வாலிபத் துடிப்பில் காலேப்!

சகோ.ஜெகராஜ்
(ஜூலை-ஆகஸ்டு 2016)

பொதுவாக, வயதான காலத்தில் ஓய்வு எடுக்க விரும்புவது சகஜம். ஆனால் உண்மையான சேவகனாக சேவையிலிருந்து ஓய்வு பெறாமல், தேவனை சேவிப்பதிலிருந்து நான் ஒருபோதும் ஓய்வு பெறமாட்டேன் என்கிறதான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த காலேபின் இரகசியம்தான் என்ன? பிறரின் அவிசுவாசத்தின் மத்தியில் ஏறத்தாழ 45 வருடங்கள் பாடுகளை அனுபவிக்கவும், கசப்பு இல்லாமல் தேவனை ஆராதிக்கவும் அவரால் முடிந்தது எப்படி? வெற்றியின் இரகசியம் அவனுக்குரியதா? அல்லது அவனுக்குள் இருந்த அல்லது அவனோடிருந்த தேவனுக்குரியதா?

“எப்படி ஆரம்பிக்கிறோம் என்பதைவிட எவ்வாறு முடிக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம்” – என்று ஒரு கூற்றுண்டு. ஆனால், காலேபின் வாழ்க்கை வெற்றி பெற அவரது ‘ஆரம்பம்’ மிக முக்கியமானது. வயதான காலத்தில், அநேகர் ஓய்வெடுக்க, சொகுசான, பிரச்சனையின்றி அமைதியாக வாழவே நினைக்கும் காலத்தில் காலேப் 85 வயதிலும் போரிடுகின்றார் என்றால் அவரது ஆரம்ப வாழ்க்கையை ஆராய்வது அத்தியாவசியம்.

தலைவனாக இருப்பவன் மற்றவர்களில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். காலேபின் தாக்கமுள்ள வாலிப வாழ்க்கையில் “விசுவாசம்” பெரிதான பங்கு வகித்தது. கிறிஸ்தவ தலைவனின் முதிர்ச்சி அவரது விசுவாச வளர்ச்சியில் தங்கியிருக்கின்றது.

விசுவாசம் சரியான தெய்வீக கண்ணோக்கைக் கொடுக்கிறது:

எண்ணா.14:6-9. மற்றைய 10 வேவுக்காரர் “அது பாலும் தேனும் ஓடும் தேசம்தான், ஆனால் நம்மைவிட பலசாலிகளுண்டு” என செய்தியை கூறி மக்களை கலங்கச் செய்கையில், அந்த நாட்டின் நன்மைகளை, தேவனது தன்மையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணாதிருக்கவும், கானானிலுள்ள மக்களுக்கு பயப்படாமல் இருக்கவும் கற்பித்தான். தான் அறிந்திருந்த சத்தியத்திற்காக உண்மையாக வாழ்ந்தான். சூழ்நிலையின் பயத்திற்கு விட்டுக் கொடுக்காமல் எகிப்திலும், வனாந்திரத்திலும் விசுவாச கண்களுக்கூடாக செயலாற்றும். மீட்டெடுத்த தேவன் மட்டுமே வெற்றியைத் தருவார் என்ற கண்ணோக்கை கொடுத்தது அந்த விசுவாசம்.

விசுவாசம் தலைமைத்துவத்தில் முன்னெடுக்க வழிநடத்தியது:

எண்ணாகமம் 13:3,6 இல் யூதா கோத்திரத் தின் தலைவனாகவும், எண்.34:16-29இல் தேசத்தைப் பங்கிடும்போது உதவவும் தெரிந்தெடுக்கப்பட்டவன். இவனை தேவன் தேர்ந்தெடுத்தார். மற்றைய 10 வேவுகாரரும், மக்களில் அநேகரும் விசுவாசத்தை இழந்த வேளையிலும் தேவன் வெற்றியைக் கொடுப்பார், நாம் எளிதாக ஜெயிக்கலாம் என அழைப்பு விடுக்கிறார். எண்.13:30 “மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி” காலேப் பேசினான். சத்தியத்திற்கு சோதனை வரும்போது எழுந்து நின்றான். பேசினான். செயற்பட்டான். தன்னுடன் வந்தவர்களின் விசுவாசம் மரித்திருக்க தான் பிரபல்யம் பெறாவிட்டாலும், கேளிக்கும் நகைப்புக்கும் ஆளாக தயாராக இருந்தான். தேவனுக்குள் பிரியமாய் இருப்பதே அவனது வாஞ்சையாக இருந்தது. இறுதியில் எபிரோனை வெற்றிகொள்ள யூதாவின் புத்திரரை வழிநடத்தினான். நமது விசுவாசம் எப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது?

விசுவாசம் பேசுகிறது

மற்றைய வேவுகாரர் மக்களை சோர்வுக் குட்படுத்தியபோது கானானின் நலமானவற்றைக் கண்டான், அனுபவித்தான், பேசினான். விசுவாசத்தை அவன் தனக்குள்ளாகமட்டும் வைத்திருக்கலாம். காலேப் அப்படி இருக்கவில்லை. “நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதைவிட நாம் என்னவாய், எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம்” என்பதில் தேவன் மிக கரிசனை உள்ளவராக இருக்கிறார். காலேப் வார்த்தையினால் தனது வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு பேசினான். இன்று நாட்டில் எதிர்பார்ப்பு நம்பிக்கையற்ற காலக்கட்டத்தில் வார்த்தையினால் நம்பிக்கை ஊட்டுகிறோமா?

மெய்விசுவாசம் சரணடைந்த வாழ்க்கையையும் காத்திருக்கும் குணாதிசயத்தையும் கொடுத்தது.

மற்றவர்கள் கானானில் இராட்சத உருவ மக்களைக்கண்டு கலங்க காலேப் அமைதியாக இருந்தான். அவன் தேவனில் சரணடைந்த மனிதனாக இருந்தான். இன்று அநேகர் பேசும் வேளையில் சரணடைவதைக் குறித்து பேசாதது கவலைக்குரியது. There are many restless Christians but few rested ones என்ற கூற்று எப்பொழுதும் இளைப்பாறுதல் உள்ளத்தின் ஆழத்தில் அமைதியையும், தெளிவாக சிந்திக்கும் குணாதிசயத்தையும் கட்டியெழுப்பும் என்பதை எனக்கு நினைவுபடுத்துகின்றது.

எண்.13:30 இல் காலேப் மக்களை அமை திப்படுத்தும் பணியில் செயல்பட்டான். பயத்திற்கு முழுமையான பதில் தேவனிடம் சரணடைந்த வாழ்க்கையாகும். அவன் விசுவாசத்தினால் காத்திருந்தான். எபிரேயனாக எகிப்தில் பிறந்து 28 வருடம் அடிமையாக மற்றையவர்களைப்போல் வாழ்ந்தாலும், தேவனின் அற்புதங்களைக் கண்டிருந்தும் அறிந்திருந்தும் அதை மறக்கவில்லை. அவர் விடுவிப்பார் என்பதற்கு தேவனில் தங்கி அவரில் சார்ந்து காத்திருந்தான். நமக்கு இருக்கவேண்டிய கிறிஸ்தவ இலட்சணம் “காத்திருத்தல்” – தேவனுடைய நேரத்திற்கு!

தேவனுடைய நன்மைத் தன்மையை நினைப்பூட்டுகிறான்.

எண்.14:8 காலேபின் கடந்தகால அனுபவங்கள் தேவனது வல்லமை, நன்மை, கிருபை என்பவை நிகழ்கால தடைகள், பயங்களைவிட மேலானது. தேவனின் தன்மையை மறக்கவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பமும், பிரச்சனையும் நாம் தேவனுக்கு பணியாற்ற, கீழ்ப்படிய ஒரு சந்தர்ப்பமாகவும் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளரவும் அவரை மேன்மேலும் அறிந்து அவரிடம் கிட்டிச்சேரவும், அவரது சேவைக்கு ஏற்ற பாத்திரமாகவும் மாற்றவேண்டும்.

நமது கடந்தகால அனுபவங்கள் நம்மை கீழே தள்ளி கட்டுப்படுத்தினாலும், தேவனது சித்தத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்கும் நிலைமைக்குள் தள்ளிவிடக்கூடாது. மாறாக அவை நாம் முன்னேறக்கூடிய விதத்தில், அவர் செய்த நன்மைகளை நினைப்பது நன்று. கடந்த காலமானது குற்ற உணர்வு, கசப்பு, விரக்தி, பயம் என்பவற்றினால் நிகழ்காலத்தை கட்டுப்படுத்த, சிறைக்கைதிபோல் மாற்றிவிட அனுமதிக்கலாகாது. இன்றுள்ள அநேக வயோதிபர் தமது வாலிப காலத்தில் நடந்த தீமை, துயரம் என்பவற்றில் இன்றும் மூழ்கி மற்றவர்களை கசப்புடனும், கோபத்துடனும், சபித்துக்கொண் டும் வாழ்வது எவ்வளவு வேதனைமிக்கது. மற்றவர்களின் நடத்தையே அவர்களது வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறது. அநேகநேரம் நாம் கீழ்ப்படியாமலிருக்க காரணம்: தேவனைக் குறித்து நமக்குள்ள இறையியல், மற்றும் ஆதாமிற்கு இருந்த மனப்பாங்கு, நமது வழியில் செல்ல நமது தெரிவு, நமது முயற்சி, உயர்வான தேவனிடத்தில் தங்கியிருக்க விருப்பமற்ற மனம் ஆகியவைகளேயாகும்.

எண்.13:30,31இல் உடனடியாக பயத்தை தோற்கடிக்க மேற்கொள்ள தெளிவாக விபரமாக கூறுகிறான். ஏற்படும் பயங்களுக்கு உடனடியாக செயல்படாவிட்டால் அது நம்மை பரிதாபத்திற்கு இட்டுச்செல்லும். காலேப் மக்களை வார்த்தையினால் தாக்கவில்லை. அவர்களது மனப்பாங்கு, அறிக்கை என்ற காரியங்களுக்கு பதிலளித்தார். நாம் பிரச்சனை வரும்போது நபர்களைத் தாக்காமல் முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

சரணடைந்த வாழ்க்கையானது பிரச்சனைகளுக்கு மத்தியில் நேர்மையாக வாழ உதவுகின்றது. மக்கள் பயத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதுண்டு. சிலர் அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை என நடிக்கலாம். யதார்த்தத்திலிருந்து வழிவிலக சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் காலேப் பிரச்சனைகள் இருந்ததை (பலவான்கள்) மறுக்கவில்லை. மறக்கவுமில்லை. மாறாக அதற்கு முகங்கொடுக்க ஆயத்தமாயிருந்தார். தன்னை ஆயத்தப்படுத்தினான். மக்கள், தேவன் வாக்குத்தத்தம் பண்ணிய கானானிலிருந்த பிரச்சனைகளை மட்டும் பார்க்க, காலேப்போ உண்மையான நிலைமையைக் கண்டான். சரியான அறிக்கையும் கொடுத்தான்.

மக்களது பிரச்சனைகளை நாமும் புரிந்து கொள்ளவேண்டும். அநேக நேரம் பிரச்சனைகளுக்குள் செல்லும் வேளையில் நமக்கு ஏற்படப்போகும் கடினத்தை மட்டும் யோசிக்காமல், அதனால் ஏற்படும் நன்மை, அதற்கூடாக தேவன் நமக்கு கற்றுத்தருவார் என்ற எதிர்பார்ப்பு அவசியம். அவர்கள் செல்லும் உண்மையான நிலையை எடுத்துரைப்பதும் அவசியமாகும்.

இராட்சதர் இல்லையென காலேப் கூறவில்லை. ஆனால் வித்தியாசமாக பார்க்க அவரது சரணடைந்த வாழ்க்கை உதவிற்று. எப்படி நாம் முகங்கொடுக்கும் பிரச்சனைகளை பார்க்கிறோம்? புதிய கஷ்டமான சூழ்நிலைகள் வரலாம். பயத்துக்கு முகங்கொடுக்க உண்மையாய் அதன் நோக்கத்தை அறிய சரணடைந்த வாழ்வே உதவும்.

சரணடைந்த வாழ்க்கையினால் காலேப் மக்களுக்குள்ள வளத்தை நினைப்பூட்டுகிறான். எண்.13:30இல் நம்மால் ஜெயிக்க முடியும் என மக்களுக்குள்ள வளத்தை நினைப்பூட்டி சுயபெலத்தில் வைத்துள்ள நம்பிக்கையல்ல. மாறாக வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து வருகின்ற வளத்தில் தங்கியிருந்தான்.

சரணடைந்த வாழ்க்கை தேவனைப் பிரியப்படுத்துவதில் நாட்டம்கொள்ள வைக்கிறது. எண்.14:8,9, யோசுவா 14:8,9 அவனது விருப்பம் தேவனது மகிழ்ச்சியும், தான் தேவனுக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதும், தேவன் நேசித்ததை, நேசிப்பதை நினைவுகூர்ந்து முறுமுறுப்பற்ற வாழ்க்கையையும் முக்கியமாக எண்ணினான். எந்த சூழ்நிலையிலும் தேவனை பிரியப்படுத்துவதும், தேவனுக்குள் நாம் மனமகிழ்ச்சியாய் வாழ்வதும் நமது இலக்காக இருக்கவேண்டும். கர்த்தருக்குள் சந்தோஷமாக வாழ்வதே நமது பெலன். அந்த சந்தோஷத்தை இழந்தால், நம்மிடமிருந்து பெலனும் அகன்று போகும்.

வாலிப வயதிலுள்ள காலேப் தனது நோக்கங்களுக்காக தேவனை பயன்படுத்தாமல் தன்னை தேவனுடைய நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு தேவனுக்கு தன்னை விட்டுக்கொடுக்கிறான். மெய்சேவகர்கள் சேவை செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

சத்தியவசனம்