சீஷத்துவ பயணம்

சகோ.காந்தன்
(ஜூலை-ஆகஸ்டு 2016)

இன்றைய காலத்தில் மிகவும் பிரபல்யமான சொல் Leadership – தலைமைத்துவம், Counseling – ஆலோசனை, Training – பயிற்றுவித்தல் போன்ற பதங்கள். ஆனால் என்றுமே சீஷத்துவம் என்ற வார்த்தை இவையனைத்தையும் கடந்து புதிய பரிமாணங்களையும் புதிய வடிவங்களையும் தத்ரூபமாக காண்பிக்கும்விதத்தில் அதை நடைமுறைப்படுத்தியவர் இயேசுகிறிஸ்துவே. அவர் இந்த உலகத்தில் வாழும் அனைத்து விசுவாசிகளுக்கும் கொடுத்த கட்டளையானது மத்தேயு 28:19, 20இல் அடங்கியுள்ளது.  இது சத்தியத்தில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் அன்பை எடுத்துக்கூறி, பல தலைவர்களை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது.

கிறிஸ்துவின் பணியில் அதி முக்கியத்துவமான விஷயம் சீஷத்துவமாகும். அதாவது பிதாவின் பணியை தொடர்ந்து நிறை வேற்றவும், இந்த உலகம் முழுவதிற்கும் கிறிஸ்துவின் அன்பின் செய்தியை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஊடகமாக அல்ல, சிறந்த முறையாக சீஷத்துவத்தை உருவாக்கினார். அதனால்தான் அப். பவுல் தனது அயராத சுவிசேஷ பணியின் மத்தியில் சீஷத்துவ பணிக்கு சிறப்பான இடம் கொடுத்து பல தலைவர்களை உருவாக்கினார். அவர் சீஷர்களை உருவாக்காவிட்டால் அவருடைய பணியில் அடுத்த நிலை கேள்விக்குரியாகவே இருந்திருக்கும்.

அதை நன்கு உணர்ந்ததினால் தீமோத்தேயு போன்ற தலைவர்களை உருவாக்கினார். எவ்விதமான ஊழியம் செய்தாலும் அந்த தரிசனம் தொடர்ந்து கடத்தப்பட வேண்டும் என்றால் கட்டாயம் நாம் சீஷர்களை உருவாக்க வேண்டும். சீஷத்துவம் என்பது தலைமைத்துவமா? அல்லது அதிக வேதனையுள்ள நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஊழியமா? ஒரு நபரை உற்சாகமூட்டும் செயற்பாடா? சுவிசேஷ பணிக்கான பயிற்சியா? ஒரு நபரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவதா? அடுத்த தலைவர்களை உருவாக்குவதா? போன்ற கேள்விகள் நமக்குள் உருவாகும்.

சீஷத்துவம் எந்த வரையரைக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய வரையறையற்ற பெரிய பொதி (Unlimited Package), கிறிஸ்து மூன்றரை (மத்.28:19) வருடங்களுக்கு மேலாக இருந்து கற்பித்த விஷயமாகும். இதனை கடைப்பிடித்தல் என்பது மரணம் மட்டும் தொடரும் ஒரு செயற்பாடாகவே இருக்கிறது.

சீஷத்துவத்தின் நோக்கம்

கிறிஸ்துவை அறியாத ஒரு நபருக்கு அவரை அறிமுகப்படுத்தி கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி, கிறிஸ்துவின் சாயலுக்கு நேராக நடத்துவதே இதன் நோக்கமாகும். “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” (லூக்.2:52).

கிறிஸ்துவின் வளர்ச்சிக்கு ஏற்றவிதமாக விருத்தியடையச் செய்தல்

ஞானத்தில் – கல்வி / வேலை / ஆலோசனை
சமூகத்தில்  – தலைமைத்துவம்
ஆன்மீகத்தில் – தேவனுடனான உறவு
சரீரத்தில்     – ஒழுக்கம் / நடத்தை

மேற்குறிப்பிட்ட இந்த நான்கு விஷயத்திலும் ஒருவரை புடமிட்டு உருவாக்கும் இடம்தான் சீஷத்துவம். வெறுமனே இதில் ஒன்றை மட்டும் உருவாக்கும் இடமாக நாம் பார்த்தால் ஒருவரை முழுமையாக கிறிஸ்துவின் பரிபூரணத்துவத்திற்குள் வளர்க்கமுடியாது.

ஞானம், சமூகம், ஆன்மீகம், சரீரம் என்பன ஒன்றிணைத்து முழுமையான விதத்தில் ஒரு நபரை நாம் உருவாக்கும்போது, அந்த நபர் போதிக்கத்தக்க உண்மையுள்ள மற்ற நபர்களை உருவாக்கக்கூடியவராக இருப்பார் (2தீமோ.2:2). அதனால்தான் இயேசுவானவர் இந்த உலகத்தை மாற்றக்கூடிய  ஒரு விஷயமாக சீஷத்துவத்தை கண்டார்.

சீஷத்துவம் ஏன் அவசியம்?

கிறிஸ்து இந்த உலகத்தில் காண்பித்த ஒரு தாக்கமுள்ள உறவுமுறை சீஷத்துவம், இதனூடாகத்தான் நாம் உலகத்தை மாற்ற முடியும்.

நாம் சீஷர்களை உருவாக்குவதின் மூலமாகத்தான் முதிர்ச்சி அடைகின்றோம்.

நாம் சீஷர்களை உருவாக்குவதின் மூலமாகத் தான் நமது தரிசனங்கள், பணிகள் நம்முடன் மரித்துப்போகாமல் தொடர்ந்து செல்லும்.

சீஷத்துவத்திற்கூடாக நாம் கிறிஸ்துவின் பிரதான கட்டளையை நிறைவேற்றுகின்றோம்.

சீஷத்துவம் என்பது ஒரு நபரை, புதிய நபராக அவரின் ஆளுமை, குணம், நடத்தை, சிந்தை, செயற்பாடு, நோக்கம் என்பவற்றை மாற்றியமைக்கும் ஒரு மறுரூப மலையின் செயற்பாடாகும். இதற்காக நாம் பல செயற்பாடுகளைச் செய்ய வேண்டியதிருக்கும். ஊக்கப்படுத்துதல், இலக்கை நோக்கி ஓட உற்சாகப்படுத்தல், தவறுகளைக் கண்டித்தல், படிப்பித்தல், பயிற்றுவித்தல், புதுப்பித்தல், அவர்களின் கலாச்சாரத்தையும் சிந்தனையையும் தாண்டி சிந்திக்கவும் பார்க்கவும் செய்தல் போன்ற பல முறைகளைச் செய்யவேண்டியிருக்கும். அதனை அன்று இயேசு தமது சீஷர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அதனையே நம்மை செய்யும்படி கட்டளையிட்டும் இருக்கிறார் (மத்.28:18).

இன்றைய நாட்களில் சீஷத்துவம் என்ற கட்டமைப்புக்குள் நாம் வாலிபர்களைக் கட்டமைப்பதற்குப் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. காரணம் அவர்களின் பிரச்சனைகள் நாளுக்குநாள் மாற்றமடைந்து கொண்டும், அதிகரித்துக்கொண்டும் போகிறது.

தவறான பழக்கங்கள், கீழ்ப்படிய முடியாமை, தற்கொலைகள், கொலைகள், குழு சண்டைகள், கோபம், இளம் வயதில் திருமணங்கள், வயதிற்கு மீறிய செயற்பாடுகள், குடும்ப பிரிவுகள், தவறான பாலியல் பழக்கங்கள், பாலியல் உணர்வை தூண்டக்கூடிய செயற்பாடுகள், காதல், அடிமைத்தனம் போன்ற காரணிகள் அவர்களின் பெறு மதிப்பை குறைக்கின்றது.

மட்டுமின்றி தங்களின் நிலையையும் எதிர் காலத்தையும் விளங்கிகொள்ள முடியாதவராக இருக்கின்றனர். இதற்கு காரணம் யுத்தத்தின் விளைவா? நவீன சாதனங்களா? என்ற பட்டிமன்றம் தொடர்ந்தாலும் அவர்களின் நடத்தையை இன்றைய திருச்சபையின் தலைவர்கள், பெற்றோர்கள் என பலரும் விளங்கி கொள்ளவும் உதவி செய்யவும் கடினப்படும் இடமாக இந்த வாலிபர்களின் நிலை காணப்படுகின்றது.

ஆனால் நாம் அவர்களின் இந்த நிலையை உணராவிட்டால், தற்கால வாலிபர்களின் இந்த நிலையில் இருந்து அவர்களை தூக்கி எடுக்காவிட்டால், நாம் நமது வாலிபர்களை இழக்க வேண்டியதிருக்கும். இந்த இடத்தில் அவர்களின் பிரச்சனையை நாம் எப்படி பார்க்கவேண்டும். அதனைத் தவிர்ப்பதற்கு எந்த வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

பல விஷயங்களை நாம் சிறப்பாக செய்கின்றபோதிலும் இந்த நபர்களை சீஷத்துவத்தில் வழிநடத்துவதில் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நடத்தை எதில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதிலும், அதனைக் குறைப்பதற்கு நாம் எதனை செய்யவேண்டும் என்பதனையே அதிகம் கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது.

சத்தியவசனம்