மறுவாய்ப்பு

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2016)

நமது தேவன் இரக்கமும் மனதுருக்கமும் அன்புமுள்ளவர். நம்முடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அவர் கொடுப்பவர் என்பதை நாம் யாவரும் அறிந்துகொள்ள வேண்டும். இதனை தீர்க்கதரிசியான யோனாவின் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளுகிறோம்.

“அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:  நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்” (யோனா 1: 1-2).

யோனா தீர்க்கதரிசிக்கு இங்கே ஒரு கட்டளைத் தரப்படுகிறது. அது கர்த்தரிடமிருந்து வந்தது. யோனா செல்ல விரும்பாத ஓர் இடம் நினிவே. ஆனால் கர்த்தர் அவரை அங்கே செல்லக் கட்டளையிட்டார். தேவன் நமக்கு ஒரு கட்டளை கொடுத்தால் நாம் அதற்குக் கீழ்ப்படியவேண்டும் அல்லது அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கவேண்டும். அதாவது நாம் தேவனுக்குக் கீழ்ப்படிய சம்மதிக்கவேண்டும் அல்லது மறுக்கவேண்டும். இங்கே யோனா கீழ்ப்படிவதுபோல் ஆரம்பிக்கிறார். ஆனால் அவர் அதற்குக் கீழ்ப்படியவில்லை என்பது நாம் யாவரும் அறிந்ததே.  அவருக்கு ஆணையிட்டது கர்த்தர். அந்த ஆணையானது “எழுந்து நினிவேக்கு விரோதமாகப் பிரசங்கி” என்பதாகும்.

நினிவே ஒரு தனி நகரம் அல்ல; அது அசீரிய நாட்டிலிருந்த ஒரு பெரிய நகரம். அதைச் சுற்றிலும் அநேக பட்டணங்கள் உண்டு. எனவே அது மகாநகரம் என அழைக்கப்பட்டது. மகாநகரமாகிய நினிவேயின் சுற்றளவு சுமார் 60 மைல் ஆகும். பூமியிலே மிகவும் அக்கிரமக்காரர்களாக எண்ணப்பட்ட அந்த மக்கள் மத்தியில் சென்று தேவ எச்சரிப்பைக் கூறி மனந்திரும்புதலை அறிவிக்க யோனா அழைக்கப்பட்டார். அவர்கள் மிகவும் கொடிய தீயவர்களான புறமதத்து மக்கள். இந்த அசீரியர்களே சிலுவை மரண தண்டனையை உண்டாக்கினவர்கள் எனவும் சிலர் நினைக்கின்றனர்.

கர்த்தர் யோனாவை நினிவேக்கு போகச் சொன்னபொழுது அவர் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. “அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்” (வச.3).

500 மைல் தொலைவிலுள்ள நினிவேக்குச் செல்வதற்குப் பதிலாக யோனா ஒரு கப்பலில் கூலி கொடுத்து அப்பட்டணத்துக்கு எதிர் திசையில் 2000 மைல் தொலைவிலிருந்த தர்ஷீசு பட்டணத்துக்குச் சென்றார். இந்த தர்ஷீஸ் பட்டணம் எங்கே இருந்தது என நமக்குத் தெரியவில்லை. அது ஸ்பெயின் தேசத்தின் கடற்கரையிலிருந்த ஒரு பட்டணம் என்கின்றனர். யோனா கர்த்தரிடமிருந்து விலகி தவறான ஒரு பாதையில் சென்றார். அவர் ஆரம்பத்திலிருந்தே தவறான வழியில் சென்ற ஒரு தீர்க்கதரிசியாவார்.

உங்களுடைய வாழ்விலும்கூட தேவனுடைய வழியை விட்டு விலகியோடும் அநேக மக்களை கவனித்திருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கிலிருந்து வந்த எனது மாணவியாயிருந்த ஓர் இளம்பெண் தன்னுடைய சாட்சியைக் கூறினாள். அவள் கூறியதாவது: “என்னுடைய வாலிப வயதில் நான் தேவனை விட்டு தூரமாய் விலகியே வாழ்ந்தேன். நான் வேதாகமக் கல்லூரியில் படிக்கவேண்டும் என்பதே என்னுடைய பெற்றோரின் விருப்பமாயிருந்தது. அதைத் தவிர மற்ற யாவையும் செய்ய நான் ஆயத்தமாயிருந்தேன். எனவே நான் வீட்டிலிருந்து கிளம்பி கலிபோர்னியாவுக்குச் சென்றேன். தேவனை விட்டு விலகி இயேசுவிடம் ஓடிச் செல்ல நேர்ந்தது. நான் எதிர்பாராத அற்புதமான காரியம் அது. தேவன் என்னைச் சந்தித்தார்.” கிழக்கே சில நூறு மைல்கள் இருந்த இடத்துக்குச் செல்ல அவளுடைய பெற்றோர் விரும்பினர். ஆனால் அவளோ பல்லாயிரம் மைல்களுக்கு மேற்கே சென்றாள். சிலவேளைகளில் தேவன் நம்மிலும் இவ்விதமாகவே செயல்படுகிறார். நாம் ஆலயத்தில் இருந்தாலும் தேவனைவிட்டு விலகியிருக்கிறோம். நம்மை நினிவேக்குப் போக தேவன் விரும்பும் பொழுது நாம் தர்ஷீசுக்குப் போகிறவர்களாகக் காணப்படுகிறோம்.

யோனா தன்னிச்சைப்படி செல்வதை வசனம் 4இல் காண்கிறோம். “கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.” அந்த காற்று தானாக உருவாகவில்லை. கர்த்தரே அப்பெருங்காற்றை வரவிட்டார். இங்கு தேவன் அந்த காற்றைச் சுற்றிவிட்டார் என்ற பொருளுடைய எபிரெய வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் அக்காற்றை யோனா சென்ற கப்பலின் மீது மோதவிட்டார். இது சாதாரண புயல்காற்று அல்ல; யோனா என்கிற ஒரு தீர்க்கதரிசியின் நிமித்தம் எழுந்த தேவ கோபம் இந்தத் தனிக்கப்பலின் மீது மோதியது. வசனம் 5 இல் அவர்கள் கப்பலை லேசாக்க முயற்சித்தனர். வசனம் 6 இல் அவர்கள் தங்கள் தங்கள் தேவனை நோக்கி வேண்டுதல் செய்தனர். இந்த ஆபத்துக்குக் காரணம் அறிய முயற்சித்தனர். “அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப் போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப் போட்டார்கள்” (யோனா 1:7). இப்பெருங்காற்றிலிருந்து தப்ப அநேக முயற்சிகள் எடுத்தனர். இறுதியில் அதற்கு மூலகாரணம் தங்களது சக பயணியே என்பதை அறிந்துகொண்டனர். உண்மையில் அது தேவன் அனுப்பிய பயணியான தேவ மனிதர் யோனாதான் அப்புயலுக்குக் காரணம் என அவர்கள் அறிந்து கொண்டனர்.

கப்பலிலிருந்த யோனாவை சமுத்திரத்தில் போட்டுவிட்டனர். யோனாவை விழுங்கும்படி கர்த்தர் ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயற்றிலே யோனா இராப் பகல் மூன்று நாள் இருந்தார். யோனா கொந்தளிக்கும் கடலில் விழுந்தாலும் அவரைக் காப்பாற்ற தேவன் ஒரு மீனுக்குக் கட்டளையிட்டார். அந்த மீன் அவரை விழுங்கியது. இந்த மீனின் வயிற்றில் யோனா இரவும் பகலும் மூன்று நாள் இருந்தார்.

இரண்டாம் அதிகாரத்தில் மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் விண்ணப்பத்தை நாம் வாசிக்கிறோம். கீழ்ப்படியாத பாவத்துக்கு விளைவுகள் உண்டு என்பதை யோனா அங்கு கற்றுக்கொண்டார். “கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி” என்ற சொற்றொடர் இருமுறை வருவதை நாம் கவனிக்கலாம் (வச3). தர்ஷீசுக்குப் போக பயணச்சீட்டு வாங்கிய யோனாவால் கர்த்தருடைய சமுகத்தை விட்டு விலகமுடியவில்லை. “உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” என்று சங்கீதம் 139:7-10 தெளிவாக விளக்குகிறது.

உங்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளைவிட்டு ஓடுவது தீர்வைத் தராது. தன் பாவத்தை உணர்ந்த யோனா தேவனிடம் அறிக்கையிடுகிறார். மூன்றாம் அதிகாரத்தில் தேவன் யோனாவின் உதவிக்கு வருகிறார். தேவன் அனுப்பிய மீன் யோனாவை பாதுகாத்து அவருக்கு மறுவாய்ப்பு கொடுப்பதற்காக கரையில் கக்கிவிட்டது. சிலவேளைகளில் பயங்கரமான காரியங்கள் உங்களுக்கு நேரிடுமெனில் யோனாவை நினைத்துக் கொள்ளுங்கள். அவைகள் உங்களைப் பாதுகாத்து மீண்டும் ஆரம்பிக்க மற்றொரு வாய்ப்பைத் தரும் நிகழ்வுகளாக அமையும். நம் அனைவருடைய வாழ்விலும் தேவனுடைய வார்த்தை நமக்கு மீண்டும் வரவேண்டிய தருணங்கள் உண்டு.

மூன்றாம் அதிகாரத்தில் யோனா மீண்டும் தன் பணியைத் தொடருகிறார். இவ்வுலகில் அநேக மக்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியவர்களாய் உள்ளனர். ஒருவேளை அவர்களில் நீங்களும் ஒருவராய் இருக்கலாம். நீங்கள் விரும்பியபடி உங்கள் திருமண வாழ்வோ, உலகப்பணியோ கிடைக்காமல் போகலாம். ஒருவேளை நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாதவராய் இருப்பீர்களாயின் நீங்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். தேவன் மறுபடியும் ஒரு வாய்ப்பினை உங்களுக்குத் தருகிறார்.

“இயேசுவை நம்பி அவர் பாதையில் நீ நடக்கும்பொழுது
அவர் கரம் உன்னை நடத்துவதை உணரலாம்,
ஆனால் நீ பாதை மாறி செல்வாயானால்,
திருந்தி மீண்டும் ஆரம்பி.

இரண்டாம் வாய்ப்பு உங்களுக்குத் தேவைப் படுமெனில், தேவன் உங்களுக்கு அதனைத் தந்தால், உங்கள் கவனத்தை யோனா புத்தகத்திலிருந்து எரேமியா புத்தகத்துக்குத் திருப்ப விரும்புகிறேன். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 18ம் அதிகாரம் முதல் நான்கு வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் ஒன்று.

“கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்து கொண்டிருந்தான். குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்”.

நாமும்கூட அநேக நேரங்களில் பரம குயவரிடம் சென்று என்னை வேறுவிதமாக வனையும் என்று கேட்பதுண்டு. ஆனால் அது உடனடியாக நடந்து விடாது. குயவன் கையிலுள்ள களிமண்ணானது அசுத்தமில்லாமல், தூசியில்லாமல் (குயவன் அந்த அழுக்குகள் யாவையும் எடுத்துவிடுவார்) இருந்தால்மாத்திரமே அது வனைவதற்கு எளிதாக அமையும். உங்களுடைய பழைய வாழ்வு எப்படி இருந்தாலும் தேவனிடம் அர்ப்பணிக்கும்பொழுது அவர் அதை சிறப்பானதாய் மாற்றுவார்.

குயவன் கையிலிருந்த களிமண் முதன் முறை கெட்டுப்போனது போல உங்கள் வாழ்வும் சீர்கெட்டிருந்தால் மீண்டும் பரம குயவர் கரத்தில் கொடுத்துவிடுங்கள். நீங்கள் 17 வயதிலிருந்தால் அந்த நேரம் மிக நல்லது. அநேக பாவங்கள் செய்ய வாய்ப்புகள் உண்டு. எனவே தேவன் உங்களை மாற்ற தேவனிடம் கேளுங்கள். உங்கள் எதிர்கால வாழ்வு செழிப்பானதாக அமையும். நீங்கள் 71 வயதிலிருந்தாலும் பல பாவங்கள் செய்ய முடியும். தேவன் உங்களை மீண்டுமாக திருத்தமாய் தமக்கு உபயோகமான பாத்திரமாய் வனைந்து கொள் ளுவார். ஏனெனில் தேவன் மீண்டும் ஒரு வாய்ப்பு தருபவர்.

இங்கு யோனாவுக்கு நடந்தது இதுதான். கர்த்தர் அவரை நினிவேக்குச் செல்ல இரண்டாம் முறை கட்டளையிட்டார். அவரும் கீழ்ப்படிந்தவராய் அங்கு சென்று பிரசங்கம் பண்ணினார். யோனா 3:1இல் அவர் மாற்றம் பெற்ற தீர்க்கதரிசியாகக் காணப்படுகிறார். கர்த்தர் தனக்குச் சொன்னவற்றைச் செய்ய அவர் தயாராய் இருந்தார். மத்திய கிழக்கு நாட்டிலிருந்த பாபிலோனைவிட நினிவே ஒரு பெரிய நகரம். அதன் மதிற்சுவர்கள் 100 அடி உயரமானவை. அம்மதிலின் மீது ஒரே சமயத்தில் மூன்று இரதங்கள் அருகருகே ஓடும் அளவுக்கு அகலமானவை. அக்காலத்தில் விமானப்படைகள் கிடையாது. எனவே பிரதான வாயில் வழியாகவே உள்ளே செல்லவேண்டும். அவ்வாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு உண்டு. யாராலும் வெல்லமுடியாத அளவுக்கு அது வலிமை வாய்ந்த ஒரு நகரமாய் இருந்தது. நகரத்தின் நடுவே நிர்வாக மாவட்டம் அமைந்திருந்தது. அது 30-60 மைல் விஸ்தாரமாய் இருந்தது.

அந்நகரத்தில் இருந்த ஓர் அரண்மனை அகழ் வாராய்ச்சியினரால் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் சுவர்களில் வெண்சலவைக்கல் மற்றும் விலையுயர்ந்த கற்களால் செதுக்கப்பட்ட சிலைகள் காணப்படுகின்றன. மிகப் பெரிய களிமண் நூலகமும் கண்டெடுக்கப்பட்டது. யோனா இந்நகரத்துக்குச் சென்று, மக்கள் தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு மனந்திரும்பவேண்டும் என்று பிரசங்கித்தார். மிகச் சிறிய பிரசங்கம்தான். ஆனால் மாபெரும் எழுப்புதல் நடந்தது. உங்கள் சபையின் போதகரும் இதுபோன்றதோர் பிரசங்கம் செய்வாரானால் இதே போன்ற மனந்திரும்புதல் விளையுமா? உங்கள் போதகரும் இவ்விதம் செய்யமாட்டார்; அவ்விதம் செய்தாலும் இதே போன்ற விளை வையும் அது தராது.

தேவன் நினிவே மனந்திரும்ப ஆயத்தம் பண்ணியிருந்தார். யோனாவின் இந்த பிரசங்கத்தால் மக்கள் தங்கள் பாவத்தைவிட்டு திரும்பினார்கள் என்று நான்காம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. யோனா தேவன்மேல் கடுங்கோபம் கொண்டார். “நீர் இரக்கமுள்ள தேவன் என்பதையும் இவர்களை மன்னிப்பீர் என்பதையும் நான் அறிவேன். நீர் எனக்கு மறுவாய்ப்பு தந்தீர். நான் உமக்குக் கீழ்ப்படிந்தேன்; ஆனால் இம்மக்களைக் குறித்து நான் மகிழ்ச்சியடைய மாட்டேன்” என்று அவர் கர்த்தர் மேல் எரிச்சலுற்றார்.

இது நமக்கு போதிப்பது யாது? தேவன் நமக்கு மறுவாய்ப்பு அருளுகிறார். நாம் முறுமுறுப்பில்லாமல் கீழ்ப்படிய வேண்டும். தேவன் நமக்கு ஒரு புதிய எழுத்துப் பலகையைத் தருகிறார். அதில் நாம் கிறுக்கி வைக்கும்பொழுது அவர் அதை மீண்டும் சுத்தப்படுத்தி தெளிவாகத் தருகிறார். நாம் அதனை மீண்டும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

யோனா விசனமடைந்தவராய் நகரத்தின் அழிவைக் காண்பதற்காய் ஒரு குடிசையின் நிழலில் உட்கார்ந்தார். மறுவாய்ப்பு கிடைத்த யோனா அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்