமக்கு ஆண்டவர் தகாதது என்று காண்பிப்பது மற்ற சகோதரர் ஒருவருக்கு தகாததாய் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக சில சாதாரண காரியங்கள் நம்மைப் பழைய பாவ ஜீவியத்திற்கு இழுத்துச் செல்லக்கூடியதால் நாம் அவைகளைத் தவிர்க்க முயலுவோம். அதே காரியங்கள் மற்றவர்களுக்கும் ஏற்றதல்ல என்று நாம் அவர்களைக் கண்டிப்பது தவறாகும். ஆகவே மேற்கூறிய நியமங்களை உன் ஜீவியத்திலே கையாண்டதினால் கிடைத்த அறிவுறுத்தல்களை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆத்திரப்படாதே. ஏனென்றால், “நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே” (ரோ 14:10).

தேவ ஆவியானவரின் ஆளுகைக்குள்ளாக வாழும் வாழ்க்கை ஒரு விசுவாசியை ஒரு நாளும் நியமங்களை மீறுவதற்கு இழுத்துச் செல்லாது. மாறாக, அது அவனைத் தொடர்ந்து, “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்க” (ரோ. 8:29) உதவி செய்யும்.

சத்தியவசனம்