ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

உலகத்தின் முடிவுபரியந்தமும் கூடஇருக்கிறேன் என்று வாக்குப்பண்ணின அருள்நாதரின் நாமத்தில்  வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

அன்றாடம் நாம் கேட்கும் செய்திகள் யாவுமே ஆண்டவருடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளமாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு போதித்தவைகளையே நமக்கு நினைப்பூட்டுகிறது. “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். .. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்” (மத்.24:6,7). நம் தேசத்தில் ஏற்பட்டுள்ள காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனை, காஷ்மீர் பிரிவினைவாதிகளினால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகளினால் எல்லையில் எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலை, மறுபுறம் தேசத்தில் மழையில்லாத வறட்சி இதுபோன்ற பல பிரச்சனைகளுக்காகவும் நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுத்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசேக்.22:30) என்ற ஆண்டவரின் மன ஏக்கங்களை அறிந்துகொண்டவர்களாக திறப்பின் வாசலில் நிற்க முன்வருவோமாக.

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் கடந்தநாட்களில் ஒலிபரப்புத் தெளிவில்லாமல் இருப்பதை அநேகர் தெரிவித்திருந்தார்கள். நிகழ்ச்சி தெளிவாகக் கேட்பதற்கான முயற்சிகளை நாங்களும் ஜெபத்தோடு மேற்கொண்டு வருகிறோம். மேலும் மற்றுமொரு சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.  இக்காரியங்களுக்காக தாங்கள் ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் ‘தேவனுடைய மனதுருக்கம்’ என்ற தலைப்பில் இரட்சிக்கப்படாத மக்கள்மேல் நாம் மனதுருக்கம் கொள்ளவேண்டும் என்பதை Dr.உட்ரோ குரோல் அவர்களும், அருட்பணியாளர்களை அனுப்பிய அந்தியோகியா சபையைப் பற்றி சகோ.பிரேம்குமார் அவர்கள், நம்முடைய திருச்சபைகளில் மிஷனரி பாரமும் தரிசனமும் காணப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்கள். ‘உள்ளார்ந்த கோபம்’ என்ற தலைப்பில் நம் மனதில் தேங்கியுள்ள கோபத்தை நீக்கி மன்னிக்கும் சுபாவத்தில் வளருவதைப் பற்றி சகோ.அஜித் பெர்னாண்டோ அவர்களும், ‘என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி’ என்ற தலைப்பில் நாம் எவ்வளவுக்கு அதிகமாக தேவனைத் துதிக்கவேண்டும் என்ற கருத்தை 103ஆம் சங்கீதத்திலிருந்து சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்களும் எழுதியுள்ளார்கள். மேலும் ‘நறுமணமாய்’ திகழவேண்டிய திருமண வாழ்வின் மகத்துவத்தைப் பற்றி சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தலைப்பில் சர்வாயுதவர்க்கத்தைப் பற்றி விவரமாக Dr.தியோடர் எச்.எஃப். அவர்களது தொடர் வேதபாடமும் வெளிவந்துள்ளது. இக்கட்டுரைகள் யாவருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தர வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்