உலகம்

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ்
(ஜூலை-ஆகஸ்டு 2016)

 “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை” என்று யோவான் எழுதியிருக்கிறார் (1யோவா. 2:15).  “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உல கத்தில் அன்புகூர்ந்தார்” என்று யோவான் 3:16ல் நாம் வாசிக்கிறோம். இங்கு “தேவன் உலகத்தில்  அன்புகூர்ந்தார்” என்று  பார்க்கிறோம். ஆனால் 1யோவான் 2:15ல் “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்” என்று கூறப்படுகிறது. இவ்விரு வசனங்களும் முரண்படுவதைப் போல் தோன்றினாலும், இதில் முரண்பாடு எதுவும் கிடையாது. ஏனென்றால் உலகம் என்கிற சொல் திருமறையிலே பலவிதமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

1.தேவன் படைத்த உலகம்

உலகம் என்பதற்கு “தேவன் படைத்த உலகம்” என்று பொருளுண்டு. தேவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்து அது நல்லது என்று கூறினார். 1 கொரிந்தியர் 3:21-23ல் பவுல் “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள், கிறிஸ்து தேவனுடையவர், ஆகையால் உலகம் உங்களுக்குரியது” என்று எழுதுகிறார். இங்கு தேவன் உண்டாக்கிய உலகம் குறிக்கப்படுகிறது. இந்த உலகத்திலே உண்டாக்கப்பட்ட காரியங்களெல்லாம் தேவனின் மக்களுக்காகவும் அவர்களின் நலவாழ்வுக்காகவும் அவர்கள் அனுபவிப்பதற்காகவும் உண்டாக்கப்பட்டன. இந்த உலகம் நல்லது என தேவன் கூறியிருக்கிறார். அன்றைக்கு அவர் உண்டாக்கிய நாளிலே அது நல்லது என்று கூறினாரே அந்தக் கூற்றை அவர் மாற்றவே இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவர் உருவாக்கிய உலகம் நல்லதாய்த்தான் இருக்கிறது. ஆகையினாலே உலகத்தைவிட்டு ஒருவன் தப்பி ஓடுவதின்மூலம் தேவனை நெருங்கிச் சேருகிறான் என்று ஒருக்காலும் திருமறை கூறவில்லை. தேவன் படைத்த உலகம் நல்லது. அது நமக்குரியது. நாம் அதை ஆட்கொள்ளவேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று திருமறை போதிக்கிறது.

2.மக்கள் நிறைந்த உலகம்

இரண்டாவதாக, உலகம் என்கிற சொல் “மக்கள் நிறைந்த உலகம்” என்று பொருள்படுகிறது. இந்த உலகத்திலே ஆண்களும் பெண்களும் பல இனத்தாரும், நிறத்தாரும், நாட்டாருமாக மக்கள் உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த மக்கள் நிறைந்த உலகத்தை நாம் நேசிக்கவேண்டும். இதை மீட்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தார். யோவான் 3:16ல் குறிக்கப்படும் “தேவன் அன்புகூர்ந்த உலகம்” இந்த மக்கள் நிறைந்த உலகத்தையே குறிக்கிறது.

3. வாழ்க்கை முறையான உலகம்

மூன்றாவதாக உலகம் என்கிற சொல் 1யோவா.2:15-17ல் தேவனுக்கு விரோதமான வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.  தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணும் மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறை இது.  இது தேவனுக்கு விரோதமானது. இந்த உலகத்திலே எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காக தேவன் உண்டாக்கினார். ஆகையினால் நாம் எல்லாவற்றையும் தடையில்லாமல் அனுபவிக்கலாமா? தேவன் உண்டாக்கின உலகத்திலே பாவம் நுழைந்துவிட்டது.  மனிதன் இசையை ரசிக்கலாம். இசை அவனுக்காகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் இசைக்குள்ளும் பாவம் நுழைந்துவிட்டபடியினாலே எல்லா இசையையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கீழான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய இசையுமுண்டு. அதிலே ஒரு விசுவாசி பங்குகொள்ள முடியாது. இப்படியாக உலகத்தினுள்ளேயே ஒரு உலகம் உண்டாகிவிட்டது. தேவன் உண்டாக்கின உலகத்திற்குள்ளேயே மனிதன் முரட்டாட்டத்தினால் தனக்கென்று இன்னொரு உலகத்தை உண்டுபண்ணிக்கொண்டான். இந்த இரண்டாவது உலகத்தைத்தான் நாம் தவிர்க்கவேண்டுமென யோவான் எழுதுகிறார்.

“உலகத்தில் அன்புகூராதிருங்கள்” என்று கூறும்பொழுது விழுந்துபோன மனிதன் தன்னுடைய முரட்டாட்டத்தினாலே தேவனுக்கு இடங்கொடுக்காதபடி தனக்கென்று ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டான். அந்த வாழ்க்கை முறையைத்தான் நேசிக்கக்கூடாது என்று யோவான் எழுதுகிறார்.

உலகத்தில் அன்புகூர்ந்தால் நம்மிடம் பிதாவின் அன்பில்லை. உலகத்தில் அன்புகூராதிருங்கள் என்பதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. தேவனிடத்தில் அன்புகூரவேண்டும். அவருக்கு முதலிடம் கொடுத்து முழுமனதோடு அவரை நேசிக்கவேண்டும்.  அப்படி நேசிப்பதற்கு உலக அன்பு தடையாயிருக்கிறது. ஆகையினாலேதான் உலகத்தில் அன்புகூராதிருங்கள் என்று கூறுகிறார்.

உலகத்தையும் ஆண்டவரையும் நாம் ஒன்றாய் நேசிக்க முடியாது. இருமனமுள்ள மக்கள் எப்பொழுதுமே சிக்கலான நிலையில் அகப்பட்டுக்கொள்வார்கள். தேவசித்தத்தை நாம் செய்யவேண்டுமானால் உலகத்தை நேசிக்க முடியாது. இன்றைக்கு அநேக வாலிபர்கள் தேவசித்தம் என்ன என்று அறிவதற்குக் காத்திருக்கிறார்கள். ஆனால் உலக ஆசைகளைத் தங்கள் இருதயத்தில் பேணிவைத்து தேவனுடைய சித்தத்தை அறிய முற்படும்போது அவர்களால் அதைத் தெளிவாக தெரிந்துகொள்ள முடியாது. ஆகையினாலேதான் உலகத்தில் அன்புகூராதிருங்கள் என்று யோவான் எழுதுகிறார்.

வாழ்க்கைமுறையின் இச்சைகளும் பெருமைகளும்

1யோவான்2:16ல் குறிப்பிடப்பட்டுள்ள உலகமானது  “தேவன் படைத்த உலகம்” அல்ல. மக்கள் நிறைந்த உலகமும் அல்ல. அது மனிதன் தேவனை ஒதுக்கிவைத்து தனக்காகவே அமைத்துக்கொண்ட ஒரு வாழ்க்கை முறை என்றும், அவ்விதமான வாழ்க்கை முறையைக் கொண்ட சமுதாயம்தான் உலகம் என்றும் கவனித்தோம். உலகம் என்றால் என்ன என்று இன்னும் தெளிவாய் 1யோவான் 2:16ல் யோவான் விளக்கிக்காட்டுகிறார். அந்த வசனத்தைச் சற்று ஆழமாய்க் கவனிப்போம்.

“ஏனெனில் மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்” (1யோ.2:16). இவ்வசனத்தில் உலகம் என்பது மனிதன் தனக்காக சுய நலமாக அமைத்துக்கொண்ட ஒரு வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. அந்த வாழ்விலே மூன்று அம்சங்கள் உண்டு. மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவை மனிதனைக் கீழ்ப்படிதலின் பாதையிலிருந்து இழுத்துக்கொண்டு போகிறவை.

ஆதியாகமம் 3:16ல் சாத்தான் சர்ப்பத்தின் உருவத்தில் வந்து ஏவாளைச் சோதித்த சம்பவத்தை வாசிக்கிறோம். தேவன் நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை அவர்கள் புசிக்கக்கூடாது, மற்ற எந்த மரத்தின் கனியையும் புசிக்கலாம் என்று கூறியிருந்தார்.  மனிதனுக்குத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பைக் கொடுக்கவும் அவன் தெரிந்து கொள்வதன் மூலமாய் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளவும் தேவன் ஒழுங்கு செய்திருந்தார்.   ஏவாள் அந்தக் கனியை புசிப்பதற்கு நல்லது என்று பார்த்தாள். அது அவள் பார்வைக்கு இன்பமாயிருந்தது. அது புத்தியைத் தெளிவிப்பதற்கு இச்சிக்கத்தக்கது என்று கண்டாள்.  இந்த மூன்று செயல்களிலும் மாம்ச இச்சை கண்களின் இச்சை ஜீவனத்தின் பெருமை என்னவென்று நமக்குத் தெளிவாகிறது. பார்வைக்கு இன்பம் என்பது கண்களின் இச்சையைக் குறிக்கிறது.  புசிப்பதற்கு நல்லது என்பது மாம்சத்தின் இச்சையைக் குறிக்கிறது.  புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கது என்பது ஜீவனத்தின் பெருமையைக் குறிக்கிறது.

மத்தேயு4:1-11ல் நமது ஆண்டவரின் சோதனைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. சாத்தான் இயேசுவை வனாந்தரத்தில் சோதித்தான். முதலாவது சோதனையில் கற்களை அப்பமாக்கி அவருடைய பசியை ஆற்றிக் கொள்ளும்படி கூறுகிறான்.  அது மாம்ச இச்சைகளின் சோதனையாகும். அவர் தேவாலயத்தின் மேலிருந்து தாழக்குதித்தால் மக்கள் அந்தச் செயலைக் கண்டு அவரைத் தேவ குமாரனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினான். அது கண்களின் இச்சைக்குரிய  சோதனையாகும். கடைசியாக இயேசுவை ஒரு உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் நிறுத்தி உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அவருக்குக் காண்பித்து அவனை அவர் தாழ விழுந்து பணிந்துகொண்டால் அந்த ராஜ்ஜியமும் அதன் மகிமையும் அவருக்குரியதாகும் என்று கூறினான். அது ஜீவனத்தின் பெருமையாகும். மாம்ச இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்ற வழிகளிலே சாத்தான் இயேசுவையும் சோதித்தான்.

அ. மாம்ச இச்சை

மாம்சம் என்று கூறும்பொழுது மனித உடலைமட்டும் குறிப்பதல்ல.  அது மனிதனுடைய பாவசுபாவத்தைக் குறிப்பதாகும். உடல் இயற்கையாகவே பாவமுள்ளது அல்ல. உடலின் மூலமாய்த்தானே எல்லா சோதனைகளும் வருகின்றன. ஆகையால் இந்த உடலைத் துன்புறுத்திக் கொன்றுபோடலாமென்று சிலர் யோசிப்பர். ஆனால் இது திருமறைக்கு ஏற்ற சிந்தனையல்ல. நம்முடைய உடல் பாவத்துக்குரியதல்ல. அது தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்டது. அவர் வாழும்படியாகவும் அவர் மகிமைப்படும்படியாகவும் அவருக்காக நாம் உபயோகிக்கக்கூடியது நம் உடல்.  இந்த உடலை நாம் பாவத்திற்கென்று விற்றுப்போடலாம்.  அல்லது தேவனுக்கென்று ஒப்புக்கொடுக்கலாம். இரண்டுமே நம் கையில்தான் இருக்கிறது. மனிதன் தன்னுடைய சித்தத்தில் பாவமுள்ளவனாய் இருக்கிறான்.

பாவத்தைத் தெரிந்துகொள்ளக்கூடிய மன நிலை அவனுக்குள்ளேயிருக்கிறது. இந்தப் பாவத்தன்மையினால் அவன் தன் சரீரத்தைத் தவறான ஆசைகளுக்கு விற்றுப்போடுகிறான்.  உடலின் ஆசைகள் எல்லாம் பாவமானவை என்று நாம் கூறிவிட முடியாது. உடலின் ஆசைகள் இயற்கையாகவே மனிதனுக்குக் கொடுக்கப்பட்டவை. அவற்றை நாம் ஒதுக்கி விட முடியாது.  அவற்றைச் சரியான வழியிலே திருப்திப்படுத்த தேவன் நமக்கு ஒழுங்கு பண்ணியிருக்கிறார்.  உடலின் ஆசைகளையும் தேவைகளையும் தவறான வழியிலே பயன்படுத்திக் கீழ்த்தரமான ஆசைகளுக்கு இடங்கொடுக்கும்போது அது மாம்ச இச்சையாகிறது.  மனிதனுக்குள்ளே உள்ள பாவ சுபாவம் அவனுடைய உடலைத் தவறான இச்சைகளுக்கென்று வழிநடத்துகிறது.

நம் விசுவாச வாழ்க்கையில் மாம்ச இச்சை எவ்வளவு தூரம் இடையூறாக இருக்கிறது.  உலகத்தின் அன்புக்கு அது நம்மை வழி நடத்துகிறது. நாம் தேவனுடைய சித்தத்தை அறியாதபடிக்கும் அவர்மேல் அன்புகொள்ளாதபடிக்கும் நம் அன்பை அவித்துப்போடுவது  மாம்ச இச்சையாகும். எவ்வளவோ ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தேவனுடைய வழியைத் தெரிந்துகொண்டு அவருக்கு ஊழியம் செய்கிறவர்கள் மாம்ச இச்சையினால் ஆவியிலே குருடாகி அவருடைய வழியைக் காணக்கூடாத நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.  உடலின் ஆசைகளை நாம் சரியான வழியிலே பயன்படுத்த வேண்டும். பரிசுத்தாவியானவரின் ஆளுகைக்கு அவற்றை ஒப்புக்கொடுக்க வேண்டும். நம் பாவ சுபாவம் நம்முடைய உடலின் ஆசைகளை ஆளும்படி இடம் கொடுக்கக்கூடாது.

ஆ. கண்களின் இச்சை

இரண்டாவது, கண்களின் இச்சை என்று யோவான் குறிப்பிடுகிறார்.  மாம்ச இச்சைக்கும் கண்களின் இச்சைக்கும் வேறுபாடு உண்டு.  கண்களின் இச்சை என்றால் பார்வைக்குப் பகட்டாய் எது காணப்படுகிறதோ அதைத் தெரிந்துகொள்வது. அது உண்மையாகவே நன்மையானதா, தீமையானதா என்று யோசித்துப் பார்ப்பதில்லை. பார்வைக்கு விருப்பமுள்ளதாயிருந்தால் போதும், உடனே அதைத் தெரிந்துகொள்கிறோம். அதுதான் கண்களின் இச்சை. கடைத்தெரு வழியாய் நடந்துசெல்லும்போது பகட்டாய்க் காணப்படுவது எல்லாம் வேண்டும் என்று அதிலே கொண்டுபோய் பணத்தைக் கொட்டுவோமானால் அது சிறுபிள்ளைத்தனம். சிறு குழந்தைகள்தான் கண்ணுக்குப் பட்டதையெல்லாம் வேண்டும் என்று கேட்பார்கள்.  சிறு குழந்தைகள் நிழலைப் பார்த்து அதைக் கொண்டுவந்து கொடு என்று அழுவது எப்படி விசித்திரமாகக் காணப்படுகிறதோ அவ்விதமாகத்தான் கண்ணுக்கு காணப்படுவதெல்லாம் எனக்கு வேண்டும், அதற்காக என்ன கிரயம் வேண்டுமென்றாலும் கொடுத்துவிடுகிறேன் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமாகும். அதைத்தான் கண்களின் இச்சை என்று யோவான் கூறுகிறார்.

நமது தீர்மானங்கள், தெரிந்தெடுப்புகள் தேவசித்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கவேண்டும். கண்ணுக்கு விருப்பமானதை மட்டும் நாம் தெரிந்துகொள்ளக்கூடாது.  கண்ணால் காண்பதை அது நன்மையானதா, தீமையானதா, தேவ சித்தத்திற்குரியதா அல்லது அதற்கு அப்பாற்பட்டதா என்று யோசித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இ.ஜீவனத்தின் பெருமை

எபேசியர் 2:1-3இல் இயேசுகிறிஸ்துவை ஒரு மனிதன் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பாவத்திலே மரித்தவனாய் அவன் இருக்கும் நிலையில் அவனுடைய வாழ்க்கையை ஆட்கொண்டு நடத்தும் மூன்று காரியங்கள் குறிக்கப்படுகின்றன. முதலாவது, மாம்சம் குறிப்பிடப்படுகிறது. மாம்ச இச்சைகளின்படி அவன் இழுத்துச் செல்லப்படுகிறான். இரண்டாவது, உலகம் குறிப்பிடப்படுகிறது. உலகத்தின் பழக்கங்கள், வழக்கங்கள், கோட்பாடுகள் அவன் வாழ்க்கையை நடத்துகின்றன.  மூன்றாவது சாத்தான் குறிப்பிடப்படுகிறான்.  சாத்தானும் அவனை ஆட்டி வைக்கிறான்.   ஆனால் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளான பிறகு இந்த மூன்றின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம்.

உலகம் என்று கூறும்பொழுது அதிலே மூன்று அம்சங்கள் அடங்கியிருக்கின்றன என்று பார்த்தோம். மூன்றாவது அம்சமான ஜீவனத்தின் பெருமையைக் கவனிப்போம்.

“ஜீவன்” என்ற சொல் இருவிதமான பொருளில் புதிய ஏற்பாட்டில் எழுதப்படுகிறது. ஜீவன் என்ற சொல் இரு கிரேக்க சொற்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஒன்று தேவனுக்குரிய ஜீவன் – “நித்திய ஜீவன்” ஆகும். அது தேவராஜ்ஜியத்திற்குரிய ஜீவன் என்று பொருள்படும்.

இன்னொன்று மிருக வாழ்க்கைக்குரிய ஜீவன். தேவனற்ற ஒரு மனிதன் மிருகத்தைப்போல நடத்தக்கூடிய வாழ்க்கை என்று பொருள்படும்.

இந்த இரண்டாவது பொருளில்தான் 1யோவான் 2:16இல் உள்ள “ஜீவனத்தின்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீவனத் தின் பெருமை என்பது கேவலமான ஒன்றாகும். மிருகத்தைப்போல மனிதன் வாழும்போது அந்தத் தாழ்வான வாழ்க்கைக்குரிய பெருமையாகும். அந்தப் பெருமையை நாம் நாடும்போது உலகத்திற்கு அடிமைப்பட்டவர்களாவோம் என்று யோவான் எழுதுகிறார்.

மற்றவர்கள் நம்மைப் புகழவேண்டும், மற்றவர்களின் பார்வைக்கு நாம் பெரியவர்களாய்க் காணப்படவேண்டும். உலகம் எதையெல்லாம் பெரிதாகப் பாராட்டுகிறதோ அதை நாமும் பெரிதாகப் பாராட்டவேண்டும் என்று ஒரு மனிதன் வாழும்போது அது ஜீவனத்தின் பெருமையாகும். படித்துப் பட்டம் பெற்றவர்களெல்லாம் உலகத்தால் பாராட்டப்படுகிறார்கள். ஆகையினாலே தேவனின் சித்தம் பிரதானமானதல்ல, படிப்பும் பட்டமும்தான் பெரியது என்று ஒருவன் கூறும்பொழுது அவன் ஜீவனத்தின் பெருமைக்கு இடம் கொடுக்கிறான். பெரிய வீடும் மாடமாளிகையும் கொண்டால்தான் மற்றவர்கள்போல் நாமும் வாழலாம். அவர்களுக்கு இருக்கிறது எனக்கும் வேண்டும் என்ற மனப்பான்மையோடு ஒருவன் தேவனின் சித்தத்தை ஒதுக்கி வைத்து மாடமாளிகைகளையும் சொத்துக்களையும் தேடும்போது அது ஜீவனத்தின் பெருமையாகிறது. படிப்பு தவறல்ல.  சொத்தும் உடமையும் உள்ளவர்களாயிருப்பது தவறல்ல.  மாடமாளிகைகளை தேவன் நமக்கு அளிப்பாரானால் அவற்றைப் பெற்றுக்கொள்வது தவறல்ல. ஆனால் தேவனின் சித்தத்தை ஒதுக்கி வைத்து வாழ்க்கையில் அவற்றிற்குப் பிரதானமான இடம் கொடுப்போமானால் அது தவறானதாகும்.  அது ஜீவனத்தின் பெருமையாகும்.

அநேகமுறை நம்முடைய விசுவாச வாழ்க்கையிலே இவ்விதமான சோதனை ஏற்படுகிறது. தவறான வழியில் வாழுகிறவர்களெல்லாம் பெயரும் புகழும் பெறுகிறார்கள்,  வசதி படைத்த வாழ்வைச் சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள், கர்த்தருக்கென்று வாழும் நமக்கோ எந்தவிதமான வசதிகளும் இல்லை, சொத்து சுதந்திரமும் இல்லை என்று நாம் சோர்ந்து போவது உண்டு. மற்றவர்கள்போல் வாழவேண்டும், மற்றவர்களுக்குப் பெருமை கொடுக்கக்கூடியது எனக்கும் வேண்டும்; தேவ சித்தம் பிரதானமல்ல என்று நாம் எண்ணும் போது ஜீவனத்தின் பெருமைக்கு இடம் கொடுக்கிறோம்.

இன்றைக்கு உலகத்திலே பணம் இருந்தால் பாதுகாப்பு உண்டு என்று அநேகர் நினைக்கிறார்கள். மனிதபலம் இருக்குமானால் பாதுகாப்பு உண்டு என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் விட நமக்குப் பாதுகாப்பாக அமையக்கூடியது தேவனின் திருச்சித்தம்தான். “தேவசித்தம் என்கிற வட்டத்தின் நடுமையத்தில் நான் இருக்கிறேன், அதைவிட வேறு எந்த பாதுகாப்பும் எனக்கு அவசியமில்லை” என்று ஒரு பக்தர் கூறினார். தேவனுடைய சித்தத்தின் மையத்திலே நாம் இருக்கிறோமா? அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்கிற வாஞ்சை பிரதானமாக நம் வாழ்க்கையை ஆட்கொண்டிருக்கிறதா? அப்படியானால் அதுதான் நமக்குப் பாதுகாப்பாய் அமையும்.

உலகமும் இச்சைகளும் ஒழிந்துபோம்

“உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று யோவான் எழுதுகிறார் (1யோவா.2:17).

டேவிட் லிவிங்ஸ்டன் என்ற பெயர்பெற்ற மிஷெனரி வீரர் மரணமடைந்த வேளையில் அவரது அடக்க ஆராதனையில் கந்தல் அணிந்து பரட்டைத் தலையோடு ஒருவன் தேம்பிதேம்பி அழுதுகொண்டு நின்றுகொண்டிருந்தான். இங்கிலாந்திலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆபே என்ற புகழ்பெற்ற ஆலயத்தில் அந்த அடக்க ஆராதனை நடந்தது. “லிவிங்ஸ்டனின் சாவு உமக்கு இவ்வளவு துக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறதே, நீர் அவருக்கு நெருங்கிய உறவினரா?” என்று ஒருவர் அவனைக் கேட்டார்.

அதற்கு அந்த மனிதன், “லிவிங்ஸ்டனும் நானும் ஒன்றாக வளர்ந்தோம், ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தோம்.  லிவிங்ஸ்டன் சுறுசுறுப்போடும் ஆர்வத்தோடும் எல்லா சமயத்தையும் பயன்படுத்தி தன் பக்கத்திலே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பார்”.

நான் அவரைப் பார்த்து, “படித்துப் பட்டம் பெற்று என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்பேன்.  அப்பொழுது அவர், “நான் படித்து பட்டம் பெற்று இயேசுகிறிஸ்துவுக்கென்று ஒரு மருத்துவ மிஷெனரியாவேன்” என்று கூறுவார். அவரைப் பார்த்து நான் நகைத்துப் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் கூறியிருக்கிறேன். எங்களுடைய வாழ்க்கையின் வழிகள் பிரிந்தன. அவர் ஒருபக்கம் சென்றார்.  நான் இன்னொரு பக்கம் சென்றேன், வாழ்க்கையில் எனக்கென்று மேலான காரியங்களைத் தெரிந்துகொண்டேன். ஜீவனத்தின் பெருமை என்னை ஆட்கொண்டது.

ஆனால் இறுதியில் என் வாழ்க்கையிலே திருப்தி காணாதபடி குடிப்பழக்கத்திற்கு இடம் கொடுத்தேன்.  என் வேலை பறிபோய்விட்டது. என் மனைவியும் பிள்ளைகளும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். தெருவிலே அலைந்து திரிகிற ஒரு குடிகாரனாய் நான் மாறிவிட்டேன்.  ஒரு குடிகாரனின் கல்லறைதான் எனக்குக் காத்திருக்கிறது.

தேவனை கனம்பண்ணின இந்த லிவிங்ஸ்டனை இன்றைக்கும் உலகம் கனம்பண்ணுகிறது. தேவனும் கனம்பண்ணுகிறார்.  நானோ வாழ்க்கையை இழந்து விட்டேனே என்று அதற்காகத்தான் துக்கப்படுகிறேன்” என்றான்.

ஆம்! உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போகும்.

சத்தியவசனம்