விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்
(ஜூலை-ஆகஸ்டு 2016)

4. விசுவாசிக்கு தரப்படும்
சர்வாயுத வர்க்கம் (எபேசி. 6:11, 13-17)

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுதல் என்பதில் நினைவுகூர வேண்டியது, ஜீவனுள்ள வார்த்தை (இயேசு கிறிஸ்து) வேதாகமத்தில் இருக்கும் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளார் என்பதாகும். தமக்குச் சொந்தமானவர்கள் குறித்து இயேசு ஜெபம் பண்ணும்போது, “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்”(யோவான்17:17). நாம் வேதாகமத்தில் உள்ள கர்த்தருடைய வார்த்தைகளைப் படிக்கும்போதும், அவற்றுக்குக் கீழ்ப்படியும்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுகிறோம்.

ஒரு விசுவாசியின் சர்வாயுதவர்க்கம் உலகத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணமல்ல. ஆனால் அது இயேசுகிறிஸ்துவே. நாம் இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுதல் எபேசியர் 4:24இல் கூறப்பட்டிருப்பது போன்றது. “…புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்”. ஒரு விசுவாசியினுள் உருவாகியிருப்பவரே இயேசு கிறிஸ்து. ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த அனுபவம் வேண்டும் என்பதில் பவுலுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. அவர் கலாத்தியருக்கு இவ்விதமாய் எழுதினார்: “கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்” (கலா. 4:19). கிறிஸ்து பவுலிடம் உருவாகியிருந்தார். எனவேதான் அவரால் இப்படிக் கூறமுடிந்தது. “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா.2:20).

எபேசியர் 6:11முதல் 13வரை உள்ள வசனங்களைப் பார்க்கும்போது, சர்வாயுதவர்க்கம் முழுவதையும், ஒன்றுவிடாமல் பூரணமாகத் தரித்துக்கொள்ள வேண்டுமென்று அறிகிறோம். ஏதாவது ஒரு பாகத்தைமட்டும் அணிந்து கொண்டால் அது போதாது. பலவீனமான பாகத்தைக் கண்டு, அதில் தாக்குவான். எனவே விசுவாசி தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், அவன் தன் சரீரம் முழுவதையும் மறைக்கும்படி சர்வாயுதவர்க்கங்களையும் தரித்துக்கொண்டு முன்வர வேண்டும். சிலருடைய உடலில் சில நோய்கள் எளிதாகத் தாக்கிவிடும். அதுபோலவே சில விசுவாசிகளும் சாத்தானின் தாக்குதல்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாயிருக்கிறார்கள்; என்ற போதிலும் நமக்கு முழுப்பாதுகாப்பு உறுதியாகக் கிடைக்க வேண்டுமானால் எல்லாவிதமான தாக்குதல்களிலிருந்தும் நம்மைக் காக்க நாம் பூரணமான எல்லா சர்வாயுத வர்க்கங்களையும் அணிந்துகொள்ள வேண்டும்.

முழுச் சர்வாயுதவர்க்கம் என்பதில் உட்பட்டிருப்பவை:

* சத்தியம் என்னும் அரைக் கச்சை (வச.14)
* நீதி என்னும் மார்க்கவசம் (வச.14)
* ஆயத்தம் என்னும் பாதரட்சைகள் (வச.15)
* விசுவாசம் என்னும் கேடகம் (வச.16)
* இரட்சணியம் என்னும் தலைச்சீரா (வச.17)
* ஆவியின் பட்டயம் (வச.17) என்பவைகளே.

இந்த சர்வாயுதவர்க்கம் என்பது சரீரம் முழுவதுக்குமான கவசம் என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இந்தப் பூமியில் ஆண்டவருக்கு இருக்கக்கூடிய மிகவும் விலையேறப்பெற்ற பொருள்; அதுதான் மனிதர்களாகிய நம்முடைய சரீரம். அவருடைய ஏக குமாரனின் சரீரமாம் திருச்சபையின் அங்கத்தினர்களின் சரீரங்களைப் பாதுகாக்கவே தேவன் இந்தச் சர்வாயுதவர்க்கத்தை உருவாக்கினார்.

சர்வாயுதவர்க்கம் அதன் பரிபூரண நிலையில் முழு பாதுகாப்புக்கு உத்தரவாதமானது. சாத்தானின் தாக்குதல்களை எதிர்க்க ஆவியின் பட்டயம்கூட வைக்கப்பட்டுள்ளது. சாத்தான் இயேசுவைச் சோதித்தபோது, இயேசு ஆவியின் வசனம் என்னும் பட்டயத்தால் அவனைத் தோற்கடித்ததை அறிவோம் (மத். 4:4,7,10). எல்லா இடங்களிலும் ஆவியின் வசனம் தாக்கும் நிலையில் இருக்கும். ஆனால் இங்குமட்டும் தற்காப்பு முறையில் செயல்படுகிறது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதுபோல, சாத்தானை எதிர்த்து நிற்கத் திராணி உள்ளவர்களாகும்படி சர்வாயுதவர்க்கம் தரப்பட்டுள்ளது. இந்தக் கவசத்துடன் நாம் சம்பாதிக்கும் வெற்றி நிரந்தரமானதல்ல. சாத்தான் நம்மை விழத்தள்ளும்படி வேறு கோணத்திலிருந்து நம்மைத் தாக்குவான் அல்லது நாம் கவசம் அணியாமல் கவனக்குறைவாய் இருக்கும் வேளையைப் பயன்படுத்தி நம்மைத் தாக்குவதற்காகச் சாத்தான் காத்திருப்பான். தோல்வி கண்ட சாத்தான் சீக்கிரத்தில் சோர்வடைந்து விடுவதில்லை. எனவே சாத்தானின் தாக்குதல்கள் எந்நேரத்திலும் வரலாம் என்பதை உணர்ந்து, விழிப்புடன் காத்திருக்கவேண்டும்.

சாத்தானை எதிர்த்து தோற்கடித்து ஒரு வெற்றி கண்டதும் நாம் அவ்வளவுதான் என்று நிர்விசாரமாய் இருந்து விடக் கூடாது. நாம் நம்முடைய வெற்றிபெற்ற நிலையிலேயே நிலைத்திருக்க வேண்டும். பேதுரு கூறவதைக் கேளுங்கள்: “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1பேதுரு 5:8). கவனமில்லாமல் இருக்கிறவர்களைத் தேடிக் காத்திருக்கிறான் சாத்தான். நாம் செய்ய வேண்டியது வசனம் 9இல் சொல்லப்பட்டுள்ளது: “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்”.

விசுவாசத்துடன் நாம் சாத்தானை எதிர்ப்பதால், தேவன் நமக்கு ஜெயம் தருவார் என்று உறுதியாக நம்பலாம். பவுல் கூறுவதைப் பாருங்கள்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” (1கொரி.15:57,58).

நாம் சாத்தானின் தந்திரங்களுக்கு எதிர்த்து நின்று கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்வதில் முன்னேற வேண்டியவர்களாயிருக்கிறோம். சாத்தான் சிங்கம்போலக் கெர்ச்சித்தாலும் அந்தச் சத்தத்துக்கு நாம் பயப்படவேண்டியதில்லை. சாத்தான் தனக்குக் கொஞ்சக்காலம் மட்டும் உண்டு என்று அறிந்திருக்கிறபடியால் அவன் மிகவும் பயங்கரமாகத் தாக்குவான். ஆனால் கிறிஸ்துவுக்குத் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிற விசுவாசிகளை அவன் ஒன்றும் செய்யமுடியாது.

சாத்தான் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட சத்துருவாக இருக்கிறபடியால் அவன் போராட்டக் களத்தில் தன் நிலையைவிட்டு ஓடிப்போக வேண்டியவனாயிருக்கிறான். இருளில் தாக்குவதுபோலச் சாத்தான் தாக்கக்கூடும் என்று விசுவாசி பயப்பட வேண்டியதில்லை. சத்துரு நம்மைத் தாக்கும்போது சங்கீதக்காரனாகிய தாவீதுடன் சேர்ந்து நாமும் இப்படிக் கூறலாம்:  “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங்கீதம் 23:4,5).

விசுவாசிகள் கவனிக்கவேண்டிய இரண்டு முக்கிய வார்த்தைகள் “விழித்திருங்கள்” (Watch) “ஜெபம் பண்ணுங்கள்” (Pray) என்பனவாகும். சாத்தானின் தாக்குதல்கள் நம்மீது வருகின்றனவா என்று விழிப்புடன் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் கர்த்தருடைய வேதவசனங்களைப் படிப்பதன் மூலம் சாத்தானின் தாக்குதல் வரும் வகையைக் கண்டு கொள்ளலாம். நமக்கு தேவ ஞானம் கிடைக்கவும், சாத்தானின் தாக்குதல்களை எதிர்ப்பது எப்படி என்று அறிந்து நம்மைத் தகுதிப் படுத்திக்கொள்ளவும் பெலன் தருமாறு ஆண்டவரிடம் ஜெபிக்கவேண்டும். ஆவியில் ஜெபிப்பதன் மூலமாகவும், வேதவசனங்களைப் படித்து தியானிப்பதன் மூலமாகவும், போராட்டக் களத்தில் சாத்தானுக்கு எதிராக வெற்றிவீரர்களாக  நிமிர்ந்து நிற்க முடியும்.

இயேசுகிறிஸ்துவை நம் கவசமாக நாம் அணிந்துகொண்ட பிறகு, நம்மைத் தாக்குவதற்கு ஏதாவது இடம் இருக்கிறதா என்று சாத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று பயத்துடன் சுற்றிலும் பார்க்கத் தேவையில்லை. சாத்தான் நம்மைத் தாக்க முற்படுவானாயின் அவன் முதலில் நமக்குக் கவசமாயிருக்கிற கிறிஸ்துவைத்தான் தாக்கவேண்டும். எனவே நாம், “…விசுவாசத்தைத் துவக்குகிற வரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1) கிறிஸ்துவின் மீதுள்ள நமது பார்வையை விலக்கி விடுவோமானால் சாத்தான் நம்மைத் தாக்க இடம் கொடுத்துவிடுகிறோம்.

கடலில் தண்ணீரின்மேல் நின்ற இயேசு விடம் நடந்துசெல்ல பேதுரு விரும்பினான். அவனைத் தண்ணீரில் நடந்து தம்மிடம் வர இயேசு அழைத்தார். இந்தச் சம்பவம் குறித்து வேதம் கூறுகிறது: “அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்” (மத்தேயு 14:29-31). பேதுரு தன் பார்வையை இயேசுவின் மீது பதித்துக் கொண்டிருந்தவரை தண்ணீரின்மேல் நடந்தான். ஆனால் இயேசுவின் மீதிருந்த தன் பார்வையை விலக்கித் தன்னைச் சுற்றிலும் இருந்த சூழ்நிலை – பெருங்காற்று, இரைச்சல், அலைகள் இவற்றைக் கண்டு பயந்த உடன் தண்ணீரில் அமிழத் தொடங்கினான். அதுபோலவே நாமும் நமது பார் வையை இயேசுவை விட்டு விலக்கும்போது சாத்தான் நம்மைத் தாக்க வசதியாகிவிடுகிறது.

சாத்தான் விசுவாசியை ஏமாற்றிவிடக் கூடாதே என்று இயேசுவுக்குக் கவலை.   ஒரு தடவை இயேசு பேதுருவிடம் இவ்வாறு கூறினார்: “பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக்கா 22:31,32). சாத்தானுக்கு இது தெரியும். தேவன் தமக்குச் சொந்தமான மக்களின் பாதுகாப்புக்காக அவர்களைச் சுற்றிலும் வேலி அமைத்து வைப்பார். யோபுவைக் குறித்து சாத்தான் தேவனிடம் கூறியது நினைவுக்கு வருகிறதல்லவா? “நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று” (யோபு 1:10).

பல சங்கீதங்களை வாசித்துப் பாருங்கள். தாவீது தேவன் தன்னோடு இருப்பதால் சத்துருவாகிய சாத்தானால் தனக்கு ஒன்றுமில்லை என்று திரும்பத் திரும்பக் கூறுவதைக் காணலாம். அவனுக்கு தேவனிடம் முழு நம்பிக்கை இருந்தது. சங்கீதம் 121:1,2 வசனங்களில், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.” என்று கூறுகிறான். தேவன் வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வவல்லவர். அதனால் தாவீதுக்கு வரும் எவ்வகை ஆபத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும், தாக்குதலிலிருந்தும் அவனை மீட்டுக்காக்க வல்லவர் என்று உறுதியாய் நம்பினான். இந்த நம்பிக்கையுடன் அவன் தொடர்ந்து கூறுவதைக் கவனியுங்கள்:

“உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறது மில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற் கொண்டு என்றைக்குங் காப்பார்” (சங். 121:3-8).

ஆண்டவர் தாவீதை அவனது சத்துருக்களிடத்திலிருந்து விடுவித்த பிறகு, இவ்வாறு எழுதினான்: “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்” (சங்கீதம் 18:1-3).

வேறொரு சங்கீதத்தில் தாவீது கூறுவதைப் பாருங்கள்: “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” (சங்.37:23,24).

இதுவரை நாம் பார்த்த பற்பல சங்கீதங்களிலிருந்து தாவீதுக்கு தேவன் பேரில் இருந்த முழு நம்பிக்கை தெரியவருகிறது. இதே பூரண நம்பிக்கை நாமும் சர்வாயுதவர்க்கத்தையும் அணிந்துகொள்ளும் வேளையில் நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

“ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்க வசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியா ஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபேசி. 6:13-17) .

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்