உஷ்!! வீண் வார்த்தை பேசாதீர்கள்!

சகோதரி சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2016)

‘வார்த்தையால் கொல்லாமல், என்னை ஒரேயடியாகக் கொன்றுவிடு’. இப்படி யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? நித்தமும் சாகின்ற கொடுமையைவிட ஒரேயடியாகச் செத்துப்போவது மேல். வாழ்க்கைப் போராட்டங்கள், விரோதங்கள், தீராத வியாதி போன்றவை நம்மை அன்றாடம் வேதனைப்படுத்தும். இவற்றைத்தான் பொறுத்துக்கொண்டாலும், இவற்றைப்பார்க்கிலும், மனித வாழ்வை நாசம்பண்ணக்கூடிய நஞ்சூட்டப்பட்ட கூரிய ஆயுதம் ஒன்றுண்டு, இது கொல்லும்; ஆனால் கொல்லாது. பகையை வெளிப்படுத்தாது; பாசம்போல நடிக்கும். இன்பம் சுரக்கும்; இன்னல்களுக்கு வழி வகுக்கும். சேர்ந்து அழும்; முதுகுக்குப் பின்னே சேற்றை அள்ளி வீசும். நல்லதுபோல வேஷம் போடும்; நாளடைவில் நயவஞ்சகத்துள் வீழ்த்திப்போடும். இதுவே மிகப் பெரிய ஆபத்து!

இயற்கை வெளிப்படையாகவே சீற்றம் கொண்டு நம்மை அழிக்கிறது. அதற்கு உலக நாடுகளே உதவி செய்ய முன்வரலாம். ஆனால் இந்த கூரிய அம்பின் தாக்குதலை உலகத்தாலும் உணரமுடியாது; எந்த நிவாரணமும் பரிகாரமும் உதவாது. ஏனெனில் இது சரீரத்தைத் தாக்குவதற்கு முன்னர், வெளியே காணப்படாத மனித உள்ளங்களையே முதலில் குத்திக்குதறுகிறது.

இன்னுமொரு உண்மையும் உண்டு. இந்த விஷ அம்பு யாருக்கு விரோதமாகக் குறி வைத்து எய்யப்படுகிறதோ, அவனை அது தாக்குமோ அழிக்குமோ அது ஒருபுறமிருக்க அந்த விஷ அம்பை யார் எய்கிறானோ, அவனை அது நிச்சயமாக அழிக்கும். இதை யாரும் சிந்திப்பதில்லை. ஏனெனில், முன்பின் யோசிக்காமல், பின்விளைவை சிந்திக்காமலே இந்த அம்பு பாய்ந்துவிடும்.

நாம் எல்லோருமே ஏதோவொரு விதத்திலே, ஏதோவொரு சந்தர்ப்பத்திலாவது, தெரிந்தோ தெரியாமலோ இதன் வஞ்சக அரவணைப்பில் திளைத்துக் கிடந்து அடுத்தவனை வேதனைப்படுத்தி மகிழ்ந்திருந்திருக்கலாம். அல்லது வேறொருவரால் எய்யப்பட்ட இந்த அம்பினால் நாமே இருதயத்தில் குத்துண்டிருக்கலாம். அல்லது, அடுத்தவனுக்கு நாம் எறிந்த அம்பினால் நாமே தாக்குண்டும் இருக்கலாம்; அது நாம் எறிந்த அம்புதான் என்று உணராமலே, ‘எனக்கு ஏன் இப்படி ஆனது’ என்று நாம் மனமடிவாகியுமிருக்கலாம்.

வேதனைப்படுத்தும் கூரிய வார்த்தை

இதனை ஆங்கிலத்திலே ‘காசிப்’ (Gossip) என்று அழகாகச் சொன்னாலும் ‘புறங்கூறுதல், வீண்பேச்சு, கோள்சொல்லுதல்’ என்று பலவாறாக இதனை வர்ணிக்கலாம். இது இத்தனை கேடுவிளைவிப்பதா என்று மாற்றுக்கேள்வி கேட்டு நம்மை நாமே ஏமாற்றவேண்டாம். இதன் அஸ்திபாரமே, ‘இப்படியிருக்கும், அப்படியிருக்கும், அப்படித்தான் நினைத்தேன், நான் நினைப்பது சரியாயிருக்கும்’ என்று நமக்குள் நாமே போடுகின்ற தப்புக்கணக்கின் நியாயங்கள்தான் என்றால் மிகையாகாது. அதாவது இது ஒரு நிரூபிக்கப்படாத அறிக்கை எனலாம். பொதுவாக, கேள்விப்படுவது ஒரு காரியம் என்றால், அதைக் குறித்து நிதானிக்காமல் விசாரிக்காமல் உண்மையைக் கண்டறியாமலேயே அதற்கு வேறுபட்ட தோற்றங்களைக் கொடுத்து, பரந்த உலகிலே இது பரப்பிவிடப்படுகிறது.

இன்று முகப்புத்தகம் (Face Book), குறுஞ் செய்தி (SMS) என்று ஏராளமான நவீனங்கள் இதற்கு இன்னும் அதிக மெருகூட்டி சம்பந்தப்பட்டவரைக் கூறு போட்டுவிடுகிறது. நேருக்கு நேர் போராடுகிறவனை எதிர்ப்பதும், அவனுடன் ஒப்புரவாகுவதும் இலகு. ஆனால் இந்த அம்பை எய்கிறவனும் மிகவும் ஆபத்தானவன்; முதுகைக் குத்துகின்ற இந்த அம்பும் ஆபத்தானதே. அதையும்விட இதற்கு உறுதுணை யாக நிற்கிறவன் மிகவும் ஆபத்தானவன்.

மூன்று பேர்கள்

இங்கே ஆகக் குறைந்தது மூன்றுபேர்கள் அடங்குவர். ஒருவர் பாதிக்கப்படுகிறவர். இவருடைய நிலைமை மிகவும் வேதனைக்குரியது. என்றாலும், இதன் பாதிப்புக்கு விலகியிருக்க வழியுண்டு. இரண்டாவது நபர், கொசிப்பின் காவி. இவரது தொழிலே அதுதான். அவர் தன் தலையிலே தானே மண்போடுகிறார் என்பதை உணரவரும்போது தருணங்கள் எல்லாம் முடிந்துவிடும். மூன்றாவது நபர், இவர் அதிக பரிதாபத்திற்குரியவர். புறங்கூறுதலைக் கேட்பதில் இவர் காட்டும் ஆர்வமே இவருக்குக் குழி பறித்துவிடுகிறதே. கேட்கிறவர்கள் இருந்தால் சொல்லுகிறவன் சொல்லுவான்.

தாவீதின் அனுபவம்

வியாதியால் பாதிக்கப்பட்ட தாவீது, “ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக் கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான் (சங்.41:6) என்கிறார். நாமும் வியாதிப்பட்டவர்களுக்காகப் பரிதாபப்பட்டு அவர்களைப் பார்க்கப்போகிறோம். ஆனால் அவர்களே நமது வாய்க்குக் கிடைத்த ருசிகரமான அவலாகி விடுகிறார்கள். ‘ஐயோ பாவம்’ என்று சொல்லிச் சொல்லியே அவரை நாம் கூறுபோட்டுவிடுகிறோம். இங்கே தாவீதின் பிராண சிநேகிதனும், அவர் நம்பியிருந்தவனும், அவரோடேகூட சாப்பிட்டவனுமே தாவீதுக்கு விரோதமாகப் பேசினவர்கள் என்பதால், அவர்களுடைய தூற்றும் வார்த்தைகள் தாவீதின் வாழ்வில் அதிக துன்பத்தை விளைவித்தது (சங்.41:5-9). கேட்காதிருந்தால் அல்லது அதனை அலட்சியம் செய்தால், எந்தக் கோள் சொல்லுதலும் நம்மை அசைக்க முடியாது. ஆனால் மனித பலவீனம் கேட்கத்தான் சொல்லும். காதில் விழுந்தால், அது உடனே நமது மூளையில் பதிவாகிவிடுகிறது. பின்னர் அதனை அழிப்பது கடினம்.

புறங்கூறுதலைக் குறித்து:

நாம் கிறிஸ்தவர்கள்; நமது கரங்களில் தேவனுடைய வார்த்தை இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நாம் இதனைக் கவனிக்கலாம். அப்போது நாம் பிசகிப்போகமுடியாது.

பொதுவானவை:

1. இது விளையாட்டுப் போலிருக்கும்:

பிறரைக் குறித்துப் பிசகான விஷயங்களைப் பேசுவதிலும் கேட்பதிலும் பொதுவாகவே நமக்கு ஒருவித அலாதியான ஆர்வம் உண்டு. பின்னர் அதை விளையாட்டாக எடுத்து, கேலியாகப் பேசி, ‘சும்மா சொல்லுகிறேன். யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என்ற பல்லவி பாடி, யாருக்காவது அதைச் சொல்லிவிடுகிறோம். நல்ல காரியங்களைச் சொல்லுகிறோமோ இல்லையோ, தீய காரியங்களைக் கேள்விப்பட்டால், அதை யாருக்காவது சொல்லாவிட்டால் நமது தலையே வெடித்துவிடும். நாம் கிறிஸ்தவர்கள், இன்னும் மேல்; பரிதாபப்படுவதுபோல பாசாங்கு செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்காக ‘ஜெபிக்கவேண்டும்’ என்று சொல்லியே பரப்பி விடுகிறோம். இது ஒரு பொல்லாத ‘கோள் சொல்லுதல்’ ஆகும்.

“கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும். ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூச்சுப் பூசிய ஓட்டைப்போலிருக்கும்” (நீதி. 26:22.23). அடுத்தவனைப் பற்றிய தீமையான கதைகள் பரப்புகிறவர்கள் இரக்கம் காட்டுகிறவர்கள் போலத் தெரிவார்கள்; நல்லவர்கள் போல நடிப்பார்கள். ஆறுதலுக்கு ஏங்கி நிற்கிறவர்கள் அந்த வலையிலே வெகு இலகுவாக விழுந்துவிடுகின்றனர்; உள்ளக்கிடக்கைகளைத் திறந்துவிடுகிறார்கள். கோள் சொல்லுகிறவனுக்கு அது தேனாமிர்தம்தான்!

2. இது ஆக்கப்பூர்வமானது அல்ல; அழிவுக்கு ஏதுவானது.

வீண்பேச்சு, தகாத பேச்சு, கற்பனைப் பேச்சு, இவை ஒருபோதும் எந்தவொரு ஆக்கத்தையும் தரவேதராது; பதிலுக்கு அழிவைத்தான் கொண்டுவரும். கோள்காரனுடைய  வார்த்தைகள்… உள்ளத்தைத் தைக்கும். யோபு தனக்கு நேரிட்டதைக் குறித்து வேதனைப்பட்டதைப் பார்க்கிலும், அவரது நண்பர்களின் வார்த்தைதான் யோபுவை அதிகம் வருத்தியது. “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?” (யோபு 19:2) என்கிறார் யோபு. ஒரு மனிதன் எதை இழந்தாலும், கடின உழைப்பால் திரும்பவும் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் அவனது உள்ளம் உடைந்தால், திருப்பப்படாத திருப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனாலே தான் இன்று மனநிலைக் காப்பகங்கள் நிறைந்துவழிகின்றன.

3. புறங்கூறுதல் கோபத்தை விளைவிக்கும்

“வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்” (நீதி.25:23).

கோபம் எந்தவிதமான பக்கவிளைவுகளைக் கொண்டுவரும் என்பது நாம் அறியாத விஷயமல்ல. அதுவே பெரிய அழிவுக்கு வித்திட்டுவிடும்.

4. புறுங்கூறுதல் பயத்தைப் பிறப்பிக்கும்

“..உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்” (சங்.56:2,3) – இது தாவீதின் பயம். நம்முடன் நயமாகப் பேசி ஆறுதல் சொல்லிவிட்டு, நாம் நம்பிச் சொன்னவற்றை நமக்கு நம்பிக்கையானவர்களே பிறருக்குச் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தை இது ஏற்படுத்துகிறது. பிறர் என்னைப்பற்றி அறியவந்தால் என்ன நினைப்பார்கள், எப்படி நான் முகங்கொடுப்பேன் என்ற பயம் உருவாகிறது. அப்படியிருக்க, நாமும் நம்மை நம்பிச் சொன்னவற்றை பிறரிடம் புறங்கூறினால், சம்பந்தப்பட்டவர் பயப்பட நாம் காரணராகுவோமே!

கோள், சொல்லுகிறவனையே தாக்கும்:

1. இது தீவிர பழக்கத்தை ஏற்படுத்தி, அடிமைப்படுத்தி விடுகிறது.

குடியும் போதை வஸ்தும் தான் நம்மை அடிமைப்படுத்திவிடுகிறது என்றில்லை. அடுத்தவரைப் பற்றிக் கதை பரப்பி கோள் சொல்லுவதற்கும் அந்தத் தீயசக்தி உண்டு. தங்கள் குப்பைகளைக் கவனிப்பதற்கு இவர்களுக்கு நேரமிருக்காது; ஏனெனில் எப்போதும் அடுத்தவர் காரியத்திலேயே கண்ணாயிருப்பர். அதைப் பழக்கப்படுத்திவிட்டால் பின்னர் அதுவே வாழ்க்கையாகிவிடும். பிறர் விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஆனால் அது அவர்களின் நன்மைக்காக இருக்கவேண்டுமேதவிர, அவர்களுடைய ஆள்தத்துவத்தையே அழித்துப்போடுவதாக இருக்கக்கூடாது. நம்மை நம்பினவர்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற கவனமும், அவர்களுக்காக ஜெபிக்கவேண்டுமே என்ற பாரமும் இல்லாமற் போனால் வீண்பேச்சுப் பேசும் இந்தக் கெட்ட பழக்கம் கோள் சொல்லுகிற நம்மையே அடிமைப்படுத்திவிடும்.

2. நம்மிலுள்ள நம்பகத்தன்மையை நல் அபிப்பிராயத்தை இது பாதிக்கும்.

“செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்” (நீதி.11:3). நம்பினவர்களே முதுகைக் குத்தினால் அவர்களைத் துரோகிகள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? அந்தப் பட்டம் நமக்குத் தேவையா? “புறங்கூறித்திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான். ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்” (நீதி 11:13). இப்போ சொல்லுவோம், நாம் உண்மையுள்ளவர்களா அல்லது துரோகிகளா? இந்தத் துரோகத்தைச் செய்தால் பின்னர் யார்தான் நம்மை நம்புவார்கள்?

பிறரைக்குறித்து வீண்வார்த்தைகளை அலப்பும் நாம் பிறரின் மதிப்பைக் கெடுக்கிறோமோ இல்லையோ, நமக்கு நாமே தீங்கு செய்கிறோம் என்பதை நினைத்துப்பார்ப்பதில்லை. நம்மீது பிறர் கொண்டிருக்கும் மதிப்பு மரியாதை நம்பிக்கை எல்லாமே இதனால் கெட்டுப்போகிறது. படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிற வன் மேல் அந்தக் கல் திரும்ப விழும் (நீதி. 26:27) என்பது சரியல்லவா.

3. புறங்கூறுதல் தன்னைப் பேசுகிறவனுக்கே கேடு உண்டாக்கும்

ரோமருக்கு எழுதிய நிருபத்தில் “.. இப்படிப் பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பு” எப்படிப்பட்டவர்களுக்கு வரும் என்று பவுல் ஒரு பெரிய பட்டியலே எழுதியுள்ளார். அதிலே ‘புறங்கூறுகிறவர்களும்’ அடங்குகின்றனர் (ரோமர் 1:28-32). மொத்தத்தில் புறங்கூறுதல் அடுத்தவனுக்கு தீங்கு விளைவிக்குதோ இல்லையோ பேசுகிறவனையே அது அழித்துப்போடுகிறது.

புறங்கூறுதல் பிறர் வாழ்வைப் பாதிக்கும்

1. இது உறவுகளைச் சின்னாபின்னமாக்கும்.

வீண்பேச்சுகளும், கோள்சொல்லுதலும் நட்புறவுகள், குடும்ப உறவுகள், பரிசுத்தமான கணவன் மனைவி உறவைக்கூட சிக்கலுக்குள்ளாக்கி, சீரழித்திருக்கிறது என்பதற்கு பல சாட்சிகள் உண்டு. “பேலியாளின் மகன் தீண்டி விடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்” (நீதி.16:27,28). ‘பூனைக்குக் கொண்டாட்டம், சுண்டெலிக்குத் திண்டாட்டம்’ என்பார்களே, அதுமாதிரித்தான் இதுவும். பூனை தான் பிடித்த எலியை ஒரு போதும் உடனே கொன்று தின்னாது. அது எலியை வைத்து விளையாடுகின்ற காட்சி சகிக்கமுடியாத ஒன்று. சுண்டெலியின் நிலை இதுவென்றால் மனித வாயில் அகப்படுகின்றவர்கள் பாடு எப்படி இருக்கும்?

நாம் அடுத்தவன் உறவைக் கெடுக்கும்போது, அடுத்தவன் பிள்ளையைக் குறித்துக் கதைகளைப் பரப்பும்போது, அடுத்தவன் கண்ணீருக்குக் காரணமாகும்போது, நமக்கும் ஒரு வாழ்வு உண்டு, நமக்கும் பிள்ளைகள் உண்டு, நாளை என்ற ஒன்று நமக்கும் உண்டு என்பதைச் சிந்திப்பது நல்லது. புறங்கூறுதல் ஒரு கணநேர இன்பம்; ஆனால் அதன் விளைவு நீண்ட கால அழிவைக் கொண்டு வரக்கூடியது; உயிரையே குடிக்கவல்லது.

இது ஒரு உயிர்கொல்லி

புறங்கூறுதல், ஒருவனை உயிரோடே கொல்லுவது ஒருபுறமிருக்க, பல தற்கொலைகளுக்கு இதுவே தூண்டுகோலாய் இருந்திருக்கிறது என்பதை, பேசுகிறவர்களே அறிய வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் பேசிவிட்டு, அடுத்தவரைப்பற்றிப் பேசுவதற்குப் போய்விடுவார்கள். ஆம்! இது ஒரு ‘உயிர்கொல்லி’. “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறருடைய இரத்தப்பழிக்கு உப்படவேண்டாம்; நான் கர்த்தர் (லேவி.19:16). இந்தக் கொலை பாதகம் நமக்குத் தேவையா?

இது தேவனுக்கு விரோதமான பாவம்

தேவனுடைய சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்ட மனித வாழ்வில் பாவம் நுழைந்ததால், அவனிலிருந்த தேவனுடைய பரிசுத்த தன்மைகள் கறைபட்டுப் போனாலும், இன்னமும் அவன் தேவனுக்குரியவன். கிறிஸ்தவர்களுக்காக மாத்திரமல்ல; எல்லாருக்காகவுமே இயேசு பலியானார்.

ஆக, நாம் இன்னொருவரைப் பற்றிப் புறங் கூறி அவருடைய மதிப்பை அவருடைய சாயலைக் கெடுக்கும்போது, அவனைப் படைத்து உருவாக்கிய தேவனையே பழிப்பது போலாகிறது! வீண்கதைகளைத் தொலைபேசியில் பேசிப் பரப்பும்போதும், ஜெபத்தைக் கேட்கிற தேவன் அதையும் கேட்கிறார் என்ற உணர்வே நமக்கு இருப்பதில்லை. இது ஏன்?

வீண்பேச்சின் ஆரம்பமும், பெரிய விளைவும்

உலக சரித்திரத்திலே முதல் புறங்கூறுதல் செய்தது சாத்தான். அதற்குத் துணைபோனது ஏவாள். இருவரும் சேர்ந்து தேவனை குறித்துப் பேசினார்கள். இதனால் பாதிப்பு தேவனுக்கா? இல்லை. சாத்தானின் புறங்கூறுதலுக்குச் செவி கொடுத்து, பதிலளித்து, செயற்படுத்திய மனுக்குலம்தான் செத்தது. புறங்கூறுதலுக்கு இடமளித்தவன் தனக்குத்தானே தீங்கை வரவழைத்துக்கொண்டான். புறங்கூறினவனுக்கும் அழிவு நிச்சயம். புறங்கூறுதலுக்கு ஆளான வரை இவை அசைத்ததா? இல்லையே!

வெறுத்துத் தள்ளுவோம்!

“நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று திர்க்கப்படுவாய்”(மத்.12:35-37).

இதைக் கூறியது பவுலோ அல்லது வேறெந்த பக்திமான்களோ அல்ல. ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகள் இவை.

‘பிறரைக்குறித்து தீமையான எதையும் எனக்குச் சொல்லவேண்டாம்’ என்று கோள் சொல்லுகிறவர்களிடத்தில் சொல்லிப் பாருங்கள். சொல்லுவதற்கு யாரும் இல்லை என்றாலே சொல்லித்திரிகிறவன் அடங்கிப் போவான். தொலைபேசியில் பிறரைப்பற்றிப் பேசுவதில்லை என்று தீர்மானம் செய்து பாருங்கள். தொலைபேசிக் கட்டணங்கள் பாதிக்கும் மேலாகக் குறைந்துவிடும். வீடுகளுக்கு செல்லும்போது பிறரைப்பற்றிப் பேசுவதில்லை என்று தீர்மானியுங்கள். உங்கள் உறவுகள் வலுப்படும். நமது நம்பகத்தன்மையும் பெலப்படும். சகோதர கொலை பாதகராகாதபடிக்கு ஆண்டவர்தாமே நமக்கு உதவி செய்வாராக.

பாதிக்கப்பட்டவர்களே கலங்கவேண்டாம்!

நம்மைக் குறித்து வீண்பேச்சுக்கள் அடிபடும் போது வாழ்வே வெறுத்துப்போகலாம். இந்த உணர்வு தவறல்ல. நாமும் மனுஷர்தான். ஆனால், நாம் ஏன் நமது வாழ்வைக் கெடுக்கவேண்டும்? உணர்ச்சிகள் கொந்தளிக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதற்குள் அமிழ்ந்துபோகக் கூடாது. ஏனெனில் நாம் ஆண்டவரின் பிள்ளைகள். நமது வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம். வீண் கதைகளில் சில உண்மையும் இருக்கலாம். நாம் மறக்க நினைப்பவற்றைப் பிறர் குத்திக்காட்டலாம். ‘நீ ஜெபிக்கவும் தகுதியற்றவன்’ என்றுகூட உங்களைப் பிறர் தூற்றலாம்.

என்றாலும், நம்மை முற்றிலும் அறிந்த ஆண்டவர் நமக்கு இருக்கிறார். நமது பாரங்களை அவர்மீது வைத்துவிடுவோம். யார் நமக்கு எதிராகச் செயற்பட்டார்களோ அவர்களுக்காக ஜெபித்து நன்றி கூறி அவர்களை ஆசீர்வதிப்போம். ஏன் தெரியுமா? அவர்கள் இப்படியாக நம்மை வேதனைப்படுத்தும்போது, நாம் இன்னமும் ஆண்டவரை நெருங்கவும் நமது வாழ்வை மேலும் சீர்ப்படுத்தவும், நமக்கு விரோதமாக செயற்படுகிறவர்களை நேசிக்கவும், மொத்தத்தில் கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளும் படிமுறையில் இன்னுமொருபடி முன்செல்லவும் அவர்கள்தானே நமக்கு வழி வகுத்துவிடுகிறார்கள்; அவர்கள் நன்மைதானே செய்கிறார்கள்!.

அடுத்தது, கதைகளைச் சுமந்துவந்து நமக்குக் கூறுகிறவர்களுக்கு முதலாவது நமது செவிகளை அடைத்துப்போடவேண்டியது மிக அவசியம். அடுத்ததாக, தேவ ஆவியானவரின் பெலத்தோடு முன் செல்லுவோமாக. பேசுகிறவன் பேசட்டும்; கேட்கிறவன் கேட்கட்டும். நம்பட்சத்தில் தேவன் இருக்கிறார். அந்த தைரியம் நமக்குப் போதும்.

நாம் தேவனுக்கு முன்பாக உண்மைத்துவமாக இருப்போமானால் நாம் துக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே பின்னெடுத்த காலடியை முன்னே வையுங்கள். முன் நிலையைப்பார்க்கிலும் தேவன் உங்களை இன்னமும் அதிக வல்லமையுடன் தமது ராஜ்யத்தின் கட்டுமானப் பணியிலே உபயோகிப்பதை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார் (சங்.118:13,14) ஆமென்.

சத்தியவசனம்