சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2016)

“போதும்! இனி வேண்டாம்! அதிகம் பார்த்தாச்சு! வெறுப்பாயிருக்கு” கண்கள் குளமாக, குனிந்த தலை நிமிராமல் தொடர்ந்தாள் அந்த இளம்பெண். “கையெடுத்துக் கும்பிடுகிறேன்; இனியும் தாங்கமுடியாது. ஏதாவது வழி கிடைக்குமா? அதைச் சொல்லுங்கோ, நான் செய்யத் தயார்”. கதறி அழுத அந்த அழகான இளம் பெண் தன் முகத்தை என் தோளில் புதைத்து நின்றாள். இவள் எது போதும் என்கிறாள்? எது வேண்டும் என்கிறாள்?

போர் காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களில் அகப்பட்ட இந்த அன்பு மனைவியைச் சந்தேகித்த கணவன், இவளில் அநியாயப் பழி சுமத்திவிட்டான். உயர்குலக் குடும்பமாயிருந்திருந்தால், பணம் பொருள் இருந்திருந்தால், உதவிக்கரம் நீட்டும் உறவுகள் இருந்திருந்தால் இவள் நிலை வித்தியாசமாக இருந்திருக்கும். விவாகரத்து, வேற்று மணம் என்று எதுவும் நடந்திருக்கலாம். ஆனால், கையில் பிஞ்சுக்குழந்தைகள் நாலு; வாழ வழி தெரியாத வெறுமை; உறவுகளும் உலர்ந்துவிட்ட சூழ்நிலை. அவள் எங்கே போவாள்? அவள் தன் கணவனை இன்னமும் நேசித்தாள்; ஆனால் அவனை நம்பவைக்க அவளால் முடியவில்லை. விரக்தி, வேதனை, பசி, சமுதாயத்தில் உலாவரும் நரிகளிடம் தப்ப வேண்டிய அவலநிலை; இளமையுடன் சற்று அழகும் சேர்ந்துவிட்டால் இந்த சமுதாயத்தில் கழுகுக்கண்களுக்குத் தப்பி பிழைப்பது இலகுவல்லவே! இவளது பிளவுபட்ட உறவைச் சரிசெய்து இக்குடும்பத்தை வாழ வைப்பது யார்?

உறவுகளின் பரிதாப நிலை

கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், அயலவர், மாமி மருமகள், சம்பந்தி, இன்னும் ஆசிரியர் மாணவர்கள், மேலதிகாரி ஊழியர்கள், போதகர் சபை மக்கள், அதிபதி தேசத்து மக்கள், என்று தேவன் மனிதனுக்காகத் தந்த அழகான உறவுகள் யாவும் இன்று தள்ளாடி நிற்கின்றன. ஒன்றில், உறவுகள் வெளிப்படையாக உடையும்; அல்லது போலி வேஷம் போட்டு ஏமாற்றும். முந்தியதிலும் பிந்தியது மிகுந்த ஆபத்தானது.

நாட்டிலும், வீட்டிலும், சமூகத்திலும், சபையிலும் மாத்திரமல்ல, மனிதன் இன்று தனக்குள்ளும் தவித்துநிற்கிறான். தன்னைச் சுற்றியிருக்கும் பிரிவு அல்லது பிளவு என்ற வலையில்தான் சிக்கியிருப்பதையே உணரமுடியாத அளவுக்கு, தன்னுடைய பிரச்சனையே இதுதான் என்று கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மனிதன் சுயசந்தோஷத்திலும் பிரச்சனைகளிலும் நாட்களை ஓட்டுகிறான். அவனுக்குள் ஒரு ஓசை, “போதும், இனி வேண்டாம்!” என்று ஒலிக்கிறது. ஆனால் நின்று, செவிமடுத்து, தன் நிலை உணர்ந்து, தன்னுடைய உறவுகளைப் பாதுகாக்கவும் தெரியாமல், “இவள் வேண்டாம், இவன் வேண்டாம், இவர்கள் வேண்டாம்” என்று மேலும் மேலும் உறவுப்பிளவுக்கே இடமளித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையை யார் எடுத்துரைப்பார்?

உறவுப் பிரிவால் உள்ளுக்குள்ளும் வெளியிலும் புழுவாய்த் துடிக்கின்ற ஆண்களும் பெண்களும் நம்மைச் சுற்றிலும் ஏராளமாய் வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் உறவுகளைப் புதுப்பிக்க இவர்களுக்கு யார் உதவி செய்வார்? குடும்ப நீதிமன்றமா? ஆலோசகர்களா? போதகர்களா? நண்பர்களா? “ஒப்புரவாக்க முன்வருகின்றவர்கள் வாழ்விலுள்ள பிசகுகளை வெளிக்கொணர்ந்து முதலில் அவர்களுக்கு ஒப்புரவாகுதலைச் செய்கிறவர்கள் யார்” என்று ஒருமுறை ஒருவர் கேட்டது எனக்கு நியாய மாகப்பட்டது.

உறவுகள் பிளந்தன

நுழைந்து பாவம்:

தேவனாகிய கர்த்தர் சொன்னால் அதற்கு மாற்றீடு உண்டா? ஆதாமும் ஏவாளும் தேவனோடு நல்லுறவில் இருந்து, படைப்பை அனுபவித்து மகிழ்ந்திருந்தனர். ஆனால், ஆதியாகமம் 3ஆம் அதிகாரம் மனிதகுல சரித்திரத்தின் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அதற்கு வித்திட்டவன் சாத்தான் என்றாலும், வேற்றுக்குரலுக்குச் செவிகொடுத்தது மனிதன்தான். தேவனுக்கு மாத்திரமே செவிகொடுப்போம் என்று தீர்மானிக்க முடியாமல், தங்களுக்குத் தாங்களே தீர்மானம் செய்து, பார்க்கக்கூடாததைப் பார்த்து, இச்சித்து, புசித்து, விழுந்தான் மனிதன் பாவத்தில். சாத்தான் சொன்னபடி அவன் சாகவில்லைத்தான்; ஆனால் அவர்களுடைய கண்கள் திறந்தன! அப்போ இதுவரை கண்கள் குருடாயிருந்தா? இல்லை. ஆனால் இப்போ, இதுவரை காணாதவையெல்லாம் அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்தன. இதுவரை உணராத உணர்வுகள் துளிர்த்தெழுந்தன! திறந்த கண்கள் தங்கள் நிர்வாணத்தையே முதலில் கண்டது; இல்லை! அது நிர்வாணம் என்று கண்டது என்பதே உண்மை.

2. வெட்கமும் குற்ற உணர்வும்:

தொடங்கியது மாற்றங்கள். மனிதனுக்குள், அவனுடைய குணாதிசயத்துள் கறைபடிந்தது. அதன் முதல் விளைவாக அவன் வெட்கத்திற்குள்ளானான்; அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய் இருந்தும், தங்களுக்குத் தாங்களும், ஒருவர் அடுத்தவருக்கும் தங்கள் நிர்வாணத்தை மறைக்கவேண்டும் என்ற உணர்வுக்கு இருவரும் ஆளாகினார்கள். இலைகளால் நிர்வாணத்தை, அதாவது தங்கள் செயலின் வெட்கக் கேட்டை மறைக்க முயற்சித்தனர். அந்த வெட்க உணர்வு அப்போதுதான் உண்டானது.

பின்னர் வெட்கமடைந்த மனிதன், தேவனுடைய குரல் கேட்டதும் தன்னைத்தானே ஒளித்துக்கொண்டான். ஏன்? குற்றமுள்ள மனசாட்சி. அப்போதுதான் முதல் முதல் மனித மனசாட்சி குற்ற உணர்வு என்ற ஒரு புதிய வேதனைக்குரிய அனுபவத்துள்ளானது.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பிளந்தது:

தனது அவலநிலையை உணர்ந்த மனிதன், தன்னைப் படைத்த தேவனிடமிருந்து தன்னைத்தானே பிரித்துக்கொண்டான். இங்கே கவனிக்கவேண்டியது: தேவன் அவனை விட்டுப் பிரியவில்லை; அப்படியானால் எல்லாம் தெரிந்திருந்தும் தேவன் அவனைத்தேடி என்றும்போல வந்திருப்பாரா? ஆனால், தன் பாவநிலையினால் தேவனுக்கு முன்னே வரமுடியாத மனிதன் தானே ஓடி ஒளித்துக் கொண்டான். தமது பரிசுத்தத்தின் முன் நிற்க முடியாத மனிதனை அன்புள்ள தேவன் அழித்துவிடவில்லை. அவனை நேசித்து, அந்த ஏதேனைவிட்டே வெளியேற்றினார். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த உன்னதமான உறவு பிளந்தது.

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பிளந்தது:

தேவனுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்தது. ‘ஆதாமே, நான் விலக்கிய கனியைப் புசித்தாயா?’ ‘நீர் தந்த இந்த மனுஷீதான் காரணம்!’ ‘ஸ்திரீயே, நீ இப்படிச் செய்தது என்ன?’ ‘நான் அல்ல; அந்த சர்ப்பம்தான் வஞ்சித்தது!’ ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்தான் மனிதன். ஆம், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த அன்பின் உறவு பிளந்தது.

மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு பிளந்தது:

தேவனுடைய வார்த்தையை மீறி, மனிதன், மனிதனுடைய வார்த்தைக்கு மதிப்பளித்ததால், இதுவரை சந்தோஷ விளைச்சலை மாத்திரமே கொடுத்த பூமி, மனிதனிமித்தம் சபிக்கப்பட்டதாயிற்று. அது முள்ளும் குருக்கும் முளைப்பிக்க ஆரம்பித்தது. ஆம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இருந்த உறவு பிளந்தது.

தேவன் வகுத்திருந்த அநாதி திட்டம்:

தேவன் பேசினார்; மனிதனோடு அல்ல; இந்தப் பிளவுக்கெல்லாம் அடித்தளமிட்ட சாத்தானுடன் பேசினார்; “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்” (ஆதி.3:15). மனிதன் பாவம் செய்து தம்மை விட்டுப் பிரிந்துபோவான், மீண்டும் அவனைத் தம்முடன் ஒப்புரவாக்க ஒரு இரட்சகர் அனுப்பப்படுவார் என்று தேவன் நியமித்தது எப்போ? மனிதன் தம்மைவிட்டுப் பிரிந்த பிற்பாடா? இல்லை. “அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட் டார்” (1பேது.1:20). எத்தனை அன்புள்ள தேவன்!

அப்படியே இயேசுகிறிஸ்து உலகிற்கு வந்தார். ஒப்புரவாகுதலுக்காக தேவஜனம் முன்னர் செலுத்திய அத்தனை பலிகளையும் ஒன்று சேர்த்து, தாமே ஏகபலியாகி, பாவத்திற்கான விலைக்கிரயமாக தமது பரிசுத்த இரத்தத்தையே சிந்தி, மனுக்குலத்தைத் தேவனுடன் ஒப்புரவாக்கினார் இயேசு என்பது நாம் அறிந்திராத புதிய விஷயமல்ல; புதிய சத்தியமுமல்ல. “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோம.5:10). இவ்விதம் நாம் இரட்சிப்படைந்தது, அதாவது பாவத்திலிருந்து விடுதலையடைந்தது மெய்யானால், நாம் இன்னமும் ஆதாமின் குணாதிசயங்களை சுமந்து நிற்பது எப்படி? “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது” (2கொரி.5:17,18).

பிரிவை ஒப்புரவாக்கிய கிறிஸ்து:

இப்படியிருக்க, கிறிஸ்துவின் பிள்ளைகள் நாமே பிரிவுகளுக்குக் காரணராகலாமா? நமக்குள் வேர்விட்டிருந்த வெட்கத்தையும் குற்ற உணர்வையும், அவை நம்மேல் செலுத்திய அதிகாரத்தையும் உரிந்துகொண்டு, யாவையும் வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் வெற்றிசிறந்த (கொலோ. 3:15) இரட்சகருடைய பிள்ளைகள் நாம் இன்னமும் வெட்கத்தையும் குற்ற உணர்வையும் சுமக்கத்தக்கதாக நடக்கலாமா? நாம் இனியும் தேவனைவிட்டுப் பிரிந்து வாழக்கூடாது என்பதற்காகவே, தேவனுடைய முகம் தமக்கு மறைக்கப்படுகின்ற அந்தகாரத்துக்கு கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். நமக்காக அவர் அடைந்த வேதனைக்கு நாம் அளிக்கும் மதிப்புத்தான் என்ன?

எல்லா உறவுகளுக்கும் அடி அஸ்திபாரமாக இருப்பது தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவு. இந்த உறவில் விரிசலும் பிளவும் ஏற்படுமானால், மற்ற எல்லா உறவுகளும் பிளவடைவது உறுதி. எந்த உறவையும் நாம் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே, தாமே பிளவுண்ட கன்மலையாய் நின்று, அந்தப் பிளவிலிருந்து சிந்தப்பட்ட இரத்தத்தால் நம்மை தேவனுடன் ஒப்புரவாக்கிய ஆண்டவருக்கு நாம் என்ன பதிலுரை கொடுக்கப் போகிறோம்?

நம்மிடம் கையளிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் ஊழியம்:

“அதுவல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து” (ரோம.5:11) என்று எழுதிய பவுல், தொடர்ந்து, “அவர் (தேவன்) இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” (2கொரி.5:18) என்றும் எழுதுகிறார். ஒப்புரவாக்குதலின் ஊழியத்தைத் தந்த தேவன் ‘ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும்’ நம்மிடம் ஒப்புவித்துள்ளார். அதுவே இயேசுகிறிஸ்துவின் ‘சுவிசேஷம்’. ஆக, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள பிரிவினைகளை கிறிஸ்துவுக்குள் ஒப்புரவாக்கும் மேன்மையான ஊழியம் இன்று நம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்று இயேசு சிலுவையில் பாடனுபவித்து மரித்தபோது, மனிதன் வேடிக்கை பார்த்திருக்க, இயற்கை குமுறியதை நாம் மறக்கலாகாது. இயற்கை தன் பங்குக்குத் தன் வேதனையை வெளிப்படுத்தியது. அந்த இயற்கை இன்றும் மனுக்குலத்திற்கு எதிராகக் குமுறுகிறது என்றால், இயற்கையைக் குறித்த கவனம், கரிசனை, பாதுகாப்பு, சுத்தமாகப் பேணுதல், பண்படுத்தல் எல்லாமே இன்னமும் மாசுள்ளதாகவே இருக்கிறது என்பது வெளிச்சம். இந்த இயற்கையுடன் உறவைச் சரிப்படுத்து கின்ற பொறுப்பும் இன்றும் நம்மிடமே கையளிக்கப்பட்டுள்ளது.

இயேசு காட்டிய மாதிரி

1. முதல் அடி

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே பிரிந்துபோன உறவை ஒப்புரவாக்க முதல் அடி எடுத்து வைத்தது யார்? இயேசுதானே! பிரிந்து போன மனிதன் திரும்பி வரட்டும் என்று ஆண்டவர் தாமதிக்கவில்லை. “இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது” (2கொரி.5:18) என்று பவுல் எழுதியதிலிருந்து அது விளங்குகிறது. ஆக, நம்மிடையே பிரிந்து போயுள்ள உறவுகளைச் சரிப்படுத்த நாம் தாமதிப்பது ஏன்? ‘மானம் மரியாதை இழந்து நான் போகவேண்டுமா’ என்று வரட்டுக் கெளரவம் பேசுவது நமக்கு அழகல்ல. யார் நம்மை இகழ்ந்தாலும், வேண்டாம் என்று தள்ளினாலும் நமது பங்கை நிறைவேற்ற வேண்டியது நமது பொறுப்பு.

2. பாவி, நீதிமானாகுதல் மாற்றீடாகுமா?

“அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோம.4:25). சொத்துச்சண்டை, குடும்பச்சண்டை போன்றவை சரிசெய்யப்படும்போது, ஒருவருக்கொருவர் சமபங்கைப் பரிமாறுவது வழக்கம். ஆனால், இங்கே, ஒப்புரவாகுதலில் நமக்கும் தேவனுக்கும் இடையே நடந்த பரிமாற்றம் என்ன? பரிசுத்த தேவனைக் கிட்டிச்சேரும்படிக்கு அவருடன் நம்மை ஒப்புரவாக்கியவருக்கு, நம்மை நீதிமான்களாக்கியவருக்கு நாம் கொடுத்தது என்ன? நமது பாவம்; பாவம் மாத்திரமே. பாவத்திற்கு நீதி பரிமாற்றப்படுவது எப்படி? ஆனால் அதைத்தான் தேவன் செய்தார்.

ஆண்டவர் தம்முடைய அதி மேன்மையான நீதியை நமக்குத் தந்து நம்மை நீதிமான்களாக்கினார். நாமோ அதி கீழ்த்தரமான நமது பாவத்தைக் கொடுத்து அவரைச் சிலுவையில் அறைந்தோம். அவர் நமக்காகப் பாவமாக, நாமோ அவருக்குள் நீதிமான்களாக்கப்பட்டோம். என்ன மேன்மை இது!

நமது பொறுப்பில் நாம் தவறலாமா?

ஆக, பிரிந்த உறவுகளைச் சரிசெய்ய நாமே முதல் அடி எடுத்து வைக்கவேண்டியது நமது பொறுப்பு. அடுத்தவர் நமக்கு வெறுப்பையும் பகையையும் கொடுத்தாலும், நமக்கருளப்பட்டுள்ள மாபெரிய பாக்கியமாகிய அன்பை நம்மால் பிறருக்குக் கொடுக்கமுடியுமா? நாமாகப் போய் ஒரு அன்பின் வார்த்தை, ஒரு அன்பின் பரிசு, ஒரு புன்முறுவலாவது நமக்குக் கொடுக்கமுடியுமா?

இன்று நமக்குள், நமது குடும்ப உறவுக்குள் எத்தனை பிரிவுகள்! சபைகள் பிரிந்துபோவது ஒருபுறம் என்றால், சபைகளுக்குள்ளேயே எத்தனை பிளவுகள்! அப்போ நாம் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகள் என்று சொல்லுவது எப்படி? தேவபிள்ளைகள் மத்தியில், தேவ ஊழியர்கள் மத்தியில் மன ஒற்றுமை, இணங்கிப்போகும் தன்மை, தாழ்ந்துபோகும் மனப் பாங்கு, விட்டுக்கொடுக்கும் உன்னதகுணம். மொத்தத்தில் சுமக்கவேண்டிய சிலுவையே கேள்விக்குறியாகிவிட்ட ஒரு கால கட்டத்திற்குள் நாம் இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருக்கும்.

இயேசு சிலுவையில் பூரணமாகச் செய்து முடித்த ஒப்புரவாகுதலை ஏற்று, தேவனுடனான உறவைப் புதுப்பிக்காமல், ஒப்புரவாக்குதலில் ஊழியத்தை நம்மால் எப்படி நிறைவேற்ற முடியும்? தேவனுடன் பிரிந்திருக்கிற மக்களைத் தேவனுடனும், தங்களுக்குள் பிளவுண்டிருக்கிற மக்களை ஒருவருடனொரு வரையும் எப்படி ஒப்புரவாக்கப் போகிறோம்? இயற்கையைக் குறித்து நமக்கிருக்கும் பொறுப்பை எப்படி விளங்க வைக்கமுடியும்?

நாம் ஆரம்பத்தில் பார்த்த அந்த இளம் தாய்போல கண்ணீர் வடிக்கின்ற ஏராளமான பெண்களின் கண்ணீரைத் துடைப்பது யார்? நீதிமன்ற வாசலில் காத்திருக்கும் குடும்ப உறவுகளை, அதிலும் கிறிஸ்தவ உறவுகளைக் குறித்து நமது பொறுப்பு என்ன? வீடுகளிலும் வீதிகளிலும் பிளவுண்ட உறவுகளினாலே அலைந்து திரிகின்ற மக்களை அடையாளம் கண்டு அவர்களைச் சிலுவைக்கு வழிகாட்டுவது யார்? தன் புருஷனுக்குப் பயந்து வேற்று மதப் பெண்மாதிரி உடை உடுத்தி தன் முகத்தை மாத்திரமா, தன்னையே மறைத்து வாழுகின்ற பெண்கள் எத்தனைபேர் நம் மத்தியில் உலா வருகிறார்கள்! தகப்பனுக்கும் அண்ணனுக்கும் சித்தப்பாவுக்கும் தங்களை ஒழித்துக்கொள்ள வகைதெரியாமல் தவிக்கிற பிள்ளைகளைப் பாதுகாப்பது யார்?

போதும்! இனி வேண்டாம்!

‘ஒப்புரவாகுதல்’ இது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பதம். ஆனால், அது எவ்வளவு தூரம் கிறிஸ்தவ வாழ்வில் உண்மையாயிருக்கிறது? அது வெறும் செய்தி மட்டும்தானா? அல்லது வாழ்வுமுறையா? ‘பெரிய வெள்ளி’ காலங்களில் இதைக் குறித்துத் தியானித்துவிட்டு, மறந்துவிட நாம் ஒன்றும் காலநிலைக் கிறிஸ்தவர்கள் அல்ல. ‘ஒப்புரவாகுதல்’ என்ற ஒன்றின் அத்தியாவசிய தேவை ஏற்படக் காரணமான பாவத்தையே சிலுவையில் பரிகரித்து, அதற்கான கிரயமாகத் தமது சொந்த இரத்தத்தையே சிந்தி, தமது ஜீவனை ஈந்து, பாவத்தின் விளைவாய் விஸ்வரூபமெடுத்து மனுக்குலத்தைப் பயமுறுத்திய சாவை வென்று உயிர்த்தெழுந்து, இன்றும் வாழுகின்றவராகிய கிறிஸ்துவின் அந்த உன்னத அன்பின் கிரியையின் பலனை நாமே மூடி மறைத்து விடுவது எப்படி?

ஏராளமான உள்ளங்கள், “போதும்! இனி வேண்டாம்” என்று ஒலமிடுகிறது. அதைப் பாராமுகமாக நாம் இருந்தது ‘போதும்! இனி வேண்டாம்’ என்று நமது இருதயம் நமக்குச் சொல்லட்டும். பிளவுண்ட உறவுகளாலே சிதறிச் சின்னா பின்னமாகி நிற்கிற நமது சகோதர சகோதரிகளின் கண்ணீரைத் துடைக்க முன்வருவோம். சிந்திப்போம். நியாயத்தீர்ப்பிலே நாம் தேவனுக்குக் கணக்கொப்புவிக்க வேண்டியவர்கள் என்பதை மனதில்கொண்டு, நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டது மெய்யென்றால், அதைச் செயலில் காட்ட, நமக்கு விரோதிகள் என்று எண்ணுகிறவர்களுடன் அல்லது நம்மை விரோதிகளாக நினைக்கிறவர்களுடன் நாம் ஒப்புரவாகவும், பிளவுண்டு இருக்கிற உறவுகளை தேவபெலத்துடன் ஒப்புரவாக்கவும் நாம் எழுந்து செல்லுவோமாக.

ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை முன்னெடுக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு நிச்சயம் துணை நிற்பார்.

“அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புர வாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்” (கொலோ.1:20,21).