குயவனின் கையில்!

Dr.வாரன் வியர்ஸ்பி
(ஜூலை-ஆகஸ்டு 2016)

“குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்” (எரேமியா 18:4).

நாம் களிமண் என்று மேலே கண்ட இந்த வசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது. இவ்வுலக வாழ்வு நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஈவு, அதில் நாம் எதிர்கொள்ளும் மரணம் இவ்வுலக வாழ்க்கையின் முடிவு. “நீ மண்ணாயிருக்கிறாய்; மண்ணுக்குத் திரும்புவாய்” (ஆதி.3:19) என்ற வசனம் இதற்கு ஆதாரமாயிருக்கிறது. களிமண் ஒரு பலவீனமான வஸ்து, ஆனால் அதில் பல திறன் மறைந்திருக்கிறது. இவ்வுலகில் பிறக்கும் குழந்தை பலவீனமானதுதான்; ஆனால் அது எப்படிப்பட்ட மகனாக, மகளாக வளர்ந்து வரும் என்பது யாருக்கும் தெரியாது.

களிமண்ணினால் செய்யப்பட்ட ஒரு ஜாடி மதிப்புள்ளது அல்ல, ஆனால் அதின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பொருளை வைத்து அதற்கு மதிப்பு உண்டாகிறது. நாம் தேவசாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். தேவ ஒத்தாசை இல்லாமல், நம்மால் இயலக்கூடிய காரியம் எது என கண்டுபிடிக்கவோ, அல்லது திறமைகளை சாதிக்கவோ நம்மால் முடியாது. அதைக் கண்டுபிடிக்க, பலவீனமான இந்த களி மண்ணுக்கு தேவனுடைய வல்லமையையும், ஞானமும் தேவைப்படுகிறது. தேவனே குயவன் என்பதை நமக்கு இது நினைப்பூட்டுகிறது.

“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணிலே உருவாக்கினார்” (ஆதி 2:7). தனது வேலையில் ஈடுபட்டிருக்கும் குயவனின் தோற்றத்தை இவ்வசனம் நமக்கு வெளிக்காட்டுகிறது. தேவனாகிய கர்த்தர் சர்வவியாபி, அவர் நமது வாழ்க்கையை திட்டமிடுகிறார். அவருக்கு பிரியமானபடி நம்மை உண்டாக்குகிறார். ஆகவே, கட்டுப்பாடுள்ள இவ்வுலகத்தில் உதவியற்றவராக நாம் இருப்பதாக இதன் மூலம் விளங்கிக்கொள்ளக்கூடாது. தேவன் நமக்காக வைத்திருக்கும் நியமனங்களின்படி நடந்து அவருக்கு ஒத்துழைப்பதன் மூலம் அவர் நம் வாழ்க்கையை உருவாக்கும்படி நாம் விட்டுக் கொடுக்க வேண்டும்.

இயேசு சொல்கிறார்: “எருசலேமே, எருசலேமே, ….எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” (லூக். 13:31) என்று அங்கலாய்த்தாலும், அதே ஆண்டவர் “தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1யோ.4:8) என்றும் கூறுகிறார். அவரது கட்டளைகளே அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பிற்கு சாட்சியிடுகிறது. எனவே தேவ சித்தத்தைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. குயவனின் சக்கரத்தை நாம் சுற்றி விட வேண்டியதில்லை, ஆனால் அதே வேளையில், அவரது பலத்த கரத்திற்குள் நம்மை நாம் அர்ப்பணிக்கவேண்டும். தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்வதாக பெருமை பேசும் மக்களை நாம் பார்க்கிறோம். ஆனால், “எப்போதும் தேவனால் உருவாக்கப்படுவதே மேலானது” என்று நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

குயவனின் சக்கரம் மனிதனுடைய வாழ்க்கையை நமக்குக் காட்டுகிறது. தேவன் வாழ்வின் செயல்களை ஒழுங்குபடுத்துகிறார். அதினால் நாம்  நமக்கும், மற்றவர்களுக்கும், வாழ்க்கையானது அளிக்கும் சந்தர்ப்பங்களையும் அறிந்து கொள்கிறோம். “நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” (எபே.2:10). ஆம், நாம் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது அவர் நமக்காக ஆயத்தம்பண்ணினதைப் பெற்றுக்கொள்ள தேவன் நம்மை ஆயத்தப்படுத்துவார்.

தீர்க்கத்தரிசி எரேமியாவால் தரிசனமாகப் பார்க்கப்பட்ட சக்கரத்தில் வைக்கப்பட்டிருந்த களிமண், குயவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அநேகமுறை தடை செய்தது. எனவே குயவன் அதை எடுத்து தூர எரிய வேண்டியதிருந்தது. ஆனால், குயவன் தொடர்ந்து வேலை செய்து அதை “திரும்பவும் வனைந்தான்”. தேவன் ஒருபோதும் நம்மை சரிசெய்யாமல் விட்டுவிடமாட்டார். மோசே, தாவீது, யோனா, பேதுரு, யோவான், மாற்கு மற்றும் பல தேவ தாசர்கள் தங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்தாலும், மீண்டும் தேவனுக்கு தங்களை அர்ப்பணித்து, தேவனுடைய சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றியடைந்தனர். குயவனே பொறுப்பாளர்; நாம் அவருக்குள் அடங்கியிருக்கும்போது அவர் நமக்காக திட்டம்பண்ணி வைத்திருப்பதை அடைந்துகொள்ள அவர் உதவி செய்வார்.

எரேமியாவின் அனுபவங்கள், “வெற்றி என்றால் என்ன” என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆண்டவரிடம் சரணாகதி அடைவதும், அவரது சித்தத்திற்கு கீழ்ப்படிவதுமே வாழ்வில் நாம் வெற்றியடைய உதவுகிறது. (ரோமர் 12:1-3) அவர் விரும்புகிறபடி நம்மை வனைய அவரை அனுமதிப்போம். நாம் தோல்வியடையும்போது, மறுபடியும் நம்மை உருவாக்கும்படி அவரிடம் கேட்போம். தொடர்ந்து சேவைசெய்வோம். கெட்டுப்போன பாத்திரமானது இன்னும் குயவனின் கரத்திலேயே இருக்கிறது. தேவன் நம்மை உருவாக்குகிறார். பாவம் நம்மை உடைக்கிறது. ஆனால் குயவன் நம்மை சீர்ப்படுத்தி நம்மில் செயலாற்றுகிறார்.

ஊனமுற்ற ஒரு விசுவாசி போதகர்  ஒருவரிடம், “ஆண்டவர் ஏன் என்னை இவ்வாறு உருவாக்கினார்” என்று கேட்டாராம். அதற்கு போதகர், “அவர் உன்னை இன்னும் உருவாக்கவில்லை – அவர் உன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்” என பதிலளித்தாராம். குயவன் தான் வனைந்த பாத்திரம் ஒவ்வொன்றையும் எடுத்து உலைக் களத்தில் வைக்கிறார். அங்கே அப்பாத்திரம் கவனமாக உறுதிப்படுத்தப்பட்டு முழுமையாக்கப்படுகிறது. இல்லையென்றால் வனையப்பட்ட பாத்திரம் உபயோகமற்றதாயிருக்கும். உலைக்களத்தின் அனுபவத்தை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் நமது வாழ்க்கை தேவனுடைய சித்தத்தில் ஸ்திரப்பட அந்த அனுபவம் நமக்குத் தேவையாயிருக்கிறது.

ஆண்டவருடைய சீஷனாயிருந்த யூதாஸ் குயவனுடைய கரத்திலே தன்னை அர்ப்பணிக் காததினால் அவமானமான சாவை சந்தித்தான். அந்த நாட்களில் சபைத்தலைவர்கள், யூதாஸ் திருப்பிக்கொடுத்த வெள்ளிக்காசுகளைக் கொண்டு, ஒரு குயவனின் வயலை வாங்கி அதை அந்நியர்களை அடக்கம் செய்யும்  ஒரு கல்லறை பூமியாக்கினார்கள். என்ன பரிதாபமான முடிவு! குயவனிடம் தன்னை அர்ப்பணிப்பது என்றால் என்னவென்பதை யூதாஸ் அறிந்திருக்கவில்லை.

உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் தவறும் போது, உங்களை குயவனிடம் அர்ப்பணித்து, அவர் மறுபடியும் உங்களை வனைவார் என விசுவாசித்து வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் தேவனுடைய பார்வையில் வெற்றி அடைந்தவராக காணப்படுவீர்கள். அப்படிப்பட்ட வெற்றியுள்ள வாழ்க்கை வாழ தேவன்தாமே உங்களுக்கு அனுக்கிரகம் செய்வாராக!

மொழியாக்கம்: Bro.குணசேகரன்

சத்தியவசனம்