ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

சிருஷ்க்கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்  இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் இந்நாள் வரையிலும் நம்மை ஆச்சரியமாய் நடத்திவந்திருக்கிறார். ஒரு பாதுகாப்பற்ற பொல்லாத நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொடிய இக்காலங்களில் நடக்கும் சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது ஆண்டவர் மிகவும் சீக்கிரமாகவே வரப்போகிறதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆகவே அவருடைய பிள்ளைகளாகிய நாம் கறை திரையற்ற பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து நம்முடைய சாட்சியினாலும் பரிசுத்த ஜீவியத்தினாலும் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவோம். கர்த்தருடைய வருகைக்கு நாமும் ஆயத்தமாகி மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

நாங்கள் அறிவித்திருந்தபடி ஜூலை 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விசுவாசப் பங்காளர் கூடுகை தேவ ஆசீர்வாதத்தோடு நடைபெற்றது. வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் இயக்குநர் திரு.ஆன்டனி அவர்கள் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள். விசுவாசப் பங்காளர்கள் தங்களது சாட்சிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள். இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய யாவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழில் தேவன் நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியை நம் மனதில் இருத்தும்வண்ணம் ‘குயவனின் கையில்’ என்ற தலைப்பிலான Dr.வாரன் வியர்ஸ்பி அவர்களின் செய்தியும், யோனாவின் வாழ்க்கையிலிருந்து ‘மறு வாய்ப்பு’ என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய செய்தியும், நமது விசுவாச வாழ்க்கைப் பெலப்படும்படியாக, ‘வாலிபத் துடிப்பில் காலேப்’ என்ற தலைப்பில் சகோ.ஜெகராஜ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய செய்தியும், உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம் என்ற செய்தியை வலியுறுத்தி ‘உலகம்’  என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதிய செய்தியும், கிறிஸ்துவின் பணியில் அதிமுக்கியத்துவமான சீஷத்துவப் பணியைக் குறித்து சகோ.காந்தன் அவர்கள் எழுதிய ‘சீஷத்துவ பயணம்’ என்ற தலைப்பிலான செய்தியும், எந்தவொரு ஆக்கத்தையும் ஏற்படுத்தாமல் அழிவையே ஏற்படுத்தக்கூடிய வீண்வார்த்தைகளைப் பேசுவதனால் விளையும் ஆபத்தை உணர்த்தும்வகையில் ‘வீண் வார்த்தை பேசாதீர்கள்’ என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். Dr.தியோடர் எச்.எஃப். அவர்களுடைய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர் செய்தி வழக்கம்போல் பிரசுரமாகியுள்ளது.  இக்கட்டுரைகள்  உங்கள் ஒவ்வொருவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்